Published:Updated:

சனங்களின் சாமிகள் - 2

சனங்களின் சாமிகள் - 2
பிரீமியம் ஸ்டோரி
சனங்களின் சாமிகள் - 2

அ.கா.பெருமாள் ஓவியம்: ரமணன்

சனங்களின் சாமிகள் - 2

அ.கா.பெருமாள் ஓவியம்: ரமணன்

Published:Updated:
சனங்களின் சாமிகள் - 2
பிரீமியம் ஸ்டோரி
சனங்களின் சாமிகள் - 2

து கோடைகாலம். சுட்டெரிக்கும் வெயிலில் எங்கே வியர்த்து விடுமோ என அஞ்சியதுபோல மரங்கள் லேசாகக் கூட இலைகளை அசைக்காமல் நின்றிருந்தன. சூரியன் உச்சிக்கு வருவதற்கு இன்னமும் நேரமிருந்தது. திறந்த வெளியில் காற்று வீசுவதற்கான அறிகுறியே தெரியவில்லை.

அவன் தளர்ந்துபோயிருந்தான். நடு ஜாமத்தில் வீட்டைவிட்டு வெளியேறியிருந்தான். முதல் நாள் மதியம் சிறிய கும்பாவில் கம்பஞ்சோறு சாப்பிட்டது நினைவுக்கு வந்தது.

நடந்த களைப்போடு தாகமும் பசியும் சேர்ந்துகொண்டு அவனை வாட்டி எடுத்தன. சாலையில் இருந்து விலகி, ஒரு வேப்ப மரத்தின் அடியில் உட்கார்ந்தான். அவன் தன்னையே ஒருமுறை பார்த்துக்கொண்டான். ஆண்டிக் கோலம் அவனுக்குப் பொருத்தமாக இருந்தது. இடுப்பை இறுக்கிப்பிடித்துக் கட்டியிருந்த காவி வேட்டி; தோளின் ஒருபுறமாகத் துவண்டுகிடந்த காவித்துண்டு; நெற்றி, புஜங்கள், மார்பு, வயிறு எனத் தீட்டியிருந்த விபூதிப் பட்டை. அந்த நிலையிலும் அவன் தன்னை வேறு யாரோ என்பதுபோல உணர்ந்தான். 

சாலையில் ஆளரவம் கேட்டது. இரண்டு மாட்டு வண்டிகள் மெல்ல அசைந்து சென்று கொண்டிருந்தன. அதன் முன்னும் பின்னுமாக வேல்கம்பும், கம்பும் ஏந்தியபடி சில ஆட்கள். பார்க்க திருமணக் கூட்டம்போல் தெரிந்தது. ``அது யாருடா மரத்தடியில... போய்ப் பாருலே...’’ - ஒருவன் கம்பைத் தூக்கிக் கொண்டு பரபரப்பாக ஓடி வந்தான். வேம்பு மரத்தடியில் சோர்ந்துபோய் அமர்ந்திருந்த அவனைப் பார்த்தான்.

சனங்களின் சாமிகள் - 2

``யாரோ பண்டாரம் சாமி...’’ இங்கிருந்தபடியே குரல் கொடுத்து விட்டு, அந்த ஆள் மெதுவாகத் திரும்பிப் போனான். அந்த மனித ஊர்வலம் சாலையில் மெள்ள நகர்ந்துபோனது. மனிதர்கள் இன்னமும் காவியை நம்புகிறார்கள். சைவம், வைணவம் என இரு பெரும் பிரிவுகள்... ஆயிரம் சச்சரவுகள், சண்டைகள். ஆனாலும், அது எந்த மதத்தைச் சேர்ந்த துறவியோ, சந்நியாசியோ, பண்டாரமோ... மக்களிடம் ஒரு மரியாதை இருக்கத்தான் செய்கிறது. பசி அவனைக் கிளப்பியது. எழுந்துகொண்டான். நடக்க ஆரம்பித்தான்.  

ஒரு வெட்டவெளியைக் கடந்தபோது ஊர் எல்லை தென்பட்டது. அவனுக்குக் கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. நடந்து நடந்து, ஊருக்கு ஒதுக்குபுறமாக இருந்த அந்தக் குடிசை வீட்டு வாசலுக்கு வந்து சேர்ந்தான். வாசலில் இரண்டு கழுதைகள் முளைக்கம்பில் கட்டப்பட்டிருந்தன. ஒன்று நின்றவாக்கில் அவனைப் பார்த்தது. அசையாமல் உறுத்து விழிக்கும் அதன் கண்களை அவன் தவிர்த்தான். குடிசை வாசலில் அழுக்குத் துணி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

``ஐயா...’’ இவன் குரல் தீனமாக எழுந்தது.

உள்ளேயிருந்து வெளியே வந்தவருக்கு வயது ஐம்பதுக்கு மேல் இருக்கலாம். இவனைப் பார்த்ததும் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டார்.

``ஐயா... நான் வெகுதூரத்தில் இருந்து வருகிறேன். மிகவும் பசியாக இருக்கிறது. சாப்பிட ஏதாவது கொடுங்களேன்... என் உடலில் வலு இருக்கிறது. நீங்கள் எந்த வேலை கொடுத்தாலும் செய்வதற்குத் தயாராக இருக்கிறேன்...’’

``சாமி... நீங்க இங்கே சாப்பிடுறதா... நான் உங்களுக்கு வேலை கொடுக் கிறதா... வேற வினையே வேணாம். ஊர்க்காரங்க என்னை அடிச்சே கொன்னுடுவாங்க. பார்க்கறதுக்கு பெரிய சாதி சனத்தைச் சேர்ந்தவங்களாட்டம் தெரியுது. பேசாம ஊருக்குள்ள போயிருங்கய்யா. அங்கே யாராவது உதவி செய்வாங்க...’’ அந்த சலவைத்தொழிலாளி கைகளைக் கும்பிடுவது மாதிரி உயர்த்தினார்.

அவன் மேற்கொண்டு பேசுவதற்கு ஏதும் இல்லாதவனாக ஊரை நோக்கி நடக்க ஆரம்பித் தான். தூரத்தில் வள்ளியூர் கோட்டை தெரிந்தது. சாப்பிட ஏதாவது ஒன்று கிடைத்தால் பரவாயில்லை. அவன் பசியை மறக்க முயன்றான். தனக்குப் பசியில்லை என தன்னையே ஏமாற்றிக்கொள்வதுபோல உற்சாகமாக நடந்தான். ஆனாலும், எண்ணம் முழுக்கப் பசியையே சுற்றிச் சுற்றி வந்தது. மனிதர்களுக்கு ஏன் பசி உண்டாகிறது?

இறைவன் ஏன் பசியை வைத்தான்? இதன் பொருட்டாவது ஒரு வேலையைச் செய்யத் தோன்றும்; உழைக்கத் தோன்றும். ஆனால், பசி அடங்கியதும், அதோடு மனிதன் நிறைவுற்று விடுகிறானா? இல்லையே! உடல் வேட்கை கொள்கிறான்; பொன், பொருள் சேர்க்கத் தலைப்படுகிறான். தனக்கென ஒரு சுற்றத்தை, கூட்டத்தை உருவாக்கிக் கொண்டு அதிகாரம் செலுத்த ஆசை கொள்கிறான்... மானுடர்கள் ஒருபோதும் திருப்தி கொள்வதே இல்லை. இன்னும் இன்னும் என்கிற பல தீராத வேட்கைகள் அவர்களைப் பசியைப்போலவே துரத்துகின்றன. 

அவன் தலையை உதறிக் கொண்டான். முதலில் வயிற்றுக்கு ஏதாவது போட்டு அதன் கூக்குரலை அடக்க வேண்டும். அதற்காகவாவது தான் நடந்தாக வேண்டும் என்கிற முனைப்போடு நடையை எட்டிப் போட்டான். வழியில் ஒரு மண் சட்டி கிடந்தது. எதற்காவது உதவும் என அதை எடுத்து, ஒரு செடியில் இலைகளைப் பறித்து, அதைச் சுத்தம் செய்தான். அதை கையோடு அணைத்துப் பிடித்தபடி மேலே சென்றான். குலசேகர பாண்டியனின் கோட்டையில் அவனை யாரும் தடுக்கவில்லை. அவனுடைய பண்டாரக் கோலம் அவனுக்கு உள்ளே நுழைவதற்கான உரிமையைக் கொடுப்பது போல் இருந்தது. அதே நேரத்தில், அவனை யாரும் பொருட்படுத்தவும் இல்லை. 

பசி அவனுடைய சுய கௌரவம், தயக்கம் அனைத்தையும் கொன்று போட்டிருந்தது. முதலில் தெரிந்த வீட்டுக்கு முன்னால் போய் நின்றான். வாசலில் ஒரு சேவலும் நான்கு கோழிகளும், உலர்வதற்காகக் கொட்டி வைக்கப்பட்டிருந்த தினையரிசியைச் சுதந்திரமாகக் கொத்தித் தின்று கொண்டிருந்தன. இரு பக்கமும் விரிந்து கிடந்த திண்ணையும், மரக்கதவில் பதிக்கப்பட்டிருந்த வெள்ளிக் குமிழ்களும் அவனுக்கு ஏதாவது கிடைக்கும் என்கிற நம்பிக்கையை ஊட்டின.

``தாயே... மகராசி... மிகவும் பசிக்கிறதம்மா...’’

எட்டிப் பார்த்தவள் வீட்டு எஜமானி மாதிரி தெரியவில்லை. அவள் முகம் கடுகடுவென இருந்தது. எரிச்சலோடு ஒரு பாத்திரத்தில் இருந்த புளித்த கஞ்சியை இவன் கையில் வைத்திருந்த மண் சட்டியில் ஊற்றினாள். அதீதப் பசியாக இருந்தாலும், ஊசிப்போன கஞ்சியின் வாடை இவனை முகம் சுளிக்கச் செய்தது. குமட்டிக்கொண்டு வந்தது.

``பசின்னு வந்து கேட்டதுக்கு இரக்கப்பட்டு கஞ்சி ஊத்துனா மூஞ்சியைவா தூக்குறே? ஓடு! இன்னும் இங்கே நின்னே... உலக்கையை எடுத்து மண்டையை உடைச்சுப்புடுவேன்...’’அவன் சற்று தூரம் நடந்துபோய், மண் சட்டியில் இருந்த கஞ்சியைத் தெருவோரத்தில் குப்பையில் கொட்டினான். அடுத்த வீடு... அங்கேயும் துரத்தல். மேலும் இரண்டு வீடுகள். அவனுக்கு யாரும் மனம் இரங்கவில்லை. மனிதம் அற்றுப்போய்விட்டதா? அவன் தோற்றம் யாருக்கும் பிடிக்கவில்லையா? இல்லை... இந்த ஊர் முழுக்க எல்லோரும் இப்படித்தான் இருப்பார்களோ? பசிக்கு உணவு கிடைக்காமலேயே போய்விடுமோ? அவன் உடல் நடுங்கியது. அடுத்த வீட்டுத் திண்ணையில் சாய்ந்தாற்போல் நின்றுகொண்டு அவன் குரல் கொடுத்தான். ``தாயே... தாயே... பசியம்மா...’’

உள்ளிருந்து வந்த பெண் ஒல்லியான உடல் வாகோடு இருந்தாள். அவனை ஏற இறங்கப் பார்த்தாள்.  ``என்ன... பசிக்குதா? தடி மாடு மாதிரி வளர்ந்திருக்கே... ஏன் பிச்சை எடுக்குறே? போ... போ. நல்லா இருக்குற கையி காலை வெச்சுக்கிட்டு வேலை செஞ்சு பிழைக்காம பிச்சை எடுக்க வந்துட்டியே... வெக்கமா இல்லை? போ... போ!’’ அவள் உள்ளே போய் வாசல் கதவை சத்தம் வருகிற மாதிரி அறைந்து சாத்தினாள்.

இனி ஊரை நம்பிப் பிரயோஜனமில்லை. அவன் திரும்பி நடந்து, ஊரைவிட்டு வெளியே வந்தான். அடர்ந்த காடு தெரிந்தது. நகரம் கைவிட்டது; காடு வாழ வைக்காதா? அவனுக்குச் சிறு நம்பிக்கை இருந்தது. கையில் கிடைத்தது முசுமுசுக்கைக் கீரைதான். முயல்கள் சாப்பிடும் கீரை. ஒரு கணம் தயங்கினான். அருகே காட்டு வெங்காயச் செடி. அதில் முளைத்திருந்த இரண்டு வெங்காயப் பிஞ்சுகளைப் பறித்தான். கீரையைப் பறித்து வெங்காயத்தோடு சேர்த்துக் கடித்து, மென்று விழுங்கினான். மேலும் கொஞ்சம் சாப்பிட்டதில், பசியடங்கி உடலில் தெம்பு வந்ததுபோல் இருந்தது. அருகிலேயே சுனை. கண்ணாடிபோல் மினுங்கிய தண்ணீரைக் கைகளால் வாரி வாரி எடுத்து விழுங்கினான். அப்படியே கரையில் அமர்ந்தான்.

`இனி பிச்சையெடுக்கக் கூடாது.’ தனக்குத் தானே அழுத்தமாகச் சொல்லிக்கொண்டான்.

அவனது இந்த முடிவை சாத்தியப்படுத்தவே செய்தது விதி. அவனும் தடியெடுத்து வரி வசூலிக் கும் காலமும் வாய்த்தது! எப்படி தெரியுமா?

- கதை நகரும்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொகுப்பு: பாலுசத்யா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism