விரஜபூமி - கண்ணனின் குழந்தைப் பருவ லீலைகள் நிகழ்ந்தப் புண்ணிய ஸ்தலம்.
வெண்ணெய் திருடியதும், கோபியரின் சிற்றில் சிதைத்ததும், கோவர்த்தனகிரியை குடையாகப் பிடித்து யாதவர்களையும், ஆநிரைகளையும் காப்பாற்றியதும் என்று இந்த க்ஷேத்திரத்தில் கண்ணன் நிகழ்த்திய லீலைகளை நினைக்கும்தோறும் இன்றும் நம் மனம் பக்திப் பரவசத்தில் திளைக்கிறது.
இந்த விரஜபூமியில்தான், ‘தூயப் பெருநீர் யமுனை’ என்று ஆண்டாள் போற்றிப் பாடிய யமுனை நதி தவழ்ந்து வளம் சேர்க்கிறது.

ஆம்! உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள, கண்ணனின் அவதாரத் தலமான மதுராவையே விரஜபூமி எனச் சிறப்பிக் கின்றன ஞானநூல்கள். ஸ்ரீகிருஷ்ண பக்தர்களுக்கெல்லாம் அளவற்ற ஆனந்தப் பரவசத்தைத் தருவதாகத் திகழ்கிறது, இந்தப் புண்ணிய திருத்தலம்.
கிருஷ்ணன் என்றாலே ஆனந்தம்தானே?!
இந்தப் பேரானந்தத்தில் திளைத்த மகான் களில் ஸ்ரீகிருஷ்ண சைதன்யர், பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா ஆகிய மகான்கள், தாங்கள் பெற்ற பேரின்பத்தை உலக மாந்தர்கள் அனைவரும் பெற்று மகிழ வேண்டும் என விரும்பினார்கள். அதற்காகப் பெரிதும் பாடுபட்டனர்.
சென்ற நூற்றாண்டில் வாழ்ந்திருந்த சுவாமி பிரபுபாதா, தம்முடைய குருநாதர் பக்தி சித்தாந்த சரசுவதி கோஸ்வாமி அவர்களின் உத்தரவுக்கு இணங்க உலகம் முழுவதும் ஸ்ரீகிருஷ்ணரின் புகழைப் பரப்பிட விரும்பினார்.
அதன் காரணமாகவே சுவாமி பிரபுபாதா, அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகருக்குச் சென்றார். அங்கே அவருக்கு மகத்தான வரவேற்பும் கிடைத்தது. அதனால் மகிழ்ச்சி அடைந்த சுவாமி பிரபுபாதா, ஸ்ரீகிருஷ்ண பக்தியைப் பரப்புவதற்காக ஒரு பக்தி இயக்கத்தைத் தோற்றுவித்து, அதற்கு, ‘அகில உலக ஸ்ரீகிருஷ்ண பக்தி இயக்கம்’ (International Society for Krishna Consciousness) என்ற பெயரும் சூட்டினார். அப்போதிருந்து `இஸ்கான்' அமைப்பானது உலகின் பல பகுதிகளிலும் ஸ்ரீகிருஷ்ண பக்தியைப் பரப்புவதிலும், ஸ்ரீகிருஷ்ணர் தொடர்பான நூல்களை வெளியிடுவதிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்படியான அதன் இறைப்பணிகளின் உச்சம்தான், விரஜபூமியில் எழும்பவுள்ள விருந்தாவன் (பிருந்தாவன்) பாரம்பர்ய கோபுரம்! மதுரா ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ள இடத்தில் அமையப் போகிறது இந்தப் புனித கோபுரம்.
உலகமே வியந்து பார்த்து, பக்திப் பரவசத் தில் திளைக்கும்படியாக கிருஷ்ணரின் ஜன்ம பூமியான விரஜபூமியில் பிரமாண்டமாக ஒரு கோயிலை எழுப்ப வேண்டும் என்றும் ஸ்ரீல பிரபுபாதா விரும்பினார்.
அவருடைய விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், பெங்களூரில் உள்ள இஸ்கான் அமைப்பானது, ஸ்ரீகிருஷ்ணரின் ஜன்ம பூமியான விரஜபூமியில் மிகப் பெரியளவில் ஒரு கோயிலைக் கட்ட இருக்கிறது. 70 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 800 கோடி ரூபாய் செலவில் அமைய இருக்கிறது இக்கோயில். இதற்கான திருப்பணிகள் நிறைவு பெற சுமார் ஐந்து வருடங்கள் ஆகும் என்கிறார்கள்.
கி.பி.10-ம் நூற்றாண்டில் வட இந்தியாவில் பிரபலமாக விளங்கிய நகரா கட்டட அமைப்பில் கோயில் அமையவிருக்கிறது. கோயிலின் பரப்பளவு மட்டும் 5.5 ஏக்கர் ஆகும்.இந்தக் கோயில், இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள கிருஷ்ண பக்தர்களை, குறிப்பாக இளைஞர்களையும் குழந்தைகளையும் ஈர்த்து, அவர்களையும் கிருஷ்ண பக்தியில் ஈடுபடச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பல நவீன அம்சங்களுடன் திகழ இருக்கிறது. குறிப்பாக, கிருஷ்ணரின் லீலைகளை விவரிக்கும் காட்சிகளை நவீன தொழில்நுட்பத்துடன் ஒளிபரப்பக்கூடிய வசதி அனைவரையும் கவருவதாக இருப்பதுடன், கிருஷ்ணரிடம் அவர்களுக்குப் பக்தியை ஏற்படுத்துவதாகவும் இருக்கும்.

தகவல் : இஸ்கான் - பெங்களூரு

மேலும், `கிருஷ்ணலீலா தீம் பார்க்' என்ற பெயரில் இரண்டு தீம் பார்க்குகளும் இத்தலத்தில் அமைய இருக்கின்றன. நமது கலாசார பாரம்பர்யத்தை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்தும் வகையிலான, கல்வி சார்ந்த சுற்றுலா மையமும் இந்த திட்டத்தில் இடம் பெறவிருக்கிறது.
அத்துடன், இந்தியக் கலைகளின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்துடன் அமையவிருக்கும் இந்த மையத்தில், விரஜபூமியின் தொன்மையான கலைகளில் இருந்து சமகால கலைகள் வரை விவரிக்கும் விரஜ் கலைக் காட்சியகம், விரஜபூமியின் தொன்மையான கட்டடக் கலையில் இருந்து சமகால கட்டடக்கலை வரை விவரிக்கும் விரஜ் கட்டடக் கலைக் காட்சியகம் ஆகியவையும் இடம்பெற இருக்கின்றன.

விரஜபூமியில் அமைய இருக்கும் கோயில், கோயிலாக மட்டுமல்லாமல், நம்முடைய ஆன்மிகம் சார்ந்த கலை, கலாசாரம், பாரம்பர்யம் போன்றவற்றை பிரதிபலிக்கும் கேந்திரமாகவும் திகழ இருக்கிறது.
கல்விச் சுற்றுலா என்ற பெயரில் பகவத்கீதை காட்சியகம், பகவத்கீதை ஆய்வு படிப்புக்காக பகவத் கீதா

அகடமி, விரஜபூமியின் பாரம்பர்யத்தை உணர்த்தும் வகையில் கல்வி மையம், நம்முடைய உயர்ந்த நெறிமுறைகளை உணர்த்தும் வகையில் ஒரு கல்வி மையம், பிரார்த்தனைக் கூடம், ஸ்ரீல பிரபுபாதா நினைவகம், ஆன்மிகக் கருத்தரங்குகள், கூட்டங்கள் நடத்துவதற்காக நவீன வசதிகளுடன் கூடிய பல அரங்குகள் ஆகியனவும் இங்கு அமைக்கப்படவுள்ளன.
இந்த உன்னதமான திட்டத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஸ்ரீமது பண்டிட் தாசா அவர்கள் கூறுகையில், ‘‘இந்திய இளைஞர்களை கிருஷ்ண பக்தியில் ஈடுபடச்செய்யவும், நம்முடைய வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து, ஒழுக்கத்துடனும், மற்றவர்களுக்கு முன் மாதிரியாகவும் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கத்திலும்தான் பெங்களூரு இஸ்கான் அமைப்பானது இந்தத் திட்டத்தை முன்னெடுத்து செயல்படுத்துகிறது.
இங்கு வருபவர்களின் மனதில் இறையுணர்வு பெருக்கெடுக்க வேண்டும்; தெய்விக ஸ்பரிசத்தை அவர்கள் உணர வேண்டும் என்பதுதான் இந்த மாபெரும் திட்டத்தின் உன்னத நோக்கம்’’ என்றார்.
எண்ணற்ற சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டதாக, கிருஷ்ணன் அவதரித்த ஜன்மபூமியில், விஸ்வரூப கட்டடமாக உலக அளவில் மிக உயரமானதாகத் திகழ இருக்கும் விருந்தாவன் பாரம்பர்ய கோயில் (Vrindavan Heritage Tower), இந்திய மக்களை மட்டுமல்லாமல், வெளிநாட்டினரையும் கவர்வதுடன், இந்தக் கோயிலைத் தரிசிக்கும் எவரையும் கிருஷ்ண பக்தியில் ஈடுபடச் செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை.