Published:Updated:

கோயில்களின் கோயில்

கோயில்களின் கோயில்
பிரீமியம் ஸ்டோரி
கோயில்களின் கோயில்

மாமல்லபுரம் சிற்பக்கலைக் கல்லூரி வைரவிழா சிறப்புக் கட்டுரைஎஸ்.கண்ணன் கோபாலன், பா.ஜெயவேல், படங்கள்: தே.அசோக்குமார்

கோயில்களின் கோயில்

மாமல்லபுரம் சிற்பக்கலைக் கல்லூரி வைரவிழா சிறப்புக் கட்டுரைஎஸ்.கண்ணன் கோபாலன், பா.ஜெயவேல், படங்கள்: தே.அசோக்குமார்

Published:Updated:
கோயில்களின் கோயில்
பிரீமியம் ஸ்டோரி
கோயில்களின் கோயில்

லை - கவலைகளை மறக்கச்செய்வது. அந்தக் கலையே தெய்விகத்துடன் இணைந்திருந்தால், அங்கே கவலை மறந்துவிடுவதுடன், மனதில் ஆனந்தமும் ஏற்படுகிறது.

கலையும் தெய்விகமும் சங்கமிக்கும் தலங்களே திருக்கோயில்கள்.

கோயில்களின் கோயில்

கலைகளில் காலத்தினால் அழியாமலும், காலங்களைக் கடந்தும் நிற்பது சிற்பக்கலை. அதற்கு உயிர்ச்சாட்சியாகத் திகழ்பவைதான் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் நம் கோயில்கள், அரண்மனைகள், கோட்டைகள், நினைவுச் சின்னங்கள் எல்லாம். அந்த வகையில் உலகையே தன் பக்கம் ஈர்க்கும் மாமல்லபுரம் சிற்பங்களின் அணிவகுப்புக்கு, கூடுதல் மரியாதை உண்டு. ஆம், சுமார் 1,400 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய உளியோசை... இன்று வரையிலும் ஓயாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும் ஒரே இடம்... பல்லவர்களின் கலைப்படைப்புகளைச் சுமந்து நிற்கும் மாமல்லபுரம் மட்டுமே.

கி.பி. 4-ம் நூற்றாண்டு வாக்கில் பல்லவர்களின் துறைமுகமாக மட்டுமே இருந்து வந்த இந்நகரம், முதலாம் நரசிம்மவர்ம பல்லவ மன்னரின் காலத்தில் இருந்துதான், அற்புதமான சிற்பங்களின் கலைக்கூடமாகவும் பரிணமிக்கத் தொடங்கியது. மாமல்லபுரத்தின் மலை தொடங்கி, கடற்கரை வரை திரும்பிய இடங்களில் எல்லாம் கலைப்படைப்புகளை பல்லவர்கள் உருவாக்கியதால், அங்கே உளிகளுக்கும் சிற்பிகளுக்கும் ஓய்வே இருக்கவில்லை. இன்றளவும் அந்த ஓசை ஓயாது ஒலித்துக் கொண்டிருக்கக் காரணம்?

நரசிம்மவர்ம பல்லவ மன்னர் மீண்டும் ஜனித்து வந்துவிட்டாரோ!

அதுதான் இல்லை. பிறகு..?

அது... தமிழக அரசால் தொடங்கப்பெற்று, நடைபெற்றுவரும் கட்டடம் மற்றும் சிற்பக்கலைக் கல்லூரிதான். உலகிலேயே மரபுச் சிற்பக் கலையைக் கற்றுக்கொடுப்பதற்கென்றே உருவாக்கப்பட்டிருக்கும் ஒரே கல்லூரி இது என்பது பெருமையிலும் பெருமை.

திராவிடச் சிற்பக்கலையின் தலைமைக் கேந்திரமாகத் திகழும் மாமல்லபுரத்தில், நம்முடைய பண்பாடு மற்றும் கலாசாரத்தின் பெருமைகளைப் பிரதிபலிக்கும் ஒப்பற்ற கலையான சிற்பக்கலையைப் பயிற்றுவிக்கும் இந்தக் கல்லூரி, 1957-ம் ஆண்டு ஒரு சிறிய இடத்தில் தொழிற்பயிற்சிக் கூடமாகத் தொடங்கப்பட்டது. இக்கல்வி நிறுவனத் தின் தேவை மற்றும் முக்கியத்துவத்தை உணர்ந்த அரசாங்கம், அடுத்தடுத்து முயற்சிகளை முன்னெடுக்க... தற்போது கிழக்குக் கடற்கரைச் சாலையில், கடலையொட்டி 28 ஏக்கர் இடத்தில் இயற்கையான மற்றும் அமைதியான சூழலில் தவமிருந்து மாணவர்கள் படிக்கும் கல்லூரியாகச் செயல்பட்டு வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உலகத்தின் மிகச்சிறந்த கலைப் படைப்புகளும், படைப்புத் திறன் மிக்க தலைசிறந்த கலைஞர்களும் கருக்கொண்டு, உருக்கொண்ட கலைக் கருவறையாக இருக்கும் இந்தக் கல்லூரி, நமது பாரம்பர்யமான கலைச் சின்னங்களும், தமிழர்தம் சிற்பக்கலை ஞானமும் மறைந்துவிடாதபடி பாதுகாத்து வருவதோடு, அடுத்தடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சேர்ப்பதையும் சேவையாகவே திறம்பட செய்து வருகிறது. இத்தகுப் பெருமை வாய்ந்த இந்தக் கோயில்களின் கோயிலுக்கு இது வைரவிழா ஆண்டு. இந்தப் பொன்னான நேரத்தில், கலை வளர்க்கும் அந்தக் கோயிலை வலம் வந்தோம்.

கோயில்களின் கோயில்

நம்மிடம் கல்லூரியின் பெருமை பேசிய சிறந்த ஓவியரும், கல்லூரியின் முன்னாள் ஆசிரியருமான திருஞானம், ‘‘எங்கள் முன்னாள் முதல்வர் வை.கணபதி ஸ்தபதி, ‘சிற்பியே சிற்பமாகிறான்’ என்று அடிக்கடி சொல்வார். ஒரு சிற்பத்தை உருவாக்கும்போது, ஒரு சிற்பியின் மனநிலை என்னவாக இருக்குமோ அதுதான் சிற்பமாக உருப்பெறும் என்பதுதான் அதன் அர்த்தம். அதாவது, ‘கல்லைக் கண்டால் நாயைக் காணோம்... நாயைக் கண்டால் கல்லைக் காணோம்’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். இது நாய்க்குச் சொல்லப்பட்ட பழமொழியல்ல... இதில் அற்புதமான சிற்பத் தொழில்நுட்பம் மறைந்திருக்கிறது. ஒரு கல்லில் படைக்கப்பட்ட நாய் சிற்பத்தைக் காணும்போது, அது நாயாகத் தெரிந்தால்தான் அது அற்புதமான படைப்பு. அப்படி இல்லாமல் கல் தெரிந்தால், அது படைப்பே இல்லை. இதையேதான்... ‘மரத்தில் மறைந்தது மாமத யானை... மரத்தை மறைத்தது மாமத யானை’ என்றும் சொல்வார்கள். இதுவும் அற்புதப் படைப்பை வலியுறுத்தும் தொழில்நுட்ப மொழிதான்.

இந்தியாவின் கோயில் கட்டுமானம் மற்றும் சிற்பக்கலை என்பவை அந்தந்தப் பகுதிக்கு ஏற்ப பலவிதமான பாணிகளில் உருவாக்கப்படுபவை. நம்முடைய தென்னகத்தின் சிற்பக்கலை பாணியை ‘திராவிட பாணி’ என்று சொல்வார்கள். இத்தகைய பாணியிலான கட்டடம், சிற்பம் மற்றும் ஓவியக்கலைகளைப் பயிற்றுவிப்பதற்காகப் பிரத்யேகமாகத் தொடங்கப்பட்டதே இக்கல்லூரி. 1957-ல் வைத்தியநாத ஸ்தபதியைத் தலைமையாகக் கொண்டு அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட இந்தச் சிற்பக்கலை தொழில் பயிலகம், பின்னர் அவருடைய மகன் வை.கணபதி ஸ்தபதியின் முயற்சியால் சிற்பக்கலைக் கல்லூரியாக உயர்ந்தது. இந்தக் கல்லூரியின் உற்பத்திப் பிரிவினரால் உருவாக்கப்பட்ட பல கலைப் படைப்புகள் வரலாற்றுச் சிறப்பு மிக்கவையாகத் திகழ்ந்து வருகின்றன. சென்னை வள்ளுவர் கோட்டம், அண்ணா நகர் வளைவு, திருவள்ளுவர் சிலை, பூம்புகார், கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை என்று சொல்லிக்கொண்டே போகலாம். அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட வெளிநாடுகளிலும் நம்முடைய பாரம்பர்யத்தையும், கலையையும் இங்கே பயின்றவர்கள்தான் பரப்பி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது’’ என்று சொன்னார்.  கல்லூரியின் வைரவிழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முடிந்து வந்த, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் ஜெ.ராஜேந்திரனிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும் கலைக்கோயிலின் வரலாறு பற்றிப் பேச ஆரம்பித்தார்.

கோயில்களின் கோயில்
கோயில்களின் கோயில்

‘‘பல்லவர்களின் அமரத்துவம் வாய்ந்த கலைப் படைப்புச் சிற்பங்கள் இங்கே இருப்பதால்தான், சிற்பக்கலை பயிற்றகத்தை அமைப்பதற்கு உகந்த இடமாக மாமல்லபுரத்தைத் தேர்வு செய்தார்கள். இங்கு படித்து பட்டயம், பட்டம் பெறுபவர்கள்தான் பிற்காலங்களில் தமிழகத்தில் உள்ள கோயில்களைப் புனரமைப்பு செய்பவர்களாகவும், புதிய கோயில்களை உருவாக்குபவர்களாகவும் தகுதி பெறுகிறார்கள்.

1957-ல் நான்காண்டுகளுக்கான பட்டயப் படிப்புகளுடன்தான் தொடங்கப்பட்டது. பின்னர், 1975-ல் தொழில் மற்றும் வர்த்தகத் துறையின்கீழ் தொழில்நுட்பக் கல்வியாக மாற்றப்பட்டது. குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. புகுமுக பட்டயப் படிப்பு இரண்டு வருடங்கள், பட்டயப் படிப்பு மூன்று வருடங்கள் என்று ஐந்து வருடப் படிப்பு தொடங்கப்பட்டது. மரபு சார்ந்த கோயில் கட்டடக்கலை, கல் சிற்பம், மரச் சிற்பம், உலோகச் சிற்பம், சுதைச் சிற்பம், வண்ணச் சிற்பம் போன்ற பிரிவுகள் ஒன்றில் ஏதேனும் ஒன்றை எடுத்துப் படிக்கலாம்.

1981-ம் வருடம் சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டு, பட்டப்படிப்பு இளங்கலை (கோயில் கட்டடக் கலை) - [Temple Architecture] தொடங்கப்பட்டு கல்லூரியாகத் தரம் உயர்த்தப்பட்டது. பின்னர், மேலும் நான்கு புதிய பட்டப்படிப்புகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. மூன்று வருடங்களுக்கு முன்பு கவின்கலைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டதும், இந்தக் கல்லூரியும் அதன் உறுப்புக் கல்லூரியாக மாற்றப்பட்டது.

தற்போது, ப்ளஸ் டூ படித்தவர்கள் மட்டுமே இக்கல்லூரியில் சேர்ந்து பயில முடியும். அவர்களுக்காக பி.எஃப்.ஏ மற்றும் பி.டெக் நான்காண்டு பட்டப்படிப்புகள் இங்கே பயிற்றுவிக்கப்படுகின்றன. இதில் மொத்தம் 58 பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. பாடங்களுடன் ஓவியம் மற்றும் செய்முறைப்பயிற்சி முக்கியமாக வழங்கப்படுகிறது. 60 ஆண்டு கால பாரம்பர்யம் கொண்ட இந்தக் கல்லூரியில் பயின்ற எண்ணற்ற கலைஞர்கள், உலகம் முழுவதும் நம்முடைய பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் சிற்பக் கலைக்கு அளப்பரிய தொண்டு செய்து வருகிறார்கள்’’ என்று சொன்னார் முதல்வர்.

அடுத்து கல்லூரியின் முன்னாள் மாணவரும், கல்லூரி வைரவிழாக் குழு உறுப்பினர்களில் ஒருவருமான கீர்த்தி வர்மன் ஸ்தபதியைச் சந்தித்தோம். அவர் நம்மிடம், ‘‘இக்கல்லூரியைத் தொடங்கியதன் நோக்கமே நமது சிற்பக்கலையைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான். இங்கே படிப்பவர்கள் இந்துமதக் கோட்பாடுகள், தத்துவம், அழகியல், சாஸ்திரங்கள், வானியல், மண்ணியல், இசை, நடனம், சம்ஸ்கிருதம், ஆகமம், வாஸ்து, கல்வெட்டியல், அறநிலையத் துறைச் சட்டங்கள், பொறியியல், தமிழ், ஆங்கிலம், சிற்ப சாஸ்திரம், உலகச் சிற்பக்கலை வரலாறு என்று அனைத்துத் துறைகளிலும் பயிற்சி பெற்றவர்களாக விளங்குகிறார்கள்.

உலக அளவில் சிற்பங்களை உருவாக்குவது என்பது அற்புதமான கலையாக இருக்கிறது. மேற்கத்திய சிற்பக்கலையைப் பொறுத்தவரை உள்ளது உள்ளபடி உருவாக்குவது என்பார்கள். அதாவது, மனிதர்களை, விலங்குகளை இன்ன பிறவற்றை அப்படி அப்படியே தத்ரூபமாக வடித்தெடுப்பார்கள். ஆனால், நம்முடைய இந்திய பாணி, குறிப்பாக தென்னக பாணி என்பது தெய்வங்களுக்கு என்று தனித்தனி தாளமானங் களை, அதாவது அளவுகளை உட்கொண்டது. சாஸ்திரங்களில் கூறப் பட்டிருக்கும் இந்த அளவுகளின்படியேதான் கடவுள் சிற்பங்களை உருவாக்க வேண்டும். அப்போதுதான், அந்தச் சிற்பங்கள் தெய்வாம்சம் பொருந்தியவையாகவும், சக்தி கொண்டவையாகவும் விளங்கும். கர்ப்பக்கிரகம் உள்ளிட்ட இடங்களில் இத்தகைய சிற்பங்களைத்தான் நிறுவி நாம் வழிபடவும் முடியும்.

இத்தகைய சிற்பங்களை ஏனோதானோ என்று வடித்துவிட முடியாது. விநாயகருக்கு ஓர் அளவு, முருகனுக்கு ஓர் அளவு, தெய்வானைக்கு ஓர் அளவு என்று ஒவ்வொரு தெய்வத்துக்கும் குறிப்பிட்ட தாளமானம் உண்டு. அதேபோல விலங்குகள், பறவைகள் என்று அனைத்துக்குமே சிற்ப அளவீடுகள் உள்ளன.

கோயில்களையும் இஷ்டம் போல கட்டக் கூடாது... கட்டவும் முடியாது. அதற்கென்று ஆகம, சிற்ப சாஸ்திர நுணுக்கங்கள் நிறையவே உள்ளன. அந்த அளவீடுகளின்படிதான் ஒவ்வொரு கோயிலும் கட்டப்பட்டுள்ளன. ஓர் அரசர், கோயில் கட்டப்போகிறார் என்றால், கோயிலில் பிரதிஷ்டை செய்யப்போகும் தெய்வத்துக்கு உரிய நட்சத்திரம், அந்த ஊரின் நட்சத்திரம், கோயில் கட்டப் போகும் அரசரின் நட்சத்திரம் என்று இந்த மூன்றுக்கும் பொருத்தம் பார்த்து ஓர் அளவை நிர்ணயிப்பார்கள்.

அந்த அளவில்தான் கோயில் கட்டப்படும். தஞ்சை பெரிய கோயிலுக்கென்று தனித்த அளவுகள் உள்ளன. அதேபோல, திருவண்ணாமலை கோயிலுக்கென்றும் தனித்த அளவுகள் உள்ளன. இதுபோன்ற
அளவுகளைப் பின்பற்றி மற்ற மற்ற ஊர்களில் கோயில்களை அமைத்துள்ளனர். இன்றளவும் இதுபோன்ற அளவுகளைப் பயன் படுத்திதான் கோயில்களைக் கட்டி வருகிறோம். திருப்பணி செய்வதாக இருந்தாலும், இந்த சாஸ்திர அளவுகளை மீறக் கூடாது என்பது மரபு.

கோயில்களின் கோயில்

வெற்றி, நற்செயல், புகழ் என்று ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒவ்வொரு கோயிலைக் கட்டினார்கள்.போரில் வெற்றி பெறுவதற்கு ஒரு கோயில், நன்றாகப் படிப்பதற்கு ஓர் ஆலயம், குழந்தை பாக்கியத்துக்காக ஒரு கோயில் என்று ஒவ்வொரு பலனை உத்தேசித்து, அதற்கேற்ப கோயில்களைக் கட்டினார்கள். கோயிலில் உள்ள மூலவரின் சிலையை அளவிட்டாலே, அந்தக் கோயிலின் மொத்த அமைப்பையும் கணித்துச் சொல்லி விடலாம். அந்த அளவுக்கு நுணுக்கம் கொண்டது... திராவிட பாணி கட்டட மற்றும் சிற்பக்கலை. இதன்படிதான் அக்கால மன்னர்கள் கோயில்களை எழுப்பினார்கள்’’ என்று சொன்ன கீர்த்திவர்மன், அடுத்தடுத்து அடுக்கிய தகவல்கள் நம்மை ஆச்சர்யத்தின் உச்சிக்கே கொண்டு சென்றன.

‘‘அதிகாலைச் சூரியன், சிவலிங்கத்தின் மீது பட்டொளி பாய்ச்சும் அதிசயத்தை இன்றளவிலும் தமிழகத்தின் முக்கியமான சில கோயில்களில் காண முடியும். இது பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று மட்டும் நடக்கும். எல்லா நாள்களுமே சூரியன் உதித்தாலும் இந்த உத்திர நட்சத்திர நாள்களையொட்டிய இரண்டு, மூன்று நாள்களுக்கு மட்டுமே சிவனை, சூரியக் கதிர்கள் தழுவுவதன் சூட்சுமம்... கட்டடக் கலையின் நுணுக்கத்தில்தான் இருக்கிறது. அந்த அளவுக்குப் பூமியின் சுழற்சியைக் கணித்து கோயில்களை வடிவமைத்துள்ளனர். இது ஓர் உதாரணம்தான். கோயில் கட்டடக் கலை மற்றும் சிற்பக்கலையின் பெருமை பேசுவதற்கு இதுபோல காளையார் கோயில் கற்சங்கிலி, ஆவுடையார் கோயில் கொடுங்கை, கிருஷ்ணாபுரம் சிற்பங்கள், தஞ்சாவூர் பெரிய கோயில் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

கோயில்களுக்கு என்றே இருக்கும் விஞ்ஞானத்தின் அடிப்படையில்தான் இதையெல்லாம் உருவாக்க முடியும். அத்தகைய விஞ்ஞானத்தை இங்கேதான் கற்க முடியும். இங்கே படிக்கும் மாணவர்களுக்கு இப்படிப்பட்ட நுணுக்கங்கள்தான் பயிற்றுவிக்கப்படுகிறது. இங்கே படித்தவர்கள் வெளியில் சென்று சிறந்த சிற்பிகளாக, கட்டடக்கலைஞர்களாக பெயரும் புகழும் பெற்று விளங்குகிறார்கள். நம்முடைய தொன்மையான சிற்ப மற்றும் கட்டடக் கலைச் சிறப்பையும் விளக்கமுறச் செய்கிறார்கள்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகக் கட்டடம் முழுவதையும் இந்தக் கல்லூரிதான் வடிவமைத்துக் கட்டிக்கொடுத்தது. மேலும் இலங்கையில் உள்ள திருக்கேதீஸ்வரம் சிவன் கோயில் உள்ளிட்ட பல திருப்பணிகளில் மாமல்லபுரம் சிற்பக்கலைக் கல்லூரியின் பங்களிப்பு இருக்கிறது. இந்தக் கல்லூரியில் பயின்று, சொந்தமாகச் சிற்பக்கூடம் வைத்து சிற்பங்களைச் செய்துவரும் சிற்பிகள் உலக அளவில் தலைசிறந்த சிற்பங்களை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள். நம்முடைய சிற்பக் கல்லூரியில் படித்த சிற்பிகள் பலரும் ஹாலந்து, போர்ச்சுகல், ஜெர்மன், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் புகழ்பெற்று இருக்கிறார்கள்.

தற்போது ஆட்டோகேட், 3டி அனிமேஷன் போன்ற நுட்பங்களையும் இங்கே சொல்லிக் கொடுக்கிறார்கள். இங்கே படித்தவர்கள் `எந்திரன்' உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு கிராஃபிக்ஸ் வேலைகளையும், செய்து கொடுத்திருக்கிறார்கள். ராமாநுஜரின் 1,000-வது ஆண்டு விழாவை 1,000 கோடி ரூபாய் செலவில் ஹைதராபாத்தில் கொண்டாடுகிறார்கள். இங்கு படிக்கும் ஏழு மாணவர்கள்தான் அதற்கான 3டி வேலைகளைச் செய்துகொடுக்கிறார்கள்’’ என்று முகத்தில் பெருமிதம் மிளிரக் கூறினார் கீர்த்திவர்மன்.

கோயில்களின் கோயில்

இக்கால மாணவர்கள் எல்லாம் மரபுக் கட்டடம் மற்றும் சிற்பக்கலை எனும் இதுபோன்ற பாடங்களை லயித்துப் படிப்பார்களா என்கிற சந்தேகம் எட்டிப் பார்க்க, மாணவர்கள் சிலரிடம் பேசினோம்.
மரபுக் கட்டடக் கலையில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் வான்நிலவன், ‘‘என்னோட சொந்த ஊர் மணப்பாறை. பி.இ. மெக்கானிக்கல் படிப்பை முடித்திருக்கிறேன். ஆனால், எனக்கு அந்தத் துறையில் விருப்பம் இல்லை. அதனால் சிற்பக்கலை படிக்க வந்துள்ளேன். எங்கள் வீட்டிலும் இதே துறையில்தான் இருக்கிறார்கள். ஆனால், அதற்காகத்தான் நானும் இத்துறைக்கு வந்துள்ளேன் என்று நினைத்துவிடாதீர்கள். எனக்கு உள்ள ஆர்வத்தால்தான் வந்துள்ளேன். சிற்பங்களை பலரும் அனுபவத்தின் பேரில் செய்துவிடுகிறார்கள். எனவே, நான் முறைப்படி கோயில் கட்டுவது பற்றி படித்து வருகிறேன். மற்ற படிப்புகளைப் போல் மனஅழுத்தம் தரக்கூடிய படிப்புகள் இங்கே இல்லை’’ என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.

மரபுக்கலையில் மூன்றாம் ஆண்டு படிக்கும் ரக்ஷனா, “என் அப்பா மரச்சிற்பங்கள் செய்வார். அதனால் என்னையும் இந்தக் கல்லூரியில் சேர்த்துவிட்டார். அப்பா சொன்னதற்காகவே இங்கே படிக்க வந்தேன். ஆனால், இங்கே வந்த பிறகு எனக்கு நமது கலையின் மீது, மதிப்பும் ஆர்வமும் அதிகரித்துவிட்டது’’ என்று பூரிப்புடன் சொன்னார்.

அவர்கள் சொன்னதில் இருந்த உண்மையை நம்மால் புரிந்துகொள்ள முடிந்தது. கோயில்களின் கோயிலாகத் திகழும் சிற்பக் கல்லூரியில் இருந்து கிளம்பிய நம் மனதில், ‘‘பெரும் செல்வமும் காலத்தால் அழியாத புகழும் தரும் சிற்பக் கலையைப் பயில்வதற்கு இன்னும் இன்னும் மாணவர்கள் முன்வர வேண்டும். நம்முடைய பண்பாடு, கலாசாரம் போன்றவற்றை காலத்துக்கும் பிரதிபலிக்கும் கலைப்படைப்புகளை உருவாக்கி, பொருளும் புகழும் பெற வேண்டும்’’ என்ற பெருவிருப்பம்தான் தோன்றியது.

கோயில்களின் கோயிலைத் தொழுதபடியே விடை பெற்றோம்.