மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - 35

சிவமகுடம் - 35
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - 35

ஆலவாய் ஆதிரையான் - ஓவியம்: ஸ்யாம்

கரும்புரவியில் வந்த ஆபத்து!

மெள்ள மெள்ள உச்சிக்கு ஏறிக்கொண்டிருந்த கதிரவனின் வெம்மை, உறையூர் போர்க்களத்தை இன்னும் உக்கிரமாக்கும் வகையில் கடுமையாய் தகிக்கத் தொடங்கியிருந்தது. கதிரவனின் கிரணங்கள்பட்டு, பளபளத்த வீரர்களின் வாள்கள் ஒன்றோடு ஒன்று மோதி உராய்ந்தக் காட்சி, ஒரே நேரத்தில் ஓராயிரம் மின்னல்கள் தோன்றி தங்களுக்குள் மோதிக்கொள்வதுபோல் இருந்தது.

வாள்களின் மோதலின் காரணமாக ‘க்ளீங்’, ‘க்ளாங்’ என்று தொடர்ந்து எழும்பிய ஓசைகள், அன்று சண்டமுண்டர்களை வதைக்க யுத்த பூமியில் கோரதாண்டவம் ஆடிய காளிதேவியின் சிலம்போசையை ஒத்ததாக இருந்தது. அத்துடன், தங்களது எஜமானரின் கட்டளைக்கேற்ப, கருங்குன்றுகள் பெயர்ந்து நகர்வது போன்று களத்தில் நிலமதிர ஓடிக்கொண்டிருந்த களிறுகளின் பிளறல்களும், காயம்பட்டு நிலத்தில் விழும் மறவர்களின் ஓலமும்  சேர்ந்து அந்தக் களத்தில் கர்ணக்கொடூரமான பிரளயச்சூழலை சிருஷ்டித்தன.

கோட்டை அகழியை நோக்கி சோழ வீரர்களை  நெருக்கித் தள்ளும் உத்வேகத்துடன் பாண்டிய படைகள் சீற்றம் காட்ட, அதற்கு இடம் கொடுக்காமல் தீரத்துடன் எதிர்த்துப் போராடிக்கொண்டிருந்தது சோழர்களின் கோட்டைப் புறக்காவல் சைன்னியம். அவர்களுக்கு உதவியாக மதிலின் மீதிருந்து சோழ வில்லாளிகள் அம்புமாரிப் பொழிந்து கொண்டிருந்தார்கள் பாண்டியர்கள் மீது. அந்த அம்புகள் தைத்ததால் பெரும் வேதனையோடு கனைத்தபடி திசைமாறித்  திமிறிய புரவிகள் பலவும், பாண்டியர்களின் காலாட்படைகளுக்கு சேதம் விளைவிக்கவே செய்தன.

சிவமகுடம் - 35

இப்படியான விளைவுகள், கூன்பாண்டியர் ஏற்கெனவே  எதிர்பார்த்தவைதான்.

போர் வியூகம் குறித்து பழம்பெரும் நூல்கள் சில இலக்கணங்களை வகுத்திருக்கின்றன. படைத்தலைவனானவன், தனது தரப்பின் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கும் இடங்களில் இப்படித்தான் வியூகம் வகுக்க வேண்டும் என்று பாடம் நடத்துகின்றன. அதாவது, படைகளின் முன்னணியில் குந்தகம் எனில் மகர வியூகம் கைகொடுக்கும்; படைகளுக்குப் பின்புறத்தில் ஆபத்து எனில் சகட வியூகம் அமைக்க வேண்டும்; முன்னும் பின்னும் பகைவர் தாக்குதல் பலமானால் உடனடியாக வச்ர வியூகத்தைக் கையாள வேண்டும்; எல்லாப் புறத்திலும் இருந்து ஆபத்து நேருமாயின், தமது வியூகத்தை சருவதோபத்ர வியூகமாக மாற்றிக்கொள்ள வேண்டுமாம்.

ஆனால், கூன்பாண்டியரோ வழக்கத்துக்கு மாறானவரானபடியால், மேற்சொன்ன போர்முறைகள் எதையும் அவர் கடைப் பிடிக்கவில்லை. தமக்கேயுரிய பாணியில் அவர் திட்டமிட்டிருக்கும் புதுவித வியூகங்கள் முதலில் சற்று சேதத்தையும், முடிவில் பெரிய வெற்றியையும் அளிக்கும் என்பதில் அவருக்குச் சிறிதும் ஐயமில்லை. ஆகவே, அகத்திலும் முகத்திலும் எவ்விதச் சலனமுமின்றி போரின் போக்கைக் கவனித்துக்கொண்டிருந்தார்.

அவரது அமைதிக்கு, தமது திட்டங்களின் மீது அவருக்கிருந்த திடமான நம்பிக்கை மட்டுமல்ல, காலைப்பொழுதில் உப தளபதி கொடுத்துச் சென்ற அந்த வஸ்துவும் ஒரு காரணம்!

அன்றையப் பொழுதின் தொடக்கத்தில் அவருக்கிருந்த மனக் குழப்பங்களுக்கெல்லாம் தெளிவான தீர்வை அளித்திருந்தது அந்த வஸ்து. ஆம்! உறையூர் மந்திராலோசனை மண்டபம் மற்றும் கோட்டைச் சமவெளியில் சோழாதிபதியின் மீதும், வனப்பாதையில்  தன் மீதும் நிகழ்ந்த கொலை முயற்சிகளுக்குக் காரணமானவர் யாரென்று அறியாத முடியாததால் உண்டான குழப்பத்தைத் தீர்த்துவைத்தது, உப தளபதி கொண்டுவந்து கொடுத்த அந்த நாகக் கணையாழி. காரணம், யாரென்பதை அறிந்தபிறகு மிகவும் மனச் சந்துஷ்டிக்கு ஆளானார் கூன்பாண்டியர்.

தொடர்ந்து, தமது படையணி ஒன்று சேர தேசம் நோக்கி நகர்வதற்கான உத்தரவையும், மற்றுமுள்ள படைத்தலைவர்களுக்கு,  ஏற்கெனவே தாம் தீட்டிவைத்திருந்த திட்டங்களையே கட்டளையாகவும் தந்துவிட்டு, பாசறையை ஒட்டியிருந்த உயரமான மேட்டின் மீது ஏறி நின்றபடி, உக்கிரமாகத் தொடங்கிவிட்ட போரைக் கவனிக்கத் தொடங்கினார்.

பாண்டிய தரப்புக்குச் சேதம் அதிகம் என்றாலும் தமது திட்டப்படியே, போரின் போக்கு நகர்வதைக் கண்டவர் பெரும் திருப்திக்கு ஆளானார். ஆகவே, ‘சோழ பிரானோ, சோழ இளவரசியோ எங்கும் தலைகாட்டவில்லையே ஏன்’ என்று தமக்குள் எழுந்த கேள்வியைக்கூட அவர் பொருட்படுத்தினார் இல்லை. அதே திருப்தியோடு, ‘இனி நமது தலையீடு தேவையிருக்காது; படைத் தலைவர்கள் கவனித்துக்கொள்வார்கள்’ என்ற எண்ணத் தோடு அவர் நகர முற்பட்ட வேளையில்தான், மதிலின் மீது முரசங்களும், எக்காளங்களும் மிகப்பெரிதாய் ஒலித்தன. அத்துடன் கோட்டைக்குள் இருந்து ஜெயகோஷம் போன்று விண்ணைப் பிளக்கும்விதமாக எழுந்த ‘சிவ நாம’ கோஷமும் கூன்பாண்டியரை அங்கிருந்து நகரவொட்டாமல் அடித்தது.

தொடர்ந்து கோட்டைக் கதவுகள் திறக்க, உள்ளுக்குள் இருந்து புயலென பாய்ந்து வெளியேறிய புரவிப்படை, பாண்டியர்கள் மீது பாய்ந்தது. இதைக் கூன்பாண்டியர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதுமட்டுமின்றி அடுத்தடுத்து நிகழ்ந்தவை அனைத்தும் அவரை அசரவைத்தன.

‘எப்படியும் ஆயிரம் புரவிகள் இருக்கும் இந்தப் படையணியில்’ என்று சடுதியில் கணித்துவிட்ட கூன்பாண்டியரின் பார்வையில், முதலில் வெளியேறிய  சில புரவிகள் என்னவோ சாதாரணமாகவே தெரிந்தன. ஆனால், அடுத்தடுத்து வந்த புரவிகளைக் கண்டதும் அதிர்ந்துபோனார் அவர்.

ஆமாம், அந்தப் புரவிகள் ஒவ்வொன்றின் மீது இரண்டு வீரர்கள் எதிரெதிர் திசையை நோக்கி அமர்ந்திருந்தார்கள். முன்னால் இருந்தவன் புரவியை வேகமாகச் செலுத்தியபடி வாள் சுழற்றிவர,  அவன் முதுகோடு தனது முதுகைச் சாய்த்து பின்னோக்கி அமர்ந்திருந்த மற்றொருவன் வில்லாளியாக இருந்தான். அதுமட்டுமா? அந்தப் புரவிகளில் வேறொரு விநோதத்தையும் கண்டார் கூன்பாண்டியர். அந்தக் காட்சி மயிர்க்கூச்செரியச் செய்தது!

உயிரைத் துச்சமாகக் கருதினால் மட்டுமே, இப்படியோர் அசாத்தியத்தை நிகழ்த்தமுடியும். வீரர்கள் என்றைக்கும் தங்களின் உயிரைப் பொருட்படுத்துவது இல்லைதான். எனினும் இந்த முயற்சி, சிறிது பிசகினாலும் மிகக் கோரமான மரணத்தையல்லவா அளித்துவிடும். இப்படியான நினைப்பிலும் அதனால் உண்டான  மலைப்பிலும் ஒருகணம் ஸ்தம்பித்து நின்றுவிட்டார் கூன்பாண்டியர்.

ஆம்! இருவரைச் சுமந்துவந்த புரவியின் வயிற்றுடன் சேர்த்து, தரையை நோக்கியவாறு பிணைக்கப்பட்டிருந்தான் மூன்றாவதாக ஒரு வீரன். அவன் கரங்களில் இரு முனைகளிலும் கூர்பொருந்திய வேல். அதை மிக வலுவுடன் இடமும் வலமுமாக அசைப்பது மட்டுமே அவன் வேலையாக இருந்தது. புரவியின் வேகமும் அவனது வேல் அசைப்பும் அந்தப் புரவியை இருபுறமும் நெருங்கி வரும் பாண்டிய வீரர்களுக்கும், புரவிகளுக்கும் கடும் சேதத்தை விளைவித்துக்கொண்டிருந்தன. ஆக, கூன்பாண்டியர் கணித்தது போல் வெளியேறியது ஆயிரம் புரவிகள் எனில், புரவிக்கு மூவராக மூவாயிரம் பேர். விநோதமான படையணி - விபரீதமான தாக்குதல்!

அந்தப் படையைக் காட்டிலும், அதன் முன்னணியில் கரும்புரவி ஒன்றின் மீது அமர்ந்தபடி, படையை வழிநடத்திய கவச வீரனே, அடுத்ததொரு துரித நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கினான் கூன்பாண்டியரை. அவன் இன்னாரென்று கூன்பாண்டியரின் மனம் ஓரளவு கணித்துச்சொன்னதுமே துடித்தெழுந்தார் அவர். சட்டென்று தமது புரவியை வரவழைத்து ஏறி, களத்தின் மையத்தை நோக்கி விரைந்தார்.
காலம் பெரும் விளையாட்டை நிகழ்த்த தொடங்கியது அந்தப் போர்க்களத்தில். ஆம்! அன்றைய நாளின் முதல் பாதியைப்போல், பிற்பாதி அவ்வளவு சாதகமாக அமையவில்லை  கூன்பாண்டியருக்கு.

ஆபத்தான அந்தப் படை, தனது பெரும்படைப் பிரிவுக்குள் ஊடுருவிப் பிளந்து, பின்பக்கமாக வர யத்தனிக்கிறது என்று யூகித்தார் அவர். அப்படி, சோழர்களின் அந்தச் சைன்னியம் கோட்டை இருக்கும் திசையில் இருந்து தமது படைகளைப் பிளந்து எதிர்திசைக்கு வந்துவிட்டால், பாண்டிய சேனை நடுவில் மாட்டிக் கொள்ளும். பிறகு, எண்ணிக்கை பலம் கைகொடுக்காது; விளைவு விபரீதமாகும் என்று கருதினார். இதைத் தடுக்கவே தானே களத்தின் மையத்துக்கு விரைந்தார். ஆனால், தமது யூகமும் முடிவும் எவ்வளவு தவறானவை என்பது, கரும்புரவியை நெருங்கிய போதுதான் அவருக்குத் தெரியவந்தது!

அதுமட்டுமா? கரும்புரவியை அவர் நெருங்கிய அதே தருணத்தில், பாண்டிய சைன்னியத்தை நோக்கி... இடப்புறத் திக்கில் பொங்கிதேவி உடன்வர கோச்செங்கணும், வலப்புறத் திக்கில் நம்பிதேவனும் படைகளோடு முன்னேறுவதைக் கண்டார்.

மறுகணம், அவரையும் அறியாமல் வாய்விட்டுக் கத்தினார்...

‘‘இவர்கள் எப்படித் தப்பினார்கள்?’’

- மகுடம் சூடுவோம்...