Published:Updated:

குருவே சரணம் - அன்னமாச்சார்யா

குருவே சரணம் - அன்னமாச்சார்யா
பிரீமியம் ஸ்டோரி
குருவே சரணம் - அன்னமாச்சார்யா

பிரபுநந்த கிரிதர், ஓவியம்: ம.செ

குருவே சரணம் - அன்னமாச்சார்யா

பிரபுநந்த கிரிதர், ஓவியம்: ம.செ

Published:Updated:
குருவே சரணம் - அன்னமாச்சார்யா
பிரீமியம் ஸ்டோரி
குருவே சரணம் - அன்னமாச்சார்யா

மையிருட்டு முற்றிலுமாக அழிந்திடவில்லை. ஆனால், சூரியக்கிரணங்கள் திருமலையை எட்டிப்பார்க்கத் தொடங்கி விட்ட நேரம். சுப்ரபாத சேவை தொடங்கு கிறது. ஏழுமலையானின் திருக்கோயிலில் உள்ள கதவுகள் ஒவ்வொன்றாகத் திறக்கப்படுகின்றன.

கையில் தம்பூராவுடன் கர்ப்பக்கிரகத்தின் வாசலில் நிற்கிறார் ஒருவர்.

‘வின்னபாலு வினவலே’ எனத் தொடங்கும் பாடல் ஒன்றைப் பாடுகிறார்.

குருவே சரணம் - அன்னமாச்சார்யா

‘பாம்பணையில் சயனம் கொண்டுள்ள பெருமாளே... நாரத முனிவரும் தேவர்களும் இங்கே கீதம் இசைக்கிறார்கள். அடியவர்கள் உன்னைக்காணக் காத்திருக்கிறார்கள்.  உங்கள் மலர்க்கண்களைத் திறந்து, இந்தப் பூவுலகைப் பாருங்கள்’ என்பது அந்தப் பாடலின் பொருள்.

அந்தப் பாடலை எழுதியவர் அன்னமாச்சார்யா. தம்பூராவுடன் நின்றபடி பாடுபவர், அன்னமாச்சார்யாவின்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குருவே சரணம் - அன்னமாச்சார்யா

வாரிசு.  வேங்கடேஸ்வரரின் திருக்கோயிலில் சுப்ரபாத சேவையின் போது அன்னமாச்சார்யாவின் பாடல் ஒன்றைப் பாடும் உரிமை அவரின் வாரிசுக்கு உண்டு. இது இன்று நேற்றல்ல... சில நூற்றாண்டுகளாகவே நிலவும் பழக்கம்.

எப்படி வந்தது இந்த உரிமை?  இதற்கான பதில், பக்தி என்பதுதான். இறைவனையே தன் பக்தியால் மயக்கியவர் அன்னமாச்சார்யா.

யார் இந்த அன்னமாச்சார்யா?

‘தான் யார் என்பதை அறிந்தவர் அவர்’ என்பதுதான் அவரது சிறப்பு. பிற கடவுளரின் வலதுகை அருள்பொழியும் விதத்தில் இருக்க, வேங்கடேஸ்வரரின் வலதுகை அவரது திருவடியைச் சுட்டிக்காட்டுகிறது.

‘என் பாதங்களில் சரணடைந்துவிடு. உனக்கு அமைதி கிடைக்கும்’ என்ற அந்தச் செய்தியைத் தனது வாழ்நாளில் தாரக மந்திரமாக எடுத்துக் கொண்டவர் அன்னமாச்சார்யா.

திருமால் பக்தர்கள் பலர் உள்ளனர். அவர் களில் அன்னமாச்சார்யா விசேஷமானவர். திருமலையில் எழுந்தருளியிருக்கும் திருவேங்கடவனை மட்டுமே கடவுளாகக் கண்டவர். அவர் பிறந்த தாள்ளபாக்கம் கிராமத்திலேயேகூட, திருமாலின் மற்றொரு வடிவமான ஸ்ரீசென்னகேசவருக்கான ஆலயம் உண்டு. ஆனாலும், அன்னமாச் சார்யாவின் ஒரே நாட்டம் திருவேங்கடவன் மீது மட்டுமே.

தென்னகத்திலுள்ள பல முக்கிய ஆலயங்களுக்குத் தனது வாழ்நாளில் சென்றிருக்கிறார் அன்னமாச்சார்யா. ஆனால், அவர் எல்லா இடங்களிலும் கண்டது திருவேங்கடவனையே.

ஸ்ரீரங்கத்துக்குப் போனால் அவர் அங்கு கண்டது ‘வேங்கட ரங்கனை’.

காஞ்சிக்கு வந்தபோது அவர் கண்ணுக்குத் தெரிந்தது ‘வேங்கட வரதன்’.
 
ஆக, ஒவ்வொரு தலத்திலும் அவர் பாடல் இயற்றினாலும், அது அந்தந்த மூர்த்திகளைப் பற்றிய பாடல் என்பதைவிட திருவேங்கடவன் மீதான பாடல்களாகவே  அமைந்துவிட்டன. ஒன்றிரண்டல்ல, 32,000 பாடல்களைப் பாடியிருக்கிறார்.

குருவே சரணம் - அன்னமாச்சார்யா

சங்கீத மும்மூர்த்திகளின் காலத்துக்கு முன்பே வாழ்ந்தவர் அன்னமாச்சார்யா. திருமலையானுக்குச் சுப்ரபாத சேவையை முதலில் நடைமுறைப் படுத்தியவர் என்பது மட்டுமல்ல, வேறு பல சேவைகளையும் செய்து மகிழ்ந்திருக்கிறார் அன்னமாச்சார்யா.

தன்னை அலர்மேல்மங்கையின் தந்தையாகப் பாவித்துக்கொண்டார் (உலகுக்கே ‘தாயார்’;  ஆனால், அன்னமாச்சார்யாவுக்கு மகள். இதுதானே பக்தி நெஞ்சம் எடுத்துக்கொள்ளும் தார்மீக உரிமை). இதனால் அவரை வேங்கடவனுக்குத் திருமணம் செய்துவைக்கும் பொறுப்பு அவருடையதாகிவிட்டது.  எனவே, தந்தை ஸ்தானத்தில் இருந்து அலர்மேல்மங்கையை வேங்கடவனுக்கு கன்யா தானம் செய்தார். அதற்கென ‘பிடிகிட தலம்ராலு பெண்ட்லி கூத்துரா’ என்ற பாடலையும் நெக்குருகப் பாடினார். ‘மகளையும் மாப்பிள்ளையையும்’ ஊஞ்சலாட வைத்தவர் அவர். ‘டோலாயம் சல டோலாயம்’ என்ற பாடல் மூலம் நடந்தது, இந்த ஊஞ்சல் சேவை. இரவில் இறைவனைக் கண்ணுறங்க வைக்கும் வைபவம் ஒன்றும் உண்டு. தாலாட்டைத் தன் முக்கிய உள்ளடக்கமாகக் கொண்ட அந்த நிகழ்ச்சிநிரல் பகுதியை ‘ஏகாந்த சேவை’ என்பார்கள். இதையும் செய்து மகிழ்ந்திருக்கிறார் அன்னமாச்சார்யா.

ஓர் ஏழைப் பாடகராக வாழ்ந்து மறைந்த வரல்ல அன்னமாச்சார்யா. அரசவைக் கவிஞராகவும் இருந்திருக்கிறார். அதனாலேயே ஒரு ராஜ தோற்றம் அவரிடம்.  கிரீடத்தோடு கூடிய அவரது தோற்றம்தான் சிலாசாசனங்களில் (கல்வெட்டுகளில்) காணப்படுகிறது. ஆனாலும், அந்தக் கால அரசவைக் கவிஞர்கள் அனைவரும் செய்துவந்த ஒரு காரியத்தை இவர் செய்ததேயில்லை. அதாவது, அரசனைப் புகழ்ந்து பாடியதில்லை. இவரது அத்தனை பாடல்களுமே திருவேங்கடவனைப் பற்றியதுதான்.

குருவே சரணம் - அன்னமாச்சார்யா

அரசரைப் பாடாதது மட்டுமல்ல, வேறொரு விதத்திலும் அவர் அந்தக் காலப் புலவர்களிடமிருந்து மாறுபட்டிருந்தார். ஜாதி வேற்றுமை தலைதூக்கியிருந்த காலகட்டத்தில் வாழ்ந்தாலும், இறைவனுக்குமுன் எல்லோரும் சமம்தான் என்பதைச் சந்தேகமின்றி உணர்ந்ததுடன், தனது பாடல்களிலும் அழுந்தந்திருத்தமாகக் கூறியிருந்தார். அந்த விதத்தில் இவரை ஒரு புரட்சிக்கவி என்று கூடக் கூறலாம்.

அவ்வளவு ஏன், அன்னமாச்சார்யாவே ஸ்மார்த்த பரம்பரையைச் சேர்ந்தவர்தான்.  அதாவது, அவரின் தாயும் தந்தையும் சிவன், விஷ்ணு ஆகிய இருவரையும் வழிபடும் பிரிவைச் சேர்ந்தவர்கள். பாரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்தவர்களும்கூட. பரம்பரைச் சொத்து உண்டு. அரண்மனையில் இருந்து வந்த செல்வங்கள் உண்டு.  என்றாலும், தனது செல்வத்தில் பெரும்பகுதியை வேங்கடவனின் சேவைக்குப் பயன்படுத்தியவர் அன்னமாச்சார்யா. ஆழ்வார்களின் பெயர் களைக் குறிப்பிட்டு ‘அவர்கள் பாடாததையா நான் பாடிவிட்டேன்’ எனும் அடக்கமான பக்தி அவருடையது.

அன்னமாச்­­சார்யாவின் தந்தையான நாராயணசூரி, காசியிலிருந்து பத்தாம் நூற்றாண்டில் ஆந்திரப் பிரதேசத்தில் குடியேறிய நந்த வைதீக பிராமணர் குலத்தைச் சேர்ந்தவர். தாள்ளபாக்கம் கிராமத்தில் வழி
வழியாக வாழத் தொடங்கிய அந்தப் பரம்பரையில்தான் அன்னமாச்சார்யா உதித்தார்.

திருப்பதியில் இருந்து கடப்பாவுக்குச் செல்லும் வழியில், சுமார் 104 கி.மீ தொலை வில் உள்ளது தாள்ளபாக்கம். அவ்வூரில், சிறியதாகவும் அழகாகவும் காட்சியளிக்கிறது ஸ்ரீசென்னகேசவ சுவாமி திருக்கோயில். அருகே, ஒரே சந்நிதியுடன் கூடிய சுதர்சனம் சுவாமி ஆலயம். ஸ்ரீசென்னகேசவப் பெருமாளின் கோயிலை வலம் வந்தபோது, அன்னமாச்சார்யாவும் தமது இளம் வயதில் இங்கு வலம் வந்திருக்கிறார் என்கிற நினைவு எழுந்து, கூடுதல் பக்தி உணர்வைக் கொணர்ந்தது.

அன்னமாச்சார்யாவின் முன்னோர்களில் ஒருவர் நாராயணய்யா. அவரது வாழ்வில் ஓர் அதிசயம் நடந்தது.

தன் மகன் வேதத்தை முழுமையாகக் கற்க வேண்டும்   என்று விரும்பிய நாராயணய்யா வின் தந்தை, `ஊட்டுக்கூரு' என்ற ஊரில் (கடப்பா மாவட்டத்திலுள்ள ராஜம்பேட் அருகில் உள்ளது) இருந்த அவர்களின் உறவினர்களிடம் மகனைக் கல்வி பயில்வதற் காக அனுப்பினார்.

ஆனால், நாராயணய்யாவுக்கோ படிப்பு ஏறவில்லை. அதேநேரம் தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய முடியாமல் இருக்கிறோமே என்ற துக்கம் வேறு.  மனம்  பொறுக்காமல் இறந்துவிட முடிவெடுத்தான் சிறுவன் நாராயணய்யா. அந்த ஊரிலிருந்த காவல் தெய்வமான சிந்தாளம்மா தேவியின் கோயிலுக்குச் சென்றான். அதனருகே இருந்த பாம்புப் புற்றுக்குள் கையை விட்டான்.

அப்போது சிந்தாளம்மா தேவி, நாராயணய்யா எதிரில்  தோன்றி,  ``கவலைப் படாதே குழந்தாய். தொடர்ந்து படிக்க முயற்சி செய்.  நாளடைவில் நீ வேதங்களில் தேர்ச்சி பெறுவாய். உன் ஊரான தாள்ள பாக்கத்துக்கே போய் அங்குள்ள சென்ன கேசவப் பெருமாளை தினமும் வழிபட்டு வா. உன் வம்சத்தில் இன்னும் மூன்று தலைமுறைகள் தாண்டிப் பிறக்கப்போகும் ஒருவன் பரம பாகவதனாக விளங்கி உங்கள் குலத்துக்கே பெரும் புகழ் சேர்ப்பான்’’ என்றார்.

அந்த வம்ச வித்துதான் அன்னமாச்சார்யா. தங்களுக்குப் பிறக்கப்போவது தெய்வ அருள்பெற்ற ஒரு குழந்தைதான் என்பதை ஓர் அபூர்வ நிகழ்ச்சியின் மூலம் அறிய வந்து சிலிர்த்துப்போனார்கள் அன்னமாச்சார்யாவின் பெற்றோர்.

திருமணமாகி சில வருடங்களாகியும் குழந்தைப்பேறு இல்லாத தம்பதியான நாராயணசூரியும் லக்கமம்பாவும் மன வருத்தத்துடன் திருப்பதிக்குச் சென்றார்கள். மலையேறி வேங்கடவனை தரிசனம் செய்தார்கள். அவர் சந்நிதியில் மனம் உருகி வேண்டிக்கொண்டார்கள். அன்றிரவு திருமலையிலேயே தங்கினார்கள்.  அப்போது அவர்களது கனவில் இறைவன் நந்தகத்தின் வடிவில் தோன்றினார்.

திருமாலின் ஐந்து ஆயுதங்கள் என்று சங்கு (பாஞ்சஜன்யம்), சக்கரம் (சுதர்ஸனம்), கதை (கௌமோதகி கதா), வில் (சார்ங்கம்), கத்தி (நந்தகம்) ஆகியவற்றைக் குறிப்பிடுவார்கள்.  இவற்றில் நந்தகம் என்று அழைக்கப்படும் அவரது கத்தியின் அம்சமாக அவர்களுக்கு ஒரு மகன் பிறப்பான் என்று அருளினார் ஸ்ரீவேங்கடேஸ்வரர். (பொய்கையாழ்வார், பாஞ்சஜன்யம் என்ற சங்கின் அவதாரமாகக் கருதப்படுகிறார்).

ஏதோ ஒருவருக்கு வந்த கனவு என்றால், மனதின் ஏக்கம் கனவாக வெளிப்பட்டு விட்டது என்று கூறலாம். ஆனால், தம்பதியர் இருவருக்கும் ஒருசேர, ஒரே இரவில் மேற்படி கனவு வந்ததில், அவர்கள் மிகவும் ஆனந்தமடைந்தார்கள்.  குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்குக் குழந்தை பிறப்பதே பெரும் உற்சாகம்.  அதுவும் தெய்வ அருள் பெற்ற குழந்தை என்றால், அந்த மகிழ்ச்சிக்கு எல்லை ஏது?  உற்சாக வெள்ளத்தில் மிதந்தபடி தாள்ளபாக்கம் வந்து சேர்ந்தார்கள்.

வைசாக மாதம், விசாக நட்சத்திரத்தில் அழகானதோர் ஆண் குழந்தை பிறந்தது.  `அன்னமய்யா' என்று அந்தக் குழந்தைக்குப் பெயர் சூட்டினார்கள்.  அன்னம் என்றால் உணவு என்று பொருள். எனினும், இது திருமாலின் பெயரும்கூட. விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திரத்தில் `அன்னம்' என்ற பெயர் இடம்பெறுகிறது.

தமிழ் இலக்கியத்தில் `அன்னம்' என்பது பாலையும் நீரையும் பிரித்தறியும் திறமை படைத்த பறவை. அன்னமாச்சார்யாவைப் பொறுத்தவரை, பால் என்பது வேங்கடவன் மட்டும்தான். மற்ற யாவும் நீர்.

அன்னமாச்சார்யா பிறந்த வருடம் குறித்து இருவேறு கருத்துகள் உள்ளன. என்றாலும், பெரும்பாலோரின் கருத்துபடியும் தாமிரச் செப்பேடுகளின்படியும் அவர் 1408-ல் பிறந்ததாக அறிகிறோம்.

குழந்தைப் பருவத்திலேயே அன்னமய்யா வுக்கு வேங்கடேசப் பெருமாளின் மீது பக்தி அதிகமாக இருந்தது. காரணம், அவருக்கு உணவு ஊட்டும்போதே வேங்கடவனின் சிறப்புகளைக் கதை கதையாகக் கூறி, பக்தி உணர்வையும் சேர்த்தே ஊட்டினார் அவரின் தாய். தூங்க வைக்கும்போதுகூட ஏழுமலையான் தாலாட்டுதான்.

ஐந்து வயதானபோது அன்னமய்யாவுக்கு உபநயனம் செய்துவைத்தார்கள். அது ஒரு கூட்டுக் குடும்பம்.  சின்னச் சின்ன வேலை களைச் சிறியவர்களிடம் ஒப்படைப்பார்கள். இந்த வகை வேலைகளைச் செய்ய அன்னமய்யாவுக்குப் பிடிக்கவில்லை. அவர் இந்த வேலைகளைச் செய்யாமல் தம்புராவும் கையுமாக பஜனைப் பாடல்களைப் பாடிக் கொண்டிருப்பது பெரியவர்களுக்குப்  பிடிக்கவில்லை.

ஒருநாள், ஆடு மாடுகளுக்குப் போடுவதற் காகப் புல் தேவைப்பட்டது. ``காட்டுக்குப் போய் புல் அறுத்துக்கொண்டு வா'' என்றனர் பெரியவர்கள். அப்படிப் புல்லை அறுத்த போது, விரலை வெட்டிக்கொண்டான் சிறுவன் அன்னமய்யா.  நினைவு முழுவதும் திருமாலைக் குறித்தே இருந்ததனால் ஏற்பட்ட விபரீதம் இது.  விரலில் ரத்தம் கொட்டியது.  இதைப் பார்த்துக்கொண்டே இருந்த அன்னமய்யா, பதறவோ துடிதுடிக்கவோ இல்லை. மாறாக, உலக வாழ்க்கையில் அவருக்கு ஒரு விரக்தி ஏற்பட்டது. பக்திப் பாதையில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்வதற்கு வீட்டுப் பெரியவர்கள் தடையாக இருக்கிறார்களே என்கிற விரக்தி.

அப்போது  பக்தர்கள் குழு ஒன்று வேங்கடேசப் பெருமாளின் புகழைப் பாடியபடி, திருப்பதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.  கையிலிருந்த அரிவாளைக் கீழே வீசினார் அன்னமய்யா. தன்னை மறந்த பரவச நிலையில் அவரும் அந்தக் குழுவோடு சேர்ந்துகொண்டார். அவர் வாழ்வு ஒரு புதிய திசையைக் கண்டது.  அவரது வழித்தோன்றல் களுக்கும் ஒரு புதிய திசையைக் காண்பித்தது.

அந்தக் கால வழக்கப்படி திருப்பதியை அடைந்தவுடன் அந்த பஜனைக் குழுவினர், `கங்கம்மா' என்ற எல்லைக்காவல் தெய்வத்துக்குப் பூஜை செய்து வழிபட்டார்கள்.  அப்போது அன்னமய்யாவின் கண்களில் திருமலை தென்பட்டது. பிரமித்துப் போனார்.  உடலெல்லாம் ஆனந்த நடுக்கம். தனது வாழ்க்கையின் இலக்கு எது என்று புரிந்துபோனது அவருக்கு.

அங்கிருந்து கிளம்பிய யாத்ரீகர்கள் குழு, திருமலையின் அடிவாரமான அலிப்பிரியை அடைந்தது. மற்றவர்களுக்கு வேகமாக நடந்து பழக்கம். விறுவிறுவெனச் சென்று விட்டனர். அன்னமய்யாவுக்குப் பசியும் களைப்பும் ஏற்பட, அருகிலிருந்த ஒரு பாறையின் மேல் படுத்துக் கொண்டான். உறக்கம் கண்களைச் சுற்றியது.

அப்போது ஒரு பெண்மணி அன்னமய்யாவை அணுகினார். அவனுக்குத் தன் கையால் உணவூட்டினார். ‘`இந்தக் குன்று சாளக்கிராமக் கற்களால் ஆனது.  இதன்மீது காலணிகளுடன் நடக்கக்கூடாது’’ என்றார். பிறகு குன்றின் மீது எப்படிச் சென்றால் திருமலையை அடையலாம் என்று வழிகாட்டிவிட்டு சட்டென மறைந்தார். வந்தது பத்மாவதித் தாயார்தான் என்பதை உணர்ந்துகொண்ட அன்னமய்யாவின் நெஞ்சில் பக்தி ஊற்றுப் பெருக்கெடுத்தது.  தனது காலணிகளை வீசி எறிந்தார்.  பின்பு,  நூறு பாடல்கள் கொண்ட ஒரு சிறு காவியத்தை அப்போதே இயற்றினார்.  அன்னை பத்மாவதியின் கருணையைப் புகழும் பாடல்கள் அவை. என்றாலும் முடிவில் ‘எல்லாப் புகழும் ஸ்ரீவேங்கடேசப் பெருமாளுக்கே’ என்றார். அதனால் அது `ஸ்ரீவேங்கடேஸ்வர சதகமு’ என்ற பெயரில்தான் விளங்குகிறது. தனது வாழ்நாள் முழுவதும் இப்படி அனைத்திலுமே  வேங்கடேஸ்வரரைக் கண்டவர் அன்னமய்யா. எனினும்,  பிற மதங்களை, பிற மார்க்கங்களை அவர் ஒருபோதும் குறை கூறியதில்லை. தனது பல பாடல்களில், `நீங்கள் யாரை வேண்டுமானாலும் துதியுங்கள். அது தானாக ஸ்ரீவேங்கடேஸ் வரரைத்தான் அடையும்’ என்கிறார்.

அன்னமய்யா, திருமலையை அடைந்து வெங்கடாசலபதியின் வடிவைப் பார்த்து மெய்ம்மறந்து பாடி இன்பமுற்றதற்கு அடுத்த நாளே, அற்புதமான ஓர் அனுபவம் காத்திருந்தது.

- தரிசிப்போம்...

(15.2.2004 மற்றும் 22.2.2004 ஆனந்தவிகடன் இதழ்களில் இருந்து..)

குருவே சரணம் - அன்னமாச்சார்யா

செப்பேடுகளில் பாடல்கள்!

செப்பேட்டில் செதுக்கப்பட்ட அன்னமாச்சார்யாவின் பாடல்களின் நகல்கள், திருமலைக் கோயிலில் இன்னமும் உள்ளன. திருவேங்கடவனைத் தரிசனம் செய்து வலம் வரும்போது அவரது புகழ்மிக்க பெரிய காணிக்கை உண்டியல் உள்ளதல்லவா... அதற்கு எதிர்ப்புறமாக யோக நரசிம்மர் சந்நிதிக்கருகே உள்ள கருவூலமொன்றில் அந்தச் செப்பேடுகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவரது பாடல்கள் அடங்கிய வேறு சில செப்பேடுகள் அகோபிலம், ஸ்ரீரங்கம், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில்கூட உள்ளன.

கடவுளின் அருளைப் பெறுவது எப்படி?

குருவே சரணம் - அன்னமாச்சார்யாஅன்னமாச்சார்யாவின் பிரபல பாடல்களில் ஒன்றான ‘பாவமுலோன பாஹ்ய முனந்தனு கோவிந்த கோவிந்த அனி கொலுவவோ மனஸா’ என்பது, ‘கோவிந்தனிடம் சரணடைந்துவிடு மனமே’ என்று உருகுகிறது.

`கிருத யுகத்தில் தியானத்தின் மூலமாகவும் திரேதா யுகத்தில் யாகங்கள் மூலமாகவும் துவாபர யுகத்தில் வழிபாடு செய்வதன் மூலமாகவும் பெறக்கூடிய திருமாலின் அருளை, கலியுகத்தில் அவருடைய சிறப்புகளைப் பாடுவதன் மூலமாகவே அடைய முடியும்' என்கிறார் அன்னமாச்சார்யா.

`அடிமரம் இருக்கும்போது எதற்காக ஒருவன் இலைகளுக்குத் தண்ணீரை எடுத்துச் செல்ல வேண்டும். வேரில் நீர் ஊற்றினால் அது தானாக மரம் முழுவதும் பரவுமே. அதுபோல் இறைவா, நீ என் இதயத்தில் குடிகொண்டிருக்கும்போது நான் ஏன் மற்ற பொருள்கள் குறித்து அக்கறை கொள்ள வேண்டும்?' - இப்படி ஒரு பாடலை இயற்றிய அன்னமாச்சார்யா, `கடவுளின்  அருளைப் பெற மிக எளிதான வழி அவரைத் தஞ்சமடைவதுதான்' என்கிறார்.