
நிவேதிதா
அன்னபூர்ணே சதாபூர்ணே சங்கரப் பிராணவல்லபே
ஞானவைராக்யசித்யர்த்தம் பிக்ஷாந் தேஹி ச பார்வதி:
மாதா ச பார்வதிதேவி பிதா தேவோ மகேஸ்வர:
பாந்தவா:சிவபக்தாஸ்ச ச்வதேசோ புவனத்ரயம்
கருத்து: பூர்ணமான அன்னமாகத் திகழ்பவளே, எப்போதும் பூரணத்துவத்துடன் திகழ்பவளே, சங்கரனின் பிராணனாகத் திகழ்பவளே, பார்வதிதேவியே, ஞான வைராக்கியங்களை நாங்கள் பெறும்படியான அன்னத்தை பிக்ஷை அளிப்பாயாக.
பார்வதிதேவியான நீயே எனக்கு அன்னை. சிவபெருமானே எனக்குத் தந்தை. சிவனடியார்களே எனக்கு உற்றாரும் உறவினரும் ஆவர். மூன்று உலகங்களுமே என்னுடைய தேசம் ஆகும்.
- அன்னபூர்ணாஷ்டகம்

1933-ம் ஆண்டு மகா பெரியவா தஞ்சை மாவட்டத்துக்கு விஜய யாத்திரை மேற்கொண்டார். செல்லும் வழியில் சிதம்பரம் க்ஷேத்திரத்தை அடைந்தார். தீக்ஷிதர்கள் கேட்டுக்கொண்டதன்பேரில், மகா பெரியவா சில நாள்கள் சிதம்பரத்தில் தங்கியிருக்க சம்மதம் தெரிவித்தார்.
சிதம்பரத்தில்தான் ஆதிசங்கரர் கயிலையில் இருந்து பெற்று வந்த ஐந்து ஸ்படிக லிங்கங்களில் ஒன்றான மோட்ச லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்ததாகச் சொல்வார்கள். மற்ற நான்கு லிங்கங்களில் போக லிங்கத்தை சிருங்கேரியிலும், வர லிங்கத்தை நேபாளத்திலும், முக்தி லிங்கத்தை கேதார்நாத்திலும், யோக லிங்கத்தை காஞ்சியிலும் நிறுவியதாகச் சொல்வர். காஞ்சியில் நிறுவப்பட்ட யோக லிங்கம்தான் நித்திய பூஜைக்குரியது. இந்த ஐந்து லிங்கங்கள் அளவில் ஒன்றுபோலவே இருக்கும். ஒரு லிங்கத்தைப் பூஜிப்பதைப் பார்ப்பதே பரவசத்தைத் தரும். சிதம்பரத்தில் மகா பெரியவா, இரண்டு லிங்கங்களை பூஜித்தார்.ஆம்! காஞ்சியில் தினமும் தாம் வழிபடும் யோக லிங்கத்துக்கும் சிதம்பரத்தின் மோட்ச லிங்கத்துக்கும் ஒன்றாக பூஜை செய்த காட்சி, பக்தர்கள் அனைவரையும் மிகுந்த பக்திப் பரவசத்தில் ஆழ்த்தியது.
சில நாள்கள் சிதம்பரத்தில் தங்கியிருந்த சுவாமிகள், தஞ்சை யாத்திரையைத் தொடங்கினார். தஞ்சையில் முகாமிட்டிருந்தபோது, தினமும் மாலை வேளைகளில் கலை நிகழ்ச்சிகளும், அறிஞர்கள் கூடி கலந்துரையாடும் வித்வத் சபைகளும் நடைபெற்றன. தஞ்சையிலேயே நவராத்திரி வைபவத்தையும் நடத்தி அருளினார் மகா பெரியவா. அப்போது தஞ்சையில் இருந்த இளவரசர் பிரதாபசிம்ம ராஜாவும், டி.ஆர்.ஜோஷி என்பவரும், தஞ்சையில் சங்கர மடத்தின் கிளை ஒன்றை நிறுவும்படி கேட்டுக் கொண்டார்கள். அதற்காக மகா பெரியவா மேலவீதியில் தங்கியிருந்த கட்டடத்தையே நன்கொடையாக வழங்கினார்கள். பின்னர், அந்த இடத்தில் மக்களின் நன்மைக்காக ஆயுர்வேத மருத்துவ சாலையும் ஏற்படுத்தப்பட்டது.
அப்போது காசியில் இருந்த முக்கியமான மடாதிபதிகளும், கல்வி அறிஞர்களும் மகா பெரியவா காசிக்கு விஜயம் செய்ய வேண்டும் என்று பிரார்த்தித்தபடி இருந்தார்கள். அவர்களது விருப்பத்தைப் பூர்த்தி செய்ய திருவுள்ளம் கொண்டார் மகா பெரியவா.

விஷயம் தெரிந்த காசி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். காசி மகாராஜா, பண்டித மதன் மோகன் மாளவியா போன்ற முக்கிய பிரமுகர் களும், பண்டிதர்களும், மகா வித்துவான்களும் பங்கேற்கும் வரவேற்புக் குழு ஒன்று அமைக்கப் பட்டது. சுவாமிகள் காசி யாத்திரையை மேற்கொண்டுவிட்ட செய்தியை அறிந்து அவர்கள் ஆவலோடு காத்திருந்தார்கள்.
செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரம் இந்தப் புனிதப் பயணம் தொடங்கியது.
சுவாமிகளின் யாத்திரையில் ஆந்திரப்பிரதேசத் தில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி இது. அவ்வளவாக நிதி வசதியில்லாத தருணம். ஸ்ரீமடத்தின் பரிவாரமோ மிக அதிகம். தமிழக - ஆந்திர எல்லையைத் தாண்டியபின் வட இந்தியர்கள் எவ்வளவு தூரம் பிக்ஷை காணிக்கை நடத்துவார்களோ என்று ஸ்ரீமடத்தின் அதிகாரிகள் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால், பெரியவர்களின் சங்கல்பம் காமாக்ஷியின் சங்கல்பமே அல்லவா?

அதனால் சென்ற இடமெல்லாம் சிறப்புப் பெற்று, வடபுலத்திலும் ஸ்ரீகாமகோடி பீடத்தின் புகழைப் பரப்பும்விதமாக அந்த திக் விஜயம் அமைந்துவிட்டது.
இந்த யாத்திரையின்போது ஆந்திரக் குக்கிராமம் ஒன்றில் சுவாமிகள் முகாமிட்டார்கள். மடத்தின் அதிகாரிகள் இதனால் கவலையுற்றார்கள். இப்படிப்பட்ட இடங்களில் தங்குவதால் செலவு அதிகமாகுமே தவிர, மடத்துக்குத் தேவைப்படும் உதவி எதுவும் கிடைக்காது. மேலும் யானை, குதிரை, ஒட்டகம் போன்றவற்றைப் பராமரிப் பதிலும் சிரமம் அதிகம் என்பது அவர்களது மனக்குறையாக இருந்தது. இதுபற்றி அவர்களிடம் கேட்காமலேயே ஊகித்து அறிந்துகொண்டார் சுவாமிகள். மிகவும் அமைதியாகவே “ஏன் பதற்றப்படறே? நாம் நல்ல காரியத்தை உத்தேசித்துத்தானே புறப்பட்டிருக்கோம்? நம் லட்சியம் நல்லதா இருந்தா அம்பாள் கைகொடுக் காம போவாளா? அவதானே எல்லாருக்கும் படியளக்கிறா? நமக்கும் நிறைய அளப்பா?” என்று மானேஜரிடம் சொன்னாராம்.
அவர்களால் நம்பவே முடியவில்லை... மறுநாள், கிராமத்தில் திருவிழா நடப்பதைப்போல பெருங் கூட்டம் கூடிவிட்டது. எப்படி அது நடந்தது? அம்பாளின் கருணையா? பெரியவர்களின் சக்தி, வேலை செய்ததா? அவர்களால் சொல்ல முடியவில்லை. எல்லோரும் வந்து சுவாமிகளை வழிபட்டு விட்டுச் சென்றனர்.அக்காலத்தில் முழு வெள்ளி ரூபாய் நாணயம் வழக்கத்தில் இருந்தது. வந்த பக்தர்கள் அனைவரும் இப்படியான நாணயங்களைக் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
அன்று கயிலை சங்கரனுக்கு அன்னபூரணியாகக் காசியில் பிக்ஷை இட்டவள், இன்று காசி யாத்திரை மேற்கொண்ட காஞ்சி சங்கரருக்கு பிக்ஷை இட்டதில் என்ன வியப்பு இருக்கமுடியும்?!
“நான் மடத்திலே இருக்கிற இந்த நாற்பது ஆண்டுகளில், அந்த மாதிரி ஒற்றை ஒற்றை ரூபாயாக ஒரு பெரிய நாணயக்குன்று குவிந்ததைப் பார்த்ததே கிடையாது. மடத்து ஜாகையிலே குவித்து எண்ணிப் பார்த்தபிறகு, படியால் அளந்து சாக்கில் போட்டுக் கட்டினோம். பெரியவாள் என்னிடம், `அம்பாள் படி அளப்பாள்னு சொன்னேன். நோக்கு நம்பிக்கைப்படவில்லை. இப்ப நீயே படியாலே அளந்து கொட்டுறே, பார்த்தியா?' என்றார்கள். பெரியவாளுக்குத் தெரியாதது எதுவுமில்லை. பெரியவாளால் செய்ய முடியாதது எதுவுமில்லை. நாங்க எல்லாரும் பொம்மைகள். ஆட்டுவிக்கிறது அவாதான்!” என்று ஒரு தனிப் பெருமிதத்துடன் மானேஜர் விசுவநாத ஐயர் சொல்லுவது வழக்கம்.
- திருவருள் தொடரும்