Published:Updated:

‘சந்தோஷம்!’

‘சந்தோஷம்!’
பிரீமியம் ஸ்டோரி
‘சந்தோஷம்!’

பா.சு.ரமணன், படங்கள்: முரளி

‘சந்தோஷம்!’

பா.சு.ரமணன், படங்கள்: முரளி

Published:Updated:
‘சந்தோஷம்!’
பிரீமியம் ஸ்டோரி
‘சந்தோஷம்!’

“அருணாசலத்தின் ஒவ்வொரு மணல் துகளும் புனிதமானது. தெய்விகமானது. இறைத்தன்மை மிக்கது. மலை வேறு, அருணா சலர் வேறு அல்ல. மலையே இங்கு சிவலிங்கமாய் இருக்கிறது. அருணாசலத்தைப் பிரதட்சணமாக வருதல் என்பது அகில உலகத்தையும் வலம் வருவதற்குச் சமம். அகில உலகமும் அருணா சலத்தில் அடக்கம் என்பது இதற்குப் பொருள்.”

- அண்ணாமலையின் மகத்துவம் குறித்த இந்த அருள்வாக்கு பகவான் ரமணருடையது.

ஆம்! இளம் வயதில் உறவினர் ஒருவர் மூலம் ‘அருணாசலம்’ எனும் திருப்பெயரை செவிமடுத்த அந்தக் கணத்தில், அதை தன் நெஞ்சில் ஏற்றிக்கொண்டவர், அதன்பிறகு வேறொன்றையும் சிந்தித்தாரில்லை என்றே சொல்லலாம். 1896-ல் செப்டம்பர் மாதத்தின் முதல் நாள், இப்பதியை அடைந்த ரமணர், அதன்பின்னர் அந்தத் தலத்தைவிட்டு வேறு எங்கேயுமே செல்லவில்லை.அருணாசலமே அவருக்குத் தந்தையாகவும் குருவாகவும் அமைந்தது.

‘சந்தோஷம்!’

“அதுவேதலம் அருணாசலம் தலம்யாவிலும் அதிகம்
அதுபூமியின் இதயம்அறி அதுவேசிவன் இதயப்
பதியாம்ஒரு மருமத்தலம் பதியாம் அவன்அதிலே
வதிவான்ஒளி மலையாநிதம் அருணாசலம் எனவே”


என்று பகவான் புகழந்துரைத்த அருணையைத் தேடியும் அவரைத் தேடியும் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் பகவான் ரமணரை நாடி வந்தனர். அவ்வாறு தேடி வந்தவர்களுக்குக் கலங்கரை விளக்கமாய், ஒளிகாட்டும் ஞான சூரியனாய் பகவான் ரமணர் விளங்கினார். தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு மௌன குருவாய், தக்ஷிணாமூர்த்தியாய், நயன தீக்ஷை வழங்கி, அவர்களது ஆன்ம உணர்வை ஊக்குவித்தார். முக்தி வழிகாட்டினார்.

பற்றற்ற ஒரு ஞானியின் வாழ்வு எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு உதாரணமாய் அமைந்தது பகவான் ரமணரின் வாழ்வு. `தான் வேறு, பிறர் வேறு' என்று அவர் பேதம் பார்த்ததே இல்லை. அவருக்கு எல்லாரும் ஒன்று தான்; எல்லாமும் ஒன்றுதான்.

ஒருமுறை பக்தை ஒருவர் பகவானுக்கு அன்போடு திராட்சை ரசத்தைக் கொண்டுவந்து கொடுத்தார். அன்புக்குக் கட்டுப்பட்டு பகவான் அதை ஏற்றுக் கொண்டார். அந்தப் பக்தை, அதேபோல் தொடர்ந்து சில நாள்கள் கொண்டு வர ஆரம்பித்தவுடன் பகவான் ரமணர் அதனை மறுத்தார்.

“நாமெல்லாம் சாதாரண சாதுக்கள். இதெல்லாம் நமக்குத் தேவையில்லாதது. கட்டுப்படியாகாது” என்றார்.

உடனே அருகிலிருந்த பக்தர், “பகவான், இது உங்க உடம்புக்கு நல்லது. சீக்கிரம் ஜீரணமாகும். நல்ல தெம்பாவும் இருக்கும். பகவானுக்குத் தினமும் இப்படிக் கொண்டு வந்து கொடுக்கணும்னு இவா ஆசைப்படறா” என்றார்.

அதைக் கேட்டதும் பகவானுக்குக் கோபம் வந்துவிட்டது. “ஓகோ, அப்படியா... தினமும் கொடுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்காளாமா? சரிதான். இங்க இருக்கிற அத்தனை பேருக்கும் கொடுப்பாளான்னு கேட்டுச் சொல்லும்” என்றார்.

அதைக் கேட்ட அடியவர் பதில் சொல்ல முடியாமல் தலையைக் குனிந்தார். அந்தப் பக்தையாலும் அதற்கு மறுமொழி கூற முடியவில்லை.

உடனே பகவான், “ஒருவர் குடிக்கற ஜூஸ், சூப் இதுக்கு ஆகிற செலவில பத்து பேர் கஞ்சி குடிக்கலாம். கஞ்சியிலேயும் நல்ல தெம்பு கெடைக்கும். புரியறதோண்ணோ?” என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘சந்தோஷம்!’

எந்த உணவாக இருந்தாலும் அதில் ஆடம்பரம் தேவையில்லை என்பதை யும், எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டுமே தவிர, தன் ஒருவனுக்காக மட்டும் சிறப்பாக எது செய்யப்பட்டாலும் அது தவறு என்பதையும் அன்று அனைவருக்கும் உணர்த்தினார் பகவான்.

இவ்வாறு மற்றவர்களுக்கு உதாரணப் புருஷராக வாழ்ந்து காட்டிய பகவான் ரமணரைப் புற்றுநோய் தாக்கியது. `சர்கோமா' என்னும் அக்கொடிய நோய் பலவித சிகிச்சைகள் அளித்தும் குணமாகாமல் அவரது உடலை உருக்கியது. அவர் உடல்நிலையைக் கண்டு மனம் வருந்திய பக்தர்களைப் பார்த்து ரமணர், “எதற்கு மனம் வருந்துகிறீர்கள், கையில் லிங்கமல்லவா வந்திருக்கிறது. லிங்கக்கட்டி ஆகிவிட்டேன் பார்த்தீர்களா?” என்று சொல்லிப் புன்னகைப்பார். சில பக்தர்களிடம், “உண்டு முடித்த பின்னர் எச்சில் இலையை மீண்டும் யாராவது உபயோகப்படுத்துவார்களா? அது மாதிரிதான் இந்த உடலும்” என்பார். “நீங்கள் எங்களை விட்டுப் போனால் நாங்கள் எங்கே செல்வது?” என்று வருந்திய பக்தர்களிடம், “போவதாவது? நான் எங்கே போக முடியும்? போக்கேது, வரவேது?” என்பார்.

இப்படி நோயினால் அவதிப்பட்டு வந்தாலும் அவர் முகத்தில் ஒளி குறையவில்லை. கண்கள் பொன்போல் சுடர் விட்டு, தம்மை நாடி வருவோர் மீது கருணை மழையைப் பொழிந்தன. தம்மால் நடக்க முடியாவிட்டாலும் மெள்ள மெள்ளத் தடியை ஊன்றி நடந்து வருவார். ஹாலுக்கு வெளியே அமர்ந்து பக்தர்களுக்குத் தரிசனம் தருவார். இப்படியே நாள்கள் நகர்ந்தன.

‘சந்தோஷம்!’

அன்று 14-4-1950. வெள்ளிக்கிழமை. காலை முதலே பக்தர்கள் வந்து தரிசித்துச் சென்றனர். உடல் அயர்ச்சியால் பகவான் கண்களை மூடியிருந்தார். சில நேரம் கண் திறந்து விழித்து நேராகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

மதிய நேரத்தில் ஆசிரமத்து மயில்கள் திடீரென அகவ ஆரம்பித்தன. அதைக் கேட்ட ரமணர், “அவற்றுக்கு உணவு கொடுத்தாகி விட்டதா?” என்று அக்கறையோடு விசாரித்தார். `ஆம்' என்பது தெரிந்ததும், “பின் ஏன் அவை கத்துகின்றன?” என்று கேட்டார். பகவானை அன்று முழுவதும் வெளியே காணாத மயில்கள் சிறிது நேரத்தில் அவர் இருந்த அந்தக் குறுகிய அறையின் வாசல்புறத்தே வந்து நின்றன. பகவானின் கருணா கடாட்சம் அவற்றுக்கும் கிடைத்தது.

மாலையாயிற்று. படுக்கையில் சாய்ந்த நிலையில் இருந்த தம்மை நேராக உட்காரவைக்கும்படி அருகிலிருந்த தொண்டர்களிடம் சொன்னார் ரமணர். அவ்வாறு அமர்த்தப்பட்ட சில மணித்துளிகளில் அவருக்கு மூச்சுவிடக் கஷ்டமாயிற்று. உடனே மருத்துவர்கள், அதற்கான கருவியை மூக்கில் வைக்க ஆயத்தமாகி உள்ளே நுழைந்தனர். கையால் அசைத்து அதனை மறுத்த பகவான், கண்களை மூடிக்கொண்டார்.

மருத்துவர்கள் உள்ளே நுழைந்ததால், பகவானுக்கு அதுவரையிலும் பலவிதங்களில் அணுக்கத் தொண்டைச் செய்து வந்த தொண்டர் சிவானந்தம் அறையை விட்டு வெளியேற முற்பட்டார். உடனே மெல்லிய குரலில் அவரை அழைத்தார் பகவான்.

‘சந்தோஷம்!’

சிவானந்தமும் பகவானின் அருகில் சென்றார். பகவான் அவரைப் பார்த்து, மெல்லிய புன்முறுவலு டன் “சந்தோஷம்” என்றார். சிவானந்தத்துக்கு ஒன்றும் புரியவில்லை. அவருக்கு மட்டுமல்ல; அங்கிருந்த அனைவருக்குமே பகவான் அப்படிச் சொன்னதன் காரணம் தெரியவில்லை. இன்னும் சில மணித்துளிகளில் பகவான் உடலைத் துறந்துவிடுவார் என்பதை எல்லாரும் அறிந்திருந்தனர். இப்போது போய் ஏன் இப்படிச் சொல்கிறார், என்ன காரணம் என்பது புரியாமல் அவர்கள் திகைத்தனர்.

திகைத்துப்போய் நின்று கொண்டிருந்த சிவாஸ்ரீனந்தச் சுவாமியிடம் பகவான் ரமணர், “அதுதான் ஓய்! நன்றியைத் தெரிவிப்பதற்கான இங்கிலீஷ் வார்த்தை தாங்க்யூன்னு இருக்கே, அதைத்தான் நான் சந்தோஷம்னு சொன்னேன்’’ என்றார்.

உயிர் பிரியும் அந்த வேளையிலும், பகவானுக்குத் தன் மீதிருந்த கருணை யையும் அன்பையும் எண்ணி நெகிழ்ந்தார் சிவானந்தம்.

மருத்துவர்களும் கண்கலங்கிக் கண்ணீர் சிந்தினர்.

‘சந்தோஷம்!’

பகவான் மெள்ளத் தன் கண்களை மூடிக்கொண்டார்.

அது சிறு அறை என்பதால் மருத்துவரும் ஆசிரமப் பணியாளர் களுமாக ஒரு சிலர் மட்டுமே அந்த அறையில் இருக்க முடிந்தது. பிறர் வெளியே குழுமி பகவானையே பார்த்தவண்ணம் இருந்தனர். எங்கும் பூரண அமைதி நிலவியது.

பக்தர் ஒருவர் பகவான் இயற்றிய அக்ஷ ரமண மாலையைப் பாட ஆரம்பித்தார். கூடவே பிற பக்தர்களும் இணைந்து பாடத் தொடங்கினர்.

அருணாசல சிவ அருணாசல சிவ
அருணாசல சிவ அருணாசலா
அருணாசல சிவ அருணாசல சிவ
அருணாசல சிவ அருணாசலா
அருணாசலம் என அகமே நினைப்பவர்
அகத்தை வேரறுப்பாய் அருணாசலா
அழகு சுந்தரம்போல் அகமும் நீயுமுற்று
அபின்னமாய் இருப்போம் அருணாசலா


- குரல் எங்கும் ஒலித்தது.

பாடல் கேட்டு மூடியிருந்த தம் கண்களை மெள்ளத் திறந்து பார்த்தார் ரமணர். அவர் கண்களிலிருந்து நீர் பெருகியது. பின் மெள்ளக் கண்களை மூடிக்கொண்டார். சில நிமிடங்களில் ஆழமான மூச்சு ஒன்றன் பின் ஒன்றாய் வெளிப்பட்டது. அருகில் நின்றவர்கள் அடுத்த மூச்சை எதிர்பார்த்து நிற்க, உள்ளே சென்ற மூச்சுக்காற்று இதயத்திலேயே நின்றது. மூலத்திலே சென்று ஒடுங்கி, ஆன்மாவில் நிலைத்தது. பகவான் ரமணர் மகா சமாதி அடைந்தார். அப்போது நேரம் இரவு மணி 8.47.

‘சந்தோஷம்!’

பகவான் மகா சமாதி அடைந்த அதேநேரத்தில், பகவானது அறையின் மேல் புறத்தில் வானில் பிரகாசமிக்க ஒளியொன்று தோன்றி, அருணாசல மலையை நோக்கி வேகமாகச் சென்று மறைந்தது.

ரமணரின் தாயார் அழகம்மை ரமணரைப் பிரசவிக்கும்போது ஒரு பார்வையற்ற கிழவி ஒருத்தி உடனிருந் தாள். அவர் ரமணர் அருட்குழந்தையாக அவதரிக்கும்போது சில நிமிடங்கள் மட்டும் ஒரு `பேரொளி'யைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றாள். திருச்சுழியில் அன்று தோன்றிய அப்பேரொளி, திருவண்ணாமலையை நாடி வந்து, வாழ்ந்து, வளர்ந்து இறுதியில் அதனுடனேயே இரண்டறக் கலந்தது.

இப்படி பகவான் ரமணர் அருணாசலப் பேரொளியுடன் ஒன்றி 67 ஆண்டுகள் ஆகின்றன. அவரது 67-வது ஆராதனை ஏப்ரல் 24, 2017 அன்று ரமணாசிரமத்திலும், உலகெங்கிலுமுள்ள ரமண மையங்களிலும் நடக்க இருக்கிறது.

ஓம் நமோ பகவதே ஸ்ரீரமணாய!