மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 1

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 1
பிரீமியம் ஸ்டோரி
News
கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 1

ஹம்பிமகுடேசுவரன், படங்கள்: கா.பாலமுருகன்

காலத்தில் உறைந்துவிட்ட நம் முன்னோர் வாழ்க்கையைச் சரித்திரக் கண்கொண்டு பார்க்க வேண்டும். அதில் அவர்கள் உயிர்பெற்றெழுந்து நடமாடிக்கொண்டிருப்பர். இறைமைக்கு அஞ்சிய தொண்டுள்ளத்தோடும் தூய நடத்தையோடும் அவர்கள் வாழ்ந்த திருக்கோலங்களைக் காணலாம்.

மறைந்தாலும் அவர்கள் விட்டுச் சென்ற தடயங்கள் கட்டடங்களாய் கோவில்களாய் அணைகளாய் கலைப்பொருள்களாய் இலக்கியங்களாய் நம்முடன் இருக்கின்றன. அவற்றை நோக்கி நகர்வதும் அறிவதும்தான் நமக்கும் அவர்களுக்குமிடையே வழிவழி வந்த தொல்தொடர்புகளைப் புதுப்பித்துக்கொள்வதாகும்.

அவர்களின் எச்சமே இத்தலைமுறையினர். அவர்கள் ஊட்டி வளர்த்த உன்னதங்களே நம்மைத் தற்காலத்துக்கு அழைத்து வந்தவை. பழைமையின் இருள்மீது சற்றே நம் பார்வையைக் குவித்தால் இன்னும் காணப்படாத காட்சிகள் கிடைக்கக்கூடும்.

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 1

நாமொன்றும் புத்தம் புதிதாய் ஆகியவர்கள் இல்லை. கிளைவிட்டுப் பரந்து விரிந்த பெருமரத்தின் சின்னஞ்சிறு விதைப்பருப்புகளே நாம். வரலாற்றை இளகிய நெஞ்சத்தோடும் மூதாதையின் மனமறியும் நோக்கோடும் காணப் பழகிவிட்டால், அது நம்மையே நாம் பின்னோக்கிப் பார்ப்பது போலாகும். அதில் உணர்பவை யாவும் நம் சொந்த உணர்ச்சிகளாகி உணர்த்தும். இத்தொடரில் குறிப்பிடப்படும் இடங்களின் சரித்திரமும் அவற்றையுணர்ந்து பெறப்படும் வாழ்க்கைத் தரிசனமும் நம் அகவெளியை நிரப்பி மகிழ்த்தட்டும்.

முற்காலத்தில் கோவிலுக்குச் செல்வது என்று புறப்பட்டால் அதை ‘யாத்திரை’ என்றார்கள். எல்லாப் பயணமும் யாத்திரை ஆவதில்லை. செல்லுமிடத்தை மனத்தில் இருத்தி, அவ்விடத்தில் கோவில்கொண்டுள்ள இறைவனைக் காணும் நோக்கோடு மழை, புயல், வெள்ளம், கானகம், கடும்பாதை, கடிவிலங்கு என எவற்றுக்கும் அஞ்சாமல் எடுத்து வைக்கும் காலடிதான் யாத்திரை எனப்படும். யாத்திரையைத் தமிழில் ‘அருள்நடை’ எனலாம்.

இன்று யாத்திரையை இன்பச் சுற்றுலா ஆக்கிவிட்டார்கள். திருப்பதிக்குச் சென்றாலும் திருவண்ணாமலைக்குச் சென்றாலும் முதல் வேலையாக அறையெடுத்துப் படுத்துத் தூங்குகிறார்கள். இதைத் தவறென்று கூறுவதற்கில்லை என்றாலும் இறைநோக்கும் சிந்தனையும் அருள்வேட்டலும் முற்றாக மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டு ‘இடங்கண்டு வந்த படலமாக’ அந்தப் பயணம் மாறிவிடுகிறது. அதற்கேற்ப முன்னைப்போல் இல்லாமல் கோவில் தலங்களில் எங்கெங்கும் நெரிசலும் கூட்டமும் மிகுந்துவிடுகின்றன. எள்விழ இடமில்லாதபடி நன்னாள்களில் கோவில்கள் நிரம்பி வழிகின்றன. அத்தனைக்கும் ஆட்பட்டு நசுங்கிக் கசங்கும் மக்களுக்கு வீடு திரும்பினால் போதும் போதும் என்றாகி விடுகிறது.

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 1

தமிழகத்தில் புகழ்பெற்று விளங்கும் எல்லாக் கோவில்களும் தம்மைச் சுற்றிப் பெருநகரங்களை உருவாக்கிவிட்டன. இன்று தமிழகத்தில் கோவிலுக்குச் செல்வதும் பெருநகரமொன்றுக்குச் செல்வதும் ஒன்றுதான். பழநிக் குன்றத்தை மறைத்தபடி அந்நகரம் வளர்ந்துவிட்டது. திருவண்ணாமலைக் கோவில் என்பது அவ்வூர்க்குச் சுற்றுலா வரும் பயணிகளுக்கு முதல் ஈர்ப்பு. கிளம்பும் ஊரிலிருந்து சென்று சேரும் ஊர்வரைக்குமான நம் யாத்திரை தனிமையான வழிப்பயணமாக இன்று அமைவதில்லை. வழிநெடுக வளர்ந்து நிற்கின்ற ஊர்களுக்குள் புகுந்து புகுந்துதான் செல்ல வேண்டும். தனித்த வழிப்பயணத்துக்குத் தமிழகத்துச் சூழ்நிலைகள் தோதாக இல்லை என்பதே உண்மை.

 தமிழகத்து அப்பால் சென்றுவிட்டால், இத்தகைய நிலைமை இல்லை. தமிழகத்தைப்போல் இரண்டு மடங்கு பரப்பளவுள்ள கர்நாடகத்திலோ, தமிழகத்தைவிடவும் பெரிய மாநிலமான ஆந்திரத்திலோ ஒவ்வொரு கோவிலைச் சுற்றியும் பெருநகர வளர்ச்சி என்பதே இல்லை எனலாம். திருப்பதி போன்ற கோவில்களைச் சுற்றி ஊரும் போக்குவரத்தும் பெருகியிருந்தாலும் திருமலையைக் காக்கும் தனி நிர்வாகம் கோவிலின் மாண்பை ஓரளவேனும் காக்கின்றது. அம்மாநிலங்களில் கோவில்களுள்ள ஊர்கள் அதே பழைய அழகோடும் தனித்தலமாகவும் விளங்குகின்றன. கோவிலைச் சுற்றிலும் ஊர் பெருகவில்லை. கோவிலை நோக்கிச் செல்லும் சாலைகள் ஆக்கிரமிக்கப்படவில்லை. கோவிலுக்குச் செல்லும் ‘அருள்நடை’ எவ்வொரு குறுக்கீட்டுக் கோளாறுகளுமின்றி வழிபாட்டுக்கும் இறையன்புக்கும் நம்மை இட்டுச்செல்லும்.

அப்படிக் கண்காணாத தொலைவுக்குச் சென்று பெருங்கோவில்களைக் காண எண்ணினால் ஆந்திரத்திலும் கர்நாடகத்தில் ஏராளமான கோவில்கள் இருக்கின்றன. வழிபாடுகளும் சடங்குகளும் இடையறாது நிகழ்ந்துகொண்டிருக்கும் உயிர்ப்பான கோவில்களுக்குத் தனியழகுதான். பன்னூற்றாண்டுக்காலம் பேரரசின் தலைநகரில் பெருங்கோவில்களாகச் சுடர்ப்புகழ் பெற்று விளங்கியவை பிறகு அந்நியர் படையெடுப்பால் கைவிடப்பட்டுக் கற்கூழமாகிக் கிடந்த கோவில்களும் உள்ளன. தற்காலத்தில் அத்தகைய இடிபாடுகள் அகற்றப்பட்டு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபின், அக்கோவில்கள் தாம் செம்மாந்து வாழ்ந்த வரலாற்றின் சுவடுகளாகவும் விளங்குகின்றன. உயிர்ப்பான கோவில்களும், உடைபட்டு வரலாற்றுச் சின்னங்களாகத் திகழும் கோவில்களும் சூழ்ந்த பெருநிலப் பள்ளத்தாக்குதான் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பி.

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 1

ஹம்பி என்பது ஓர் ஊர்ப்பெயராய்ச் சின்னஞ்சிறிய சொல். ஆனால், அங்கே மிஞ்சியிருக்கும் நூற்றுக்கணக்கான வரலாற்றுச் சின்னங்களின் பட்டியலைப் பார்த்தால் மயக்கம் வருவது உறுதி. நாம் ஓர் ஊருக்குச் சென்றால் அங்கே ஒரு கோவில் இருக்கும். ஹம்பிக்குச் சென்றால் அங்கே சிறியதும் பெரியதுமாய் ஐம்பது அறுபது கோவில்கள் இருக்கும். பன்மாடக் கடையகத்தில் நூற்றுக்கணக்கான கடைகள் வரிசை வரிசையாய் இருப்பதைப்போல, ஹம்பியில் மிகப்பெரிய கோவில்கள் திக்குகள்தோறும் அமைந்திருக்கின்றன. அங்குள்ள ஒரு சில கோவில்களில் இன்றும் வழிபாடுகள் நடக்கின்றன. எண்ணற்ற பக்தர்கள் அன்றாடம் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். அதே இடத்தில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கோவில்களைப் பார்த்து ஏக்கப்பெருமூச்சும் விடுகின்றனர். ஒவ்வொரு கோவிலையும் முழுதாய்ச் சுற்றிப் பார்த்து முடிக்க அரைநாள் வேண்டும். ஹம்பி என்னும் அந்தத் துங்கபத்திரையாற்றுப் பள்ளத்தாக்கு, கலவையான பேருணர்ச்சிகளைப் பிழியும் கோவில்களின் பெருவளாகம் எனலாம்.

 இன்று தென்னிந்தியாவில் பரவியிருக்கும் சமய உணர்ச்சிக்கும் சாதியப் பாகுபாட்டுக்கும் நிர்வாக முறைகளுக்கும் நீர்ப்பாசன மேலாண்மைக்கும் ஊர்ப்பாதுகாப்பு அமைப்புகளுக்கும் உருக்கமான இறைவழிபாட்டுணர்ச்சிக்கும் அதன் விளைவாய்த் தோன்றிய பக்தி இலக்கியங்களுக்கும் பெருவளாகக்  கோவில்க ளுக்கும் வானுயர்ந்த கோபுரங்களுக்கும் என எல்லாவற்றுக்கும் ஓர் அரசாட்சிமுறைதான் அசைக்க முடியாத கட்டுமானத்தை எழுப்பிக் கொடுத்தது. அதுதான் விஜயநகரப் பேரரசு.

ஒரு நாடு எப்போது செல்வச் செழிப்போடும் சீர்திகழ்ச்சியோடும் விளங்க முடியும்? நெடுங்காலத்துக்குப் பிளவுபடாத ஒரே நாடாக இருந்து, வலிமையான அரச வம்சங்களின் நிலையான ஆட்சிமுறைக்கும் ஆட்பட்டிருந்தால்தான் அந்நாடு நலமும் வளமும் செல்வமும் பெறமுடியும். அத்தகைய ஒரு வலிமையான அரசுதான் விஜயநகரப் பேரரசு.

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 1

விஜயநகர அரசர்கள் தமிழகத்தையும் உள்ளடக்கிய தென்னிந்திய தீபகற்பத்தை சற்றேறக்குறைய மூன்று நூற்றாண்டுகள் அரசாண்டார்கள். விஜயநகரப் பேரரசர்கள் தாம் ஆட்சி செலுத்திய அந்த முந்நூற்றாண்டுக் காலமும் எங்கெங்கும் புதுப் புதுக் கோவில்களைக் கட்டியெழுப்பினர். முன்பேயிருந்த கோவில்களையும் புதிதாய்ப் புனரமைத்து அவற்றுக்குக் கோபுரங்களையும் மண்டபங்களையும் கட்டினர். அத்தகைய விஜயநகரப் பேரரசின் தலைநகராக விளங்கிய இடம்தான் விஜயநகரம்.

விஜயநகரம் என்றால் வெற்றித்திருநகரம் என்பது பொருள். தலைநகரத்தின் பெயராலேயே அவ்வரசர்கள் அழைக்கப்பட்டார்கள் என்றால் அவர்களின் தலைநகரம் எப்படிப்பட்டதாக இருந்திருக்கும்? கற்பனைக்கே எட்டாத இந்திரலோகமாக இருந்திருக்கும், இல்லையா? அரண்மனைகளும் ஆட்சிக் கூடங்களும் பெருவிதான மண்டபங்களும் கோவில்களும் தடாகங்களுமாய் அந்த நகரம் மண்ணுலகில் ஒரு பொன்னகரம்போல் விளங்கியிருக்க வேண்டும், இல்லையா ? ஆம்.

விஜயநகரப் பேரரசர்கள் காலத்தில் அவர்களின் தலைநகராய் விளங்கிய விஜயநகரம் அக்காலத்தில் உருவாகியிருந்த எவ்வொரு உலகப் பெருநகரங்களைவிடவும் சிறப்புற்று விளங்கியது.தலைக்கோட்டைப்
போர் என்னும் கொடும்போருக்குப் பின்னர் அந்தப் பேரரசு அழிக்கப்பட்டு எதிரிகளால் சூறையாடப் பட்டது. அப்படிச் சூறையாடியதுபோக மிஞ்சிய வரலாற்றுத் தடயம்தான் இந்த ஹம்பி.

- தரிசிப்போம்