Published:Updated:

மகிமை மிகு திருநீறு... எப்படி, எப்போது தரிக்கலாம், தரிக்கக் கூடாது?

மகிமை மிகு திருநீறு... எப்படி, எப்போது தரிக்கலாம், தரிக்கக் கூடாது?
மகிமை மிகு திருநீறு... எப்படி, எப்போது தரிக்கலாம், தரிக்கக் கூடாது?

திருநீற்றின் பெருமை சொல்ல எழுதப்பட்ட கட்டுரை இது. எங்கு விபூதி அணியலாம் எப்போது அணியலாம் என விரிவாகச் சொல்லும் கட்டுரை இது.

`நீறில்லா நெற்றி பாழ்' என்பது ஓளவை வாக்கு. திருநீற்றின் பெருமை சொல்லவே உருவானது திருஞானசம்பந்தரின் `திருநீற்றுப் பதிகம்'. மந்திரச் சொற்களுக்கு நிகரானது திருநீறு. சைவ சமயத்தவரின் அடையாளமாக மட்டுமல்லாமல், தெய்விக ஆற்றல் தரும் புனிதச் சின்னமாகவே திருநீறு போற்றப்படுகிறது. பிறப்பெடுக்கும் எவரும் முடிவில் பிடி சாம்பலாகத்தான் வேண்டும் என்பதால், எதிலும் அளவுக்கு அதிகமான ஆசை வைக்காமல் இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதுதான் திருநீறு. `நீறு' என்றால் சாம்பல்; `திருநீறு' என்றால் மகிமை பொருந்திய நீறு என்று பொருள். திருநீறு `விபூதி' என்றும் அழைக்கப்படும். விபூதி என்றால் ஞானம், ஐஸ்வர்யம் என்றெல்லாம் பொருள் தரும். `பிறப்பு, இறப்பு என்னும் கொடுமையான பிறவிச் சுழலிலிருந்து விடுவித்து, ஈசனின் திருவடிகளில் நம்மைக் கொண்டு சேர்க்கும் மாமருந்து திருநீறு’ என்று போற்றுகிறது திருஞானசம்பந்தரின் திருநீற்றுப் பதிகம்.

அளவற்ற மகிமைகள் கொண்ட திருநீற்றின் மகிமைகள், வகைகள், பயன்படுத்தும் முறைகள், இடங்கள் மற்றும் கால நேரங்கள் பற்றி அறிந்துகொள்ளலாமே...

சைவ சித்தாந்தம் கூறியபடி திருநீறு நான்கு வகைப்படும். அவை கல்பம், அணுகல்பம், உபகல்பம், அகல்பம் என்பன. கன்றுடன்கூடிய ஆரோக்கியமான பசுவின் சாணத்தை பிரம்ம மந்திரம் சொல்லி சிவாக்னியில் எரித்து உருவாக்குவது கல்பத் திருநீறு. காடுகளில் மேயும் பசுக்களின் சாணங்களைக் கொண்டு எரித்து செய்வது அணுகல்பத் திருநீறு. தொழுவங்களிலிருந்து எடுத்த சாணத்தைத் தீயில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு. இதுவே நாம் பயன்படுத்தும் திருநீறு. தரையில் விழுந்து கிடக்கும் சாணங்களை எடுத்துத் தயாரிக்கும் திருநீறு அகல்பம். `சாம்பலாகிவரும் திருநீறு மும்மலங்களையும் சாம்பலாக்கும்’ என்கிறது தேவாரம். 

மனித உடலில் நெற்றி ஒரு முக்கியமான ஸ்தானம். புருவ மத்தியை வசியப்படுத்தி பல வகை சித்துகளை செய்ய முடியும் என்பது ஞானியர் வாக்கு. நெற்றியின் மையத்தைக் காப்பதற்கே விபூதி அணியப்படுகிறது. ஆக்ஞா, விசுத்தி சக்கரங்களை பாதுகாத்து ஆன்ம ஒளியைப் பெருக்குவது விபூதி. பிட்யூட்டரி சுரப்பியைத் தூண்டச் செய்யும் நெற்றியைச் சீர்படுத்தவும், சூரியக் கதிர்களின் சக்திகளை நெற்றி வழியாக உள்ளே செலுத்தவும் திருநீறு பயன்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. விபூதி சிறந்த கிருமி நாசினி என்றும், அதனால் பல நோய்களை வராமல் தடுக்க முடியும் என்றும் சொல்லப்படுகிறது. விபூதியை, ஜபம், மந்திரித்தல், யந்திரங்கள், மருத்துவம்... எனப் பல்வேறு பணிகளுக்காகப் பயன்படுத்திய விதத்தை அகத்திய மாமுனி `அகத்தியர் பரிபூரணம்' என்ற நூலில் விளக்கியிருக்கிறார். இதைப் படிப்பவர்கள் விபூதியைத் தவிர்க்கவே மாட்டார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம்.

விபூதியைத் தரித்துக்கொள்ளும் முறைகளும் பெயர்களும்...

அப்படியே அள்ளி நெற்றியிலும் அங்கத்திலும் பூசிக்கொள்ளும் முறை `உள் தூளனம்.’ 
ஆள்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் என மூன்று விரலால் இடைவெளி விட்டு மூன்று கோடுகளாக விபூதியைத் தரித்துக்கொள்ளும் முறை திரிபுண்டரீகம். திருநீற்றை மோதிரவிரலால் எடுப்பதுதான் சிறந்தது. நம் உடலில் பவித்ரமான பாகம் என்று அதுதான் கூறப்படுகிறது. வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று, விபூதியை எடுத்து கீழே சிந்தாமல், வலது கையின் ஆட்காட்டி விரல், நடுவிரல், மோதிரவிரல் ஆகியவற்றால் எடுத்து அண்ணாந்து, நெற்றியில் பூச வேண்டும். `திருச்சிற்றம்பலம்', `சிவாயநம:' அல்லது 'சிவ சிவ' என்று சொல்லி அணிந்துகொள்ள வேண்டும். காலை, மாலை, மற்றும் இரவு படுக்கப் போகும்போதும், வெளியே கிளம்பும்போதும் திருநீறு தரிக்க வேண்டும். நடந்துகொண்டும், படுத்துக்கொண்டும் விபூதி தரிக்கவே கூடாது. ஸ்வாமி முன்பும், குரு முன்பும், சிவனடியார் முன்பும் முகத்தைத் திருப்பி நின்று விபூதி அணிய வேண்டும். 


தலை நடுவில், நெற்றி, மார்பு நடுவில், தொப்புள் மேல், இடது தோள், வலது தோள், இடது கை நடுவில், வலது கை நடுவில், இடது வலது மணிக்கட்டுகள், இடது வலது இடுப்பு, இடது வலது கால் நடுவில், முதுகுக்குக் கீழ், கழுத்து, வலது காதில் ஒரு பொட்டு, இடது காதில் ஒரு பொட்டு என மொத்தம் 18 இடங்களில் திருநீறு அணியலாம் என்று சைவ ஆகமங்கள் கூறுகின்றன. ஒவ்வோர் இடத்தில் பூசும்போதும் ஒவ்வொரு வகையான பலன்களைப் பெறலாம். 

`திருநீற்றைக் கொடுப்பவர் செய்த தவப் பயன் மற்றும் பூஜா பலன்கள் அதை வாங்குவோருக்கும் போய்ச் சேர்ந்துவிடும். எனவே, தியானத்தில் சிறந்த உயர் நலன்கள் உள்ளவர்களிடம் மட்டுமே விபூதியைப் பெற வேண்டும்’ என்கிறார் அகத்தியர். `ரூம் றீம் சிம்ரா' என்று சொல்லி பெரியவர்களிடம் திருநீறு வாங்கினால் அவர்களின் பரிபூரண ஆசியைப் பெறலாம் என்றும் கூறுகிறார். 

திருநீறு ஆன்மிக பலத்துக்கு மட்டுமல்ல, ஆரோக்கிய நலத்துக்கும் உகந்தது என்கிறது நவீன அறிவியல். `மகிமை என்ற பொருளைக்கொண்ட விபூதியின் ஆற்றல், சிவனுக்கு நிகரானது’ என்கிறது திருஞான சம்பந்தரின் தேவாரம். தேவர்களும் ஞானிகளும் போற்றிய திருநீற்றை அணிந்து நாளும் வளமோடு வாழ்வோம்!

அடுத்த கட்டுரைக்கு