Published:Updated:

சனங்களின் சாமிகள் - 1 - பெரியதம்புரான் [ஐவர் ராசாக்கள்]

சனங்களின் சாமிகள் - 1 - பெரியதம்புரான் [ஐவர் ராசாக்கள்]
பிரீமியம் ஸ்டோரி
சனங்களின் சாமிகள் - 1 - பெரியதம்புரான் [ஐவர் ராசாக்கள்]

அ.கா.பெருமாள், ஓவியங்கள்: ரமணன்

சனங்களின் சாமிகள் - 1 - பெரியதம்புரான் [ஐவர் ராசாக்கள்]

அ.கா.பெருமாள், ஓவியங்கள்: ரமணன்

Published:Updated:
சனங்களின் சாமிகள் - 1 - பெரியதம்புரான் [ஐவர் ராசாக்கள்]
பிரீமியம் ஸ்டோரி
சனங்களின் சாமிகள் - 1 - பெரியதம்புரான் [ஐவர் ராசாக்கள்]

செவிவழிக் கதைகள் நம் மண்ணில் ஏராளம். மனிதர்களாக நம்முடனேயே வாழ்ந்து மறைந்து, நம் மக்களால் தெய்வமாகக் கொண்டாடப்படுபவர்களின் கதைகளும் அவற்றில் அடக்கம். ஊர் - கிராமத்துக்கு ஒதுக்குப்புறமாக அல்லது ஊருக்குள்ளேயே கோயில்... அதில் ஒரு தெய்வம்... என தமிழகத்தின் பல ஊர்களில், கிராமங்களில் எத்தனையோ தெய்வங்கள், எத்தனையோ பெயர்களில் அருள்பாலிக்கிறார்கள். அவர்கள் யார், வரலாறு என்ன, எப்படி தெய்வமானார்கள்... முடிந்தவரை விரிவாகப் பேசுவோம்!

சனங்களின் சாமிகள் - 1 - பெரியதம்புரான் [ஐவர் ராசாக்கள்]

தென்றல் இதமாக வீசிக்கொண்டிருந்த மாலை நேரம். மேல் மாட உப்பரிகை. அந்த நேரத்தில் வீதியைப் பார்த்து ரசிப்பது அலாதியான அனுபவம். அது இளவரசிக்குப் பிடிக்கும். பழங்களையும் காய்கறிகளையும் கூவி விற்கும் சிறு வணிகர்கள்... மாலை சூரிய ஒளியில் காதிலும் கழுத்திலும் மூக்கிலும் ஆபரணங்கள் மின்ன கூடைகளை ஏந்திக்கொண்டு பொருள்களை வாங்கச் செல்லும் நகரப் பெண்கள்... பாதசாரிகள்... யார் மீதாவது மோதிவிடுவோமோ என்கிற துளி அச்சமுமின்றி வீதியின் குறுக்கே குதித்தோடி விளையாடும் சிறுவர்கள், சிறுமிகள்... பார்த்துக்கொண்டே இருக்கலாம். மாலைப் பொழுது அழகு. மனிதர்கள் அழகு. ஏன்... இந்தப் பிரபஞ்சமே அழகுதான். அப்போதுதான் சில பண்டாரங்கள் எதையோ சுமந்துகொண்டு போவது இளவரசியின் கண்ணில்பட்டது.

`அட.... அது என்ன ஓவியமா? இதுவல்லவா அழகு? ஓவியத்தில் வரையப்பட்டிருக்கும் முகமோ அழகுக்கெல்லாம் அழகாக அல்லவா இருக்கிறது?’ இளவரசி சேவகர்களை விரட்டினாள். அந்தப் பண்டாரங்களை அரண்மனைக்கு அழைத்துவரச் சொன்னாள். அது ஓர் இளைஞனின் ஓவியம். சுருள் கேசம், இடுப்பில் கைவைத்து நிற்கும் ஒய்யாரம், பரந்த மார்பு, அத்தனையும் சேர்ந்து அளவில்லா கம்பீரம். பார்க்கப் பார்க்க பரவசம் படுத்தியெடுத்தது இளவரசிக்கு. ஓவியமாக இருந்த இளைஞனை உயிர்ப்பொருளாக உடனே காணமாட்டோமா என நெஞ்சம் விம்மியது. தகவல் அறிந்து அரசர் வந்தார். கன்னட தேசத்தின் கண்மணியல்லவா அவர் மகள்! மகளின் முகக் குறிப்பிலேயே விருப்பத்தை அறிந்துகொண்டார். விசாரணை ஆரம்பமானது. பண்டாரங்களை விசாரித்ததில் ஓவியத்தில் காணப்பட்டவன், தென் தமிழகத்தை ஆண்ட குலசேகர பாண்டியன் என்பதை அறிந்துகொண்டார் அரசர். 

கன்னட தேசத்திலிருந்து குலசேகரனின் வள்ளியூர் கோட்டைக்குத் தூது பறந்தது. `எம் பெண்ணை மணக்கச் சம்மதமா?’ என்கிற ஒற்றைக் கேள்வியை விலாவரி தூதாக அனுப்பியிருந்தார் கன்னட அரசர். குலசேகர பாண்டியனுக்கு விருப்பமில்லை. என்னதான் அரசனாக இருந்தாலும் கன்னடன், அந்நியன், எதிரிநாட்டான். பாண்டிய நாட்டை வளைத்துப்போட நேரம் பார்த்துக் காத்திருப்பவன்.

வார்த்தைகளிலேயே தன் மறுப்பைத் தெரிவித்து, தூதைத் திருப்பி அனுப்பினான் பாண்டியன். சாதாரண மனிதர்களுக்கே நிராகரிப்பு, வலியைத் தரும் ஒன்று. தூது அனுப்பியதோ அரசன்... கன்னட தேசத்தின் தலைவன். புறக்கணிக்கக்கூடியவளா தன் மகள்? கொதித்தான்... படையெடுத்தான். குலசேகரனின் கோட்டையை முற்றுகையிட்டான். 

குலசேகர பாண்டியன், வீரத்தலைமகன். அச்சம் என்பதை அறியாதவன். அவனின் உயிர்க் கவசமாக நான்கு தம்பிகள். துணைக்கு `மன்னன்’, `மதிப்பன்’ என இரு வீராதி வீரர்கள்... இருவரும் அண்ணன், தம்பிகள். எழுவரும் இணைய, இவர்கள் சொல்படியெல்லாம் ஆடியது பாண்டியன் படை. முற்றுகையிட முடிந்த கன்னட அரசனின் படையால், மேற்கொண்டு முன்னேற முடியவில்லை. பொறுமை காத்தான்... புதுப்புதுத் திட்டங்களைத் தீட்டினான்... காத்திருந்தான். ஒருவழி புலப்பட்டது. `குலசேகரனின் பாதுகாப்பு அரணாக இருப்பவர்கள் இரு முக்கியமான மாவீரர்கள்... மன்னன், மதிப்பன். அவர்களை அழித்தால்?!’ சதித்திட்டத்தை நிறைவேற்ற ஒரு கன்னட வீரன் முன்வந்தான்.   

வீரத்தால் பலிகொள்ள முடியாத உயிரைக்கூட சில நேரங்களில், கபடு சாதித்துவிடும். அது சந்நியாசிகளையும் அடியார்களையும் மக்கள் மனதார நம்பிய காலம். அதைப் பயன்படுத்திக்கொண்டான் அந்தக் கன்னட வீரன். ஆண்டி வேடம் அணிந்தான். எளிதாகக் கோட்டைக்குள் நுழைந்தான். மாவீரன் மன்னனை நயவஞ்சகமாகச் சாய்த்தான். தலையை வெட்டி கையோடு எடுத்துச் சென்றான். மன்னனின் சகோதரன் மதிப்பன் கொதித்தான். ஆண்டி வேடம் பூண்ட கன்னட வீரனைத் தேடிப்போனான். கண்டுபிடித்து, தன் சகோதரனுக்கு நேர்ந்த கொடுமைக்குப் பலியாக, அவன் தலையை வாங்கினான். பிரச்னை அதோடு தீரவில்லை. கன்னட அரசனின் படைகள் கோட்டைக்கு வெளியே முகாமிட்டு, முற்றுகையைத் தொடர்ந்தன. `உங்கள் பலம் எங்களிடம் செல்லாது’ என்பதுபோல் கம்பீரம் காட்டி, எதிரிப் படையை வழிமறித்து நிமிர்ந்து நின்றது கோட்டை.  

ஒருநாள் கோட்டைக்கு வெளியே யாதவப் பெண் ஒருத்தி தயிர் விற்றுக்கொண்டிருந்தாள். அங்கே முகாமிட்டிருந்த கன்னடப் போர் வீரர்களில் ஒருவன் அவள் அருகே வந்தான். அவளை வார்த்தைகளால் சீண்ட ஆரம்பித்தான். பேச்சு மெள்ள மெள்ள அவள் கையிலிருந்த குவளையை நோக்கிப் போனது. அதையும் விட்டுவைக்கவில்லை அவன்... கிண்டல் அடித்தான். அவளுக்குச் சட்டென்று கோபம் வந்துவிட்டது. ``ஏய்... எதை வேண்டுமானாலும் பேசு... இந்தக் குவளையைப் பற்றிப் பேசாதே. இது என் பிரியத்துக்குரியது. இதன் மகிமையை அறிவாயோ நீ? இந்தக் குவளை ஒருமுறை கோட்டைக்கு வெளியே இருக்கும் மடையில் விழுந்துவிட்டது. `ஐயோ.. நம் பிரியத்துக்குரிய குவளை போய்விட்டது’ என்றே முடிவு செய்துவிட்டேன். அன்றைக்கு அதை நினைத்து என்னால் அழுகையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அடுத்த நாள் கோட்டைக்குள் போனேன். அங்கே இருக்கும் சிறு ஏரியில், இதே குவளை, கரையோரமாகக் கிடந்தது. என் அதிர்ஷ்டத்தை என்னவென்று சொல்வாய்?’’ என்றாள்.

இதைக் கேட்ட அந்த வீரன் அசந்துபோனான்.

அந்தப் பெண் கூறியதில் இருந்து, கோட்டைக்குள் ரகசிய மடை வழியாகத் தண்ணீர் செல்கிறது என்பதை யூகித்துக் கொண்டான். விஷயம் கன்னட அரசனின் காதுக்கும் போனது. அந்த அப்பாவிப் பெண்ணின் உதவியுடன், மடையைக் கண்டுபிடித்து அடைத்தார்கள். கோட்டைக்குள் தண்ணீர் செல்வது நின்றது. நீர்வரத்து இல்லாமல் தண்ணீர்த் தட்டுப்பாடு அதிகமானது. கோட்டையிலிருந்த வீரர்களும் பொதுமக்களும் தவித்தார்கள்.

ஒரு கட்டத்துக்கு மேல், குலசேகர பாண்டி யனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. வெளியில் இருந்து யாராவது உதவினால்தான் பிழைப்போம் என்கிற நிலை. தன் உறவினனான வேணாட்டு அரசனுக்கு உதவிகேட்டு ரகசியச் செய்தி அனுப்பினான். உதவி கிடைக்கவில்லை. கன்னட வீரர்கள் போருக்கு ஆயத்தமாகும் செய்தி வந்தது. குலசேகர பாண்டியனைத் தப்பித்துப் போகும்படி தம்பிகள் வற்புறுத்தினார்கள். வேறு வழியில்லாமல் குலசேகரன் கொஞ்சம் வீரர்களுடன் அரண்மனையில் இருந்த சுரங்கம் வழியாகத் தப்பித்துக் காட்டுக்குள் சென்றான். நீண்ட நாள் முற்றுகை... களைப்பு... தலைவன் இல்லாமல் நம்பிக்கை இழந்த வீரர்கள்... இத்தனை இக்கட்டுக்கு மத்தியிலும் பாண்டியனின் நான்கு தம்பிகளும் கன்னட வீரர்களுடன் உக்கிரமாகப் போர் புரிந்தார்கள், கடைசிவரை போராடினார்கள், மடிந்தார்கள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சனங்களின் சாமிகள் - 1 - பெரியதம்புரான் [ஐவர் ராசாக்கள்]

தம்பிகள் மாண்டுபோன செய்தி அறிந்தான் குலசேகரன். காட்டிலிருந்து கோட்டைக்கு வந்தான். கன்னட அரசனுடன் போரிட்டான். தோற்றுப்போனான். கன்னடன் பாண்டியனைக் கொல்லவில்லை. அவனைப் பிடித்து, பல்லக்கிலே ஏற்றினான். தன்னோடு அழைத்துச் சென்றான். `எங்கிருக்கிறோம்... எங்கே போகிறோம்?’ எதுவும் தெரியவில்லை குலசேகரனுக்கு.

வழியில் ஓர் இரவு வேளை. பல்லக்கு இறக்கிவைக்கப்பட்டது. பரிவாரங்கள் இளைப்பாறுவதற்கான இடைவேளை அது. பல்லக்கில் உறக்கம் இல்லாமல் கிடந்த குலசேகரனுக்குப் பல்லக்குத் தூக்கிகளின் உரையாடல் காதில் விழுந்தது.

``இந்த ராசாவை எங்கே கூட்டிக்கிட்டுப் போறாக தெரியுமா?’’

``எங்கே?’’

``கன்னட தேசத்துக்கு... அங்கே கன்னட இளவரசி காத்துக்கிட்டு இருக்காங்க. அங்கே போனதும், பாண்டிய ராசாவுக்கும் இளவரசிக்கும் கல்யாணமாம்...’’
 
``ஏய் மெதுவாப் பேசு... பாண்டியராசா காதுல விழுந்துடப் போகுது...’’ 

அவர்கள் அத்தனை மெதுவாகப் பேசியிருந்தாலும், அது பாண்டியனின் காதுகளில் விழவே செய்தது. `வேண்டாம்’ என தான் ஒதுக்கிய இளவரசி... அவள் பொருட்டு நடந்த யுத்தம்... ரத்த வெள்ளத்தில் மாண்டுபோன தம்பிமார்கள்... வீரர்கள்... நினைக்க நினைக்க நெஞ்சம் பதறியது குலசேகர பாண்டியனுக்கு. அதன்பின் ஒரு கணமும் அவன் தாமதிக்கவில்லை. இடுப்பிலிருந்த குறுவாளை எடுத்தான். தன் மார்பில் இதயத்துக்கு நேராக மிகச் சரியாகப் பாய்ச்சினான். உயிரைவிட்டான். குலசேகரன், தன் உயிரை மாய்த்துக்கொண்டதை யாரும் அறியவில்லை.

பல்லக்குப் புறப்பட்டது. கன்னட அரசனின் இருப்பிடம் சேர்ந்ததும் இறக்கி வைக்கப்பட்டது. அங்கே, குலசேகரனுக்காகக் காத்திருந்தாள் இளவரசி. நாணம் தடுத்தாலும், அவனைப் பார்க்க வேண்டும் என்கிற வேட்கை அவளைத் துரத்தியது. ஆவலுடன் பல்லக்கின் திரைச்சீலையைத் திறந்தாள். அங்கே ரத்த வெள்ளத்தில் பாண்டியன் இறந்துகிடந்ததைப் பார்த்தாள். அலறினாள். விழுந்து புரண்டு அழுதாள். அவளை யாராலும் சமாதானப்படுத்த முடியவில்லை.

இறந்துபோன குலசேகர பாண்டியனைச் சிதையில் வைத்து எரித்தார்கள். `என்னை மணக்காவிட்டாலும் இவரே என் கணவர். இவர் இல்லாத பூமியில் இனி நான் இருக்க மாட்டேன்’ என்று கூறி, அந்தச் சிதையிலேயே விழுந்து மடிந்தாள் இளவரசி. இறந்துபோன இருவரும் கயிலை சென்று சேர்ந்தார்கள். சிவபெருமானிடம் வரம்பெற்று தெய்வமானார்கள்.

குலசேகர பாண்டியனுக்கும் வடுகச்சிக்கும் (கன்னட இளவரசி) தென்மாவட்டங்களில் குறிப்பிட்ட சில ஊர்களில் இன்றைக்கும் வழிபாடு நடத்தப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம், கண்டப்பத்து கிராமம், தூத்துவாலை அய்யனார் கோயிலில் `வன்னிராஜா’ என்ற பெயரில் அந்தப் பாண்டியன் வழிபாடு செய்யப்படுகிறான். இதே மாவட்டத்தில் குதிரைமொழி, எள்ளுவிளை கிராமங்களில் பாண்டியன், `கருவேள்ராஜா’ என்ற பெயரிலும் கன்னட இளவரசி, `வாடாப்பூ அம்மன்’ என்ற பெயரிலும் தெய்வமாக அருள்பாலிக்கின்றனர்.

பாளையங்கோட்டை, ஜெயந்திமங்கலம் கிராமத்தில் குலசேகரனுக்கும் அவனது நான்கு தம்பிகளுக்கும் வழிபாடு நடைபெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் பொத்தையடி, கலைநகர், மேலாங்கோடு, கட்டிமாங்கோடு போன்ற ஊர்களிலும் இவர்களுக்கு வழிபாடு உண்டு. இந்த ஊர்க்கோயில் விழாக்களில் குலசேகர பாண்டியனின் கதைப்பாடலை, வில்லுப்பாட்டாகப் பாடுகின்றனர். `ஐவர் ராசாக்கள்’ என்னும் இந்தக் கதைப்பாடல் 5,871 வரிகள் கொண்டது. இப்போதும் சில கோயில்களில் மூலக்கதைப் பாடலை முழுவதும் பாடுகின்றனர்.

நாகர்கோவில், கலைநகர் குலசேகரத்தம்புரான் கோயிலில் தமிழ் ஆனி மாதம் (ஜூன் - ஜூலை) வெள்ளி, சனிக்கிழமைகளில் விழா நடக்கிறது. வெள்ளி இரவு ஒரு மணிக்குப் பூஜை ஆரம்பமாகும். முதல் பூஜை பாண்டிய வீரர்களுக்கு. கோயிலுக்கு வெளியே 100 வெற்றிலை, பழம், பத்தி வைத்துச் சூடம் ஏற்றி வழிபடுவார்கள். இந்த `வெற்றிலைப் படையல்’ பாண்டிய வீரர்களின் அடையாளமாகக் கொள்ளப்படுகிறது.

பின்னர் குலசேகரனுக்குப் பூஜை நடக்கும். கருவறையில் நின்றகோலத்தில் வீரனின் கற்சிற்பம்; கையில் ஆயுதம் உள்ளது. அரசனின் முகச்சாயல் அழகாகத் தெரிகிறது. வெள்ளிக்கிழமை இரவு பாண்டியனின் கதையைப் பாட ஆரம்பித்து, சனிக்கிழமை பகல் 2 மணிக்கு முடிக்கின்றனர். காலையில் சிறிது நேரம் இடைவேளை. பாண்டியனுக்காக ஆடுபவர், கையில் வாளைப் பிடித்து ஆடுகிறார். கட்டிமாங்கோடு, குலசேகரர் கோயிலில் ஆடுபவர், வாழைக்குலையைக் கையில் பிடித்துக்கொண்டு கத்தியால் வெட்டியபடி ஆவேசமாக ஆடுவார். இது கன்னட வீரர்களைக் கொல்வதாக நடித்துக் காட்டப்படும் ஆட்டம்.

வடுகச்சி அம்மனை வழிபட்டால், பெண்களின் கர்ப்பப் பிரச்னை தொடர்பான துன்பம் இல்லாமல் தீரும். நல்ல கணவன் கிடைப்பான் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. குலசேகர பாண்டியன் காலத்தில் வாழ்ந்த, வீணாதி வீணனுக்கும் வழிபாடு உண்டு. இவன் கதையும் சுவாரஸ்யமானதே!

- கதை நகரும்...