மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - 33

சிவமகுடம் - 33
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - 33

ஆலவாய் ஆதிரையான் - ஓவியங்கள்: ஸ்யாம்

சிவமகுடம் - 33

விடை தந்த விருட்ச பாசறை!

ரித்திரத்தில் நீங்கா இடம் பெறப்போகும் அந்தத் திருநாளின் காலைப்பொழுது, மிகவும் மெள்ளவே நகர்வதாகப்பட்டது கூன்பாண்டியருக்கு. வேகத் தணிவு அந்த நாளுக்கு மட்டுமல்ல; படையெடுப்பு என்று முடிவாகிவிட்டால், புயல்வேகம் காட்டும் தென்னவன் கூன்பாண்டியரும் அன்று தமது  சொல்லிலோ, செயலிலோ வேகத்தைக் காட்டினார் இல்லை. ஏறக்குறைய உறையூர்க் கோட்டையைச் சமீபித்திருந்த அந்த வனப்பகுதியில், ஓர் ஆலவிருட்சத்தின் அடியில் அமைக்கப்பட்டிருந்தப் பாசறைக்குள், பெருத்த சிந்தனையோடு அமர்ந்திருந்தார் கூன்பாண்டியர்! 

களப்பிரர்களை விரட்டியடித்து அவர்களது ஆட்சிக்கு முடிவு கட்டிவிட்டபிறகு, பாண்டியன் கடுங்கோன்மூலம் தென்னகத்தில் மீண்டும் வேரூன்றிய பாண்டிய ராஜ்ஜியம், அவனிசூளாமணி, செழியன்சேந்தன் ஆகியோர் காலத்தில் இன்னும் வளர்ந்து கிளைபரப்பி எல்லைகளை விரித்து, இதோ... ‘மாறவர்மன் அரிகேசரி’ என்று சரித்திர நூல்கள் யாவும் போற்றிக் கொண்டாடும் இந்த கூன்பாண்டியரின் காலத்தில், தனது எல்லைகளை விரித்து பெரும் பேரரசாகத் திகழ்வதுபோன்றே, அந்த ஆல விருட்சமும் செழித்தோங்கி வளர்ந்திருந்தது.

அதன் அடியில் இயற்கையாகவே அமைக்கப் பட்டிருந்தது, பாண்டியரின் அந்தப் பாசறை. ஏற்கெனவே தரையில் ஊன்றிவிட்டிருந்த ஒன்றிரண்டு ஆல விழுதுகளையே தூண்களாகி, இன்னும் சில இளம் விழுதுகளைப் பிணைத்துப் பந்தலாக்கி, அதன்மீது அடர்த்தியான இலை-தழைகளைப் பரப்பி, கூரை போன்ற அமைப்பை ஏற்படுத்தியிருந்தார்கள். மேலும், தூண்களாகத் திகழ்ந்த விழுதுகளுக்கு இடையே தென்னங்கீற்றுகளை மிக நெருக்கமாக நிறுத்திப் பிணைத்து, சுற்றுச்சுவரும் அமைக்கப்பட்டிருந்தது.

அந்த ஆல விருட்சத்தின் உயரமான கிளையொன்றில் பட்டொளி வீசிப் பறந்த கயற்கொடியும், வாயிற்புறத்தில் முழுக்கவசம் பூண்டு, மிகக் கம்பீரமாக வீரர்கள் காவல்காக்கும் காட்சியும், வெளியே ஆங்காங்கே பாண்டிய சேனைத் தலைவர்கள் எழுப்பிய ஏவல் ஒலிகளுமே அதுவொரு போர்ப் பாசறை என்பதைப் பறைசாற்றிக்கொண்டிருந்தன. கயற் கொடியையும், காவல் வீரர்களையும், சேனைத்தலைவர்களின் கட்டளைச் சத்தங்களையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தோம் எனில், ஏதோ உல்லாசப் பயணத்துக்காக வந்திருக்கும் யாத்ரீகன் ஒருவன் களைப்பாற ஏற்படுத்தப்பட்ட விருட்ச வீடாகவே தெரியும், அந்தப் பாசறை.

ஒருவகையில் அது உண்மையும்கூட!

இந்த இடத்தில் இந்தப் பாசறைக்குடில் அமைக்கப்பட்டு வெகுநாள்களாகின்றன. ஒரு பயணியாகவும், நாடோடியாகவும் மாறுவேடம் பூண்டு கூன்பாண்டியர் பலமுறை இங்கு வந்து தங்கியிருக்கிறார்; உறையூரைக் கண்காணித்திருக்கிறார். ஒவ்வொருமுறையும் அவரை மிகப் பத்திரமாகப் பாதுகாத்தது இந்தப் பாசறை.

இலை-தழைகளால் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருந்த கூரையில், தனக்குக் கிடைத்த சிறிய இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்டு உள்ளே தலைக் காட்டும் காட்டுக்கொடியையும், அதன் பூக்களில் தேனருந்த வரும் வண்டுகளின் ரீங்காரத்தையும் கூன்பாண்டியர் வெகுவாய் ரசிப்பதுண்டு. ஆனால், இப்போதோ அவை எதையும் ரசிக்கும் மனமின்றி அமர்ந்திருந்தார் அவர். பாசறையின் தூண் விழுதில் வெளிச்சத்துக்காகக் கட்டப்பட்டிருந்த பந்தத் தீபத்தையே நோக்கிக்கொண்டிருந்தன அவர் கண்கள்.

பனை, தென்னை, தாழை முதலானவற்றில் இருந்து பெறப்பட்ட குச்சிகளைச் சேர்த்து அழுத்தமாகக் கட்டி, துணியால் சுற்றி, அதற்கு மேலும் சாணத்தால் மெழுகப்பட்டிருந்தது அந்தத் தீவர்த்தி.  எண்ணெயில் தோய்க்கப் பட்ட அதன் மேற்புற முனையில் பற்ற வைக்கப்பட்டிருந்த தீபம், காலைக் காற்றின் காரணமாக ஒரு நிலையின்றி அசைந்தாடிக் கொண்டிருந்ததுபோலவே, பாண்டியரின் மனமும் மிகச் சலனத்துடன் திகழ்ந்தது. காரணம் என்னவாக இருக்கும்?

போர்ச்சூழலா அல்லது அவரே வியக்கும்படியாக துடித்தெழுந்து காத்திருக்கும் சோழ சைன்னியமா, `போரின்றி சோழத்தை தமது வலையில் விழச் செய்துவிடலாம்’ என்ற அவருடைய எண்ணம் பலிக்காமல்போனதே, அது காரணமா? இவற்றில் எதுவும் காரணமல்ல; பாண்டியரின் மனது அலை பாய்ந்துகொண்டிருக்கக் காரணம், பதிலறிய முடியாத சில கேள்விகளே!

உறையூர்க் கோட்டைக்குள் மந்திரா லோசனை அறையில் குறுவாளை வீசியும், அரண்மனைச் சதுக்கத்தில் யானையை ஏவியும் மணிமுடிச்சோழரையும், வனப்பாதையில் சர்ப்பத்தை வீசி தன்னையும் கொல்ல முயன்றது யார்? ஒருவேளை, சேரனாக இருக்குமா?

சிவமகுடம் - 33

இருக்காது. அவனுக்குப் பாண்டியர்தான் பகையே தவிர, சோழர் அல்ல. எனில், இருவரையும் கொல்லத் துணிந்தது வேறு யார்? அதனால் அவர்களுக்கு என்ன பலன் இருக்க முடியும்?

தவிரவும், உறையூரின் எல்லையில் நம்பியின் மனைவியை ஒருவன் தாக்க முயன்றதாகவும், தான் அவளைக் காப்பாற்றியதாகவும், நம்பியின் வீட்டுக்குள்ளும் வேறு எவரோ மறைந்திருப்பதைத் தன்னால் யூகிக்க முடிந்தது என்றும் துறவியார் செய்தி அனுப்பியிருந்தாரே? அவர்கள் இருவரும் யார், யார்?

இப்படியான கேள்விகளால் உள்ளுக்குள் ஆரவாரம் மிகுந்துவிட, வெளியில் பேரமைதி ஆக்கிரமித்துக்கொண்டது கூன்பாண்டியரை. இங்ஙனம், வெகுநேரம் போர்ச்சூழலையும் புறச்சூழலையும் மறந்து அமர்ந்திருந்தவரை, அவரது பாசறை நோக்கிப் பாய்ந்து வந்த புரவியொன்றின் கனைப்பொலியும், அதன் குளம்படி சத்தமும் சலனப்படுத்தியது.

அவர் நிமிர்ந்து வாயிலை நோக்குவதற்குள், புரவியில் வந்தவன் சட்டென்று தரையில் குதித்து, விஷயம் அவசரம் என்பதால் வாயிற்காவலனின் அனுமதியை எதிர் பார்க்காமல் உள்ளே நுழைந்துவிட்டான்.

அப்படி உள்ளே வந்தவன், சட்டென்று சிரம் தாழ்த்தி மன்னருக்கு வணக்கம் தெரிவித்த தோடு, இடைக்கச்சையில் இருந்து அந்த வஸ்துவை எடுத்து, மிகப் பணிவாக அவர்முன் நீட்டவும் செய்தான்.

பந்தத் தீபத்தின் சுடரில் பளபளத்த அந்த வஸ்துவைப் பார்த்தாரோ இல்லையோ... ஆவேசத்துடன் எழுந்து நின்று அந்த அறையதிரச் சிரித்தார் கூன்பாண்டியர். அத்துடன், அதைக் கொண்டுவந்த வீரனையும் கட்டியணைத்துக்கொண்டார். அதுவரை அவரைப் பெரிதும் குழப்பிக்கொண்டிருந்த அத்தனை வினாக்களுக்கும் பதிலைச் சொன்னது, அந்த வஸ்து!

அதற்குமேல் கணப்பொழுதும் தாமதிக்க வில்லை கூன்பாண்டியர். சேனைத் தலைவர் களைப் பாசறைக்கு அழைத்து அடுத்தடுத்து கட்டளைகள் பிறப்பித்தார். அடுத்த சில விநாடிகளில் எல்லாம் அந்த வனப்பிராந்தியம் எங்கும்,  குதிரைகளின் நகர்வுகளும், யானை களின் பிளிறல்களும், வீரர்கள் தங்கள் வாளைக் கேடயத்தில் வீராவேசமாகத் தட்டிக் கொண்டதால் உண்டான ஒலிகளாலும் பெரிதும் அமர்க்களப்பட்டது.

புரவியில் வந்தவன் மன்னவரை மீண்டும் ஒருமுறை வணங்கிவிட்டுக் கேட்டான், ‘‘நான், படைகளுடன் சேரனைச் சந்திக்கக் கிளம்பலாமா?’’ என்று. அப்படி அவன் கேட்டதும் பேருவகைக்கொண்டார், கூன் பாண்டியர். தனது அடுத்தக் கட்டளை அதுவாகவே இருக்கும் என்பதைச் சொல்லாமலேயே புரிந்துகொண்ட அந்த வீரனின் மதியூகத்தைப் பாராட்டும் வகையில், மீண்டும் ஒருமுறை அவனைக் கட்டி அணைத்துக்கொண்டார்.

அப்படி, பெரும் சிரிப்புக்கிடையே அவனை கட்டியணைத்தவர், அவனுக்கு மட்டுமே கேட்கும்படி மெலிதான குரலில் ஒரு கேள்வியைக் கேட்டார். அப்படி அவர் கேட்டதும் அந்த வீரனும் பெரிதாகச் சிரித்தான். பிறகு, அவரது அன்புப்பிடியில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டவன், தலையை அசைத்தும், விழிகளை விரித்தும், புருவத்தை நெளித்தும் விநோத பாவனையில் ஏதோ சாடை காட்டினான்.

அவன் சொல்ல வந்ததைப் புரிந்து கொண்டவராக திருப்தியுடன் தலையசைத்த கூன்பாண்டியர், ‘‘இனி, நீயும் புறப்படலாம்’’ என்று வாயிற்புறத்தைக் காட்டி உத்தரவு கொடுக்கவே, அந்த வீரன் அவரின் பாதங் களைத் தொட்டு வணங்கிவிட்டு, விரைந்து வெளியேறினான்.

கூன்பாண்டியரும் பாசறையைவிட்டு வெளியே வந்தார். உறையூர்க் கோட்டை அமைந்திருந்த திசையை நோக்கினார்.

‘‘மாலைக்குள் முடிவு தெரிந்துவிடும்’’ என்று முணுமுணுத்தவரின் இதழ்கள், மெள்ளப் புன்னகைத்தன.

அவருடைய அந்தப் புன்னகைக்கான விளைவை, பாண்டியப் படைகளிடம் சிக்கிக்கொண்ட நம்பிதேவனும், உறையூர்ச் சுரங்கப் பாதையில் பெரும் வெள்ளத்தில் பாண்டிய வீரர்களோடுச் சிக்கிக்கொண்ட பொங்கிதேவியும் அனுபவித்தார்கள்.

பாண்டியச் சேனைகளுக்கான தானியங்களைச் சுமந்து வரும் பார வண்டியில், தானிய மூட்டைகளின் மீது கிடத்தப்பட்டும் வண்டியோடு சேர்த்துப் பிணைக்கப்பட்டும் கிடந்த நம்பிதேவன், கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை, இப்படியோர் அனுபவம் தனக்கு வாய்க்கும் என்று!

ஆனால், அதைவிடவும் அபூர்வமான ஓர் அனுபவத்துக்கு அவனையும் அவனைச் சிறைப்படுத்திய பாண்டிய சேனையையும் அழைத்துச்சென்று கொண்டிருந்தது காலம்!

- மகுடம் சூடுவோம்...