தொண்டை மண்டலத்தின் கோயில் நகரமாகப் போற்றப்படும் காஞ்சியில், விழா வைபவங்களுக்கும் குறைவில்லை. அவற்றில் குறிப்பிடத் தக்கது, காஞ்சி வரதரின் நடவாவி உற்சவம்.
வாவி என்றால் கிணறு. ஆமாம்... கிணற்றுக்குள் நடைபெறும் உற்சவம் இது. சித்ரா பெளர்ணமி திருநாளில், யாகம் வளர்த்து நெருப்பாலும், நடவாவி கிணற்று நீராலும், பாலாற்றங் கரையில் காற்றாலும் காஞ்சி வரதரை ஆராதிப்பார்கள். அவ்வகையில் நடவாவி கிணற்றுக்கு எழுந்தருள்கிறார் ஸ்ரீவரதர்.

அவர் வரும் வழியெங்கும் வீதிகளில் நீர் தெளித்து, கோலமிட்டு, தோரணங்கள் கட்டி அழகுபடுத்தி, வெகு குதூகலத்தோடு வரவேற்பு அளிக்கிறார்கள் மக்கள். அதேபோல், வழியெங்கும் அன்னதானமும் நடைபெறும். பக்தர்களின் தாகம் தணிக்க பானகம், மோர், தண்ணீர் எனக் கொடுக்கிறார்கள்.
கோயிலில் இருந்து யாத்திரையைத் தொடங்கும் வரதர், மாடவீதிகளில் வலம்வந்து, செவிலிமேடு, தூசி, அப்துல்லாபுரம், ஐயங்கார்குளம் வழியாக நடவாவி கிணற்றுக்கு வருகிறார்.
தரைத்தளத்திலிருந்து படிக்கட்டு களாலான சுரங்கம் போன்ற பாதை கீழே செல்கிறது. படிக்கட்டு முடியும் இடம் ஒரு மண்டபம். அதற்குள் ஒரு கிணறு எனத் திகழ்கிறது நடவாவி. 48 மண்டலங்களைக் குறிக்கும் வகையில் 48 படிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!


படி முடிவடையும் மண்டபத்தை 12 தூண்கள் தாங்குகின்றன. இவை, 12 ராசிகளைக் குறிக்கும் என்கிறார்கள்.ஒவ்வொரு தூணிலும் நாற்புறமும் பெருமாளின் அவதாரங்கள் செதுக்கப் பட்டுள்ளன.
மேளங்கள் முழங்க, சிறப்பு அலங்காரத்துடன் நடவாவி கிணற்றுக்குள் இறங்கும் ஸ்ரீவரதராஜர், கிணற்றை மூன்று முறை வலம் வருவார். ஒவ்வொரு முறை சுற்றும்போதும் திசைக்கொன்றாக தீபாராதனை நடைபெறும். ஆக மொத்தம் 12 முறை தீபாராதனை நடைபெறுகிறது. அதேபோல், கல்கண்டு, பழங்கள் என மொத்தம் 12 வகையான பிரசாதங்களை நைவேத்தியம் செய்கிறார்கள்.
இரண்டாம் நாள் ஸ்ரீராமர், லட்சுமணன், சீதாதேவி ஆகியோர் நடவாவி கிணற்றுக்கு வந்து அருள் பாலிக்கிறார்கள்.

சித்ரா பௌர்ணமி முடிந்தும் 15 முதல் 20 நாள்கள் வரை பக்தர்கள் இந்த நடவாவி கிணற்றில் நீராடலாம்.
நடவாவி கிணற்றில் இருந்து கிளம்பும் வரதருக்கு, பாலாற்றில் வைத்தும் பூஜை செய்கிறார்கள்.
ஆற்றில் நான்குக்கு நான்கு அடி அளவில் ஊறல் (அகழி போன்ற பள்ளம்) எடுத்து, அதற்குப் பந்தல் போட்டுவைப்பார்கள். அந்தப் பந்தலில் எழுந்தருளும் ஸ்ரீவரதராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இதற்கு ஊறல் உற்சவம் என்று பெயர்.
இந்த வைபவத்தைத் தொடர்ந்து காந்தி ரோடு வழியாக, திருக்கோயிலுக்கு வந்துசேருகிறார் ஸ்ரீவரதராஜர்.
அற்புதமான இந்த நடவாவி வைபவத்தில் கலந்துகொண்டு ஸ்ரீவரதராஜப் பெருமாளைத் தரிசிக்கும் அன்பர்கள் அனைவரது பிரார்த்தனை களும் நிச்சயம் பலிக்கும்; ஸ்ரீவரதரின் அருளால் சகல நலன்களும் உண்டாகும் என்பது பக்தர்களது நம்பிக்கை.