Published:Updated:

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!
சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!


தீனதயாளா! பரமகிருபாளா!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##
'ப
கவான் சத்ய சாயிபாபா தெய்வம்! அன்பும் கருணையும்தான் அவர் இயல்பு!’ என்று இப்போது புட்டபர்த்தியில் கணவர் சுரேஷ§டன் தங்கி, சாயிசேவையில் அன்புடன் ஈடுபட்டிருக்கிறார் சாயிபக்தை சுந்தரவல்லி. தன்னார்வத்துடன், தன்னலமற்ற சேவைகளைத் தம்மால் இயன்றவரை புரிந்து வருகிற இந்தத் தம்பதியின் மக்கள் சேவையே பாபாவைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது. அதனால்தான், இந்த ஆதர்ச தம்பதியை தன் சந்நிதானத்துக்கு ஸ்வாமி அழைத்து வந்துவிட்டிருக்கிறார். பல துறை வல்லுநரான சுந்தரவல்லியும் கணவர் சுரேஷ§ம் மதுரைக்காரர்கள். இவர்கள் மதுரையில் வாழ்ந்தபோது, ஸ்வாமி புரிந்த அற்புத லீலையை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார் இந்த பக்தை.

''அது 1997-ஆம் ஆண்டு. அன்று வரலட்சுமி நோன்பு. எப்போதும்போல வீட்டில் சிறப்பாக அம்பாளுக்கு வழிபாடு நடந்தது. சுமங்கலிப் பெண்கள் நிறையப் பேர் வந்து அம்பாளுக்கு பூஜை செய்து, லலிதா சகஸ்ரநாமம் சொல்லி, பாடல்களைப் பாடி ஆரத்தி காட்டிவிட்டு, சாப்பிட்டுவிட்டுச் சென்றனர். அன்று சாயங்காலம் சாயிசமிதியின் 'சாயிபஜன்’ நடக்க இருந்தது. எனவே, காலையில் பூஜைக்கு வந்தவர்களெல்லாம் கிளம்பிப் போனதும், கொஞ்ச நேரம் படுக்கவேண்டும் என்று நினைத்தேன். எனக்கு கல்லீரல் தொடர்பான வியாதி இருப்பதால், இன்ன வியாதி என்று சொல்லமுடியாமல் வேறு பல வியாதிகளும் சேர்ந்து தாக்கும். தாளமுடியாத உடல் உபாதைகளுக்கு அடிக்கடி ஆளாகித் தவிப்பேன். அன்றும் நோயின் உக்கிரம் தாங்காமல்தான் அல்லலுற்றுப் புரண்டேன். நீண்ட நேரத்துக்குப் பிறகு களைத்துப்போய், என்னை மறந்து உறங்கிப்போனேன். மாலை நடக்க இருக்கும் சாயிபஜனுக்கு எல்லாவற்றையும் தயாராக வைத்திருந்ததால், சாயிபக்தர்கள் வருவதற்குள் எழுந்துவிடலாம் என்று நினைத்துப் படுத்தேன் உடம்பு வலி என்னை அடித்துப் போட்டாற்போல் செய்துவிட்டதால், அசதியில் நன்றாகத் தூங்கிப்போனேன். திடீரென கண்விழித்தவள் திடுக்கிட்டேன். அடடே... மாலையில் சாயிபஜன் இருக்கிறதே... ரொம்ப நேரம் தூங்கிவிட்டோமோ என்று எழுந்து பரபரவென்று தயாரானேன். வீட்டில் அப்போது எவருமில்லை. முகம் கழுவிக் கொண்டு பூஜையறைக்கு வந்தேன். வெளியில் பலமாக சூறாவளிக்காற்று பெருஞ்சத்தத்துடன் வீசியது. மழை கொட்டத் தொடங்கியது. பகவான் பாபாவின் முன் நின்று நமஸ்காரம் செய்து, கண்களை மூடிப் பிரார்த்தித்தேன். ஏதோ 'பளீர் பளீரெ’ன்று பெரிய வெளிச்சம் வந்தாற் போலிருந்தது. சாயங்கால வெளிச்சமா என்று நினைத்தவள், வெளியில் எட்டிப் பார்த்தேன். இல்லை... வெளிச்சம் என் மேல்தான் வரத் தொடங்கியிருந்தது. கீழே இருந்த குத்துவிளக்கிலிருந்து நெருப்பு குபீரென்று புடவையில் பிடித்துக்கொண்டு, எரிந்துகொண்டிருந்தது.

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

'ஓ’வென்று அலறினேன். பயத்தில் நிலைதடுமாறி, இங்குமங்கும் அலைமோதினேன். காலிலிருந்து தீப்பிடித்து, கழுத்து வரை திகுதிகுவென ஜ்வாலையோடு எரியத்தொடங்கியது. அதிர்ச்சியிலும் பயத்திலும் என்ன செய்வதென்று தோன்றவில்லை. அவ்வளவுதான்... என் கதை முடிந்தது என்று முடிவு செய்தவள், தட்டுத் தடுமாறிச் சென்று வாஷ்பேஸின் தண்ணீரை எடுத்து, மேலே தெளித்துக் கொண்டேன். அந்த நிலையிலும், 'சமிதிக்காரங்க வந்துடுவாங்களே... பஜன் தொடங்கப் போகுதே’ என்ற பரிதவிப்பு வேறு என்னை ஆட்டிப்படைத்தது. எப்படியோ... என் தோழியான டாக்டர் தாஜ் அவர்களுக்கு ஃபோன் செய்து, என் விபரீத நிலைமையைச் சொன்னேன். 'ஐயோ! உனக்கா இப்படி நடக்க வேண்டும்... இப்போது தொலைதூரத்தில் இருக்கிறேன். முடிந்தவரை வேகமாக வந்துவிடுகிறேன்’ என்று சொல்லி, சில முன்னெச்சரிக்கை குறிப்புகளைக் கொடுத்தார். 'கொட்டிக் கொண்டிருக்கும் தண்ணீரில் கொஞ்சநேரம் நில்’ என்றார். 'லிவர் பேஷன்ட்’டாக இருப்பதால், எந்த மருந்தையும் நான் எடுத்துக் கொள்ளமுடியாது. நீரில் நின்று கொண்டிருந்துவிட்டு வந்ததும், தீயின் கொழுந்துகள் அணைந்தன. ஆனால், உடம்பு எரிந்தது. தாளமுடியாத எரிச்சல். உடம்பெல்லாம் கருகிப் போயிருந்தது. அப்போது காலிங் பெல் அடித்தது.

சாயிபஜனுக்கான ஏற்பாடுகளைச் சரிபார்க்க, சமிதிக்காரர்களில் ஒரு சிலர், சற்று முன்பாகவே வந்துவிட்டார்கள். காட்டன் புடவையை நன்றாகச் சுற்றிக்கொண்டு போய்க் கதவைத் திறந்தேன். ஏறக்குறைய எரிந்து கரிந்து போயிருந்த என்னைப் பார்த்து, அவர்கள் திடுக்கிட்டுப் போனார்கள். நான் அவர்களிடம், ''இப்படி எனக்கு ஆகிவிட்டது. அதற்காக நீங்கள் சங்கடப்படவேண்டாம். ஏற்பாடு செய்தபடி பஜன் நடக்கட்டும். எல்லாம் தயாராக இருக்கிறது. என்னால் அங்கு வந்து கலந்துகொள்ள முடியாது. நீங்கள் பஜனை நடத்துங்கள். பஜன், நாராயண சேவை எல்லாம் நல்லபடி நடக்கட்டும். என்னைப் பார்க்க டாக்டர் தாஜ் வந்துகொண்டிருக்கிறார்'' என்று சொல்லிவிட்டு, உள்ளே போய்ப் படுத்துக் கொண்டேன். ஒருகணம் அவர்கள் திகைத்தாலும், 'சாயிராம்’ என்று கைகூப்பிப் பிரார்த்தித்துவிட்டு, குறித்த நேரத்தில் சாயிபஜன் தொடங்கிவிட்டனர்.

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!
சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

பஜன் கேட்டுக்கொண்டே, ஸ்வாமியை நினைத்தபடி படுத்திருந்தேன். சுண்ணாம்புக் காளவாயில் இட்டுச் சுட்டதுபோல், உடல் எரிச்சல் தாளமுடியாமல் போனது. சாந்தி எனும் பக்தை, 'ஜனனீ ஜனனீ சுப ஜனனீ’ என்ற பாடலைப் பாடத் தொடங்கினார் அப்போது, அங்கு உட்கார்ந்து பாடிக்கொண்டிருந்த ஒரு மூதாட்டி எழுந்து, ''எப்பவும் இப்படித்தான் இவ உடம்பு சரியில்லேன்னு போய்ப் படுத்திருப்பா. இதோ, நான் போய் கூப்பிட்டுக்கிட்டு வரேன்'' என்று சொல்லிவிட்டு, நேராக என் அறைக்குள் வந்து, நான் என்ன சொல்லியும் கேட்காமல், தரதரவென்று என் கையைப் பிடித்து இழுத்து வந்தார். வெளியே பஜன் நடப்பதைப் பார்த்தபடியே, உட்கார்ந்துவிட்டேன். அற்புதமாகப் பாடிக் கொண்டிருந்தார்கள்,  'ஜனனீ ஜனனீ சுபஜனனீ...’ என, என் உடல் வேதனை தகிக்க, இருந்த இடத்திலேயே அவர்களோடு சேர்ந்து பாடினேன். கண்களில் நீர் வழிந்தோடியது. அப்போது, பக்தர்களுக்கு நேர் எதிரே சுவரில் மாட்டப்பட்டிருந்த ஸ்வாமி சத்ய சாயிபாபாவுக்குப் போட்டிருந்த பூமாலை பறந்து வந்து என் மேல் விழுந்தது. பூமாலை மேலே விழுந்ததும், உடம்பின் எரிச்சல் அடங்கி, மெல்லிய குளிர் காற்று வீசுவதைப் போல உடம்பெல்லாம் குளிர்ச்சி பரவியது. வலி குறைந்தது. பன்னீர் தெளித்துவிட்டாற்போல உடம்பின் வேதனை தணியத் தொடங்கியது. 'சாயிராம்!’ என்று கண்ணீர் வழியக்  கைகூப்பினேன். எழுபத்தைந்து பேருக்கு மேல் அமர்ந்து பாடிக் கொண்டிருந்தார்கள். அத்தனை பேரும் ஸ்வாமி புரிந்த இந்த அற்புதத்தைக் கண்டு ஆச்சரியத்தில் விக்கித்துப்போனார்கள். 'இந்தம்மாவோட பக்திக்கும், இவங்க பண்ற சர்வீஸுக்கும், ஸ்வாமி எப்படி அதிசயம் பண்ணிட்டார் பாருங்க’ என்று சொல்லிச் சொல்லி வியந்தார்கள்.

பஜன் முடிந்ததும், அதற்குமேல் பொறுக்காமல் கன்வீனர் எழுந்தார். எனக்கு நடந்த விபத்தைச் சொல்லி, 'டாக்டர் இங்கு வந்து கொண்டிருக்கிறார். பிரசாதம் வெளியில் வைத்திருக்கிறோம். வாங்கிக்கொண்டு கிளம்பலாம்’ என்று சொன்னார். அதன்படியே, ஆரத்தி ஆனதும், கதவைச் சாத்திக்கொண்டு எல்லாரும் போய்விட்டார்கள்.

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

டாக்டர் தாஜ் வந்து என்னைப் பார்த்துப் புலம்பினார். 'இப்படி உனக்கு ஆகணுமா? உடம்பு முழுக்க கொப்புளம் வந்துவிடுமே! ஹாஸ்பிடலில், 'கொசுவலை’ போட்டு வைத்துவிடுவார்கள்’ என்று சொல்லிக் கவலைப்பட்டார். ஆன்டிசெப்டிக் இன்ஜெக்ஷன் போட்டார். ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆனாலும், என் உடல்நிலை கண்டு பயந்து போயிருந்த கணவரும் உறவினர்களும் மற்றவர்களும் ஆச்சரியப்படும்படியாக, மிகச் சீக்கிரத்தில் குணமானேன்.

ஸ்வாமி அன்று நடத்திய அதிசயத்தை டாக்டரிடம் சொன்னேன். ''இப்படி ஒரு தீ விபத்து நடந்து, உடல் கரிந்து, உயிருக்கு ஆபத்தான கட்டத்துல, கருணையோடு உன்னைக் காப்பாத்தியிருக்கார்னா, அவர் சத்தியமான ஆண்டவனேதான்'' என்று நெகிழ்ச்சியோடு சொன்ன டாக்டர் தாஜ், அந்தக் கணத்திலிருந்து 'சாயி பக்தை’யாக மாறிவிட்டார். இப்போது அவர் புட்டபர்த்தி 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவமனையில் சர்வீஸ் புரிந்துகொண்டிருக்கிறார்'' என்று சொல்லி, பகவான் பாபாவின் பெருங்கருணையை நன்றியுடனும் நெகிழ்ச்சியுடனும் தெரிவித்தார் சுந்தரவல்லி.

''வெள்ளமே! திரும்பிப் போ... தீயே அடங்கிப் போ... மழையே வராதே!'' என்று சில அபூர்வ சந்தர்ப்பங்களில், இயற்கையின் மீறல்களை பகவான் பாபா அடக்கியது உண்டு! பஞ்சபூதங்களும் பகவானின் ஆணைக்கு அடிபணியுமல்லவா?!

ஸ்வாமியிடம் பக்தர் ஒருவர் பேசிக்கொண்டிருந்தபோது, ''ஸ்வாமி, ரொம்பவும் கொஞ்சமாகச் சாப்பிடுகிறீர்களே... உங்கள் உடம்பிலும் பஞ்சபூதங்கள்தானே இருக்கின்றன! உங்களுக்கு சக்தி தர, அவற்றுக்குச் சக்தி வேண்டாமா?'' என்று கேட்க, ஸ்வாமி அவரிடம், ''பஞ்சபூதங்கள் எனக்கு சக்தி கொடுப்பதில்லை. அந்த பஞ்ச பூதங்களுக்கு சக்தி கொடுப்பவன் நானே'' என்றார். பக்தர் வாயடைத்துப் போனார்.

பஞ்சபூதங்களை அடக்கியாளும் வல்லமை பகவானுக்கு உண்டு. அதனால்தான் இந்த பக்தைக்கு, தீ ஜ்வாலையின் உக்கிரத்தையே பூமாலை வீசிப் போக்கி, அற்புதம் நிகழ்த்திவிட்டார்!

- அற்புதங்கள் தொடரும்