Published:Updated:

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!
திருப்பட்டூர் அற்புதங்கள்!
##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
'ஹூ
ம்... கலி முத்திப் போச்சு!’ என்று எதற்கெடுத்தாலும் அலுத்துக்கொள்கிறவர்கள் நிறைந்திருக்கிற உலகம் இது. இந்தக் கலியுகத்தில், எத்தனையோ ஆற்றல்களும் அழிவுகளும் மாறி மாறி வந்துகொண்டே இருக்கின்றன. நன்மைகளும் தீமைகளும் கொண்ட வாழ்க்கையில், நன்மை வந்தால் பூமிக்கும் வானுக்கும் குதிப்பதும், தீமை ஏற்பட்டால், மூலையில் முடங்கிவிடுவதும் மனித இயல்புகள்! ஆனால், இனி வரும் காலங்கள் யாவற்றிலும், நமக்குத் துணையாக வந்து வழிநடத்தி அருள ஸ்ரீகாலபைரவர் தயாராக இருக்கிறார் என்பது தெரியுமா உங்களுக்கு?!

'கலியுகத்துக்கு காலபைரவர்’ என்கிற வழக்குச் சொல்லைச் சொல்லி, ஆராதித் தனர் நம் முன்னோர். அந்த வகையில், கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாகத் திகழ்கிறார் ஸ்ரீகாலபைரவர் எனப் போற்றுகின்றன சைவ நூல்கள்.

இழந்த பதவியை பிரம்மாவுக்கு மீட்டுத் தந்தருளிய திருத்தலமான திருப்பட்டூரில், அழகு ததும்ப அருள்பாலித்துக்கொண்டு இருக்கிறார் ஸ்ரீகாலபைரவர்.

சிவப்பரம்பொருளுக்கு 64 மூர்த்தங்கள் உண்டு. அதில், தத்புருஷ மூர்த்தங்கள் 25 வகை என்பர். அந்த மூர்த்திகளில், ஸ்ரீகாலபைரவரும் ஒருவர். ஸ்ரீதிருமாலும் ஸ்ரீபிரம்மனும் சிவபெருமானின் அடியையும் முடியையும் தேடிச் சென்று, அவற்றைக் கண்டடையாமல் போயினர். ஆனால், 'முடியைக் கண்டேன்’ என்று பிரம்மா பொய் சொல்ல, அவர் சொல்வது உண்மை என்று தாழம்பூ பொய்சாட்சி சொல்ல... அதனால் வெகுண்டு எழுந்த சிவபெருமான், தாழம்பூவை பூஜைக்கு உகந்தது ஆகாது எனப் புறக்கணித்தார். ஸ்ரீபிரம்மாவின் பதவியைப் பறித்ததுடன், அவருக்கு தனி ஆலயம் இல்லை என்றும் சாபமிட்டார்.

அதுமட்டுமா?! ஸ்ரீபிரம்மா பொய் சொன்னதும், 'என்ன, இவர் சொல்வது உண்மையா?’ என்று சிவபெருமான் கேட்க, பிரம்மனின் முகதாட்சண்யத்துக்காக 'ஆமாம்’ என்று தலையாட்டிய காமதேனு, அதேவேளையில், தன் வாலை அசைத்து 'இல்லை’ என்பது போல் சைகை செய்ததாம். இதனால் கோபமுற்ற சிவனார் விடுத்த சாபத்தால்தான், பசுவின் முகத்தை வணங்காமல், பின்பக்கத்தில் லக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்றும் அதை வணங்குவதே சிறப்பு என்றும் ஆனதாகத் தெரிவிக்கிறது புராணம்.

அதேபோல், இறுமாப்புடன் இருந்த பிரம்மாவின் ஒரு சிரசை சிவனார் கொய்தார் அல்லவா... அப்போது அவர் எடுத்த வடிவமே ஸ்ரீகாலபைரவர் என்கின்றன புராணங்கள்.

இதோ... இந்தத் திருப்பட்டூரில், இழந்த பதவியான படைப்புத் தொழிலைத் திரும்பப் பெற்றுக்கொண்டதுடன், ஆலயத்தில் அழகிய சந்நிதியும் கொண்டு, தன்னை நாடி வருவோருக்கு அருள்மழை பொழிகிற ஸ்ரீபிரம்மா குடிகொண்டிருக்கும் அற்புதத் தலத்தில், கலியுகக் காவல் தெய்வமாம் ஸ்ரீகாலபைரவரும் விசேஷ வரங்கள் தருகிற வள்ளலாகக் காட்சி தருகிறார்.

திருப்பட்டூர் அற்புதங்கள்!

தேய்பிறை அஷ்டமி நாளில், ராகுகால வேளையில் ஸ்ரீகாலபைரவரை வழிபடு வது சிறப்பு. அப்போது அவருக்குச் சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் நடைபெறுகின்றன. இப்படியான ஆராதனைகளும் பூஜைகளும் ஆலயங்கள் பலவற்றிலும் உண்டு என்றாலும், திருப்பட்டூர் என்கிற மிகுந்த சாந்நித்தியம் கொண்ட திருத்தலத்தில் ஸ்ரீகாலபைரவர் காட்சி தருகிற விநோதமே தனி!

பொதுவாக, கோயிலின் வடகிழக்கு மூலையில், தெற்கு நோக்கியபடி காட்சி தரும் ஸ்ரீகாலபைரவர், இங்கே, மேற்கு நோக்கிய நிலையில் தரிசனம் தருகிறார். அதுமட்டுமா? இவரின் வலது செவியும், அதில் இருக்கிற தாடங்கமும் சற்றே வித்தியாசமாக இருப்பதையும் அறியலாம்.

அத்துடன், ஸ்ரீகாலபைரவருக்கு இடது பக்கத்தைவிட வலது பக்கத்தில் சற்று தாராளமாகவே இடம் உள்ளது. தேய்பிறை அஷ்டமியில், ராகுகால வேளையில், ஸ்ரீகாலபைரவரைத் தரிசித்து, அவரின் வலது காதில் நம் பிரச்னைகளைச் சொல்லி வணங்குவதற்காகத்தான் வலது காது வித்தியாசமாக இருக்கிறது; வலது பக்கத்தில் நிறைய இடம் விட்டு மூர்த்தத்தைப் பிரதிஷ்டை செய்துள்ளனர் என்று நினைக்கத் தோன்றுகிறது.

திருப்பட்டூருக்கு தேய்பிறை அஷ்டமியின் ராகுகால வேளை யில் வந்து, ஸ்ரீகாலபைரவரை வணங்கி, அவரிடம் கோரிக்கை களை வைத்தால், வழக்குகளில் இருந்தும் பிரச்னைகளில் இருந்தும் விரைவில் நிவாரணம் பெறலாம்; இழந்த பொருள், இழந்த பதவி, இழந்த செல்வம், இழந்த கௌரவம் ஆகியவற்றை மீண்டும் தந்தருள்வார் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

தவிர, ஸ்ரீகாலபைரவருக்கு நேர் எதிரில் ஸ்ரீகஜலக்ஷ்மி தரிசனம் தருகிறாள். இதுவும் விசேஷ அமைப்பு என்கின்றனர். எனவே, இங்கு வந்து ஸ்ரீகாலபைரவ மூர்த்தியை வணங்கித் தொழுதால், கடன் தொல்லைகள் அனைத்தும் விலகி, சகல ஐஸ்வரியங் களும் பெற்று வாழலாம் என்பது ஐதீகம்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

இந்தக் கலியுகத்தில், சமீபகால மாகவே ஸ்ரீகாலபைரவ வழிபாடு அதிகரித்து வருகிறது. தேய்பிறை அஷ்டமியின் ராகு காலத்தில் இங்கு வந்து, ஒரு நட்சத்திரத்துக்கு ஒரு மிளகு வீதம் 27 நட்சத்திரங்களுக்கு 27 மிளகு என எடுத்து, ஒரு துணியில் கட்டி, அதனை அகல் விளக்கிலிட்டு, நல்லெண்ணெயால் தீபமேற்றி வழிபட்டால், சகல தோஷங்களில் இருந்தும் நிவாரணம் பெறலாம்; எதிரிகள் தொல்லை என்பதே இனி இல்லை; இழுபறியாக இருக்கிற வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கப் பெறுவார்கள் என்பது ஐதீகம்!

நான்கு திருக்கரங்களுடன் உடுக்கை, பாசம், அங்குசம் ஏந்தி, இடது கையில் அமிர்தகலசத்தைத் தாங்கியபடி காட்சி தரும் ஸ்ரீகாலபைரவரின் மூர்த்தத்தைத் தரிசித்துக் கொண்டே இருக்கலாம். அத்தனை நேர்த்தி; அவ்வளவு அழகு! அவரின் இடுப்பில் சுற்றிக்கொண்டிருக்கிற நாகம், அந்த அமிர்தகலசத்தைத் தாங்கியபடி இருப்பதை நுட்பமாக சிற்பத்தில் வடித்த அந்தச் சிற்பிக்கு, எந்த மன்னன் என்ன பரிசு தந்தானோ, தெரியவில்லை! அந்தப் புண்ணியவான், இந்தச் சிற்பக்கலையின் மூலமாக இன்றைக்கும் வாழ்ந்துகொண்டிருக்கிறான்.

தொடர்ந்து ஆறு தேய்பிறை அஷ்டமி நாட்களில், ஸ்ரீகாலபைரவருக்கு செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக் கொண்டால், திருமண தோஷங்கள் விலகி, கல்யாண மாலை தோள் சேரும்; பிள்ளைச் செல்வம் இல்லையே என வருந்துவோருக்கு, குழந்தை வரம் தந்தருள்வார் ஸ்ரீகாலபைரவர் என, கோயிலுக்கு வந்திருந்த பெண்கள் பலரும் சொல்லிப் பூரிக்கின்றனர்.

'ஓம் காலகாலாய வித்மஹே; காலதீதாய தீமஹி தந்நோ காலபைரவ பிரசோதயாத்’ எனும் ஸ்ரீகால பைரவ காயத்ரியைச் சொல்லி, தினமும் வழிபடுங்கள்.

ஒரு தேய்பிறை அஷ்டமி நாளில், ராகுகால வேளையில், திருப்பட்டூர் ஸ்ரீகாலபைரவருக்கு, வடைமாலை சார்த்தி வழிபடுங்கள். அல்லது, தயிர்சாதமோ சம்பா சாதமோ நைவேத்தியம் செய்து வணங்குங்கள். முக்கியமாக, கொஞ்சம் கடலை உருண்டையும் நைவேத்தியம் செய்து மனம் குவித்துப் பிரார்த்தனை செய்யுங்கள். அதில் குளிர்ந்து போய், உங்கள் வாழ்க்கையையே தித்திக்கச் செய்வார் ஸ்ரீகாலபைரவர்!

- பரவசம் தொடரும்
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்