Published:Updated:

நெருப்புக் கோயில், குருத்வாரா... தமிழகத்தில் மாற்று மதக் கோயில்கள்!

நெருப்புக் கோயில், குருத்வாரா... தமிழகத்தில் மாற்று மதக் கோயில்கள்!
நெருப்புக் கோயில், குருத்வாரா... தமிழகத்தில் மாற்று மதக் கோயில்கள்!

தமிழக மாற்று மத வழிபாட்டுத் தலங்கள்...

தங்களும், மத வழிபாடும் நம் மக்களோடும் வாழ்வியலோடும் இரண்டறக் கலந்தவை. வாழ்வதற்குத் தேவையான மன பலத்தையும், உறுதியையும் தருவது மதம் மற்றும் மத வழிபாட்டில் கொண்டிருக்கும் நம்பிக்கையே. அந்த நம்பிக்கை, வாழும் சூழல், வாழ்க்கை முறை என்று ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொருவிதத்தில் மாறுபடும். நம் ஊரில் இந்து, இஸ்லாம், கிறிஸ்துவர், பௌத்தர், சமணர், பார்சி... எனப் பல மதத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்துக்களின் கோயில்கள், முஸ்லிம்களின் மசூதி, கிறிஸ்துவர்களின் தேவாலயம்... இவற்றையெல்லாம் நாம் அறிந்திருப்போம். ஆனால், இவை தவிர நம் ஊரில் மாற்று மதத்தினர்களின் வழிபாட்டுத் தலங்களான சமணர்களின் மகாவீரர் கோயில், பார்சி இனத்தவரின் நெருப்புக் கோயில், பௌத்தர்களின் விகார், சீக்கியர்கள் வழிபடும் குருத்வாரா ஆகிய வழிபாட்டு கோயில்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருக்கத்தான் செய்கின்றன. 

சில மாற்று மதத்தினரின் வழிபாட்டுத்தலங்கள் இங்கே...

சீக்கியர்களின் குருத்வாரா: ஸ்ரீ குருநானக் சத் சங் சபா

சீக்கியர்களின் கலாசார மையமாகத் திகழ்வது குருத்வாரா. பஞ்சாப் மாநிலத்தைப் பூர்விகமாகக்கொண்டவர்கள். தமிழகத்தில் ஆவடி, அரக்கோணம் என்று பல குருத்வாராக்கள் காணப்பட்டாலும் சென்னை தி.நகரில் இருக்கும் குருத்வாரா சீக்கியர்களுக்கு மிகவும் முக்கியமானது. சென்னையில் வசிக்கும் 800-க்கும் மேற்பட்ட சீக்கியக் குடும்பங்கள் வழிபடும் குருத்வாரா இது. இந்த குருத்வாரா `ஸ்ரீகுருநானக் சத் சங் சபா’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த குருத்வாராவின் தன்னார்வலாராக இருந்துகொண்டு செயல்படும் பக்தர் வரீந்தர் சிங் நம்மிடம் பேசினார். 

``பசித்தவர்களுக்கு உணவிடுதலே சீக்கியர்களின் மிக முக்கியக் கடமை.  தினமும் அங்கு சமபந்தி நடைபெறும். குருத்வாராவில் படைக்கப்படும் நைவேத்தியங்களுக்கு, 'லங்கர்' - `கடவுளின் பிரசாதம்' என்று பெயர். ரொட்டி, சாதம், பருப்பு, பாயசம், அல்வா, குலோப் ஜாமூன் என்று நைவேத்தியம் செய்யப்பட்டவற்றை அனைவரும் பகிர்ந்து உண்போம். தினமும் இங்கு 200-க்கும் மேற்பட்டோர் பசியாறுகிறார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பசியாறுவார்கள்.

குருத்வாராவுக்குள் நுழையும்போது கால்களைச் சுத்தப்படுத்திக்கொண்டு, தலையைத் துணியால் மூடியிருக்க வேண்டும். இந்தக் கட்டுப்பாட்டை ஏற்று, குருத்வாராவுக்குள் யார் வேண்டுமானாலும் செல்லலாம். உள்ளேயிருக்கும் பெட்டிக்குள் சீக்கியர்களின் புனித நூலான 'குரு கிரந்த சாகிப்' இருக்கிறது. அதற்கு முன் மண்டியிட்டு வணங்க வேண்டும்.

புனித நூலே சீக்கியர்களுக்குக் கடவுள். தினமும் காலையில் புனித நூலைத் துயில் எழுப்பி எடுத்து வந்து வாசிப்போம். இதற்கு 'பிரகாஷ்' என்று பெயர். இரவு வழிபாடு முடிந்ததும், புனித நூலை, துயில் கொள்ளும் வகையில் கொண்டு சென்று பாதுகாப்பாக வைத்துவிடுவோம். இதற்கு 'சுக் - ஹாசன்' என்று பெயர். பஞ்சாப் மொழி தெரிந்த யார் வேண்டுமானாலும் புனித நூலை வாசிக்கலாம். மேலும், சீக்கியர்கள் அனைவரும் 'தஸ்வந்த்' எனும் நடைமுறையைப் பின்பற்றுவோம். அதாவது, ஒவ்வொருவரும் சம்பாதிக்கும் பணத்தில் பத்து சதவிகிதத்தை கோயிலுக்குக் கொடுத்துவிட வேண்டும். இந்த நிதியுதவியுடன்தான் கோயிலில் தினமும் சமபந்தி நடைபெறுகிறது.

அனைவருக்கும் பாரபட்சம் பார்க்காமல் சமபந்தியில் உணவு அளிப்பதையே நாங்கள் கடமையாகக் கொண்டிருக்கிறோம். இந்து, இஸ்லாம், கிறிஸ்து, பௌத்தம் என அனைத்து மதங்களின் நற்கொள்கையையும் எங்களது 'குரு கிரந்த சாகிப்' புனித நூலில் இடம்பெற்றிருக்கிறது. இங்கு யார் வேண்டுமானாலும் வந்து பசியாறிவிட்டுச் செல்லலாம்" என்கிறார் வரீந்தர் சிங்.

மகாபோதி பெளத்த விஹார்

ஒரு காலத்தில் தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுக்க ஆதிக்கம் செலுத்தியது பௌத்தம். தமிழகத்திலும் செழிப்புடன் விளங்கிய பௌத்தம் இன்று தமிழகத்திலிருந்து மறைந்துவிட்டது. பூம்புகார், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், கடலூர்... எனப் பல இடங்களில் பௌத்த விஹார்கள் செல்வாக்குடன் இருந்ததற்கான ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன. 

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு எதிரே இருக்கும் 'மகாபோதி பௌத்த விஹார்'தான் தமிழகத்தில் வழிபாட்டில் இருக்கும் பழைமையான பௌத்த விஹார். இந்தியா - இலங்கை நட்புறவைப் பலப்படுத்தும் வகையில் 1891-ம் ஆண்டு இந்த மகாபோதி பௌத்த விஹார், 'ஸ்ரீ லங்கா மகாபோதி' என்ற அமைப்பின் சார்பாகக் கட்டப்பட்டது. பௌத்தர்கள் தங்கள் கோயிலை `விஹார்’ என்று அழைக்கிறார்கள்.

பௌத்தர்களுக்கு பௌர்ணமி நாள் மிகவும் முக்கியமானது. காரணம், கௌதம புத்தர் பிறந்தது, ஞானம் பெற்றது, பரி நிர்வாணம் அடைந்தது அனைத்துமே பௌர்ணமி அன்றுதான் என்று பௌத்தர்கள் நம்புகிறார்கள். மே மாதத்தில் வரும் பௌர்ணமி நாளை 'வைசாகம்' என்று திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். ஆனால், தமிழகத்தில் சித்திரை மாதம் வரும் பௌர்ணமி நாளை பௌத்தர்கள் 'பௌத்த பூர்ணிமா' என்று கொண்டாடுகிறார்கள்.

18 அடி உயர புத்தர் சிலைக்கு முன் விளக்குகளையும், மெழுவத்திகளையும் ஏற்றிவைத்து, மண்டியிட்டு பௌத்தர்களின் புனித நூலான 'திரிபிடக' மந்திரங்களை ஓதி வழிபடுகிறார்கள். 

திரைலோக்கியநாதர் ஜைன ஆலயம்

இந்தியா முழுக்கப் பரவியிருந்த ஜைன மதம் தமிழகத்தில் சமணம், ஆருகதம் என்ற இரு பிரிவுகளில் பரவியது. தமிழகத்திலிருக்கும் சமண ஆலயங்களில் மிகவும் தொன்மை வாய்ந்தது காஞ்சிபுரத்தில் இருக்கும் திரைலோக்கிய நாதர் ஜைன ஆலயம். இந்தக் கோயில், காஞ்சிபுரத்தில், `ஜைனக் காஞ்சி’ என அழைக்கப்படும் திருப்பருத்திக்குன்றத்தில் இருக்கிறது. இந்தக் கோயில் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணுவால் கட்டப்பட்டது. அப்போதிருந்தே இந்தக் கோயில் முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது. சமண ஆலயங்கள் தமிழகத்தில் திருவண்ணாமலை, வேலூர் எனப் பல இடங்களில் இன்றும் வழிபடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் சமணர்கள் வசிப்பதாகச் சொல்லப்படுகிறது.

சமணர்கள் 24 தீர்த்தங்கரர்களைப் போற்றி வணங்குகிறார்கள். மகாவீரர், 24-வது தீர்த்தங்கரர். காஞ்சிபுரம் திருப்பருத்திக்குன்ற ஜைனக் கோயில், 'வர்த்தமானர் கோயில்' என்றும் அழைக்கப்படுகிறது. மகாவீரர், புஷ்பதந்தர், தருமதேவி ஆகியோர் கருவறையில் காட்சி தருகிறார்கள். மற்றும் பிரம்மதேவர், ரிஷபநாதர் ஆகியோரும் காட்சியளிக்கிறார்கள். கோயிலுக்குப் பின்புறத்தில் தல விருட்சமான குரா மரம் இருக்கிறது.

அந்தக் காலத்தில் சமணம், கடுமையான துறவுநிலைக் கொள்கைகளைக் கொண்டதாக இருந்தது. பிற உயிர்களுக்கு எந்தத் துயரமும் ஏற்படக் கூடாது என்பதற்காக சமணத் திகம்பரர்கள் பல் துலக்காமல், நீராடாமல் தங்கள் தலைமுடிகளைத் தாங்களே கையால் பிடுங்கிக்கொள்வார்கள். `உடலுக்கு வலி ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் ஆன்மாவைத் தூய்மையாக்கி, இறைவனின் அருளைப் பெறலாம்’ எனும் கொள்கை உடையவர்கள் சமணர்கள். `இல்லற நெறியுடன் வாழ்பவர்கள் துறவறம் மேற்கொண்டால் மட்டுமே வீடுபேறு அடைய முடியும், பெண்களாகப் பிறந்தவர்களுக்கு வீடுபேறு இல்லை’ எனும் கடுமையான கொள்கைகளைக்கொண்டது சமணம்.

சமண மதத்தைச் சார்ந்தவர்கள் நாள்தோறும் ஒரு வேளையாவது அருக வழிபாடு செய்ய வேண்டும். தீர்த்தங்கரர்களுக்கு `அருகன்’ என்ற பெயரும் உண்டு. தினமும் அருகனின் சிலைக்கு முன்னால் விளக்கேற்றி சமணர்களின் புனித நூலான 'தத்துவார்த்த சூத்திரம்' எனும் மோட்ச சூத்திரத்தைப் படித்து அருகனை வழிபடுகிறார்கள். மகாவீரரை வழிபட்டு விரதமிருப்பவர்கள், காலை ஒரு வேளை மட்டுமே உணவருந்தி, பின்னர் தண்ணீர்கூடப் பருக மாட்டார்கள்.

விரதமிருக்கையில் தத்துவார்த்த சூத்திரத்தை வாரத்துக்கு ஒரு பதிகம் என்று பாராயணம் செய்வார்கள். பத்து வாரங்களுக்கு, பத்துப் பதிகங்களைப் பாராயணம் செய்து, மகாவீரர் ஜயந்தியன்று விரதத்தை நிறைவுசெய்வார்கள்.

சமணர்களின் முதன்மைத் தத்துவம் அகிம்சை. அதாவது, பிற உயிர்களுக்குத் தீங்கிழைக்காமல் இருப்பது. ஆதலால், இறைவனுக்கு அர்ச்சனை செய்யும்போதுகூட தாவரங்களுக்குத் துன்பமிழைக்காமல் மண்ணுக்கு மேலே விளைந்த பொருள்களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். மண்ணுக்கு மேலே கிடைக்கும் நீர், சந்தனம், அரிசி, மலர், கொப்பரைத் தேங்காய், தீபம், தூபம், பழம் ஆகியவற்றால் தினமும் அர்ச்சனை செய்கிறார்கள். இப்படி அர்ச்சனை செய்யப்படும் பொருள்கள் மீண்டும் முளைக்காதவையாகவும் இருக்க வேண்டும். பிறகு நீர், பால், சந்தனம் ஆகியவற்றால் மகாவீரருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு, கோயிலில் விளக்கேற்றி தீர்த்தங்கரரை வழிபடுகிறார்கள்.

பார்சிக்களின் நெருப்புக் கோயில்: ஜல் பிரோஜ் கிளப்வாலா தர்-இ-மெகர்

இந்தியாவில் வசிக்கும் ஜொராஸ்ட்ரர்கள் 'பார்சி'க்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஜொராஸ்ட்ரர்கள் பாரசீகத்தைச் சார்ந்தவர்கள். பாரசீகம் (பெர்சியா) என்பது இன்றைய ஈரான் நாடு. அரசியல் காரணங்களால் உலகத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் இடம்பெயர்ந்தவர்கள் இந்தியாவுக்கும் வந்தார்கள். பார்சிக்களின் மதமான ஜொராஸ்ட்ரிய மதம் பாரசீகத்தின், `ஜொராஸ்ட்ரர்’ எனும் ஞானியால் தோற்றுவிக்கப்பட்டது. பாரசீக மன்னன் விஷ்டாஸ்பா என்பவன் ஜொராஸ்ட்ரரின் தத்துவத்தை ஏற்று ஜொராஸ்ட்ரிய மதத்தைப் பின்பற்றினான். பிறகு இவனே ஜொராஸ்ட்ரர்களுக்குப் பாதுகாவலனாகவும் நண்பனாகவும் விளங்கினான்.

`உலகில் ஒரே கடவுள்தான் இருக்கிறார்’ என்கிறார்கள் ஜொராஸ்ட்ரர்கள் . அவரது பெயர் 'அஹுரா மாஜ்டா'. அதன் பொருள், `மெய் அறிவு கொண்டவன்’ என்பதாகும். 

ஜொராஸ்ட்ரர்களின் புனித நூல் 'அவஸ்தா'. ஜொராஸ்ட்ரிய மதம் நேர்மை, வாய்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. திருமணம் செய்துகொள்ளாமல் துறவு மேற்கொள்வது, திருமணம் செய்துகொண்டு பிறகு துறவு மேற்கொள்வது ஆகிய இரண்டை யும் ஜொராஸ்ட்ரிய மதம்  எதிர்க்கிறது. ஜொராஸ்ட்ரர்களின் வழிபாட்டு முறை மற்ற மதத்தினரிடமிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. அவர்கள் நெருப்பை வணங்குகிறார்கள். நெருப்பு மட்டுமே தீமையிடமிருந்து தங்களைப் பாதுகாக்கும் என்பது அவர்கள் நம்பிக்கை. ஜொராஸ்ட்ரர்கள் பாரசீகத்திலிருந்து எந்த நாட்டுக்குச் சென்றாலும், பாரசீக நெருப்புக் கோயிலில் எரிந்துகொண்டிருக்கும் அக்னி ஜ்வாலையைத் தம்முடன் அணையாமல் கொண்டு சென்று வழிபடுவார்கள்.

ஜொராஸ்ட்ரர்கள் 1795-ம் ஆண்டு சென்னைக்கு வருகை தந்தார்கள். சென்னையில் கிட்டத்தட்ட 300 ஜொராஸ்ட்ரியக் குடும்பங்கள் வசிக்கின்றன. அவர்களின் நெருப்புக் கோயில் ராயபுரத்தில் இருக்கிறது. 1909-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது இந்தக் கோயில். இதன் பெயர் ' ஜல் பிரோஜ் கிளப்வாலா தர்-இ-மெகர்'. தமிழகத்தில் இருக்கும் ஒரே நெருப்புக் கோயில் இது மட்டும்தான். கிட்டத்தட்ட 100 வருடங்களுக்கும் மேலாக அங்கு நெருப்பு அணையாமல் எரிந்துகொண்டிருக்கிறது. எம்டன் கப்பல் சென்னையைத் தாக்கியபோதுகூட பார்சிக்கள் நெருப்பை அணையாமல் பார்த்துக்கொண்டார்களாம். 

எரிந்துகொண்டிருக்கும் நெருப்புக்கு முன் நின்று புனித நூலான அவஸ்தாவை வாசித்து வழிபடுகிறார்கள் பார்சிக்கள். மேலும் ஜொராஸ்ட்ரிய மதத்தில் ஒரு விசித்திரமான பழக்கமும் இருக்கிறது. அவர்கள் இறந்த பிறகு உடலைப் புதைப்பதோ, எரிப்பதோ இல்லை. உடலைக் கொண்டு போய் 'அமைதிக் கோபுரம்' என்று அழைக்கப்படும் கோபுரத்தின் மேல் வைத்துவிட்டு வந்துவிடுவார்கள். கழுகுகளும் காகங்களும் உடலைத் தின்ற பிறகு எலும்பை மட்டும் கொண்டு வந்து மணலில் புதைத்துவிடுவார்கள். இப்போதுகூட மும்பை மற்றும் குஜராத் பகுதிகளில் அமைதிக்கோபுரம் காணப்படுகிறது.
 

அடுத்த கட்டுரைக்கு