
அன்று தந்தது இன்று கிடைத்தது..!நிவேதிதா, ஓவியங்கள்: ம.செ
பொறையுடைய பூமிநீ ரானாய் போற்றி
பூதப் படையாள் புனிதா போற்றி
நிறையுடைய நெஞ்சின் இடையாய் போற்றி
நீங்காதென் னுள்ளத் திருந்தாய் போற்றி
மறையுடைய வேதம் விரித்தாய் போற்றி
வானோர் வணங்கப் படுவாய் போற்றி
- போற்றி திருத்தாண்டகம்
காஞ்சிப் பெரியவரிடம் அளவற்ற பக்தி கொண்டவர் கடம் வித்வான் விநாயக்ராம். அவரும் சரி, அவருடைய மனைவியும் சரி... மகா பெரியவாளைத் தரிசித்து வழிபடுவதைத் தாங்கள் பெற்ற பேறாகவே கருதினார்கள்.
ஒருமுறை, வயலின் வித்வான் எல்.சுப்பிரமணியம் மற்றும் ஜாகிர்ஹுசேன் ஆகியோருடன் விநாயக்ராமும் ஒரு கச்சேரிக்காக ஏதென்ஸ் செல்லவேண்டி இருந்தது. எல்.சுப்பிரமணியமும் ஜாகிர்ஹுசேனும் லண்டனில் ஒரு கச்சேரியை முடித்துக்கொண்டு ஏதென்ஸ் வருவதென்றும், விநாயக்ராம் நேராக ஏதென்ஸ் செல்வது என்றும் முடிவானது.
அப்படியே விநாயக்ராம் ஏதென்ஸுக்குப் புறப்பட்டுச் சென்றார். ஏதென்ஸில் தனக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த ஹோட்டல் அறைக்குச் சென்றவர், பொழுது போகாமல் இருக்கவே கடம் வாசிக்கலாம் என்று நினைத்தார். கடம் வைக்கப் பட்டிருந்த பெட்டியைத் திறந்து பார்த்தவர் அதிர்ந்து போனார். பெட்டியில் வைக்கப் பட்டிருந்த கடம் தூள்தூளாக உடைந்திருந்தது.

‘வேறு கடம் எதுவும் இங்கே கிடைக்காதே’ என்று நினைத்த விநாயக்ராம் கதறி அழுதுவிட்டார். சற்றைக்கெல்லாம் சுதாரித்துக்கொண்டு தன் மனைவிக்குப் போன் செய்து, ‘‘கடம் உடைந்துவிட்டது. என்ன செய்வது என்று தெரிய வில்லை. நான் இந்தியாவுக்குப் புறப்பட்டு வந்துவிடுகிறேன்’’ என்றார்.
அவருடைய மனைவி, ‘‘அப்படிச் சொல்லாதீர்கள். பெரியவா நம்மைக் காப்பாற்றுவார்’’ என்று ஆறுதலும் தைரியமும் கூறினார். ஆனால், விநாயக்ராமுக்கு மனைவியின் வார்த்தைகள் நம்பிக்கை தரவில்லை. ‘‘இந்த ஊரில் கடம் கிடைப்பது கஷ்டம். நான் ஊருக்குத்தான் திரும்ப வேண்டும்’’ என்றார்.
அவர் மனைவி விடவில்லை. “ஏதாவது அதிசயம் நடக்கும் பாருங்கள். பெரியவா மேலே நம்பிக்கையுடன் விடாமல் பிரார்த் தனை செய்யுங்கள்...” என்று மறுபடியும் சமாதானம் செய்தார் மனைவி.
விநாயக்ராமோ, “நீ தெரியாமல் பேசுகிறாய். இந்த இடத்தில் பானை கூடக் கிடைக்காது. கச்சேரி எப்படிப் பண்ண முடியும்? நான் வந்துவிடுகிறேன்...” என்று பிடிவாதமாகக் கூறினார். அதற்குமேல் அவரை வற்புறுத்த விரும்பாத மனைவி, “எனக்காக ஒரே ஒருநாள் பொறுமையாக இருங்கள். நான் இப்போதே காஞ்சிபுரம் சென்று பெரியவாளிடம் நின்று அழுகிறேன். எல்லாம் சரியாகி விடுமென்று நம்புகிறேன்...
நாளைக்கு போன் பண்ணுங்கள்!” என்று சொல்லி போனை வைத்துவிட்டார்.
சொன்னபடியே அவர் காஞ்சிபுரம் சென்று, பெரியவாளைத் தரிசித்து வருத்தத்துடன் முறையிட்டார்.

“உங்களைத்தான் நம்பியிருக்கிறோம்... கைவிட்டுவிடாதீர்கள்!” என்று சொல்லிவிட்டுத் திரும்பச் செல்லும்வேளையில், பெரியவா ஒரு மட்டைத் தேங்காயை அவரை நோக்கி உருட்டி விட்டார். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. வீடு திரும்பினார். கணவரிடமிருந்து மறுபடியும் போன் வருமே... என்ன சொல்வது என்று குழம்பித் தவித்தார்.
அதற்குள் விநாயக்ராம் லண்டனுக்கு போன்செய்து, நிலைமையை எடுத்துச் சொல்லி, தான் ஊருக்குத் திரும்பிவிடுவதாகக் கூறினார்.
“அதை மட்டும் செய்துவிடாதீர்கள். கச்சேரி நடக்கவில்லையென்றால் மீண்டும் ஏதென்ஸ் பக்கம் வர முடியாது. ஏதாவது வாத்தியத்தை வாசியுங்கள், பயப்படாதீர்கள்!” என்று எச்சரித்தார்கள்.
அதற்கு மேல் ஊருக்கும் திரும்ப முடியாமல், பெரியவா படத்தை எடுத்து வைத்துக் கொண்டு, சுற்றிச்சுற்றிப் பிரார்த்தனை பண்ணிக்கொண்டே இருந்தார் விநாயக்ராம்.
அடுத்த நாள், லண்டன் சென்றிருந்தவர்கள் ஏதென்ஸ் திரும்பினர். அவர்கள் கையில் ஒரு பெரிய மூட்டை இருந்தது. அது என்ன என்று ஆச்சர்யத்துடன் பார்த்த விநாயக்ராமுக்கு தன் கண்களையே நம்பமுடியவில்லை. மூட்டையைப் பிரித்தால் அதற்குள் ஒரு கடம் இருந்தது.
அமிர்தமே கிடைத்ததுபோல் துள்ளிக் குதித்தார் விநாயக்ராம். எப்படி இது சாத்தியமாயிற்று?!
ஆங்கிலேயர் ஒருவர் விநாயக்ராமுக்கு எழுதிக் கொடுத்திருந்த கடிதத்தை நீட்டி, “இதைப் படித்துப் பார்!” என்றார் சுப்பிர மணியம்.
அந்தக் கடிதத்தின் மற்ற பகுதிகளை விடவும் விநாயக்ராமின் பார்வையில் கடிதத்தின் கடைசியில் இருந்த, ‘நீ கும்பிடும் கடவுள் ஒருநாளும் உன்னைக் கைவிடமாட்டார்’ என்று எழுதப்பட்டிருந்தது.
“நாம் கும்பிடும் தெய்வம், பெரியவா மீது எனக்கே கொஞ்சம் அவநம்பிக்கை இருந்தபோது, யாரோ ஓர் ஆங்கிலேயர் எவ்வளவு நம்பிக்கையுடன் பேசுகிறார்!” என்று வியந்தார்.
எப்படி நடந்தது இந்த அதிசயம்?

பின்னால் நடக்கப்போவதை முன்கூட்டியே உணர்ந்தவராக மகா பெரியவா செய்த ஏற்பாடு அது. நடந்தது இதுதான்...
கடம் இல்லாமல் விநாயக்ராம் தவித்ததைப் பார்த்த வயலின் சுப்பிரமணியம், லண்டனில் பலரிடமும், ``கடம் கிடைக்குமா?” என்று கேட்டிருக்கிறார். அப்போது ஒருவர் குறிப்பிட்ட ஓர் ஆங்கிலேயர் இருக்கும் இடம் சொல்லி... ‘அவரிடம் சில இந்திய இசைக் கருவிகள் இருக்கின்றன. போய்ப் பாருங்கள்’ என்று சொல்லவே, அங்கே போயிருக்கிறார்கள். வீட்டுக்குள் நுழைந்த வுடன் அவர்கள் கண்ணில்பட்டது கடம் தான். அதைப் பார்த்ததுமே தெய்வமே தரிசனம் கொடுப்பது போல் இருந்தது அவர்களுக்கு. உடனே, அதை வைத்திருந் தவரிடம் நிலைமையை விளக்கி, அந்த கடத்தைத் தங்களுக்குத் தர வேண்டும் என்றும், அதற்கு உரிய விலையைத் தருவதாகவும் கூறினார்கள்.
அந்த ஆங்கிலேயரோ, “நான் ஒருவருக்கும் கொடுக்க மாட்டேன். இதை ஒருவர் அவரது நினைவாக எனக்கு அன்பளிப்பாகக் கொடுத் தார். அவரிடம் நான், இதை எக்காரணம் கொண்டும் ஒருவருக்கும் தர மாட்டேன் என்றும், பத்திரமாகப் பாதுகாப்பேன் என்றும் வாக்குக் கொடுத்திருக்கிறேன், போய் வாருங்கள்!” என்று கண்டிப்பாக மறுத்துவிட்டார்.
“யாரப்பா அவர்?” என்று ஆவலுடன் கேட்டனர்.
‘‘சுமார் 18 வருஷத்துக்கு முன்பு இங்கே எம்.எஸ். அம்மா கச்சேரிக்கு வந்திருந்தபோது உடன் வந்த கடம் வித்வான் விநாயக்ராம்தான், நான் விரும்பிக் கேட்டதால் இந்த கடத்தை எனக்குக் கொடுத்தார்’’ என்று அவர் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, “ஐயா! அதே விநாயக்ராம்தான் இப்போது ஏதென்ஸில் எங்களுடன் கச்சேரி செய்ய ஒரு கடம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக் கிறார். அவருக்கு உங்கள் உதவி இப்போது மிக மிக முக்கியம்!” என்று விளக்கினார்கள்.
உடனே கடத்தையும் கூடவே விநாயக் ராமுக்கு ஒரு கடிதத்தையும் ஆங்கிலேயர் அவர்களிடம் கொடுத்துவிட்டார்.
சுமார் 18 வருடங்களுக்கு முன் விநாயக்ராம் லண்டனில் கச்சேரி செய்யப் போனபோது அந்த ஆங்கிலேயருக்கு அன்பளிப்பாகக் கொடுத்த கடம்தான், இப்போது தக்க சமயத்தில் பெரியவா அனுக்கிரகமாக அவர் கைக்கு வந்தது. எத்தனையோ ஆண்டு களுக்கு முன்பே தன் பக்தர், இப்படி ஒருநாள் உடைந்த கடத்தைப் பார்த்து மனமுடைந்து போய்விடுவாரென்ற தீர்க்க தரிசனத்துடன்தான் மகா பெரியவா அந்த ஏற்பாட்டைச் செய்திருந்தார் போலும்!
- திருவருள் தொடரும்