திருத்தலங்கள்
தொடர்கள்
இளைஞர் சக்தி
விழாக்கள் / விசேஷங்கள்
Published:Updated:

ஆலயம் தேடுவோம் - சேக்கிழாருக்கு நமது நன்றி காணிக்கை!

ஆலயம் தேடுவோம் - சேக்கிழாருக்கு நமது நன்றி காணிக்கை!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆலயம் தேடுவோம் - சேக்கிழாருக்கு நமது நன்றி காணிக்கை!

எஸ்.கண்ணன் கோபாலன், படங்கள்: க.சதீஷ்குமார்

யிலாசநாதர் என்ற திருப்பெயரில் அந்தக் கயிலை நாயகன் குடிகொண் டிருக்கும் திருக்கோயில்கள் தென் தமிழகத்தில் ஏராளம். அதேபோல், அக்கோயில்களில் நிறைந்திருக்கும் ஐயனின் அருளுக்கும் குறைவே இல்லை.

கயிலைக்குச் செல்ல முடியாதவர்களும் கயிலை நாயகனைத் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான், நம் முன்னோர்கள் பல இடங்களில் கோயில்களை எழுப்பி, கயிலாசநாதர் என்ற திருப்பெயரில் ஐயனை பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். இத்தகைய ஆலயங்களில் அருள்புரியும் இறைவனை, ‘`ஐயனே, கயிலாசநாதா!’’ என்று அழைத்துச் சரணம் அடைந்தால், அந்தக் கயிலாசநாதரையே நேரில் சென்று தரிசித்த பலனைப் பெறலாம் என்பது காலம்காலமாகப் பக்தர் களிடம் நிலவி வரும் நம்பிக்கை. இதேபோல்தான் காசி விஸ்வநாதர் என்ற பெயரிலும் பல இடங்களில் ஐயன், திருக் கோயில் கொண்டிருக்கிறார்.

ஆலயம் தேடுவோம் - சேக்கிழாருக்கு நமது நன்றி காணிக்கை!
ஆலயம் தேடுவோம் - சேக்கிழாருக்கு நமது நன்றி காணிக்கை!

அந்த வகையில், கயிலாசநாதர் எனும் திருப்பெயருடன் சிவனார் அருளும் திருத்தலம், அதம்பார். திருவாரூருக்கு அருகில் உள்ள இந்தத் தலத்தில், வண்டுவார்குழலி அம்மையுடன் கோயில் கொண்டிருக்கிறார் ஐயன் கயிலாசநாதர்.

இந்தக் கோயிலுக்கு பிரத்யேகமான ஒரு சிறப்பு உண்டு. சிவபெருமானால் முதலடி எடுத்துக் கொடுக்கப்பெற்று, புராணம் பாடிய சான்றோர் ஒருவர் திருப்பணிகள் செய்த திருக்கோயில் இது.

பிற்காலச் சோழப் பேரரசில் எத்தனையோ புலவர் பெருமக்கள் இருந்திருக்கிறார்கள். எண்ணற்ற நூல்களையும் படைத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுள் ஒருவர் தனிச்சிறப்பு வாய்ந் தவர். ‘சான்றோருடைத்து’ என்று போற்றப்படும் தொண்டை மண்டலத்தில் உள்ள குன்றத்தூரில் தோன்றி, தம்முடைய அளவற்ற மதிநுட்பத்தால் மூன்றாம் குலோத்துங்க சோழ மன்னருக்கு அமைச்சராக இருந்து வழிநடத்திய சேக்கிழார் பெருமான்தான் அவர்.

அருண்மொழிவர்மன் என்னும் இயற்பெயர் கொண்ட சேக்கிழார்தான், இறைவனை விடவும் உயர்ந்தவர்களாகச் சொல்லப்படும் அடியார்களின் வரலாற்றைத் தொகுத்து அழகிய பாடல்களாக வடித்துத் தந்தார். அந்த நூலுக்குப் ‘பெரியபுராணம்’ என்னும் பெயரும் சூட்டினார். காலத்தால் மிகவும் முந்தைய 18 புராணங்களுக்கும் இல்லாத சிறப்பு இந்த நூலுக்கு உண்டு என்பதால்தான் இந்த நூலுக்கு இப்படி ஒரு பெயர் ஏற்பட்டது
போலும்!

சேக்கிழாரும் சரி, சேக்கிழாரை அமைச்சராகப் பெற்ற மூன்றாம் குலோத்துங்க சோழரும் சரி... அளவற்ற சிவபக்தி கொண்டவர்கள். சேக்கிழார் பெருமான், பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர்புராணம் பாடுவதற்கு, தில்லை நடராஜப் பெருமான், ‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்’ என்று அடியெடுத்துக் கொடுத்தார் என்றால், திருவாரூர் தியாகேசப் பெருமான், தம்முடைய கோயில் தானத்தாருக்கு அருளிய உத்தரவில், மூன்றாம் குலோத்துங்க சோழனை, ‘நம் தோழன்’ என்று கூறியதாகத் திருவாரூரில் உள்ள கல்வெட்டு ஒன்று கூறுகிறது.

மூன்றாம் குலோத்துங்க மன்னரும் சேக்கிழார் பெருமானும் எண்ணற்ற பல திருக்கோயில்களைப் புதிதாக நிர்மாணித்தும், ஏற்கெனவே இருந்த பல புராதனமான திருக்கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தும் இருக்கிறார்கள். அப்படிச் சேக்கிழார் பெருமானால் திருப்பணி செய்யப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் அதம்பார் அருள்மிகு வண்டுவார்குழலி சமேத அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில்.

கி.பி. 3-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகச் சொல்லப்படும் இந்தத் திருக்கோயிலை கி.பி.13-ம் நூற்றாண்டில் சேக்கிழார் பெருமான் திருப்பணிகள் செய்து புதுப்பித்து இருந்தாலும், காலப்போக்கில் சிறிது சிறிதாகச் சிதிலம் அடையத் தொடங்கிவிட்டது. கும்பாபிஷேகம் நடைபெற்று நூறு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டதாக ஊர்ப்பெரியவர்கள் சொல் கிறார்கள். சில வருடங்களுக்கு முன்புதான் ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து திருப்பணிக் கமிட்டி ஏற்படுத்தி, கோயிலைப் புதுப்பிக்கும் முயற்சியில் இறங்கினார்கள்.

இந்தக் கோயில் இந்துசமய அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் வருவதால், அறநிலையத் துறையின் 13-வது நிதிக் கமிஷனில் இந்த ஆலயத் திருப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அறநிலையத்துறையின் மூலம் சிவன் சந்நிதி, அம்பாள் சந்நிதி, மகா மண்டபம், அம்பாள் மண்டபம் போன்ற திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மற்றபடி விநாயகர், முருகன், மகாலட்சுமி, நந்திதேவர், தட்சிணாமூர்த்தி, ஸ்வர்ணாகர்ஷ்ண பைரவர், துர்கை, சனீஸ்வரர், நவகிரக சந்நிதி, பிராகாரம் போன்ற திருப்பணிகள் உபயதாரர்கள் மூலமும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

ஆலயம் தேடுவோம் - சேக்கிழாருக்கு நமது நன்றி காணிக்கை!

நாம் சென்றிருந்தபோது கோயிலில் திருப்பணிகள் சில முற்றுப்பெறாமல் இருந்ததைக் கண்டோம். திருப்பணிக் கமிட்டியைச் சேர்ந்த அன்பர் பெரியசாமியிடம் திருப்பணிகள் தொய்வு அடைந்திருப்பதற்கான காரணத்தைக் கேட்டோம்.

‘‘இந்த கயிலாசநாதர் கோயில் ரொம்பவும் புராதனமானதுன்னும், மூணாம் நூற்றாண்டைச் சேர்ந்ததுன்னும் சொல்றாங்க. கோயிலோட தோற்றம் அப்படித்தான் இருக்கு. ஆனா, அதுக்கான ஆதாரம் எதுவும் சரியா கிடைக்கலை. பெரியபுராணம் பாடின சேக்கிழார், சுமார் 800 வருஷத்துக்கு முன்னாடி இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் செஞ்சதா சொல்றாங்க.

இந்தத் திருக்கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடந்து, கிட்டத்தட்ட நூறு வருஷங்கள் ஆகியிருக்கும்னு ஊர்ப் பெரியவங்க சொல்றாங்க. கோயிலும் கொஞ்சம் கொஞ்சமா சிதிலமடைய ஆரம்பிச்சிடுச்சு. அப்படியும் நித்தியப்படி பூஜைகள் நடந்துட்டுதான் இருந்துச்சு. இப்பத்தான் அறநிலையத்துறை அனுமதியோடு திருப்பணிகளைத் தொடங்கி இருக்கோம். முக்கால்வாசி வேலைகள் முடிஞ்சிடுச்சு. இன்னும் சின்னச் சின்ன வேலைகள், சுற்றுச்சுவர் எழுப்பறது போன்ற வேலைகள்தான் செய்ய வேண்டியிருக்கு. பணம் போதுமான அளவுக்குக் கிடைச்சிட்டா மிச்சம் இருக்கற வேலையையும் முடிச்சு, சீக்கிரம் கும்பாபிஷேகம் செஞ்சுடலாம். சாமிதான் கருணை காட்டணும்’’ என்றார்.

பெருமளவு திருப்பணிகள் நிறைவேறிவிட்ட நிலையில், இன்னும் செய்ய வேண்டிய சின்னச் சின்ன திருப்பணிகளுக்காக கும்பாபிஷேகம் தள்ளிப் போவது வருத்தத்துக்குரிய விஷயம் அல்லவா!

ஆலயம் தேடுவோம் - சேக்கிழாருக்கு நமது நன்றி காணிக்கை!

எஞ்சியிருக்கும் திருப்பணிகள் விரைவில் நிறைவேற நாமும் நம்மால் இயன்ற பொருளுதவியைச் செய்தால்தானே அது சாத்தியப்படும்!

எத்தனையோ பல தியாகங்களைச் செய்த சிவனடியார்களைப் போல், நாம் பெரிதாக தியாகம் எதுவும் செய்துவிட வேண்டாம். இறைவன் அருளால் நமக்குக் கிடைத்திடும் செல்வத்தில் ஒரு துளியை எடுத்து ஐயன் கயிலாசநாதர் கோயிலில் எஞ்சி இருக்கும் திருப்பணிகளுக்கு உதவி, விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறச் செய்வோம். நமக்கெல்லாம் அரியதொரு புராணம் இயற்றித் தந்த சேக்கிழார் பெருமானுக்கு, அதுவே நாம் செலுத்தும் நன்றிக் காணிக்கை ஆகும். அப்படிச் செய்தால், ‘பேராது நின்ற பெருங்கருணைப் பேராறும், ஆராஅமுதும் அளவிலாப் பெம்மானும், ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானும், நீராய் உருக்கி நம் ஆருயிராய் நிற்பானும்’ ஆகிய ஐயனின் திருவருள் நம்மையும் நம் சந்ததியையும் வாழ்வாங்கு வாழவைக்கும்.

ஆலயம் தேடுவோம் - சேக்கிழாருக்கு நமது நன்றி காணிக்கை!

உங்கள் கவனத்துக்கு...

தலத்தின் பெயர்: அதம்பார்

சுவாமி:  அருள்மிகு கயிலாசநாதர்

அம்பிகை:  அருள்மிகு வண்டுவார்குழலி

எப்படிச் செல்வது?

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் என்ற ஊரில் இருந்து எரவாஞ்சேரி செல்லும் வழியில் சுமார் 20 கி.மீ தொலைவில் அதம்பார் அமைந்திருக்கிறது.

வங்கிக் கணக்கு விவரம்:

Arumigu Kailasanatha swamy seva sangam
City Union Bank
Nannilam Branch
A/C No: 500101010761782
IFSC Code: CIUB0000015
தொடர்புக்கு:
பெரியசாமி - 99628 10299