மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி பதில் - ருத்ராட்ச மாலையை எப்போதும் அணியலாமா?

கேள்வி பதில் - ருத்ராட்ச மாலையை எப்போதும் அணியலாமா?
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதில் - ருத்ராட்ச மாலையை எப்போதும் அணியலாமா?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

நாங்கள் அபார்ட்மென்ட்டில் சிறிய வீட்டில் வசிக்கிறோம். பூஜையறை தனியாக இல்லை. ஓர் அலமாரியில் தெய்வங்களை வைத்து வணங்குகிறோம். பூஜை நேரம் தவிர, மற்ற நேரங்களில் அலமாரியை மூடிவைக்கச் சொல்கிறார் கணவர். இது சரியா?

- கே.மாரியம்மாள், சாத்தூர்


பூஜை முடிந்ததும், அலமாரியை மூடிவிடலாம். கதவுகள் இல்லையெனில் திரையிட்டு மூடலாம். இறைவன் குடியிருக்கும் பூஜையறை அல்லது பூஜா அலமாரியின் கதவைத் திறந்தபடி வைத்திருந்து, குறுக்கும் நெடுக்குமாக நடப்பதும், பிற வேலைகளில் கவனம் செலுத்துவதும், சாப்பிடுவதும், அரட்டை அடிப்பதுமான செயல்கள் இறைவனை அவமதிப்ப தாகும். ஆகவே, கதவை மூடிவைப்பதில் தவறேதும் இல்லை.
நம் வீட்டில் ஓர் இடத்தை அல்லது அறையை இறைவனுக்கு ஒதுக்கியிருப்பதாக நினைக்காதீர்கள். இறைவன் குடியிருக்கும் வீட்டில் நாம் வாழ்கிறோம் என நினையுங்கள். இதனால் பணிவு, பரிவு, பக்தி ஆகியவை தழைக்கும்.

கேள்வி பதில் - ருத்ராட்ச மாலையை எப்போதும் அணியலாமா?

ருத்ராட்ச மாலையை எப்போது அணியலாம்? எப்போதெல்லாம் அணியக் கூடாது?

- எம்.கணேசமூர்த்தி, வந்தவாசி


நீராடல், ஊண், உறக்கம், உடலுறவு மற்றும் இயற்கை உபாதை கழிக்கும்போது ருத்ராட்ச மாலைகள் கழுத்தில் இருக்கக் கூடாது. மேற்சொன்ன விஷயங்களுக்குப் பிறகு, உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்கிக் கொண்டு ருத்ராட்ச மாலையை அணியலாம். பொதுவாக... தெய்வ வழிபாட்டின்போது அணிந்துகொண்டு, வழிபாடு முடிந்ததும் கழற்றிப் பூஜையறையில் பாதுகாப்பது சிறந்த நடைமுறை.

துறவிகள், முனிவர்கள், ரிஷிகள், உலக வாழ்க்கையைத் துறந்தவர்கள், தவத்தில் ஆழ்ந்தவர்கள் ஆகியோர் பின்பற்றும் நடைமுறையை நாம் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. இன்றைய சமுதாயத்தில், உலக சுகங்களைப் புறக்கணித்து வாழ்வது இயலாது. ஆன்மிகம் - உலக சுகம் இரண்டையும் ஏற்றுக்கொண்டுதான் வாழ இயலும். இத்தகைய சூழலில், பல தரப்பட்ட அலுவல்களை ஏற்க வேண்டியிருப்பதால், ருத்ராட்ச மாலைகளை தெய்வ வழிபாட்டின்போது மட்டும் அணிவது சிறப்பு. அப்போதுதான் ருத்ராட்சத்தின் தரம் காப்பாற்றப்படும்; காப்பாற்றப்பட்டால் பலன் அளிக்கும்.

என் சகோதரிக்குக் குழந்தை பிறந்துள்ளது. பெயர் வைத்ததும் ஆலயத்துக்குக் கொண்டு செல்லலாமா? தங்களின் அறிவுரை தேவை.

 - எஸ்.கீர்த்தனா, கழுகுமலை


பிறந்த 4-வது மாதத்தில், குழந்தையை வீட்டிலிருந்து வெளியே கொண்டு வரலாம் என்கிறது தர்மசாஸ்திரம். 4-வது மாதத்தில், குழந்தைக்குச் சூரியனைக் காட்ட வேண்டும். இந்த வைபவத்துக்கு `நிஷ்க்ரமணம்’ என்று பெயர்.

உடலும் உள்ளமும் இணையாக வளர்ந்து, குழந்தை ஒரு வயதை எட்டும்போது, பேச ஆரம்பிக்கும். அந்த வேளையில் கோயிலுக்கு அழைத்துச் செல்வது பொருந்தும். எப்போதும் பரபரப்பு - அவசரத்துடன் இயங்கும் இன்றைய சூழலில், சட்ட திட்டங்களை மீறுவதில் தயக்கம் இருக்காது. விஞ்ஞான விளக்கம் என்ற போர்வையில், ஆசைக்கு அடிமையாகி பல நல்ல நடைமுறைகளைப் புறக்கணிப்பதுண்டு. கோயிலில் கேட்கும் வாத்திய ஓசை, மக்களின் குரல், கூட்ட நெரிசல் ஆகியவை ஒரு வயது நிரம்பாத குழந்தையின் மனதைப் பாதிக்கும். ஆக, ஒரு வயதானதும் குழந்தையைக் கோயிலுக்கு அழைத்துச் செல்லலாம்.

இறந்துபோன முன்னோருக்காக மோட்ச தீபத்தை எல்லா ஆலயங்களிலும் ஏற்றலாமா? 

- கே.வி.ராம்குமார், கடலூர்

ஏற்றலாம். ஆலயங்களில் உறைந்திருக்கும் இறையுருவம், பரம்பொருளின் மறு உருவம். மூன்று வடிவங்களில் முத்தொழிலை நடைமுறைப்படுத்துபவர் அவர். ஒட்டுமொத்த துயரத்திலிருந்தும் முற்றிலும் விடுபட்ட நிலை என்பதே ‘மோட்சம்’ என்ற சொல்லுக்கான பொருள். நம்மை விட்டுப்பிரிந்தவர், அந்த நிலையை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் ஏற்றி வைக்கும் தீபம், மோட்ச தீபமாகும். அந்த நபர், ஒளிமயமான தீபத்தைப் போன்று, ஒளிமயமான பரம்பொருளுடன் இணைந்து, ஒளி வடிவில் நிலைத்து இருக்க வேண்டும்; துயரத்தைச் சந்திக்கும் மறுபிறவியைச் சந்திக்காமல் இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணமே மோட்ச தீபம் ஏற்றுவதற்கான காரணம்.

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை... இறந்த முன்னோருக்கு, ஆலயத்தில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, அத்துடன் நம் நினைவில் இருந்து அவரை விலக்குவதைவிட, தினம் தினம் வீட்டில் தீபத்தின் முன் நின்று, அவரை நினைத்து வணங்குவது சிறப்பு.

தர்ப்பையின் ஆன்மிக மகத்துவங்கள் தெரியும். அதற்கு மருத்துவ மகத்துவமும் உண்டு என்கிறார்களே, அப்படியா?

- சுரேஷ்குமார், காஞ்சிபுரம்


தர்ப்பையின் வேரில் மருத்துவக் குணம் அதிகம் உண்டு. அதைப் பயன்படுத்தும் முறை, ஆயுர்வேதத்தின் பரிந்துரையில் நிகழ வேண்டும்.

வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் சிறுநீரகப் பிரச்னையைத் தோற்றுவிக்கும். அதிலும், வாதமும் பித்தமும்தான் முக்கியப் பங்காற்றும். காற்று - அதாவது வாதம், அதிலிருக்கும் நீரை உறிஞ்சி, வற்றச் செய்யும். பித்தம் - வெப்பத்தால் நீரைச் சுண்ட வைக்கும். இந்த இரண்டு செயல்பாடுகளையும் தடுக்கும் திறமை, இனிப்புக்கும், வழவழப்பான குணத்துக்கும் உண்டு. இந்த இரண்டு தகுதியும் தர்ப்பையின் வேரில் இருப்பதால், அதன் தாக்கம், வாதம் உறிஞ்சுவதையும், பித்தம் சுண்ட வைப்பதையும் தடுத்துவிடும்; பிரச்னைகள் முளைக்காது என்று ஆயுர்வேதம் கூறும் (தர்பஸ்யமூலம் மதுரம் ஸ்னித்தம் பித்தானிலாபஹம்).

கேள்வி பதில் - ருத்ராட்ச மாலையை எப்போதும் அணியலாமா?

எனது அலுவலகத்தில் சிறிய விநாயகர் விக்கிர கத்தை வைத்துள்ளேன். தினமும் அவரை வணங்கியபிறகே வேலையைத் துவக்குவேன். `விக்கிரகம் வைத்து வழிபட்டால் தினமும் நைவேத்தியம் செய்யவேண்டியது அவசியம்’ என்கிறார் பெரியவர் ஒருவர்.  இதுகுறித்து தங்களின் அறிவுரை தேவை.

- எஸ்.புவனேஸ்வரி, திருப்பூர்


தெய்வத் திருவுருக்களைத் தெய்வமாக வழிபட எண்ணினால், கண்டிப்பாக அனுதினமும் நைவேத்தியம் படைத்து வணங்க வேண்டும். இடத்துக்கு உகந்தவாறு கல்கண்டு, உலர்ந்த திராட்சை போன்றவற்றை அவர்கள் முன்வைத்து சமர்ப்பித்து வழிபடலாம்.

எங்கள் வீட்டில் அம்மாவும் நானும், அக்கம்பக்கத்துத் தோழிகளும் சேர்ந்து ‘செவ்வாய்ப் பிள்ளையார்’ வழிபாடு செய்வது வழக்கம். எங்களுக்கு இந்த விரதம் குறித்த சாஸ்திர விளக்கங்கள் தேவை.

- எம். பானுமதி, தூத்துக்குடி


செவ்வாய்ப் பிள்ளையார் வழிபாடு என்பது சாஸ்திரத்தில் இடம்பெறாது. அது, சம்பிரதாயத்தில் விளைந்தது. குறிப்பிட்ட தொரு நிகழ்ச்சி, அதனுடைய சிறப்பு, கோயில் மரபு, எதிர்பாராத நம்பிக்கையால் விளைந்த செயல், ஆகம அறிவுரை... இப்படி ஏதேனும் ஒன்று, இந்த வழிபாட்டுக்குக் காரணமாக இருக்கலாம். வழிபாடுகளைக் கிழமையுடன் இணைப்பதும், அந்த வழிபாட்டையும் கிழமையையும் பெண்களுடன் இணைப்பதும் நமது விருப்பத்தால் விளைந்தது.

சரியான காரண - காரியம் இல்லாமல், பிறரைப் பார்த்துக் கடைப்பிடிக்கப்பட்டு, காலப்போக்கில் தனிச்சிறப்புப் பெற்ற வழிபாடுகள்போல், செவ்வாய்ப் பிள்ளையார் வழிபாடும் வந்திருக்கலாம். கோயில்களில், ராகு கால சிறப்பு பூஜைகள் வந்ததும் அப்படித்தான்.

- பதில்கள் தொடரும்...