Published:Updated:

அடியேன் கண்ட அறுபத்துமூவர் விழா!

அடியேன் கண்ட அறுபத்துமூவர் விழா!
பிரீமியம் ஸ்டோரி
அடியேன் கண்ட அறுபத்துமூவர் விழா!

எழுத்து சித்தர் பாலகுமாரன்

அடியேன் கண்ட அறுபத்துமூவர் விழா!

எழுத்து சித்தர் பாலகுமாரன்

Published:Updated:
அடியேன் கண்ட அறுபத்துமூவர் விழா!
பிரீமியம் ஸ்டோரி
அடியேன் கண்ட அறுபத்துமூவர் விழா!

உன் கண் உன்னை ஏமாற்றினால், என் மேல் கோபம் உண்டாவதேன்?

று வயது இருக்கும். வெளியில் சிகப்பு நிறத்தில் கலர் கலராய் பச்சையாக, மஞ்சளாக வித வித வண்ணங்களாக குச்சி மிட்டாய்கள், கோலி மிட்டாய்கள், முறுக்கு மிட்டாய்கள் அறுபத்துமூவர் விழாவில் விற்றுக் கொண்டிருந்தார்கள். ஒன்றுகூட அம்மா வாங்கித் தரமாட்டேன் என்று சொல்லிவிட்டாள். ``அத்தனையும் விஷம் தள்ளிப் போ'' என்றாள். ஆனால், ஆறேழு குழந்தைகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

அடியேன் கண்ட அறுபத்துமூவர் விழா!

``எனக்கு வாங்கித்தரலை நான் காணாத போயிடுவேன்” என்று உரத்தக்குரலில் கத்தினேன். எங்கம்மா திகைத்துப் போனாள்.

``ஆறு வயதில் இவன் திரிசமனத்தை பாரு.”

என்னை விட பத்து வயது பெரிய மாமன் கூவினார்.

``போடா காணாத போடா” என்னைத் தரதரவென்று இழுத்து பெரிய கும்பலுக்கு நடுவே தள்ளினார். நான் ஜனங்களால் முட்டுண்டு வேறு பக்கம் போனேன். அழுகை வந்தது. அழவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடியேன் கண்ட அறுபத்துமூவர் விழா!“அம்மா கௌசல்யா, உன் புள்ள இங்க அம்போன்னு நிக்கறான். கூட்டிண்டு போம்மா” ஒலிபெருக்கி அலறிக்கொண்டிருந்தது.

நான் காணாமல் போயிடுவேன்னு சொன்னதுக்கு அதுவும் காரணம். காணாமல் போவதென்றால் என்ன என்று மாமன் காட்டியிருக்கிறார். நான் ஃப்ளாட்பாரத்தின் ஓரத்திலுள்ள சிமென்ட் கல்லில் உட்கார்ந்தேன். போவோர் வருவோரை வேடிக்கைப் பார்த்தேன். அழலாமா என்று நினைத்தபோது மாமன் வந்துவிட்டார்.

``சுலோச்சனா ரொம்ப திமிர் பிடிச்சவன் உன் புள்ள. கள்ளுளி மங்கன் மாதிரி உட்கார்ந்திருக்கான். நீதான் அழற.”

அம்மா கலர் மிட்டாய் இல்லாது கமர்கட் வாங்கிக் கொடுத்தாள். எல்லோரும் ‘கபாலி கபாலி’ என்று பரவசமானார்கள். எனக்கு அந்த நேரம் கமர்கட்தான் கபாலி. கபாலியை பார்க்கவேயில்லை.

மனிதன் மாறிவிட்டான், மதத்தில் ஏறிவிட்டான்...


தினைந்து வயது. நல்ல தீனி. பேயாட்டம். வலுவான முதுகு. தடித்த தாம்புக்கயிற்றைத் தோளில் தூக்கி தேர் இழுத்து வர வேண்டும். அதைவிட சுவாரஸ்யம் சுளீர் சுளீர் என்று முதுகிலும், முகத்திலும் அடிக்கும் குளிர் ஜலம். மேல் மாடியிலிருந்தும் ஊற்றுவார்கள். அப்படி நனைவதற்காகவே தேர் இழுப்பது வழக்கம். மேலிருந்து ஒரு பக்கெட் தண்ணீரை வீச, மயிலாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டரை அது மொத்தமாய் நனைத்தது. ஜனம் வழித்துக் கொண்டு சிரித்தது. அவரை நோக்கி கை நீட்டி அதிகம் சிரித்தது நான்தான். ‘போட்டு சாத்துடா அவனை’ - அவர் கட்டளை இட, இரண்டு போலீஸ்காரர்கள் துரத்தினார்கள். ஒருவர் மூன்று தெரு வரை துரத்திவந்தார். மயிலாப்பூர் சந்துகள் எனக்கு அத்துபடி. என்னைப் பிடிக்க முடியாது பின்வாங்கினார். 

அடியேன் கண்ட அறுபத்துமூவர் விழா!

நான் வீட்டுக்குப் போய் சட்டை மாற்றினேன். கிழக்கு மாட வீதியில் கலந்து கொண்டேன். என் உடை மாற்றம் கண்டு நண்பர்கள் வியந்தார்கள். ‘பெரிய கிரிமினல்டா நீ’ என்றார்கள்.

அந்த முறையும் நான் கபாலியைப் பார்க்கவில்லை. எல்லா போலீஸ்காரர்களும் கபாலியாகத் தெரிந்தார்கள்.

சிரித்து சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்...


ருபத்தைந்து வயது. நண்பர்களோடு தோள் பின்னிக்கொண்டு திருவிழா பார்ப்பது பரமசுகம்.

“ஐய்யோ சாவடிக்கறடா.”

பெண்களை வெறித்துவெறித்து பார்ப்பதே சுபாவம்.

“அந்த வீட்டு மாடியில ஒண்ணு இருக்கு. ரோஜாப்பூ மாதிரி.”

“எங்க, எங்க?” - இடம் காட்டினார்கள்.

அடியேன் கண்ட அறுபத்துமூவர் விழா!

அது வக்கீல் வீடு. இன்னொரு வக்கீல் பெயர் சொல்லி, உள்ளே போய் நானும் என் சினேகிதனும் பால்கனியில் நின்றுகொண்டோம். ஒரு பாட்டி தடுத்து, யோசனை பண்ணி அனுமதி தந்தாள்.

‘கொத்திக்கொண்டு போவான்டி ஆப்பிள் சிவப்பு என் பேத்தி.’ அப்போது உருவான கவிதை அது. அவள் கொள்ளை அழகு. ஒவ்வொரு அசைவும் நடனம். சிரிப்பெல்லாம் மத்தாப்பூ. நான் அவளைத்தான் பார்த்தேன். அப்போதும் கபாலியைப் பார்க்கவில்லை.

நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா...

ங்க ரிஷப வாகனத்தில் கபாலீஸ்வரர் வருகை. நான் இரண்டு மனைவிகளோடும், இரண்டு குழந்தைகளோடும் இரவு பதினோரு மணிக்கு ஒரு வீட்டு மாடிப்படி பால்கனியில் அமர்ந்துகொண்டேன்.

மேலிருந்தபடி, நெரியும் கூட்டம் பார்த்தோம். மேலே சிதறும் பாணங்கள் பார்த்தோம். சரவிளக்குகள் பார்த்தோம். குழந்தைகள் அதிசயமாக சகலமும் பார்த்து கூவின. வழக்கம்போல கௌரி கேள்விகள் கேட்டாள்.

அடியேன் கண்ட அறுபத்துமூவர் விழா!

``ஸ்வாமிக்கு மட்டும் ஏன் தங்கம்? அம்பாளுக்கு மட்டும் ஏன் வெள்ளி? வெள்ளியை ஸ்வாமிக்கு போட்டுட்டு, அம்பாளுக்குத் தங்கம் போட்டிருக்கலாமோன்னோ. லேடீஸ்குத்தானே தங்கம் முக்கியம்?”

என் மகள் ஸ்ரீகௌரியின் பல கேள்விகளுக்கு இன்றளவும் என்னால் பதில் சொல்ல முடியவில்லை. வீடு வருவதற்குள் குழந்தைகள் தூங்கிப்போயின. அவர்கள் முகத்தில் சந்தோஷம் இருந்தது. அந்த முறையும் நான் கபாலியைப் பார்க்கவில்லை. குழந்தைகளைத் தான் கவனித்துக் கொண்டிருந்தேன்.

தேடினேன் தேவ தேவ தாமரைப் பாதமே...


களுக்குத் திருமணம் ஆகிவிட்டது. ஓர் ஆண் குழந்தையோடு ஷார்ஜாவில் குடித்தனம் செய்கிறாள். மகன் கல்லூரிக் காளை. எம்.பி.ஏ. 

அடியேன் கண்ட அறுபத்துமூவர் விழா!

வாசகர் என்று எனக்கு அருகே வந்தவர்கள் குடும்ப நண்பர்களானார்கள். ஒரு பத்து பேர் ஆண், பெண்களோடு, நான் அறுபத்துமூவர் சிறு பல்லக்குகளை வலம் வந்தேன். திண்ணப்பன் என்கிற கண்ணப்பன் செட்யூல்ட் ட்ரைப். ஆனால், கண்ணப்பன் கதையைத் தவிர வேறு எவர் கையையும் ஈசன் தொட்டதில்லை. தொட்டு தடுத்ததில்லை. இது அப்பூதியடிகள். இவை ஏனாதி நாயனார். இவர் வாயிலார் நாயனார்; மயிலாப்பூர்வாசி. ஒவ்வொருவருக்கும் கதை சொன்னேன். என் சத்சங்கம் தவிர, மற்றவரும் கேட்டார்கள்.

``இத்தனை வருஷம் வரேன். இதைப்பத்தியெல்லாம் ஒன்றுமே தெரியாது . நீங்க கதை சொல்றா மாதிரி சொல்றேள்.”

அடியேன் கண்ட அறுபத்துமூவர் விழா!

யாரோ ஒரு மத்திம வயது பெண்மணி கை கூப்பிவிட்டுப் போனாள். அந்த முறையும் அடியார்களைத்தான் பார்த்தேன். கபாலியைப் பார்க்கவில்லை.

என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா...

ழுபது நடந்துகொண்டிருக்கிறது . ஜூலை இரண்டாயிரத்து பதினாறில் நிறையும். விழா எடுக்க பேசுகிறார்கள். அதுவரை தாங்குமா என்கிற பயம் எனக்கு. கோலூன்றி நடக்கிறேன். அதிகார நந்தி. திரை தூக்கி கற்பூரம் காட்டினார்கள்.

``பார்த்துட்டேன். பார்த்துட்டேன். இந்த வருஷம் கபாலியை பார்த்துட்டேன்.”

அருகேயிருந்த கிழவர் கூவினார். என் மனதும் கூவியது. அருகே போனேன். அணைத்து கீழே நிற்க வைத்தார்கள். கதம்பச்சரம் சாற்றி, திருநீறு கொடுத்தார்கள். நிமிர்ந்து கபாலியைப் பார்த்தேன். முதன்முதலாய் பார்ப்பது போல் பார்த்தேன்.

கருணை நிலவு பொழி வதன மதியனொரு கபாலி..!

அந்தப் பாட்டு உண்மைதான். இது கருணை பொழிகின்ற சிரிப்பு அத்தனை பூக்களுக்கும் நடுவே இந்த முகம் பொலிவாய் தெளிவாய்  மின்னுகிறது. பார்க்கத்தான் தெரியவில்லை. அப்பனே, அடுத்த முறையும் உன்னைப் பார்ப்பேனா  தெரியவில்லை. மறுபடி பிறவி எனில், மயிலாப்பூரில் பிறக்க வை. உன்னை இன்னும் தெளிவாக அறிமுகம் செய்.

அடியேன் கண்ட அறுபத்துமூவர் விழா!

‘சிவனே, என் சிவனே நான் உனைப் பாடுவேன்... என் தமிழ் ஓசை வீச்சாலே ஊர் கூட்டுவேன்....’

மனம் பாடியது . கண்ணில் நீர் வடிந்தது . கடவுளைப் பார்க்க ஒரு  வயது தேவைப்படுகிறது. பதினேழு வருடமாக அறுபத்து மூவருக்கு அன்னதானம் செய்து வருகிறேன். இருபத்தைந்து பொட்டலத்தில் ஆரம்பித்து இரண்டாயிரம் பொட்டலத்தில் வந்து நிற்கிறது.

நானும் சந்தோஷமாகி, என்னைச் சுற்றியுள்ளோரையும் சந்தோஷத்தில் ஈடுபடுத்துதல் என்பதே நான் இங்கு கற்ற பாடம். அன்னதானம் ஒரு சந்தோஷம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism