மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாரதர் உலா... - புனிதம் இழக்கும் கோயில் குளங்கள்...

நாரதர் உலா... - புனிதம் இழக்கும் கோயில் குளங்கள்...
பிரீமியம் ஸ்டோரி
News
நாரதர் உலா... - புனிதம் இழக்கும் கோயில் குளங்கள்...

படங்கள்: மீ.நிவேதன்

நாரதரின் வருகைக்காகக் காத்திருந்த நாம், அவர் வரும்வரையில் அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் தகவல்களைப் பார்த்துக்கொண்டிருந்தோம். பலருடைய கருத்துப் பரிமாற்றங்களைப் பார்த்தபடி வந்த நம் கண்களில், நாரதரின் தகவல்பட்டது. ‘கடைசிக் கிணறும் வற்றிய நிலையில்தான் தண்ணீரின் அருமை புரியும்’ என்ற தகவலுடன், வறண்டு கிடக்கும் ஏதோ ஒரு குளத்தின் படத்தையும் பதிவிட்டிருந்தார்.

‘நாரதர் எது செய்தாலும், அதில் ஏதோ ஓர் அர்த்தம் இருக்கவே செய்யும்’ என்று நினைத்தபடியே, ‘உங்களுக்காகத்தான் காத்திருக்கிறோம்’ என்று பதிவு போடத் தொடங்கவும், நம்முடைய அறைக்குள் நாரதர் பிரவேசிக்கவும் சரியாக இருந்தது. வெயிலில் களைத்து வந்தவருக்கு ஜில்லென்று மோர் கொடுத்து உபசரித்தோம். ஜில் மோரை பருகி முடித்தவர், ``நாராயணா... நாராயணா... என்னவொரு வெயில்'' என்று அலுத்துக்கொண்டார்.

நாரதர் உலா... - புனிதம் இழக்கும் கோயில் குளங்கள்...

``சரிதான்! சூரிய பகவானின் தாக்குதலுக்கு நாரத முனியும் தப்பவில்லை போலும்'' என்று கேலியாக சீண்ட, பதிலுக்கு ``சூரியதேவனைக் குறைசொல்லிப் பயனில்லை. நாம் சரியாக இருந்தால் இயற்கையும் சரியாகத்தான் இருக்கும்'' என்றார் நாரதர், சற்றே சீற்றத்துடன்.

``அப்படியென்ன சரியில்லாமல் போய்விட்டது?'' நாரதரின் வாயைக் கிளறும்விதம் பொதுவாக ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தோம். நமது எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை.

``இந்த வருடம் மழை குறைந்துபோனது ஒருபுறமென்றால், மற்றொரு புறம் நீராதாரங்களைப் பராமரிக்காமல் விட்டதன் விளைவு, கடும் வறட்சி மக்களை வாட்டுகிறது. பெரும் ஏரிகள், குளங்கள், ஆறுகள் எல்லாம் ஆக்கிரமிப்புகளில் சிக்கிச் சீரழிகின்றன என்றால், திருக்கோயில் தீர்த்தக் குளங்களுக்கும் அதே நிலைமைதான்'' என்று தமது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துவிட்டார்.

ஒரு வார பயணமாக யாத்திரை சென்று வந்திருந்தார் நாரதர். அப்படி அவர் தரிசித்து வந்த தலங்களில் உள்ள தீர்த்தக்குளங்களின் நிலைமை அவர் மனதைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டோம். இருந்தாலும், அதைப்பற்றி அவரே சொல்லட்டும் என்று, தொடர்ந்து அவர் பேசுவதைக் கவனித்தோம்.

நாரதர் உலா... - புனிதம் இழக்கும் கோயில் குளங்கள்...

‘‘கோயில் தீர்த்தங்களுக்கென்று விசேஷ சிறப்புண்டு. இறைவனைத் தரிசிக்க வரும் தேவர்களும், முனிவர்களும்கூட கோயில் திருக்குளத்தில் இறங்கி, தங்களைத் தூய்மைப்படுத்திக்கொண்ட பிறகுதான் கோயிலுக்குள் சென்று இறைவனை வழிபட்டதாகப் புராணங்கள் உள்ளன. அதனால்தான் சில கோயில்களில் இருக்கும் திருக்குளங்களுக்குப் பிரம்ம தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் போன்ற பெயர்கள் வழங்கப்படுகின்றன.

அக்காலத்தில் கோயில் என்று இருந்தாலே குளமும் இருக்கும். நிலத்தடி நீரும் செழித்திருந்தது.
 
அதுமட்டுமா? கோயில் குளங்களின் மூலமாக மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை நம்முடைய முன்னோர்கள் நமக்கு வலியுறுத்தி இருக்கிறார்கள். மழைநீரை கோயில் குளங்களில் சேமிப்பதன் மூலம், கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, குடிநீர்த் தேவை பூர்த்தியாகும். அதனால்தான் என்னவோ, ‘கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்றும் சொல்லி வைத்திருக்கிறார்கள்’’ என்று ஆவேசத்துடன் பேசிக்கொண்டிருந்தவரை இடைமறித்துக் கேட்டோம்

‘‘இப்போது கோயில் குளங்களுக்கு என்னாச்சு. ஏதேனும் பிரச்னைகள் உமது கவனத்துக்கு வந்தனவா? கொஞ்சம் விளக்கமாகத்தான் சொல்லும்’’

‘‘கவனத்துக்கு வருவதென்ன... நானே நேரில் பார்த்து வந்ததையே சொல்கிறேன்.  ஒருவார காலம் பத்துப் பதினைந்து கோயில்களுக்குச் சென்றுவந்துவிட்டேன். பெரும்பாலான கோயில் குளங்களின் நிலைமை மிகவும் பரிதாபம்.

நிறைய குளங்கள் வறண்டுகிடக்கின்றன. சில திருக்குளங்கள் சிறுவர்களின் விளையாட்டு மைதானங்களாகிவிட்டன. இது இப்படியென்றால், இன்னும் சில தெப்பக் குளங்களில், இயற்கையாகத் தண்ணீர் ஊற்றெடுக்க வழியில்லாமல், சிமென்ட் தரைபோடப்பட்டுவிட்டது. உற்ஸவ காலங்களில் வெளியிலிருந்து தண்ணீரைக் கொண்டுவந்து நிரப்புகிறார்களாம்!
 
முன்பு சில பிரதானமான கோயில்களுக்கு மெட்ரோ நீர் கொண்டு வந்து நிரப்பப்பட்டது. அது பிரச்னையாகிவிடவே, அந்தத் திட்டம் கைவிடப்பட்டது என்கிறார்கள். மழைக்காலங்களில் மட்டும்தான் கோயில் குளங்களில் சிறிதளவு தண்ணீரையாவது பார்க்க முடிகிறது’’ என்றார் ஆற்றாமையுடன்.

‘‘அரசுத் தரப்பில் கோயில் குளங்களைச் சீரமைக்க முயற்சி ஏதும் எடுக்கவில்லையா?’’

‘‘சென்னையில் திருவான்மியூர், வடபழநி உள்ளிட்ட 36 கோயில் குளங்களுக்குத் தண்ணீர் வரக்கூடிய நீர்வழிப் பாதைகளைச் சீரமைப்பதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், எல்லாம் வெறும் கண்துடைப்புதான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். நான் சென்று வந்த சில கோயில் குளங்களின் நிலைமையைப் பார்த்தால், அவர்கள் சொல்வது உண்மையோ என்றே எண்ணத் தோன்றுகிறது’’ என்ற நாரதரிடம், ‘‘இதற்கெல் லாம் என்னதான் தீர்வு?’’ என்று கேட்டோம்.

‘‘கோயில் குளங்களில் மழைநீர் வடிகால் களை முறையாக அமைத்து, நீர்வழிப் பாதையில் உள்ள அடைப்புகளைச் சரி செய்வதுதான் ஒரே தீர்வு. மேலும் ஒவ்வொரு வருடமும் கோயில் குளங்களை முறையாக தூர் வாரி, சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்'' என்றவர் தொடர்ந்து, ‘‘ஒரு காலத்தில் புனிதம் காக்கப்பட்ட கோயில் குளங்கள் இன்று குப்பைக் கிடங்காகவும், கழிவுநீர்த் தேக்கமாகவும் மாசடைந்து வருகின்றன. அறநிலையத்துறையின் அலட்சியப் போக்கால், குளத்தில் இறங்கி கை கால்களை நனைக்கக்கூட அச்சப்படும் அவலநிலைதான் தொடர்கிறது’’ என்றார் ஆதங்கத்தோடு.

‘‘மனிதர்களின் மன அழுக்கை அகற்ற கோயில்கள், புற அழுக்கை நீக்க தீர்த்தக் குளங்கள் என்று நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்த அமைப்பானது இன்று சீர்குலைந்து வருவது வருத்தத்துக்குரியதுதான்'' என்று நாமும் நமது வருத்தத்தை நாரதரிடம் பகிர்ந்துகொண்டோம்.

நாரதர் உலா... - புனிதம் இழக்கும் கோயில் குளங்கள்...

நம்முடைய ஆதங்கத்தைப் புரிந்துகொண்ட நாரதர், ‘‘என்ன செய்வது, இதையெல்லாம் கவனிக்கவேண்டிய அறநிலையத்துறை அதிகாரிகள் அலட்சியமாக இருக்கிறார்களே. அதனால்தான் பாதுகாக்கவேண்டிய கோயில் குளங்கள் தங்கள் புனிதத்தை இழந்து வருகின்றன.

கோயில் வளாகங்களில் பாலிதீன் பைகளில் பேக்கிங் செய்யப்பட்ட பொருள்களை விற்கக் கூடாது, கோயில் குளங்களில் குளிக்கவோ, துணி துவைக்கவோ அனுமதிக்கக் கூடாது என்று பல கட்டுப்பாடுகளை விதித்து, கோயில் நிர்வாகம் கடுமையாக அதை நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் கோயில் குளங்களைப் பாதுகாக்க முடியும்’’ என்று நாரதர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவருடைய வாட்ஸ்அப்பில் ஏதோ தகவல் வந்தது.

எடுத்துப் பார்த்தவர், ‘‘கோயில் குளங் களைப் பற்றி இன்னும் சில தகவல்கள் இருப்பதாக சோர்ஸ் ஒருவர் தகவல் அனுப்பியிருக்கிறார். என்னவென்று விசாரித்துவிட்டு வருகிறேன்’’ என்ற நாரதர், நம்முடைய பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பிவிட்டார்.