மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - 34

சிவமகுடம் - 34
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - 34

ஆலவாய் ஆதிரையான் - ஓவியங்கள்: ஸ்யாம்

போரும் வீரமும்!

ண்டைய தமிழகத்தின் சரித்திரப் பக்கங்கள், பெரும் போர்களால் நிறைந்தவை. சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவேந்தர்களுக்கு இடையேயும், பல்லவர்கள் எழுச்சி ஏற்பட்ட பிறகு அவர்களாலும், புறத்தில் இருந்து சாளுக்கியர்களாலும் ஏற்பட்ட போர்களையும் அவற்றின் விளைவுகளையும் விரிவாக எடுத்துரைக்கிறது சரித்திரம். அவற்றில் சிலவற்றைக் காலம் மிக எளிதாகக் கடந்து சென்றுவிட்டாலும், குறிப்பிட்ட சிலவற்றை சரித்திர ஏடுகளில் மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது.  

சிவமகுடம் - 34

பெரும் சாம்ராஜ்ஜியங்களில் ஒன்று வீழவும், மற்றொன்று எழுச்சி பெறவும் காரணமாகிவிட்ட அப்படியான பெரும் போர்களில், சோழர்கள் குறித்துப் பேசவைப்பவை எனக் குறிப்பிட்டுச் சொல்வதானால், வெண்ணி மற்றும் வாகைப் பறந்தலைப் போர்களைச் சொல்லலாம். இவற்றுக்கு முன்னும்பின்னும் பல போர்களைச் சோழர்கள் சந்தித்திருக்கிறார்கள் என்றாலும், வெண்ணி போர்க்களத்தில், பதினோரு சிற்றரசர்களோடும் இன்னும் சில பேரரசர்களோடும் ஒருங்கே பொருதி கரிகாலன் பெற்ற வெற்றியும், வாகைப் பறந்தலையில் ஒன்பது மன்னர்களை வீழ்த்திய கரிகாலனின் வீரமும் புலவர்களால் பெரிதும் பேசப்படுபவை.

இந்தப் போர்கள் சோழர்களுக்கென்றால், பாண்டியர்களின் பெருமையைப் பேசுவது, தலையாலங்கானத்துப் போர்க்களம். சேர, சோழ மன்னர்களையும் ஐந்து சிற்றரசர்களையும் பாண்டியன் நெடுஞ்செழியன் வென்ற களம் அது. சங்ககாலத்தைய பெரும்புகழ் போராகப் புலவர்கள் இதைச் சிறப்பிக்கிறார்கள். இந்தப் போரின்போது நெடுஞ்செழியன் மிகச் சிறுவனாக இருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை, ‘கிண்கிணி களைந்தகால் ஒண்கழல் தொட்டு...’ என்று பாடியிருக்கிறார் இடைக் குன்றூர் கிழார் எனும் புலவர். கிண்கிணி அணியும் வயதுடைய குழந்தை நெடுஞ்செழியன், அவற்றைக் கழற்றியெறிந்து விட்டு, வீரக்கழல்களை அணிந்துகொண்டானாம்!

இப்படிச் சில போர்கள், சங்கத் தமிழ்ப் புலவர்களாலும், பாடல்களாலும் சரித்திரத்தில் பெரிதும் பேசப்பட்டுக்கொண்டிருக்க, இன்னும் சில போர்களோ செப்பேடுகளில் ஒற்றை வரியில் மட்டுமே அடையாளம் காணப் படுகின்றன.

தோ, உறையூர்க் கோட்டைச் சமவெளியை நோக்கி வேலின் கூர்முனை போன்று நீண்டு கிடந்த மணல்திட்டின் மீது நின்றுகொண்டு, அவ்வப்போது பெருமூச்செறிப்போடு கூன் பாண்டியர் கவனித்துக்கொண்டிருக்கும் உறையூர் போரும், அவற்றில் ஒன்றே.

பிற்காலத்தில், ‘...அப்பகல் நாழிகை யிறவாமல் கோழியுள் வென்றுகொண்டும்’ என்று வேள்விக்குடிச் செப்பேடுகளில் குறிக்கப்பட்ட அந்தப் போரின் முடிவு, தனக்குச் சாதகமாகும் என்பதை கூன்பாண்டியர் முன்னரே அறிந்தேயிருந்தார் என்றாலும், போர் நிறைவுபெறும் கால அளவைதான் அவரால் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை.

மணிமுடிச்சோழரும், இளவரசி மானியும் தீட்டியிருந்த அத்தனை வியூகங்களுக்கும் மாற்று வியூகங்களைக் கனகச்சிதமாக வகுத்திருந்தார் கூன்பாண்டியர்.

அவரது ‘புலியூர்’ திட்டத்தால் சோழ சைன்னியத்தின் பலம் பாதியாகக் குறைக்கப் பட்டது; சோழரின் சேனா வளையங்களும் உடைபட்டுப்போயின. மேலும், பாண்டியரின் அஸ்திர அணி ஒன்று வனப்பாதையாகவே சென்று, கடற்புறத்தில் காத்திருக்கும் தென்னாட்டுப் பரதவர் சேனை, சோழர்களின் உதவிக்கு வரமுடியாதபடி தடுப்பரணாக நின்றதோடு, உறையூரின் வட எல்லையையும் ஆக்கிரமித்துக்கொண்டது.
இப்போது, கூன்பாண்டியரின் ஆணை  மற்றும் திட்டப்படி மெள்ள மெள்ள உறையூரை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது. அந்தப் படையிடமே நம்பிதேவனும் சிக்கிக் கொண்டிருக்கிறான். அந்தவகையில், சிறந்த படைத்தலைவன் ஒருவனையும் சோழர் தரப்பு இழந்துவிட்டது.

அதுமட்டுமா? கோட்டைக்குள் இருக்கும் சோழப் படையின் பிரிவு ஒன்றை, நந்தவனத்து நீராட்டக்குளத்தின் சுரங்கப்பாதை வழியே வெளியேற்றி, பாண்டியர்களைப் பின்புறம் இருந்து தாக்குவதற்கு இளவரசி மானி திட்டமிட்டிருந்தது, பாண்டியருக்குத் தெரிய வந்தது. அவளது அந்தத் திட்டத்தையும் தமது மதியூகத்தால் அடியோடு தவிடுபொடியாக்கி விட்டார் கூன்பாண்டியர்.

ஆம். தமது சிறு படைப்பிரிவு ஒன்றை பொங்கிதேவியைப் பின்தொடர்ந்து சுரங்கப் பாதைக்குள் புகச்செய்தார். அவர்கள் கோட்டைக்குள் நுழைந்துவிட்டால், தங்களுக் குப் பேராபத்து நேரிடும் என்று கருதி, இளவரசி மானியே நீராட்டக்குளத்தின் தண்ணீரைச் சுரங்கத்துக்குள் திறந்துவிட்டதோடு, கோட்டைக்குள் இருந்த சுரங்க வாயிலையும் மூடிவிட்டாள்.

பாண்டியர் இதைத்தான் எதிர்பார்த்தார்.  இனி, சோழர்களும் அந்தப் பாதையைப் பயன்படுத்த முடியாது. கோட்டை வாயில் மட்டுமே அவர்கள் வெளியேறுவதற்கான ஒரே வழி.

இப்படி, அனைத்தும் கூன்பாண்டியருக்குச் சாதகமாகவே இருந்தாலும், அவர் கணித்திருந்த நேரத்தில் வெற்றி கைகூடுவதாக இல்லை.

அதற்கு, சோழப் படை வீரர்கள் காட்டிய  பெரும் வீரம் ஒரு காரணம் என்றால், கூன்பாண்டியரும் ஒரு காரணம் என்றே சொல்ல வேண்டும். ஆம்... இயன்றவரையிலும் போரில் பகைவர் தரப்புக்கு உயிர்ச்சேதம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்படி திடமாக உத்தரவிட்டிருந்தார் அவர்.

போரில் வெற்றிக்கான மோதல் இருவகைப்படும். சமபலத்தோடு மோதி எதிர் தரப்புக்குக் கடும் உயிர்ச்சேதத்தை அளித்து, அவர்களது எண்ணிக்கையைக் குறைப்பது முதல் வகை.  தமது தரப்பில் அதிக எண்ணிக்கையிலான வீரர்களை இறக்கி, எதிரிகளை நெருங்கி திக்குமுக்காடச் செய்து வீழ்த்துவது, இரண்டாவது வகை. கூன்பாண்டியர் இரண்டாவதையே கையில் எடுத்திருந்தார்.

துவக்கத்தில் இருந்தே சோழர்களை அழிப்பதில் அவருக்கு விருப்பமில்லை. அவர்களுடனான இந்தப் போரும்கூட தவிர்க்கமுடியாமல் ஏற்பட்டதுதான்.

மேலும், சோழர்பிரான் மீதும் இளவரசி மானியின் மதியூகத்தின் மீதும் பெருமதிப்புக் கொண்டிருந்த கூன்பாண்டியர், அவர்கள் மீது எவ்வித பாதிப்பையும் திணிக்க அவர் விரும்பவில்லை. ஆகவேதான், தனது சேனைத்
தலைவர்களிடம் `போரில் ஆக்ரோஷம் காட்ட வேண்டாம்’ என்று திடமாக உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், எதிர்தரப்பில் சோழ சைன்னியம் பெரும் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி, பாண்டியப் படைகளுக்கு பெரும் சேதத்தை விளைவித்துக்கொண்டிருந்தது.

ஒருபுறம் பெரும் சூறாவளியாகச் சுழன்று கொண்டிருந்தது பட்டர்பிரானின் பெரும் வாள். கனத்த சரீரத்தினரான அவர் இப்படி புயல்வேகம் காட்டுவார் என்பதை பாண்டிய சேனாதிபதிகள் எதிர்ப்பார்க்கவில்லை. எனவே, ஒருவருக்கு இருவராக தத்தமது படைப்பிரிவுடன் அவரைச் சூழ்ந்தனர். எனினும், அவரது வேகத்தை அவர்களால் மட்டுப்படுத்த முடியவில்லை.

வேறொருபுறத்தில், கோச்செங்கணும் அவன் வீரர்களும் பெரும் சீற்றத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.காலாக்னியாகச் சுழன்ற கோச்செங்கணின் பெரும் வாள், மின்னலாகத் தாக்கியது எதிரிகளை. அதை எதிர்கொண்ட கயற் கேடயங்கள் பிளந்தன. இன்னும் சில பாண்டிய வீரர்களின் கேடயத்தையும், அவர்களது மார்புக் கவசத்தையும்கூட ஊடுருவி அவர்களின் குருதியை ருசிப் பார்த்தது கோச்செங்கணின் பொல்லாத வாள்! 

சிவமகுடம் - 34

அவனது தாக்குதலைக் கண்டு திகலடைந்த  பாண்டிய வீரர்கள் பின்வாங்கினார்கள். அதைப் பயன்படுத்திக்கொண்டு, மெள்ள மெள்ள பட்டர்பிரானுக்கு உதவியாக அவரை நெருங்க முற்பட்டான் கோச்செங்கண்.

எனினும், அதற்கு இடம் கொடுக்காமல், மென்மேலும் வந்து அவனைச் சூழ்ந்து கொண்டே இருந்தனர் பாண்டிய வீரர்கள். கோச்செங்கண் சளைக்காமல் போரிட்டான்.

நாழிகைகள் கழியக் கழிய, பாண்டியர் தரப்பில் உயிர்ச்சேதம் அதிகமாகிக் கொண் டிருந்தது. அப்படியிருந்தும், விரைவில் வெற்றி கிடைத்துவிடும் என்று உறுதியாக நம்பினார் கூன்பாண்டியர். ஏனெனில், அதுவரையிலும் அவரது திட்டப்படியே அனைத்தும் நடந்து கொண்டிருந்தன.

உறையூரின் எல்லைப் புறங்களைச் சுற்றி வளைத்திருந்த பாண்டிய படைப்பிரிவுகள், எல்லையில் இருந்து உறையூரை நெருங்க ஆரம்பித்திருந்தன. தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளிவிட்டு ஒலித்த எக்காளங்களின் ஓசையும், பேரிகை முழக்கங்களும் அவரது படைப்பிரிவுகளின் வருகையை அவருக்குத் தெரிவித்துக்கொண்டிருந்தன.

இங்ஙனம், பெரும் சமுத்திரம் சூழ்வது  போன்று ஆயிரமாயிரம் பாண்டிய வீரர்கள் அணியணியாய் உறையூர்க்கோட்டையைச் சுற்றிவளைத்து நெருக்கும்போது, எதிரிகள் திணறிப்போவார்கள். அதனால், மனதளவிலும் உடலளவிலும் சோர்ந்துபோகும் அவர்களை, எளிதில் கோட்டை மதிலோரத்துக்கு நெருக்கிச் சரணடைய வைத்துவிடலாம். அதன்பிறகு, அவர்களைப் பிணையாக வைத்து கோட்டைக்குள் இருப்பவர்களையும் வழிக்குக் கொண்டு வருவது அப்படியொன்றும் பெரிய காரியமல்ல என்பதே பாண்டியரின் மனதுக்குள் அப்போதைக்கு ஓடிக் கொண்டிருந்த திட்டம். அதேநேரம், அவரின் மனதுக்குள் வேறொரு சிந்தனையும் எழாமல் இல்லை. ‘வெளியே இப்படிக் கடும்போர் நடக்கும் இந்த நேரத்தில் சோழர், கோட்டைக்குள் என்ன செய்து கொண்டிருக்கிறார்? நம் வீரர்கள் பெரிதாகப் பேசிக்கொள்கிறார்களே... இளவரசி மானியைப் பற்றி... அவள்தான் என்ன ஆனாள்?’ என்று அவ்வப்போது தன்னைத் தானே கேட்டுக்கொண்டார். ‘நிச்சயம் இதற்குப் பின்னால் வேறு ஏதேனும் சூட்சுமம் இருக்கலாம்’ என்று அவர் மனம் அவரை எச்சரிக்கவும் செய்தது. அவர் மனதின் கணிப்பு விரைவிலே பலித்தது.

திடுமென உறையூர்க்கோட்டை மதிலின் மீதிருந்த முரசுகள் ஏகக்காலத்தில் முழங்கின. அவற்றின் பேரொலிக்குத் துணைசேர்ந்து மிகப்பெரிதாக ஒலிக்கத் துவங்கின மதிற் புறத்து சோழ வீரர்களின் துந்துபிகள். இந்தச்சத்தங்களையெல்லாம் மிஞ்சும்படி, விநோதப் பேரோலியை எழுப்பியபடி, கோட்டைக் கதவுகள் திறந்தன.

கூன்பாண்டியர் என்ன ஏதென்று நிதானிப்பதற்குள், கோட்டைக்குள் இருந்து பிரளயக்கால வெள்ளம்போல் பாய்ந்து வந்த சோழப் பெரும்படை, பாண்டியப் படைகளின் மீது அதிவேகத்துடன் மோதியது. 

எண்ணிக்கையில் அதிகம் என்றாலும், இந்தத் திடீர்த் தாக்குதலால் பாண்டிய படைகள் சற்று நிலை குலையவே செய்தன. அதைப் பயன்படுத்திக்கொண்டு, வெகு எளிதில் அவர்களை ஊடுருவியது, கோட்டைக்குள் இருந்து வெளியேறிய சோழ  சைன்னியம். அதற்கு வழிகாட்டியபடி முன்னால் பாய்ந்து வந்த கரும்புரவியையும் அதன்மீது கனகம்பீரமாக அமர்ந்தபடி வாள் சுழற்றிய, முகக்கவசம் அணிந்த வீரனையும் கண்டதும் கூன்பாண்டியருக்குள் ஏதோ பொறிதட்டவே, சட்டென்று தனது புரவியின் மீதேறி தானும் களத்தில் புகுந்தார்.

அப்படி அவர் செய்திருக்காவிட்டால், சரித்திரம் வேறுமாதிரி திரும்பியிருக்கும்.

- மகுடம் சூடுவோம்...