Published:Updated:

‘வீடெங்கும்... விளக்கழகு!’

‘வீடெங்கும்... விளக்கழகு!’
பிரீமியம் ஸ்டோரி
‘வீடெங்கும்... விளக்கழகு!’

பிரேமா நாராயணன், படங்கள்: ப.சரவணகுமார்

‘வீடெங்கும்... விளக்கழகு!’

பிரேமா நாராயணன், படங்கள்: ப.சரவணகுமார்

Published:Updated:
‘வீடெங்கும்... விளக்கழகு!’
பிரீமியம் ஸ்டோரி
‘வீடெங்கும்... விளக்கழகு!’

சென்னை சாந்தோமில் அமைதியான பகுதியில் இருக்கும் அபர்ணாவின் இல்லத்தில் நுழைந்ததும், முதலில் கவனத்தைக் கவர்பவை முன்கூடத்தில் இருக்கும் விதவிதமான விளக்குகள்தான். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்... ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிப்பு அல்லது கதை. இத்தனை விளக்குகளை ஒருவருடைய இல்லத்தில் ஒருங்கே பார்ப்பது இதுவே முதன்முறை என்பதால், வியப்பில் விழிகள் விரியப் பார்த்துக்கொண்டிருந்த நம்மை வரவேற்றார் அபர்ணா.

‘வீடெங்கும்... விளக்கழகு!’

நாட்டின் மிகப் பிரபலமான பன்னாட்டு வங்கியின் ஒரு கிளையில் ‘நேஷனல் ஹெட்’ ஆக பணிபுரியும் சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் அபர்ணா யோகேஷ், டிபிக்கல் மயிலாப்பூர்வாசி. ‘மயிலாப்பூர்’ என்றால் போதும்... மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருக்கும் அளவுக்கு மயிலையின் மீது பிரியம். கலைப் பொருள்களால் நிரம்பி வழிந்த தன் இல்லத்தைச் சுற்றிக் காண்பித்தார். எங்கெங்கு காணினும் விளக்குகளே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘எப்படீங்க இப்படி ஒரு கலெக்‌ஷன்?’’ என்றோம் ஆச்சர்யம் விலகாமலேயே!

‘வீடெங்கும்... விளக்கழகு!’

‘‘எங்க சுமுகி அம்மாகிட்டருந்து எங்களுக்கு வந்ததுதான் இந்தக் கலாசாரப் பித்து. `ஆ'னா `ஆ'வன்னா சொல்லித் தர்றதுக்கு முன்னாடியே, அம்மா எங்களுக்கு ஆன்மிகம் சொல்லித் தந்திருக்காங்க. விவரம் தெரிஞ்ச நாளில் இருந்து, காலையில் எழுந்து குளிச்சிட்டு, அம்மாவின் கைபிடிச்சு கபாலி கோயிலுக்கும் வெள்ளீஸ்வரர் கோயிலுக்கும் போறது  வழக்கம். அம்மா எங்களுக்குச் சொல்லிக் கொடுத்த மந்திரம் ஒண்ணே ஒண்ணு... சரணாகதி.

‘பகவான்கிட்ட கம்ப்ளீட் சரண்டர் ஆயிட்டால், மத்ததை அவன் பார்த்துப்பான்’னு அடிக்கடி சொல் வாங்க. லேடி சிவசாமி ஸ்கூல்ல ஹெச்.எம் ஆக இருந்து ரிடையர் ஆன பிறகு, கலாக்ஷேத்ராவின் பெசன்ட்நகர் ஸ்கூல்லயும் வேலை பார்த்தாங்க. நாங்களும் கலாக்ஷேத்ராவில்தான் படிச்சோம். வீட்டில் இருந்த தெய்விகச் சூழலும் கலாக்ஷேத்ராவின் சூழலும் ஒரேமாதிரி இருந்ததால, ரொம்பவே அங்கே மனம் ஒன்றிப் படிச்சோம். எங்களுக்குள் இருந்த கலையுணர்வை வளர்த்தது கலாக்ஷேத்ராவும் அம்மாவும்தான்!’’ என்றவர், வேலைக்குப் போய்வரும் நிலையிலும் பூஜை பொருள்களைத் தேய்த்து வைப்பது, பூஜை செய்வது, நைவேத்தியம் செய்வது, வீட்டில் இருக்கும் கலைப் பொருள்களைப் பராமரிப்பது என அத்தனை வேலைகளையும் பார்க்கிறார்.

‘வீடெங்கும்... விளக்கழகு!’

‘‘வீட்டில் எங்களது அதிகப்படியான பொழுதுகள்,  சுவாமி சம்பந்தப்பட்ட விஷயங்களிலேயே கழிந்தது எனலாம். சுவாமி கதைகள், புராணக் கதைகள்தான் அம்மா சொல்வாங்க. மகான்களைத் தரிசிக்கிறதுக்கு மடங்களுக்கு அழைச்சுக்கிட்டுப் போறது, கோயில்களுக்குப் போறது, கதாகாலட்சேபத்துக்கு கூட்டிட்டுப் போறது... இப்படி எல்லா நேரமும் எங்களை இறை சிந்தனையுடன் இருக்க பழக்கினாங்க.

‘வீடெங்கும்... விளக்கழகு!’

நான் ப்ளஸ் டூ படிக்கிறப்பவே அடுக்களைக்குள் நுழைஞ்சுட்டேன். போளி மாதிரி பட்சணம் பண்றதிலிருந்து, பாயசம், பஞ்சாமிர்தம்னு நைவேத்தியம் பண்றது வரை எல்லாமே எப்படி செய்றதுன்னு அம்மாகிட்டே கத்துக்கிட்டேன். வீட்டில ஸ்ரீசக்ரம் வெச்சுப் பூஜை பண்ணினவர் அப்பா. தினமும் அபிஷேகம் பண்ணித்தான் பூஜை நடக்கும். அதேபோல், வருஷா வருஷம் அம்மா கொலு வைப்பாங்க. அதுக்கான பொம்மைகளை
அவங்களே அழகழகா அலங்கரிப்பாங்க. நாங்க மூணு பேரும் கூடவே இருந்து ஹெல்ப் பண்ணுவோம். பொம்மைகளுக்கு ஜடை தைக்கிறது, டிரெஸ் தைக்கிறது, பெயின்ட் பண்றது எல்லாம் எங்களுக்கு சின்ன வயசிலேயே அத்துப்படி. பொம்மை அடுக்கிறதெல்லாம்கூட நாங்கதான். அதில் எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்திடுவாங்க. அதனாலதான் என்னவோ எங்களுக்குள் அந்த ரசனையும் கலையும் இந்தளவுக்கு ஊறிக்கிடக்கு!’’ என்றபடி விளக்கு கலெக்‌ஷன் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார் அபர்ணா.

‘வீடெங்கும்... விளக்கழகு!’

‘`எங்க வீட்டில் அகல் விளக்கில் ஆரம்பிச்சு, இரண்டு மூன்று அடி உயரம் உள்ள விளக்குகள் வரை நூற்றுக்கணக்கில் விளக்குகள் இருக்கு. போற இடங்களில் நாங்க வாங்கினது, நவராத்திரி சமயத்தில் வாங்கினது, நண்பர்கள் பரிசாகக் கொடுத்ததுன்னு ஒவ்வொரு விளக்குக்கும் ஒரு பின்னணி இருக்கு’’ என்று அவர் சொல்ல, ஒவ்வொரு விளக்காகப் பார்த்தோம்.

‘வீடெங்கும்... விளக்கழகு!’

பழைமையான குருவாயூர் விளக்கு, மூக்கு விளக்கு, வாழைத்தண்டு விளக்கு (திருநெல்வேலி பாணி), யானை விளக்கு, பெருமாள் விளக்கு (காமாட்சி விளக்கு போன்று இருக்கும் இதில், காமாட்சிக்குப் பதிலாக, ரங்கநாதர் பள்ளிகொண்ட உருவமும் சங்கு சக்கரமும் உள்ளன), பஞ்சமுக விளக்கு, பல தினுசுகளில் பாவை விளக்கு, அன்னப்பட்சி விளக்கு, நிலை விளக்கு, சர விளக்கு, பீங்கான் அகல் விளக்குகள்... அத்தனையும் அழகு. ஆனால், இவை எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் அழகும் நளினமும், 108 அகல்கள் கொண்ட பாவை விளக்கில் உள்ளன!

‘வீடெங்கும்... விளக்கழகு!’

‘‘இந்தப் பாவை விளக்கின் எடை 70 கிலோ...’’ என்று அபர்ணா குறிப்பிட்ட அந்த விளக்கு, வெள்ளை சலவைக்கல்லால் ஆன தாமரை பீடத்தின் மேல் அழகுற வீற்றிருந்தது. ‘‘இந்தப் பீங்கான் விளக்குகள் எல்லாம் எத்தனையோ வருஷமா இருக்கு. நாங்க ஸ்கூல்ல படிக்கிறப்போ, இந்த விளக்குகளைச் சோப்புத் தண்ணில போட்டுக் கழுவும்போது வர்ற ‘சிலிங்... சிலிங்’ என்கிற சத்தத்துக்காகவே போட்டி போட்டுக்கிட்டு அதைக் கழுவுவோம்’’ என்று பழைய நினைவுகளில் மலர்ந்து சிரிக்கிறார் அபர்ணா.

‘‘என் மாமியார், எனக்கு 90 வருஷம் பழைமையான வெள்ளி பாவை விளக்கைப் பரிசாகக் கொடுத்தாங்க. அதைப் பொக்கிஷமாகப் பாதுகாக்கிறேன். ஆனா, இந்த விளக்குகளை எல்லாம் விளக்கோ, விளக்குன்னு விளக்கிப் பராமரிக்கிறது இருக்கே... பேங்க் வேலையை விடப் பெரிசு!’’

பளிச்சென்று சிரிக்கிறார் அபர்ணா. விளக்கின் சுடர்போல ஒளிர்கிறது முத்துப் பல்வரிசை!

மயிலை மூவர்!

மிகப் பொறுப்பான பதவியில் பிஸியாக இருந்தாலும், கடந்த 15 வருடங்களாக, தன் சகோதரர்கள் அமர்நாத், சுரேந்திரநாத் ஆகியோருடன் இணைந்து, நம் பாரம்பர்யம் மற்றும் கலாசாரத்தைப் இளம் தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் பணியில் உற்சாகமாக ஈடுபட்டு வருகிறார் அபர்ணா. இவர்கள் மூவரையும் ‘மயிலை மூவர்’(மயிலாப்பூர் ட்ரையோ) என்றும், ‘மயிலையின் கலாசாரத் தூதுவர்கள்’ என்றும் பட்டம் கொடுத்து அழைக்கும் அளவுக்கு, மயிலாப்பூர் பகுதியில் பிரபலம். திருமணத்துக்குப் பிறகும் கூட அபர்ணாவின் பணி, புகுந்த வீட்டு ஆதரவுடன் தொடர்கிறது. தங்களை எடுத்து வளர்த்த பெற்றோர் பெயரால், 17 ஆண்டுகளுக்கு முன் ‘சுமுகி ராஜசேகரன் ஃபவுன்டேஷன்’ என்னும் அறக்கட்டளையை நிறுவி, அதன் மூலம், பள்ளிக் குழந்தைகளுக்கு கலை, கலாசார வகுப்புகள், போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கி வருகின்றனர். அது மட்டுமல்ல... சில வருடங்களாக நவராத்திரிக்கு மயிலை, திருவல்லிக்கேணி, மதுரை, ஸ்ரீரங்கம் கோயில்களில் இவர்கள் வைக்கும் கொலு மிகப் பிரபலம்.