Published:Updated:

காஞ்சி மகானின் பாராட்டு... கடவுள் தந்த பரிசு!

காஞ்சி மகானின் பாராட்டு... கடவுள் தந்த பரிசு!
பிரீமியம் ஸ்டோரி
காஞ்சி மகானின் பாராட்டு... கடவுள் தந்த பரிசு!

ஜி.லட்சுமணன், படங்கள்: ஜெரோம்

காஞ்சி மகானின் பாராட்டு... கடவுள் தந்த பரிசு!

ஜி.லட்சுமணன், படங்கள்: ஜெரோம்

Published:Updated:
காஞ்சி மகானின் பாராட்டு... கடவுள் தந்த பரிசு!
பிரீமியம் ஸ்டோரி
காஞ்சி மகானின் பாராட்டு... கடவுள் தந்த பரிசு!

‘இறைநெறி ஓவியர்’ மணிவேல்

னைக்கா அம்மையையும், திருக்காளத்தி நாதரையும், திருச்செந்தூர் அழகனையும் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் தரிசிக்க முடியுமா? அப்படியோர் அபூர்வமான அற்புதமான பாக்கியம் கிடைத்தது எங்களுக்கு.
`விருதுகள் வேண்டாம்... புகழ் வேண்டாம்...இறைப் பணியே ஆத்ம திருப்தி தரும்' என்று கடந்த ஒன்பது தலைமுறைகளாக இறைப்பணியில் ஈடுபடுத்திக்கொண்டு இருக்கும் பாரம்பர்யம் மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர் மணிவேல். இறைவனின் திருவுருவங்களைத் தவிர வேறு எதையும் வரைவதில்லை என்ற உறுதியுடன் தன்னுடைய கலைப் பணியைச் செய்துவரும் இந்த இறைநெறி ஓவியரின் இல்லத்தில்தான், மேற்சொன்ன மகத்தான பாக்கியம் கிடைத்தது.

காஞ்சி மகானின் பாராட்டு... கடவுள் தந்த பரிசு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொழிச்சலூரில் உள்ள அவருடைய வீட்டுக்கு நாம் சென்றிருந்தபோது, திருச்செந்தூர் முருகப் பெருமானை அழகிய வண்ண ஓவியமாக வரையும் பணியில் மூழ்கியிருந்தார்.

அவரைத் தொந்தரவு செய்யாமல் வரவேற்பறையில் அமர்ந்த நாம் சுற்றிலும் பார்வையைச் செலுத்தினோம். சுவரெங்கும் அவர் வரைந்த தெய்வத் திருவுருவங்கள்தான் காட்சி அளித்தன.

சிவபெருமானின் பஞ்சபூதத் தலங் களான திருவானைக்கா, காஞ்சி, திருவண்ணாமலை, காளஹஸ்தி, சிதம்பரம் ஆகிய கோயில்களின் மூல மூர்த்தங்கள் தத்ரூபமாகக் காட்சி தந்தன. நாம் கோயிலுக்குச் சென்றால்கூட அந்த இறையுருவங்களை அத்தனை நெருக்கத்தில் பார்த்துச் சிலிர்க்க முடியாது. ஓவியங்களின் தெய்விகத்தில் லயித்திருந்த நம் எதிரில் சற்றைக்கெல்லாம் புன்னகையுடன் வந்து அமர்ந்துகொண்ட மணிவேல், தன்னைப் பற்றியும் தனது  பணிகளைப் பற்றியும் பேசத் தொடங்கினார்.

“திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நிகழ்ந்தாலும், அந்த வைபவத்துக்கான தொடக்கம் சிக்கலில்தான். இதைத்தான், ‘சிக்கலில் வேல் வாங்கி, செந்தூரில் சம்ஹாரம்’ என்று சொல்வார்கள். சிக்கலில் அம்பிகையிடம் இருந்து வேல் வாங்கும்போது, சக்திவேலின் வீர்யத்தின் காரணமாக, சிங்கார வேலருக்கு வியர்வை வெள்ளமாகப் பெருகும். அந்த அற்புதக் காட்சியை இன்றைக்கும் காணலாம். அப்படிப் பட்ட சிக்கலில் கோயில் கட்டடப்பணி, சுவாமி விக்கிரஹங்கள் செய்தல், தேர், சப்பரம் கட்டுதல், ஓவியங்கள் வரைதல் போன்ற இறைப் பணிகள் செய்யும் ஸ்தபதி குடும்பத்தில் பிறந்தவன் நான்’’ என்று இறை வனை மையப்படுத்தியே தன்னை யும் தன் பூர்வீகத்தையும் அறிமுகப்படுத்திக் கொண்டார் 75 வயதான இறை ஓவியர் மணிவேல்.

தொடர்ந்து, இறைவனுக்குத் தன் ஓவியங்களால் ஆற்றிய பணி,  அதனால் கிடைத்த புகழ், தன் வாழ்வில் நிகழ்த்திய அற்புத நிகழ்வுகள் என்று பல சுவாரஸ்ய மான தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசியதில் இருந்து...

காஞ்சி மகானின் பாராட்டு... கடவுள் தந்த பரிசு!

‘‘என் அப்பா சிறந்த சிற்பி. குறிப்பாக மரச் சிற்பங்கள் செய்வதில் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தார். நான் சிறுவனாக இருந்தபோது, அடிக்கடி அவருடன் சென்று, அவர் வேலை செய்வதைக் கவனிப்பேன். ஒருமுறை, என் அப்பா தன்னுடைய கையில் செவ்வந்திப்பூ ஒன்றை வைத்திருந்ததைக் கண்டேன். பார்க்கத் தத்ரூபமாக இருந்த அந்தப் பூவை கையில் வாங்கிப் பார்த்ததும்தான் தெரிந்தது, அது உண்மையான பூ இல்லை, மரத்தில் செய்த பூ என்பது. ஒவ்வோர் இதழையும் அந்த அளவுக்குத் நுட்பமாகச் செதுக்கி இருந்தார் அப்பா. அந்தச் சிற்பம் மலரின் மென்மையையும், என் அப்பாவின் கலைநுட்பத்தையும் பிரதிபலிப்பதாக இருந்தது. அதில் இருந்தே நான் அவருடைய கலையை நேசிக்கத் தொடங்கிவிட்டேன்.

எனக்குக் கலையில் இருந்த ஆர்வத்தைக் கண்ட என் அப்பா, சிற்பம் மற்றும் ஓவியக் கலைகளுக்கான சாஸ்திர நியதிகள், பணியைத் தொடங்குவதற்கு முன்பாகக் கடைப்பிடிக்க வேண்டிய விரத நெறிமுறைகள் பற்றியெல்லாம் எனக்குக் கற்றுத் தந்தார். இதனால், என்னுடைய கலை ஆர்வமும் படிப்படியாக வளர்ந்தது. ஆனாலும், நான் இந்தத் துறைக்குத்தான் வர வேண்டும் என்று அவர் கட்டாயப்படுத்தவில்லை.

பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு மேற் படிப்புக்காகச் சென்னைக்கு வந்தேன். படித்துக்கொண்டே பகுதிநேரப் பணியும் செய்துகொண்டு இருந்தேன். அப்போது `கலைமகள்' பத்திரிகையில் ஓவியராக இருந்த எம்.எஸ்.குமாரசாமி என்பவரின் அறிமுகம் கிடைத்தது.  ஓவியக் கலையை முழுமையாகக் கற்றவர் அவர். என் குடும்பத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, என்னையும் தன்னுடனே அழைத்துச் சென்று ஓவியம் வரையக் கற்றுக் கொடுத்தார். மேலும், நான் கோட்டோவியமாக வரைந்திருந்த கணபதி ஓவியம் ஒன்றை கலைமகள் தீபாவளி மலரில் வெளியிடச் செய்து, என்னுடைய ஓவியப் பணிக்கு உத்வேக மும் உற்சாகமும் கொடுத்தார். அந்த ஓவியத்தைப் பார்த்த என் அப்பா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஆரம்பக் காலத்தில் அப்பாவிடம் நான் ஓவியம் வரையவும், சிற்ப சாஸ்திரங்களையும் கற்றுக்கொண்டாலும், குமாரசாமியிட மிருந்தே கலை நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன். அவரே எனக்கு முதல் குரு.

காஞ்சி மகானின் பாராட்டு... கடவுள் தந்த பரிசு!

அதற்குப் பிறகு நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தாலும், பணி நேரம் போக, மற்ற நேரங்களில் இறைவனின் ஓவியங்களை வரைவதில் ஈடுபட்டேன். 1979-ம் ஆண்டில் ஒரு வார இதழில் வெளியான `தேவி தரிசனம்' என்ற பகுதிக்காக, பிரசித்தி பெற்ற கோயில்களில் உள்ள தேவியரின் திருவுருவப் படங்களை வரையும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து அந்த நிறுவனத்தில் இருந்து வெளியான ஆன்மிக இதழுக்கும் நான் கோயில்களில் உள்ள மூல மூர்த்தங்களை ஓவியமாக வரைந்து கொடுத்தேன். அப்போது நான் வரைந்த மாங்காடு காமாட்சி அம்மன் படத்தைப் பார்த்த காஞ்சி மகா பெரியவா என்னைப் பாராட்டினார்கள். தொடர்ந்து இறைவனின் அருளால் பல வாய்ப்புகள் கிடைத்தன. அதனால், தமிழகத்தின் பிரபல கோயில்கள் மட்டுமல்லாது, பெங்களூரு ராஜேஸ்வரி, மைசூர் சாமுண்டீஸ்வரி, காசி விசாலாட்சி, சோட்டாணிக் கரை பகவதி அம்மன் என வெளிமாநிலங்களில் அருளும் தெய்வங்களின் ஓவியங் களையும் வரைந்தேன்.
 
ஒருமுறை, சென்னைக்கு விஜயம் செய்த காஞ்சி ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும், ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் என் வீட்டுக்கு வருகை தந்து, நான் வரைந்திருந்த தெய்வ ஓவியங்களைப் பார்த்து ஆசீர்வதித்ததுடன், எனது பூஜை அறையில் இருந்த படங்களுக்குப் பூஜையும் செய்தனர். அதேபோல் புதுக்கோட்டை ஸ்ரீசாந்தானந்த சுவாமிகளும் நான் வரைந்திருந்த தெய்வப் படங்களைப் பார்த்துவிட்டுப் பாராட்டினார்’’ என்று  கூறிய மணிவேல், தொடர்ந்து தான் வரைந்த இறை ஓவியங்கள் பற்றியும், வெளிநாட்டுக்குச் சென்று தெய்விக ஓவியங்கள் வரைவதற்குக் கிடைத்த வாய்ப்புகள் பற்றியும் கூறினார்.
 
``நம் நாட்டின் கலாசாரத்தைப் பிற நாடுகளில் புகழ்பெறச் செய்யும் வகையில், வெளிநாடுகளில் இந்துக் கோயில்களைக் கட்டியவர் குருதேவர் சிவாயயோகி சுப்பிரமுனிய சுவாமி என்னும் துறவி. இவர் அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் ஒன்றான குவை தீவில் இருந்த நதிக்கரையில் ஒரு சுயம்புலிங்கத்தைக் கண்டெடுத்தார். அங்கேயே அதை வைத்து ஒரு கோயில் கட்ட முடிவெடுத்து பணியைத் தொடங்கியிருந்தார். அப்போது சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்த ஒரு கலை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர், அங்கு வைக்கப்பட்டிருந்த ஓவியங்களைப் பார்த்து ரசித்ததோடு, ஹவாய் தீவில் தான் கட்டப்போகும் கோயிலுக்கு நானே ஓவியங்கள் வரைந்து தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கான ஏற்பாடுகளையும் அவரே செய்தார். அங்கு சென்று இரண்டு மாத காலம் தங்கியிருந்து. கோயில் படங்களையும் தெய்வப் படங்க ளையும் வரைந்து கொடுத்து விட்டு நாடு திரும்பினேன். அதுவரை, இந்தியாவில் மட்டுமே ஒவியங்கள் வரைந்து கொண்டிருந்த எனக்கு முதலில் வெளிநாடு செல்வதற்கு உதவியதும் இந்த இறை ஓவியங்கள்தான்’’ என்று நெகிழ்ச்சியோடு சொன்னவர், மேலும் ஒரு சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

காஞ்சி மகானின் பாராட்டு... கடவுள் தந்த பரிசு!

‘‘ஒருமுறை, தஞ்சாவூரில் மூன்று நாள்கள் கலைக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அந்தக் கண்காட்சியின் தொடக்க விழாவின் ஒரு பகுதியாக ‘ஒன் மேன் ஷோ’ என்ற பெயரில் என்னுடைய ஓவியக் கண்காட்சியும் இடம்பெற்றிருந்தது.

அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த அன்பர், கடவுள் நம்பிக்கை அற்றவர்.  ஆனால், நிகழ்ச்சி முடிந்த பிறகு என்னைச் சந்தித்த அவர், நான் வரைந்த ஓவியங்களைப் பார்த்து மெய் சிலிர்த்துப் போனதாகவும், இறைவனையே நேரில் கண்டது போன்ற உணர்வை என் படங்கள் ஏற்படுத்தியதாகவும்  உளப்பூர்வமாகக் கூறி மகிழ்ந்தார். மறக்க முடியாத சம்பவம் இது. ஒரு கலைஞனாக என் படைப்புக்குக் கிடைத்த அந்தப் பாராட்டை, இறைவன் எனக்கு அளித்த பரிசாகத்தான் பார்க்கிறேன். அதை விடவும் வேறென்ன வேண்டும் எனக்கு!’’ என்று கூறிப் புன்னகைத்தார் ஓவியர் மணிவேல்.

அவரின் மலர்ச்சி நம்மையும் தொற்றிக்கொள்ள, தூரிகையால் காவியம் படைக்கும் அந்த ஓவியக் கலைஞனை வணங்கி விடைபெற்றோம்.

தெய்வ ஓவியங்கள் வரையும்போது...

தெய்வத் திருவுருவங்களை வரைய விரும்புகிறவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நியதிகள் குறித்தும் பகிர்ந்துகொண்டார் ஓவியர் மணிவேல்.

‘‘பொதுவாக, ஓவியக்கலைஞர்கள்          சிறு சிறு விஷயங்களையும் நுணுக்கமாகக் கவனிக்க வேண்டும். குறிப்பாக, கோயில் கருவறைகளில் உள்ள தெய்வத் திருவுருவங்களை வரைவதில் நிறைய சாஸ்திர நுணுக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.

காஞ்சி மகானின் பாராட்டு... கடவுள் தந்த பரிசு!

தெய்வ உருவங்களை வரையும்போது, கருவறையில் உள்ள தெய்வ உருவத்தைச் சற்றும் மாறாமல், ‘கீ டிராயிங்’ எனப்படும் முதல் பதிவை வரைந்துகொள்ள வேண்டும். ஆனால், இறுதிப்பதிவில் சில வரைமுறைகளுக்கு உட்பட்டுத்தான் வரைய வேண்டும்.

உதாரணமாக, ஒரு சில கோயில்களில் உள்ள தெய்வ மூர்த்தங்களின் உருவங்களில் சிறிய அளவில் பின்னம் ஏதேனும் இருக்கும். அந்தச் சிறு பின்னத்தைக்கூட கீ டிராயிங்கில் வரைந்துகொள்ள வேண்டும். ஆனால், இறுதிப்படங்களில் ஒருபோதும் அந்தப் பின்னம் இடம்பெறக் கூடாது.

பின்னம் இருக்கும் தெய்வச் சிற்பங்களை வழிபடக் கூடாது என்று சாஸ்திரங்கள் கூறினாலும், சிறிய பின்னமாக இருக்கும் பட்சத்தில் வழிபடலாம் என்று அதே சாஸ்திரம் விலக்கு அளித்திருக்கிறது. எனினும், ஓவியத்தில் மட்டும் அந்தப் பின்னத்தை வெளிப்படுத்தக் கூடாது. இதுபோன்ற பல சாஸ்திர விஷயங்களை உரிய நூல்களைப் படித்தோ அல்லது அந்தத் துறையைச் சேர்ந்த பெரியவர்களிடம் கேட்டோ தெரிந்துகொள்வது அவசியம்’’ என்றார்.