Published:Updated:

நெய்தல் தெய்வங்கள்!

நெய்தல் தெய்வங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
நெய்தல் தெய்வங்கள்!

க.அரவிந்த் குமார் - படம்: ந.வசந்தகுமார்

நெய்தல் தெய்வங்கள்!

க.அரவிந்த் குமார் - படம்: ந.வசந்தகுமார்

Published:Updated:
நெய்தல் தெய்வங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
நெய்தல் தெய்வங்கள்!

“கல்பொரு சிறுநுரை போல மெல்ல மெல்ல இல்லா குதுமே...” குறுந்தொகையின் 290-வது பாடல் இது. பரந்த கடலில் அலை வீசுகிறது; கரையில் உள்ள பாறையில் மோதி உடைகிறது; நுரையாக மாறுகிறது. அந்த நுரையின் ஆயுள் கொஞ்சநேரம்தான். வாழ்க்கையும் இதுபோன்றதுதான். 

நெய்தல் தெய்வங்கள்!

ஒட்டுமொத்த மனிதகுலத்துக்குமான இந்தப் பாடல், நெய்தல் நில மக்களுக்கு அதாவது கடல்சார் மக்களின் வாழ்க்கைக்கு மிகவும் பொருந்தும். நிலப்பரப்பின் மீது நின்றுகொண்டு வாழ்க்கையைப் பார்க்கும் மனிதர்களின் மொழி, கலாசாரம், உணவு, உடை ஆகியவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டது நிலையில்லா பெருங்கடலின் மீது தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்ட மீனவக்குடி மக்களின் வாழ்க்கை.

திரும்பிவரும் உத்தரவாதம் இல்லாத கடற்பயணம் மேற்கொள்ளும் அந்த மக்களின் நிலையான நம்பிக்கையாக, கலங்கரை விளக்காக எழுப்பப்பட்டவையே கடற்கரை ஆலயங்கள் எனலாம்.

பொதுவாக திணை இலக்கணப்படி நெய்தல் நிலத்துக்கான கடவுளாக வருணன் குறிப்பிடப்படுகிறார். ஆனால், நேரடியாக வருணனை வழிபட்டதற்கான தடயங்கள் இலக்கியத்திலும் வரலாற்றிலும் குறைவுதான். “வருணன் மேய பெருமணல் உலகம்” என்கிறது தொல்காப்பியம். 

மாறாக நிமிர்வுகொண்ட கன்னியாக, உக்கிரம்கொண்ட அன்னையாக பல இடங்களில் நெய்தல் நிலத்தில் அம்மன்கள் குடிகொண்டுள்ளனர். சிவன், பெருமாள், முருகன் ஆலயங்கள் பலவும் கடற்கரையெங் கும் வியாபித்துள்ளன. இவை அனைத்தும் தாண்டி மீனவக்குடி மக்கள் மட்டுமே அறிந்த கடல் மூதன்னைகள், சிறு தெய்வங்களாகப் பெருமணல் உலகெங்கும் பரவியுள்ளனர். 

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேராதார்


இந்தக் குறளில் `இறைவனின் திருவடியை வழிபடுபவர்கள் பிறவி என்ற பெருங்கடலைக் கடப்பார்கள், எஞ்சியவர்கள் கடக்க முடியாது' என்கிறார் வள்ளுவர். பிறவியை நிலமாகவோ, காடாகவோ கூறாமல் ஏன் கடல் எனக் குறிப்பிட வேண்டும்? நிலமென்றாலும், காடென்றா லும் இளைப்பாற வாய்ப்பு உண்டு. ஆனால், கடலில் நீந்தி னால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும். ஆக, இடையறாத இறைநினைப்பு தேவை என்பதற்காகவே வள்ளுவர், பிறவியைக் கடலோடு ஒப்புமைப்படுத்துகிறார் போலும்.

திருவொற்றியூர், திருவல்லிக் கேணி, திருவான்மியூர், மாமல்லபுரம், திருச்செந்தூர், கன்னியாகுமரி ஆகிய தலங் களையும் அதன் தெய்வங் களையும் பாடும் பக்தி இலக்கியப் பாடல்களும் சில கடல்சார்ந்த தகவல்களைச் சொல்கின்றன.

மனமெனும் தோணிபற்றி மதியெனும் கோலையூன்றி
சினமெனும் சரக்கை ஏற்றி செறிகடல் ஓடும்போது
மதனெனும் பாறைதாக்கி மறியும்போ தறிய ஒண்ணா
உனையுனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே!


என்று திருநாவுக்கரசர் திருவொற்றியூர் தியாகேசர் பற்றிக் குறிப்பிடுகிறார். அதாவது `மனம் எனும் படகில், அறிவு என்ற துடுப்பின் உதவியோடு, கோபம் என்ற சரக்கை ஏற்றி செல்லும்போது, ஆசாபாசங்களாகிய பாறை தாக்கி, படகு கவிழும்போதுதான் ஒற்றியூரில் குடியிருக்கும் தியாகேசனை நினைக்கும் பக்குவம் வாய்க்கிறது' என்கிறார் அவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நெய்தல் தெய்வங்கள்!

கேரள மாநிலம், பாலக்கோட்டு மாவட்டத்தில் உள்ள `பட்டாம்பி' என்ற ஊரில் குடிகொண்டுள்ள வித்துவக் கோட்டம்மான் குறித்து குலசேகர ஆழ்வார் பாடல் ஒன்றை இயற்றியுள்ளார். `வெங்கண்தின்...' என்று தொடங்கும் அந்தப் பாடலின் சில வரிகள்...   

`எங்கும் போய்க் கரை காணா
தெறிகடல் வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும்
மாப்பறவை போன்றேனே...' 


அதாவது, `கரை எது என்பது தெரியாமல் சுற்றிச்சுற்றி வரும் கடற்பறவை ஒன்று,  கடலில் செல்லும் பாய்மர படகின் உச்சியில் உள்ள கொடி கம்பத்தில் மீண்டும் வந்தமர்கிறது. அதுபோல இறைவனின் திருவடியைவிட்டால் வேறு வழியில்லை; பற்றிக்கொள்ள அது ஒன்றே வழி' என்று குறிப்பிடுகிறார் குலசேகர ஆழ்வார். 

ஓயாது அலையென சிந்தனைகள் எழும் மனதுக்குச் சமுத்திரத்தை உவமையாக்கி பாடியிருக்கிறார்கள் சான்றோர்கள்.

கரைகளில் பொங்கி ஆர்ப்பரிக்கும் சமுத்திரம் ஆழத்தில் அமைதியானது. அதுபோன்றே வெளிச்சிந்தனைகளால் ஆரவாரம் செய்யும் மனதை அடக்கி, தியானத்தால், பக்தியால் கடந்து உள்ளே சென்றால் ஆனந்தத்தைக் காணலாம். இதையே பரந்தாமனின் பாற்கடல் சயனக்கோலம் உணர்த்தும் என்றும் சொல்வார் உண்டு.

தமிழகத்தின் கலைச்சிறப்பைச் சொல்லும் கடற்கரைக் கோயில்களில் முக்கியமானவை பல்லவர் கட்டுவித்த மாமல்லை ஆலயங்கள். ஸ்தலசயன பெருமாள் ஆலயம், குடைவரைக் கோயில்கள், ஒற்றைக்கல் கோயில்கள் மற்றும் புடைப்புச் சிற்பங்கள் என கலை யும், கடவுளும் கரம்கோக்கும் தலம் மாமல்லபுரம்.

பாறையின் முகப்பைப் பட்டையாகச் செதுக்கி அதன் உள்ளே குடைந்து உருவாக்கப்பட்ட தர்மராச மண்டபம், மகிஷாசுரமர்த்தினி மண்டபம், வராக மண்டபம், ஒற்றைக்கல்லில் படைக்கப்பட்ட ஐந்து ரதம், கணேச ரதம், பிடாரி ரதம் ஆகியன தமிழரின் சிற்பச் சிறப்புக்கு மட்டுமின்றி, நெய்தல் நிலத்தின் இறைத் தன்மைக்கும் சான்றாகத் திகழ்கின்றன.

`வரைவயிறு கிழித்த நிழல்திகழ் நெடுவேல் திகழ்பூண் முருகன் தீம்புனல் அலைவாய்' என்று தொல்காப்பியமும், `சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்  ஏரகமும் நீங்கா இறைவன்' என்று சிலம்பும் போற்றும் திருச்சீரலைவாய்தான் இன்றைய திருச்செந்தூர். இங்கே, முருகப்பெருமான் தலையில் ஜடாமுடியுடனும், கையில் தாமரையுடனும் ஒரு யோகியைப் போல் காணப்படுகிறார். அறுபடை வீடுகளில், கடற்கரையில் கொலுவீற்றிருக்கும் ஒரே படைவீடு திருச்செந்தூர் மட்டுமே.

ராமேஸ்வரம் புராணம் போற்றும் கடற் கரைத் தலம். அருகிலுள்ள சேதுக்கரையும் ராம காதையுடன் தொடர்புடையதுதான்.

முக்கடல் சங்கமிக்கும் குமரிமுனையில் கோயில் கொண்டிருக்கும் தேவி கன்னியா குமரி அம்மன், தன்னை நம்பி கடலுக்குச் செல்லும் குடிகளுக்கு, கலங்கரை விளக்காய் நின்று வழிகாட்டுகிறாள் என்பது அங்குள்ள வர்களது நம்பிக்கை. 

மேற்சொன்ன பெருங்கோயில்கள் மட்டுமின்றி, பழவேற்காட்டின் எல்லையில் துவங்கி தென்குமரியின் ஆரோக்கியபுரம் வரையிலும், ஆயிரக்கணக்கான மீனவ கிராமங்களில் அந்தந்தப் பிராந்தியங்களுக்கு உரிய சிறு தெய்வங்கள் உறைகின்றன. 

தங்கள் தொழிலுக்கும், வாழ்வாதாரத்துக்கும் காவலாகத் திகழும் அந்தத் தெய்வங்களை, தங்கள் வீட்டில் ஓர் உறுப்பினராகவே கருதி உரிமை போற்றி வழிபடுகிறார்கள், அந்தப் பகுதியின் மக்கள்.

வட தமிழகக் கடலோரக் கிராமங்களில் தேசம்மா, சேனியம்மா என்ற பெயர்கள் மிகவும் பரிச்சயம். ஒரு தெருவில் குறைந்தது இரண்டு, மூன்று தேசம்மாக்கள், சேனியம்மாக்கள் இருப்பார்கள். இவை சென்னையின் கடலோரக் கிராமங்களில் உறையும் சிறு பெண் தெய்வங்கள். இந்தத் தெய்வங்கள் குறித்து பல தொன்மமான கதைகள் உள்ளன. ஒழுக்கம் தவறுதல், தீட்டுப்பட்டுவிட்டுக் கடலுக்குச் செல்வது போன்றவற்றை இந்தத் தெய்வங்கள் பொறுத்துக்கொள்ளாது என்பது மீனவ மக்களின் நம்பிக்கை. குட்டியாண்டவர், குட்டி பரிவாரம் முதலான சிறு தெய்வ வழிபாடுகளும் நடைமுறையில் உள்ளன.

நெய்தல் நில மக்களின் தெய்வம் சார்ந்த சில நம்பிக்கைகளும் சிலிர்ப்பூட்டுபவை. `முதல் மீன்பிடி' எப்போதும் கடலன்னைக்கே. அதை அவர்கள் மீண்டும் கடலிலேயே விட்டுவிடுவார்கள். தொழிலும் தெய்வம் என்ற நினைப்பு இங்கு மிக அதிகம்.  

நெய்தல் தெய்வங்கள்!

`பெருங்கடல் வேட்டத்து சிறுகுடி பரதவர்' என்று இலக்கியங்கள் போற்றும் நெய்தல் வாழ் சமூகம், பார்வதி அவதரித்த பர்வதராஜ குலம் தங்களுடையது என்ற மாறாப்பெருமையைத் தோளில் சுமக்கும் குலமாக இருந்து வருகிறது. 64 திரு விளையாடல்களில் சிவனார் வலைவீசி மீன்பிடித்த விளையாடல், அவர்களது பெருமைக்குச் சான்று. அதேபோல், மச்ச குலத்தைச் சேர்ந்த சத்தியவதி, அஸ்தினா புரத்தின் அரசனான சந்தனுவை மணந் ததும், அதற்காக அவள் வாங்கிய வரங்களுமே மகாபாரதம் நடக்கக் காரணம் என்பது, மீனவர் கொண்டாடும் ஒரு குலக்கதை. 

கடல் கடந்து வணிகம் செய்த நகரத்தாரைப் போன்று, கடல்சார் மக்களில் வாணிபம் செய்தோரும் தங்களைச் செட்டி என்று அழைத்துக்கொண்டனர். இவர்கள் ஊர் தோறும் பல்வேறு அம்மன் கோயில்களைக் கட்டி அழகு பார்த்தனர். திரௌபதி அம்மன், கங்கையம்மன், தண்டு மாரியம்மன் என பல கோயில்கள் கடல்புறத்தெங்கும் இறைந்து கிடக்க இவர்களே காரணம்.

காவிரிபூம்பட்டினம், மருவூர்பாக்கம் ஆகியன சிலப்பதிகாரத்தில் கடல்சார் ஊர் களாக  குறிப்பிடப்பட்டுள்ளன. இன்றளவும் பட்டினப்பாக்கம், நாகப்பட்டினம், ஜெகதா பட்டினம், காயல்பட்டினம், கல்பாக்கம், தேங்காய்பட்டினம் என்று கடல்சார் ஊர் களின் பெயர்கள் திகழ்வது, எவ்வளவு நீண்ட பாரம்பர்யத்தை இந்தச் சமூகம் தன்னகத்தே வைத்துள்ளது என்ற மலைப்பை ஏற்படுத்துகிறது. உலகின் முதல் உயிரினம் நீரில் தோன்றியது என்பது அறிவியலின்  கூற்று. அதுபோன்றே உலகின் ஆதிக்கடவுள் நீரில் தோன்றியிருக்கக் கூடும்.
 
நீர்க் கடவுள் - தண்ணீரே கடவுள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism