Published:Updated:

ஸ்ரீரமண மகரிஷி

ஸ்ரீரமண மகரிஷி

ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமண மகரிஷி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ரு பெண்மணிக்கு, அவளுடைய கணவன் சாதனை செய்து, மிகப் பெரிய புகழ்பெற்று, பல பேர் பாராட்ட வாழ்வதை அருகிலிருந்து காணும்போது சந்தோஷமாகத்தான் இருக்கும். ஆனால், அதைவிட மிகப் பெரிய சந்தோஷம், அவள் மகன் செயற்கரிய செயல்கள் செய்து, புகழின் உச்சாணிக்குப் போய், மக்கள் பலர் அவனைப் பாராட்டி, வாழ்த்துவதைக் காணும்போதுதான், மனம் கொள்ள முடியாத சந்தோஷம் ததும்பி நிற்கும்.

'நீங்களெல்லாம் கொண்டாடுகிறீர்களே, இந்தப் பெரிய மனுஷன், நான் மடியில் போட்டு வளர்த்த பிள்ளை. நீங்களெல்லாம் விழுந்து வணங்குகிறீர்களே, இவருக்கு நான் தலையில் எண்ணெய் தேய்த்து, சுடச்சுட வெந்நீர் ஊற்றி, உடம்பை உருவி, அவனை நெடியோனாய் வளர்த்தேன். சாதம் பிசைந்து, குழைவாக ஊட்டியிருக்கிறேன். வாய் அலம்பியிருக்கிறேன். எச்சில் துடைத்திருக்கிறேன். வீட்டுக்கு யாரேனும் புதியவர் வந்தால், இவன் கூச்சத்துடன் என் புடவைத் தலைப்பில்தான் ஒட்டிக் கொள்வான். நான் எங்கு போனாலும் என் பின்னாலேயே வருவான். என்னை கட்டிக்கொண்டுதான் தூங்குவான்.’ - அவள் வாய் பெருமிதம் பேசும். அவனுக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்பதை யெல்லாம் ஆராய்ந்து வைத்தவள்போல் விளக்கமாகப் பேசும்.

##~##
திருச்சுழியில் பிறந்ததும், மதுரையில் வளர்ந்ததும், திருவண்ணாமலை என்று எவரோ பெயர் சொல்லக் கேட்டு அதிர்ந்ததும், கண்மூடி அமர்ந் ததும், கடிதம் எழுதி வைத்துவிட்டு, அண்ணனுக்குக் கட்ட வேண்டிய கல்லூரிக் காசோடு வீட்டை விட்டு ஓடிப்போனதும்... எங்கே... எங்கே... என்று பதறிப் பதறி, நாடகக் கம்பெனிகளில் எல்லாம் ஏறித் தேடியதும், திருவண்ணாமலைக்கு அருகேயுள்ள குன்றின் மீது எலும்பும் தோலுமாய் எங்கோ வெறித்தபடி, நீண்ட நகங்களும் சிக்குப்பிடித்த தலைமுடியுமாய் அமர்ந்திருந்ததும், எத்தனை கெஞ்சினாலும் ஏறெடுத்துப் பார்க்காததும், திருவண்ணாமலைக்கு வந்து கந்தாஸ்ரமத்தில் அமர்ந்ததும், அங்கே ஜனங்கள் உரையாடத் துவங்கியதும், உரையாடிய ஜனங்கள் அவரை பிராமண சுவாமி என்று கொண்டாடியதும், மெள்ள மெள்ள அவர் புகழ் பல்வேறு திக்கில் பரவியதும், மடாதிபதிகளும், அறிஞர்களும், ஐரோப்பியர்களும் வந்து வணங்கி விளக்கம் கேட்டுப் போனதும், ஒப்பில்லாத மகானாய் கருணை கொண்ட கண்களோடு இருப்பதும் பார்த்து, அந்தப் புகழில், அந்த மேன்மையில் தனக்கும் பங்கு உண்டு என்ற எண்ணம் கிளறி வர, 'எனக்கு வேறு போக்கிடம் என்ன? நான் வேறு எங்கிருப்பேன்? உன்னோடே வந்துவிடுகிறேன்’ என்று அழகம்மையார், திருவண்ணாமலை கந்தாஸ்ரமத்துக்கு வந்துவிட்டார்.

அழகம்மையார் கணவனை இழந்த, ஆசாரம் மிக்க பிராமணப் பெண்மணி. பகவான் ரமணரோ எல்லாமும் துறந்தவர். எந்த பேதமும் அற்றவர். கௌபீனம் மட்டுமே சொத்தாக உள்ளவர். எனவே, அன்பர் ஒருவர் வீட்டில் தங்கி, தினமும் மலைக்கு வந்து, பகவான் ஸ்ரீரமணருடன் இருந்துவிட்டுப் போவார். ஆனால், அப்படி மலையேறி இறங்குவது அவருக்குச் சிரம மாக இருந்தது. கந்தாஸ்ரமத்திலேயே தங்கிவிட வேண்டும் என விரும்பினார். ஆனால், ஆஸ்ரமத்து அன்பர்கள், 'இங்கு பெண்கள் தங்கக்கூடாது. தங்கினால், மற்ற பெண்களும் தங்க வேண்டும் என்று சொல்வார்கள். அது சரியாக வராது’ என்று அவரை அங்கே இருக்கக் கூடாது என்று சொன்னார்கள்.

பகவான் மௌனமாக இருந்தார். மற்ற பெண்மணிகளான தேசூரம்மாவும் இன்னொருவரும், 'நாங்கள் அப்படியெல்லாம் கேட்க மாட்டோம். தயவுசெய்து அழகம்மைக்கு இடம் கொடுங்கள். அவர்கள் தங்கள் மகனுடன் தங்கியிருக்கட்டும்’  என்று சொன்னபோதும், அந்த அன்பர்கள் இதை ஏற்கவில்லை. ஆஸ்ரமத்தில் பெண்கள் தங்குவது அத்தனை நன்றாக இராது என்றெல்லாம் பேசினார்கள்.

ரமண மகரிஷி, மெள்ள எழுந்து வந்து, தாயின் கையைப் பிடித்துக் கொண்டார். ''நாம் போவோம். வேறு எங்கேயாவது போய் தங்கிக் கொள்வோம், வா! இவர்கள் இங்கே இருக்கட் டும்'' என்று சொல்லி, தாயாருடன் கிளம்ப யத்தனிக்க, அந்த அன்பர்கள் திகைத்துப் போனார்கள். 'மன்னிக்க வேண்டும்’ என்று காலில் விழுந்தார்கள். அழகம்மை அன்று முதல் பகவான் ரமணருடன் கந்தாஸ்ரமத்தில் தங்கினார்.

''ரமண மகரிஷி யாரையும் குறை கூறாதவர். எல்லோரையும் அரவணைத்துப் போகும் சுபாவம் உடையவர். அதேவிதமாக தாயினுடைய ஆசார அனுஷ்டானங்களைப் பற்றிப் பெரிதாகக் குறை கூறாமல், மெள்ளக் கண்டித்து வந்தார். 'எதற்கு இது?’ என்று கேள்வி கேட்பதுடன் நிறுத்திக் கொண்டார். 'அடடா... நீ அவளைத் தொட்டுவிட்டாயே, உன் மீது தீட்டுப்பட்டுவிட்டது. போ, போய்க் குளி!’ என்று கேலி செய்வார். இப்படிக் கேலி செய்ய கேலி செய்ய, அழகம்மையாருக்குள் அர்த்தமற்ற சில ஆசார அனுஷ்டானங்கள் மெள்ள உதிர்ந்துகொண்டு வந்தன.

ஆனாலும், பிள்ளை கீழே திருவண்ணாமலைக்குப் போய்ப் பிச்சை எடுத்துவந்த உணவை ஒன்றாகக் கலந்து, ஒரு ருசியும் இல்லாமல் சாப்பிடுவது கண்டு அந்தத் தாயுள்ளம் தவித்தது. 'வெறுமேதானே உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். வேலையற்று முன்னும் பின்னும் நடந்து கொண்டிருக்கிறோம். வருவோர் போவோரைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒரு குமுட்டி அடுப்பு, ஒரு வாணலி, ஒரு கற்சட்டி, இரண்டு மூன்று சமையல் பாத்திரங்கள், நல்ல கரண்டி இருந்தால், அற்புதமாக சமைத்துப் போட மாட்டேனா? பிச்சையாக சாதம் வாங்கி வருவதைவிட, அரிசியும் பருப்பும் வாங்கிவந்தால் ஆகாதா?’ என்றெல்லாம் எண்ணத் துவங்கி, அதற்கான நச்சரிப்பைத் துவக்கினார். 'அப்படியானால், நீ ஊருக்கே போய்க் கொள்’ என்று பகவான் ரமணர் முதலில் மறுத்தாலும், தன்னாலான உதவியைச் செய்ய வேண்டும் என்று அந்தத் தாயுள்ளம் மருகுவதைப் புரிந்துகொண்டு அனுமதித்தார்.

ஸ்ரீரமண மகரிஷி

முதலில் நாலைந்து சமையல் பாத்திரங்கள் சேர்ந்தன. பிறகு, மெள்ள மெள்ள அதிகமாயின. 'ஒரு இரும்புக் கரண்டி இருந்தால் நன்றாக இருக்கும்’ என்று கேட்பார். 'ஆஹா... அதுக்கென்ன, வாங்கி னால் போச்சு’ என்று ரமணர் சொல்வார். அடுத்த நாளே யாராவது நாலைந்து இரும்புக் கரண்டிகள் கொண்டு வந்து கொடுப்பார்கள். 'சின்ன கத்திரிக்

காய் கிடைத்தால் நன்றாக இருக் கும். அதை நாலாக நறுக்கி, வதக்கி...’ என்று விவரிப்பாள் அம்மா. மறுநாளே, பிஞ்சுக் கத்திரிக்காய் ஒரு கூடை வந்து இறங்கும். யாரும் கேட்காமலேயே அவர் நினைத்தது நடந்தேறியிருக்கும். ஆஸ்ரமத்தில் அவருடன் தங்கியிருப்பவர்களுக்கெல்லாம் அழகம்மையால் சுவையான உணவு கிடைத்தது. 'அப்பளம் இருந்தால் நன்றாக இருக்கும்’ என்று சொல்லி, மடியாக அப்பளம் செய்கிற ஒரு வேலையும் நடந்து, அப்பளப் பாட்டும் உருவானது.

ஒருமுறை மலையேறி வந்தபோது, ஒரு முள்செடி, அழகம்மையாரின் புடவையைக் கிழித்துவிட்டது. இதைக் கண்ட அன்பர்கள் அந்தப் பாதையை விரைவாக, அழகாகச் சீர் செய்தார்கள். மலையேறுவது, எல்லோருக்கும் எளிதா கவும், எந்த இடைஞ்சலும் இல்லாமலும் இருந்தது. அதே நேரம், பகவானுடைய இளைய சகோதரர் நாகசுந்தரம் என்பவர்

(இவரே, பின்னாளில் நிரஞ்சனா சுவாமி என அழைக்கப்பட்டார்) மதுரையில் குமாஸ்தாவாக வேலை செய்து வந்தார்.

அவர் மனைவி இறந்து போக, அவருக்குப்

பிறந்த ஒரே மகனை திருவண்ணாமலை அடிவாரத்தில் வசிக்கிற தன் சகோதரி யிடம் இருக்கும்படி ஒப்படைத்தார். பல்வேறு இடங்களில் குமாஸ்தாவாக வேலை செய்து, மனம் நிறைவு பெறாமல், பிறகு தாயோடும் தனயனோடும் வாழ்வதற்குக் கந்தாஸ்ரமம் வந்து விட்டார் அவர். அங்கே தங்கியிருந்தபடி, வருவோர் போவோரை கவனித்து வந்தார் அவர். பகவானுக்கு வரும் கடிதங்களுக்குப் பதில் எழுதத் துவங்கினார். மெள்ள மெள்ள ஆஸ்ரமத்தின் எல்லாச் சீரமைப்புகளுக்கும் அவரே காரணமாக இருந்தார். பள்ளியில் படித்து வந்த நாகசுந்தரத்தின் மகன் வேங்கடராமன், அடிக்கடி பகவானைக் காண வருவார். சில தருணம், இரவு அங்கேயே தங்கி விடுவார். பகவான் அவருக்குப் பல் தேய்த்து, குளிக்க வைத்து, கவனமாகப் பார்த்துக் கொள்வார். பகவானுக்குச் சரியானபடி உணவு கொடுக்கவும், ஓய்வு கொடுக்கவும், ஓய்வு நேரத்தில் எவரும் தொந்தரவு செய்யாது கவனித்துக் கொள்ள வும், அன்பர்கள் கூச்சலிடாது மௌனமாக அமர்ந்து கொள்ளவும் ஏற்பாடு செய்தார் நிரஞ்சனா சுவாமி.

ஸ்ரீரமண மகரிஷி

1922-ஆம் வருடம் மே மாதம், அழகம்மை சுகவீனப் பட்டார். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது. தன் அந்திமக் காலம் நெருங்கிவிட்டதை உணர்ந்த அழகம்மை, நிரஞ்சனா சுவாமியை அருகே அழைத்து, பகவான் கையில் வைத்து, ''தயவுசெய்து ஒரு பார்வை இவன் மீது வைத்திரு. இவனுக்கு உலக வாழ்க்கை தெரியாது. நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும்'' என்று ஒப்படைத்துவிட்டுக் கண்களை மூடிக்கொண்டார்.

பகவான் ஸ்ரீரமண மகரிஷிக்கும், தன் அன்னை உடலை விடும் நேரம் வந்துவிட்டது என்பது புரிந்து விட்டது. அவளை விட்டு அகலாமல், அருகேயே இருந்தார். ஆஸ்ரமத்து அன்பர்கள் பகவானைச் சாப்பிட அழைத்தனர். ''நீங்கள் எல்லோரும் சாப்பிடுங்கள். நான் பின்பு வருகிறேன்'' என்று சொல்லிவிட்டு, அன்னையைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தார். தனது வலது கையை அன்னையின் இதயத்திலும், இடது கையை உச்சந் தலையிலும் வைத்தபடி, அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். முதலில், மூச்சுத் திணறல் ஏற்பட்டது. ஆனாலும், பகவான் கை வைத்திருந்ததால், சட்டென்று சரியாயிற்று. இதற்குள் சாப்பிட்டுவிட்டு வந்த மற்ற அன்பர்கள், சுற்றி அமர்ந்து ராமநாமம் சொல்லத் தொடங்கினார்கள்.

அம்மாவுக்குள் என்ன நடந்தது என்பதைப் பின்னால் பகவானே சொன்னார்.

''கடந்த பல ஜென்மங்களின் வாசனைகளும் நினைவுகளும் மேலும் மேலும் பொங்கி எழுந்தன. ஆனால், அவையெல்லாம் என் கைபட்டு, உடனுக்குடன் அழிந்து விட்டன. அவள் அப்படியே சென்றிருந்தால், பல ஜென்மங்கள் எடுக்க வேண்டியிருக்கும். வாசனை களெல்லாம் ஒழிந்து, ஆழ்ந்த சாந்தி அவளை ஆட்கொண்டது. அவள் உயிர், இதயத்தில் ஒடுங்கியதன் அடையாளமாக, ஒரு சிறிய அதிர்வு ஏற்பட்டது. அது மணியோசை போல இருந்தது. ஆனால், நான் கையை எடுக்க வில்லை. முழுவதுமாக அவள் அடங்கி விட்டாள் என்று தெரிந்த பிறகுதான் கையை எடுத்தேன். ஏனெனில், முன்னர் பழனி சுவாமி யின் மூச்சடங்கும் நேரத்தில், அவர் மேல் வைத்திருந்த கையை எடுத்ததும், அவர்

உயிர் கண் வழியாக வெளியேறி விட்டது. அதனால்தான் அம்மாவின் பிராணன், இதயத்தில் முழுவதுமாக ஒடுங்கி விட்டது என்று தெரிந்த பிறகே என் கையை எடுத்தேன்'' என்று சொன்னார்.

இரவு 8 மணிக்கு அழகம்மையின் ஆன்மா,  அவர் இதயத்துடன் கலந்தது.

வெகுநேரம் அருகே அமர்ந்திருந்த பகவான் மெள்ள எழுந்தார். ''வாருங் கள் சாப்பிடலாம், தீட்டெல்லாம் ஒன்றும் கிடையாது'' என்று சொல்லி, உணவு எடுத்துக்கொள் ளாத அன்பர்களுடன் உட்கார்ந்து, தானும் சாப்பிட்டார்.

பகவானும் மற்றவர்களும் மாற்றி மாற்றி திருவாசகம் படித்தனர். விடிந்த பிறகு என்ன செய்வது என்று யோசித்து, புடவையை தூளியாகக் கட்டிக்கொண்டு, அதில் அம்மாவின் உடலை வைத்து, மூங்கிலால் சுமந்து வந்தனர். பகவானும் அம்மாவைச் சுமந்து வந்தார் என்று உடன் வந்தவர்கள் சொன்னார்கள்.

மலைக்குக் கீழே பாலி தீர்த்தம்  என்ற இடத்தில் சமாதி வைப்பது என்று முடிவாயிற்று. மலைமீது சமாதி வைத்தால், பல பேர் மலை முழுவதும் சமாதியாக்கிவிடுவார்கள்; அதனால் கீழேயே இருக்கட்டும் என்று கீழே கொண்டு வந்து வைத்தார்கள்.  

குழி செய்தார்கள். யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்று கவனமாக இருந்தும், ஊருக்குள் எப்படியோ செய்தி பரவி, பகவானை ஈன்றெடுத்த புண்ணியவதிக்குக் கடைசி வணக்கம் சொல்வதற்காக, ஊர் ஜனங்கள் திரண்டு வந்தனர். பாலும், இளநீரும், விபூதியும், ஊதுவத்தியும், கற்பூரக் கட்டிகளும் வந்து நிறைந்தன. அன்னையின் உடம்பு நீராட்டப்பட்டு, புதுத்துணி உடுத்தப்பட்டு, நெற்றியில் திருநீறு இடப்பட்டுப் பொலிவுடன் வைக்கப் பட்டிருந்தது.

பரத கண்டத்தில் சகலமும் துறந்த துறவிகள் பலர் உண்டு. அவர்களில் ஒருவர்கூட தாயைப் புறக்கணித்ததில்லை. பகவானே ஆன்மாவை சமனப்படுத்தி, அவரை உலகம் வணங்கும் உயர்வுக்கு அழைத்துப் போனார்.

அன்னையின் முகம் பளபளத்து, ஒரு யோகினியின் முகம்போல பிரகாசமாகக் காணப்பட்டது. திருமூலர் சொல்லியபடி, சமாதி கட்டும் வேலை நடந்து கொண்டிருந்தது. அமர்ந்த வண்ணம் சமாதிக் குழியில் தாயாரை இறக்கினர். விபூதி, தர்ப்பைகளைப் பரப்பினர். பகவான் கையில் விபூதியும் கற்பூரமும் கொடுக்கப்பட்டு, சமாதிக் குழிக்குள் பகவான் போட்டதும், மற்றவர்களும் ஆளுக்கொரு பிடி போட்டனர். அதற்குமேல் வில்வம், செங்கற் பொடி மற்றும் விபூதியைக் கொட்டி நிறைத்து, மேலே பலகைக் கற்களால் மூடி, லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சமாதியை மேலும் மண் கொண்டு பூசி கெட்டிப்படுத்த மண் வெட்டியபோது, அந்த இடத்திலே ஜலம் இருந்தது. மழைக் காலம், அதனால் ஜலம் இருக்கும் என்று நினைத்தார்கள். ஆனால், பின்னால் வெயில் வந்தபிறகும், அந்த இடத்திலே ஜலம் இருந்தது. அதை பக்தர்கள் சுட்டிக்காட்ட, அந்த இடத்தைத் தோண்டச் சொன்னார் பகவான். தோண்டத் தோண்ட, ஒரு ஊற்று கிளம்பியது. அதுதான் தற்சமயம் ஆஸ்ரமத்தில் மிகப் பெரிய கிணறாக உருவெடுத் திருக்கிறது.

தினமும் மலைக்குப் போய், பிறகு கீழே தாயாரின் சமாதிக்கு வந்து கொண்டிருந்த ரமணர், ஒருநாள் அங்கேயே தங்கிவிட்டார். பிறகு, மலைக்கு மேல் போகவேயில்லை. சமாதிக்கு அருகிலேயே கூரைக் கொட்டகை போட்டு, எல்லா அன்பர்களுக்கும் உணவு கொடுக்கும்படியாக சமையல் வேலை நடந்தது. மெள்ள மெள்ள ரமணாஸ்ரமம், அம்மாவின் இறப்புக்குப் பிறகு, இப்போது இருக்கும் இடத்தில் உருவாயிற்று.

முன்பைக் காட்டிலும் அதிகம் திரள்திரளாக ஜனங்கள், ஸ்ரீரமணரை வந்து தரிசித்துக் கொண்டிருந்தனர். அவர் தாயாரின் சந்நிதியை வணங்கிக் கொண்டிருந்தனர். அப்படி வந்தவர் களில், இங்கிலாந்தைச் சேர்ந்த பால் பிரண்டன் என்பவர் மிக முக்கியமானவர். அவருடைய எழுத்தால், ஆங்கிலக் கட்டுரைகளால், பகவானின் புகழ் உலகமெங்கும் பரவியது.

- தரிசிப்போம்...