இரண்டு பரீட்சைகள்

முனிவர் அனுதாபம் பரதன் உள்ளத்திலே ஆயிரம் தேள் ஏக காலத்தில் கொட்டுவது போல் இருக்கிறது. அந்தக் கடுப்பை எப்படிச் சகிப்பான்? “என்ன வார்த்தை சொன்னீர்? யாரைப் பார்த்துச் சொன்னீர்?
என் தகுதிக்குப் பொருத்தமான வார்த்தை சொல்ல வில்லையே!” என்று சீறுகிறான்.

மேலே பேச முடியாமல் சிறிது நேரம் ஸ்தம்பித்து நிற்கிறான். கோபத் தீ கொழுந்துவிட்டு எரிகிறது. ‘`ஓ ரிஷியே! உம்முடைய யோக்கியதைக்குத்தான் சரியா, நீர் சொன்ன வார்த்தை?” என்றுகூடப் பொருள்படுமாறு பேசி விடுகிறான்.

சீற்றத் தீயிலிருந்து தெறிக்கும் பொறிகள் போன்ற சொற்களைப் பாருங்கள்:

சினக்கொ டுந்திறல்
சீற்றவெந் தீயினான்,
மனக்க டுப்பினன்,
மாகவத்(து) ஓங்கலை,
‘எனக்(கு)அ டுத்த(து) இ-
யம்பிலை நீ!’ என்றான்;
‘உனக்(கு)அ டுத்ததும்
அன்(று)உர வோய்!’ எனா.

“ஓ புத்திசாலியே! உனக்கு அடுத்ததும் அன்று” என்ற வார்த்தையில், ‘`இவ்வளவுதானா இவருடைய புத்திசாலித்தனம்? இதற்கு இவ்வளவு நீளமான தாடியும் சடையும் வேண்டுமா?” என்று துடிதுடிக்கும் தர்மாவேசத்தையே பார்த்து விடுகிறோம். ‘‘பரதனா இப்படிப் பேசுகிறான்?” என்று பிரமித்துப் போகிறோம்.

இதற்காகத்தான் கவிஞன், ‘சினக் கொடுந் திறல் சீற்றவெந் தீ' என்று அந்தக் கோபாவேசக் கொடிய வேகத்தையும், ‘மனக் கடுப்பினன்' என்று உள்ளத்துக்குள்ளே தேள் கொட்டியது போன்ற அந்தக் கடுப்பையும் முற்படக் காட்டிவிடுகிறான்.

முனிவர் பூரிப்பு

பரதனுக்குக் கோபம் பொங்க, மகிழ்ச்சி பொங்குகிறது முனிவர்களுக்கு - பரத்வாஜருக் கும் சீடர்களுக்கும். ஏன்? `பையன் பரீட்சையில் தேர்ந்துவிட்டான்!' என்று பெற்றோருக்கு ஏற்படும் பெரு மகிழ்ச்சிதான்!

உரைத்த வாசகம்
கேட்டலும், உள்எழுந்(து)
இரைத்த காதல் -
இருந்தவத் தோர்க்கெலாம்.
குரைத்த மேனியொ(டு)
உள்ளம் குளிர்ந்ததால்,
அரைத்த சாந்துகொண்(டு)
அப்பிய தென்னவே!

பரதனுடைய உள்ளத்தை உள்ளபடியே பார்த்துவிட்டார்கள் முனிவர்கள். ஆயிரம் மாற்றுத் தங்கமாக உருகிக்கொண்டிருந்த உள்ளத்தை, அந்தக் கோபத் தீக்கிடையே தகதகவென்று ஜொலிக்கக் கண்டார்கள். கண்டவர்களின் உள்ளம் குளிர்ந்து உடம்பு பூரித்துவிட்டதாம். சந்தனத்தை அரைத்து உள்ளத்திலேயே அப்பிவிட்டது போல் அவ்வளவு குளிர்ச்சி முனிவர்களுக்கு.

தமிழ்நாட்டுக் கோடை வெயிலில் நெஞ்சு குளிரச் சந்தனம் பூசி இன்புறும் பழக்கம் எவ்வளவு ரஸிகத்தன்மையுடன் வெளிப் படுகிறது பாருங்கள்!

முனிவர்கள் பரதனை அன்போடு ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றார்கள். ஆனால், பரத்வாஜர் உள்ளத்தில் மாத்திரம், பரதனுக்குத் தாம் வைத்த பரீட்சை போதாது என்று எண்ணம். ஆனால், அவர் அதைச் சீடர்களிடத்திலும் பிரஸ்தாபிக்கவில்லை.

மந்திர விருந்து

சரி, பரதன் அதிதியல்லவா? அவனுக்கும், அவனுடைய சேனைக்கும் விருந்து செய்ய வேண்டுமென்று பரத்வாஜர் நினைக்கிறார். அந்த நினைப்பின் சக்தியே சொர்க்கத்தை ஆகர்ஷிக்கிறது. போக உலகம் சகல போகப் பொருள்களோடும் அப்படியே பறந்து வந்து முனிவருடைய பர்ணசாலைக்குப் பக்கத்தில் அமர்ந்து விடுகிறது.

மோகனமான அந்த மாலை வேளையை - மகரிஷி தமது சங்கற்ப சக்தியையும் மந்திர வித்தையையும் காட்டுவதற்கு உபயோகித்துக் கொண்டார். ஆசிரமத்தைச் சேர்ந்த நந்த வனங்களின் வழியாக வீசும் மாலையிளந் தென்றல், தேவலோகத்தைச் சேர்ந்த கற்பகச் சோலைகளிலும் உலாவி, அங்குள்ள பூக்களின் அதிசயமான பரிமளங்களையும் தாங்கி வருகிறது.

இந்தப் பூந்தென்றலையும் வசீகரமான மாலை வேளையையும் துணையாகக் கொண்டு முனிவரது மந்திரசக்தி வேலை செய்கிறது. அந்திவானத்தின் அழகுகள் தெய்விக அழகுகளாய்ப் பரிணமிக்கின்றன. அந்தி வேளையில் இயற்கை காட்டும் இந்திர ஜாலங்கள், மகரிஷி காட்டும் மஹேந்திர ஜாலங்களுக்குப் பீடிகையாகின்றன. பல்லக்கு ஏறும் அரசர் முதல் பல்லக்கைச் சுமந்து சுமந்து தோள் வீங்கிய வேலைக்காரர்கள் வரை எல்லோரும் தேவபோகத்தைச் சரிநிகர் சமானமாக அனுபவிக்கிறார்களாம். ஆனால், பரதன் எங்கே?

இன்பத்தால் இழைக்கப்பெற்ற போக பூமியிலே, இந்தக் கற்பகச் சோலையிலே, அமிர்தம் போன்ற உணவுகளை வெறுத்துக் காடுகளில் ராமன் சாப்பிட்ட காய் கிழங்குகளையல்லவா பரதன் விரும்புகிறான்? விரும்பியவற்றை விரும்பிய வண்ணம் கொடுக்கும் கற்பகத் தருவும் இவனுக்கு அந்தக் காய் கிழங்குகளைக் கொடுத்து உதவுகிறது.

அவற்றை உண்டபின், பரதன் தேவ லோகப் பஞ்சசயன மெத்தைகளை வெறுத்து வெறுந்தரையிலே படுத்துக்கொள்ள ஆசைப்படுகிறான். பொன்னாடாகிய போக பூமியில் புழுதிக்கு எங்கே போவது? அதையும் கற்பகத்தின் வாயிலாகவே பெற்றுப் பொன்மேனி புழுதி படியக்கிடக்கும் பரதனைப் பார்த்து நாம் பிரமித்துப் போகிறோம்.

பரத்வாஜ மகரிஷியும் பிரமித்துப் போயிருக்க வேண்டும். தமது இரண்டாவது பரீட்சையிலும் இப்படித் தேர்ந்து இவ்வளவு ‘மார்க்கு’ வாங்கிவிடு வானென்று எதிர்பார்த்திருக்க முடியுமா?

பரதன் போர்க்கோலம்!

பரதனையும் படைகளையும் பரத்வாஜ பரீட்சைக்கும் விருந்துக்கும் விட்டு, நாம் முன் கூட்டியே சித்திரகூடம் போய்விடுவோம். அங்கே சீதை பர்ணசாலையில் இருக்கிறாள். ராமனும் லட்சுமணனும் பர்ணசாலைக்கு வெளியே இருக்கிறார்கள். ராமனுக்குச் சிறிது தூரத்திலே உட்கார்ந்து வடக்கு முகமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தான் லட்சுமணன்.

அவனுக்கு ராமன் இழந்த அந்த மகா ராஜ் ஜியத்தின் நினைவுகள் - அந்த ‘நகர் நீங்கிய’ பழைய காட்சிகள் - தோன்றியிருக்கலாம், மனக்கண்முன். திடீரென்று அந்தத் திசையில் அது என்ன அப்படி? - கடல் சிறிது தூரத்திலே பொங்கி வருகிற மாதிரி? உடனே பரபரப்பாக அருகிலுள்ள குன்றில் ஏறி அதன் உச்சி மீது நின்று பார்த்தான்.

புழுதி ஒரே படலமாக மேலெழுந்து வானத் தைப் போர்த்துவிடுகிறது. ஏககாலத்தில் எத்தனை வகை முழக்கங்கள்! சேனைக்கடல் தான் அப்படிப் பொங்கி வருகிறதென்று தெரிந்து விசையோடு இறங்கிக் கீழே குதித்தான். கோபவெறியில் மிதித்தான் நிலத்தை, அப்படியும் இப்படியுமாக. ஓடினான் ஒரே ஓட்டமாக ராமனிடம்; செய்தி சொன்னான்.

உடனே அரையில் உடைவாள், காலில் வீரக்கழல் கட்டிக் கவசம் பூண்டு முதுகில் அம்பறாத் தூணி தாங்கி யுத்த சன்னத்தனாகி வில்லெடுத்து டங்காரம் செய்துகொண்டே, அண்ணனை அடிதொட்டு வணங்குகிறான். வீர வெறியும் கோப வெறியும் கொண்ட அந்த மனக்கண்முன் ரத்த ஆறுகள் ஓடுகின்றன.

பரதனை மாத்திரம் வீர சொர்க்கத்துக்கு அனுப்ப அவனுக்கு உத்தேசம் இல்லை.

ஒருமகள் காதலின் உலகை நோய்செய்த
பெருமகன் ஏவலில் பரதன் தான்பெறும்
இருநிலம் ஆள்கைவிட்(டு), - இன்(று) என் ஏவலால்
அருநர(கு) ஆள்வது காண்டி, ஆழியாய்!

‘`தசரதன் சொன்னபடி கேட்டவன், நான் சொல்லுகிறபடியும் போகப் போகிறான் பார்! அவன் அரசாள ஏவினான்; நான் நரகாள ஏவுகிறேன்!” என்ற வார்த்தை, அப்படியே லட்சுமண ஹிருதயத்தை ‘இதோ பாருங்கள்' என்று நமக்குக் காட்டுகிறது. பரதனுடைய படைவீரர்களை வதஞ்செய்து மேலுலகம் சேர்க்கும் அம்புகள், துரோகியான பரதனை வதைத்துக் கீழுலகமாகிய நரகத்திலே தள்ளி அழுத்தி விடுமாம்.

இப்படி இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது, பரதன் சேனையை நிறுத்திவிட்டுத் தம்பி சத்துருக்னன் தொடர ராமனை நோக்கி வருகிறான். அந்தக் கோலமும் சீலமும் இப்போது ராமனுக்கே எவ்வளவோ சங்கடமாயிருக்கின்றன.

தொழு(து) உயர் கையினன்,
துவண்ட மேனியன்,
அழு(து) அழி கண்ணினன்,
அவலம் ஈ(து)என
எழுதிய படிவம்ஒத்(து)
எய்து வான்தனை,
முழு(து) உணர் சிந்தையான்
முடிய நோக்கினான்.

பரதனை அந்த நிலையில் படத்திலே எழுதி, அந்தப் படத்துக்குப் ‘பரதன்’ என்று பெயரிடாமல் ‘அவலம்’ என்றே பெயர் கொடுத்துவிடலாம். அப்படி உலகத்திலுள்ள தரித்திரத்தினாலும் கவலைகளினாலும் ஏற்படும் துயரமெல்லாம் ஒரே உருவமாய்ச் சித்திரிக்கப் பெற்றது போல வரும் பரதனை ராமனே பிரமித்து உற்று நோக்குகிறான்.

போர்ப் பெருங்கோலம்

அந்த உருவத்தை லட்சுமணனுக்குச் சுட்டிக்காட்டி, ‘`ஆர்ப்பாட்டம் செய்யும் வில் வீரனே! அப்பா தம்பி! உன்னைத்தான் சொல்லுகிறேன், பார்” என்கிறான் ராமன்:

கார்ப்பொரு மேனிஅக்கண்ணன் காட்டினான்:
‘ஆர்ப்புறு வரிசிலை இளைய ஐய! நீ
தேர்ப்பெருந் தானையால் பரதன் சீறிய
போர்ப்பெருங் கோலத்தைப்
பொருந்த நோக்(கு)’ எனா.

“தேர் முதலிய பெருஞ் சேனையோடு அதோ பரதன் நம்மேல் சீறிவரும் அந்தப் போர்ப் பெருங்கோலத்தைப் பார் அப்பா! நன்றாய்ப் பாரப்பா!” என்ற வார்த்தையில் தான், எவ்வளவு சோகமும் அன்பும் தோய்ந்த ஹாஸ்யம்! நம்முடைய உள்ளத்தையே எப்படியெல்லாம் உருக்கி விடுகிறது! லட்சுமணன் உள்ளத்தையோ, இந்த வார்த்தையும் அங்கே தோன்றிய உருவமும் ரம்பம் போட்டு அறுக்கின்றன.

ராமன் பரதனைச் சுட்டிக்காட்டினான், அதற்கு முன்பே லட்சுமணனும் பார்த்து விட்டான். ``என்ன அநியாயம் செய்து விட்டோம்'' என்று உள்ளம் கலங்கி விட்டது. முகத்தில் உள்ள அந்த வீர ஒளி மழுங்கி, முகம் இருண்டு போயிற்று. சில நிமிஷங்களுக்கு முன் ஏசினானே, அந்த வசவு போன இடம் தெரியாமல் போய்விட்டது. ஆம், அந்த `லட்சுமண கோபம்' இப்போது எங்கே? சொல், சினம், உணர்ச்சி எல்லாம் நழுவிக் கண்ணீராய்க் கரைந்து விழ, கையிலுள்ள வில்லும் நழுவி விழுந்து விட்டது. அப்படியே பிரமித்துத் திக்பிரமை பிடித்தவன் போல் நின்று விட்டான் லட்சுமணன், உள்ளும் புறமும் ஒருங்கே சோர்ந்தவனாய்.

பரதன் தூது

பரதன் தொழுது கொண்டே ராமன் முன் வருகிறான்.

`ராமனைக் கண்டதும் என்ன சொல்ல வேண்டும்?' என்பதை நினைத்துப் பார்த்து உருவேற்றிக்கொண்டு வருகிறானாம் பரதன். ``என்ன அண்ணா! இப்படி அநியாயம் செய்யலாமா? தருமத்தை நீயும் நினைத்தாயில்லையே! அருளையும் கைவிட்டாயே!' என்றெல்லாம் அண்ணனிடம் சொல்லித் தன் இதய வேதனையைக் கொட்டிவிட வேண்டும் என்று தான் வருகிறான். ஆனால், `அறம்தனை நினைந்திலை, அருளை நீத்தனை, துறந்தனை முறைமையை!' என்று சொல்லிக் கொண்டே வந்தவன், ராமனைக் கண்டதும் அப்படியெல்லாம் சொல்ல மறந்து காலில் விழுந்து விடுகிறான்.

ஏன் இப்படி மறந்து போகிறான்? ராமனைக் கண்டதும் அண்ணனைக் கண்டது போலவா இருக்கிறது? இறந்துபோன அப்பனைக் கண்டது போலிருந்ததாம். அவ்வளவு அன்பு, அவ்வளவு துயரம். உணர்ச்சி மேலீட்டினால் காலில் விழுந்ததும் மெய்ம்மறந்து கிடந்தான்.

நியாயம் தருமத்தைத் தழுவிக் கொண்டது

`உயிர் இருக்கிறதோ, இல்லையோ?' என்னும்படி ஒடுங்கிக் கிடக்கிறான் பரதன், ராமன் மலரடிகளில். அண்ணன் தம்பியை உற்றுப் பார்த்து உள்ளம் உருகிக் கண்ணீர் வடிக்கிறான். கண்ணீர் வடித்த வண்ணம் பரதனை வாரியெடுத்து மார்போடு அணைத்துக் கொள்கிறான்.

(14.12.47, 21.12.47, 30.11.47 ஆனந்த விகடன் இதழ்களிலிருந்து...)