Published:Updated:

பாட்டாலே பக்தி செய்வேன்!

பாட்டாலே பக்தி செய்வேன்!
பிரீமியம் ஸ்டோரி
பாட்டாலே பக்தி செய்வேன்!

பிரேமா நாராயணன் - படங்கள்: ஆர்.முத்துக்குமார், ப.சரவணகுமார்

பாட்டாலே பக்தி செய்வேன்!

பிரேமா நாராயணன் - படங்கள்: ஆர்.முத்துக்குமார், ப.சரவணகுமார்

Published:Updated:
பாட்டாலே பக்தி செய்வேன்!
பிரீமியம் ஸ்டோரி
பாட்டாலே பக்தி செய்வேன்!

யது 70. சற்று பூசின தேகம், வெள்ளியாய் மின்னும் கேசம், சாந்தம் தவழும் முகம்... இதுதான் சாந்தா சுப்ரமணியன். 27 வருடங்களாக இவர் செய்துவரும் ஆன்மிகச் சேவை, அமைதியானது, ஆர்ப்பாட்ட மில்லாதது. ஆனால், ஆண்டவனுக்கு மிக நெருக்கமானது; பிடித்தமானதும்கூட!

ஆன்மிகச் சேவை என்றதும், கோயில் கோயிலாகச் சென்று உழவாரப்பணிகள் செய்வதோ, பூஜை-புனஸ்காரங்கள் செய்வதோ, விரதங்கள் கடைப்பிடிப்பதோ என்று எண்ணி விட வேண்டாம். இவற்றில் இருந்து மாறுபட்டது இவரது ஆன்மிகச் சேவை.

ஆம்! சிறிய சுலோகத்தில் தொடங்கி, சௌந்தர்ய லஹரி போன்ற பெரிய பாடல்கள் வரை, இறைவனைப் போற்றும் எல்லாப் பாடல் களையும் இலவசமாகக் கற்றுத் தரும் பாட்டு வகுப்புகள் நடத்திவருகிறார் சாந்தா சுப்ரமணியன்.

தி.நகரில், வழக்கமாக அவர் வகுப்பு எடுக்கும் இல்லம் ஒன்றில் சாந்தாவைச் சந்தித்தோம்.

‘‘எனக்கு சொந்த ஊர் திருவனந்தபுரம். திருவனந்தபுரம் மியூசிக் காலேஜில் வீணை படிச்சேன். அப்போ, ஜி.என்.பி. ஐயாதான் பிரின்சிபால். அவருக்கு அப்புறம் வந்தவர், செம்மங்குடி. இப்படி ஜாம்பவான்கள் பலரின் பார்வையும் பாதங்களும்பட்ட இடத்தில் படிச்சதே பெரிய பாக்கியம்.

பாட்டாலே பக்தி செய்வேன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எங்க வீட்டில் எல்லோருக்குமே சங்கீத ஞானம் உண்டு. எங்க மாமா திருவனந்தபுரம் ஆர்.எஸ்.மணி, அவர் பொண்ணு விசாலாட்சி நித்யானந்தம்னு எல்லாருமே சங்கீதத் துறையில் தான் இருக்காங்க. 50 வருடங்களுக்கு முன் கல்யாணமாகி, கணவரோடு இங்கே குடித்தனம் வந்தேன். பொண்ணுங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணியாச்சு’’ என்றவர், பாட்டுப் பணிக்கு வந்தது பற்றிப் பேசினார்.

‘‘லக்ஷ்மி வெங்கடாசலம் என்கிற என் பள்ளித் தோழியும் இங்கேயேதான் செட்டில் ஆகியிருந்தா. அவ நல்லாப் பாடுவா. வீட்டிலேயே பாட்டு க்ளாஸ் எடுத்திட்டிருந்தா. பக்கத்தில் ஒரு வீட்டுக்கு அவ பாட்டு சொல்லித்தர வந்தப்ப, நானும் அவகிட்ட பாட்டு கத்துக்க ஆரம்பிச்சேன். பஞ்சரத்தினம், ஊத்துக்காடு நவவர்ணம்னு கஷ்டமான பாட்டுகளையும் மிக எளிமையா சொல்லிக் கொடுத்தா. ஓரளவுக்கு நல்லாக் கத்துக்கிட்ட பின் ஒருநாள், ‘இன்னும் ரெண்டு, மூணு பேர் கேட்டுட்டே இருக்காங்க. எனக்கு க்ளாஸ் எடுக்க முடியல. நேரம் சரிபட்டு வரல. நீ எடுக்கிறியா சாந்தா?’ன்னு என்னைக் கேட்டா. எனக்கும் ஒரு பொழுதுபோக்கா இருக்குமேன்னு, சரின்னு சொன்னேன். எங்க தெருவிலேயே மூணு, நாலு பேருக்குச் சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சேன்!’’ - என்றவர், தனது பாடல் வகுப்பின் பயணத்தைப் பற்றி தொடர்ந்து விவரித்தார்.

‘‘விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம், சௌந்தர்ய லஹரி, அபிராமி அந்தாதி, திருப்பாவை, திருவெம்பாவை, காமாட்சி நவவர்ணம், மீனாட்சி அந்தாதி, அஷ்டபதின்னு எல்லாமே சொல்லித் தர ஆரம்பிச்சேன். திருப்புகழையும் விட்டுவைக்கல. வேறோர் இடத்தில் முறையா கத்துக்கிட்டு, அதையும் சொல்லிக் கொடுக்கிறேன். ஆக, என் தோழி லக்ஷ்மிதான் என் குரு. சிறு பாடல்களை நிறைய கத்துக்கொடுத்து, ஒரு நல்ல உபயோகமான திருத்தொண்டுக்குப் பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்தா... நான் அதிலிருந்து அடுத்தடுத்த கட்டங்களுக்கு, ஆண்டவன் கருணையால் வந்திருக்கேன்.

முதல் 15 வருஷங்கள் எங்க வீட்டிலேயே தான் வகுப்பு எடுத்தேன். அங்கே வந்து போறதுக்கு நிறையப் பேர் சிரமப்பட்டதால, எல்லோருக்கும் சென்டரான இந்த இடத்துக்கு மாத்திட்டேன். இது என் மாணவியின் வீடுதான். வாரத்துக்கு ரெண்டு நாள், ரெண்டு மணி நேரம் க்ளாஸ் எடுக்கிறேன். 20 முதல் 25 பேர் வர்றாங்க. எல்லா வயசிலும் மாணவிகள் வந்து கத்துக்கிறாங்க. வகுப்புகள் எல்லாமே இலவசம்தான்.

விசேஷ தினங்களில் ஒவ்வொருத்தர் வீட்டுக்கும் போய்  குழுவா சேர்ந்து பாடுவோம். தெய்வப்பாடல்களால் வீடே கோயிலாயிடும். அற்புதமான அனுபவம் அது’’ எனக்கூறும் சாந்தாவின் திருப்பணிக்கு, அவருடைய குடும்பத்தினர் நல்ல சப்போர்ட்.

பாட்டாலே பக்தி செய்வேன்!

இசையாலும் பாட்டாலும் இறைவன் நம் வசமாவான் என்பதற்கு உதாரணமாக ஓர் அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார் சாந்தா.

‘‘கமலாம்பாள் நவவர்ணம் கத்துக்கிட்ட தருணம். திருவாரூர் போயிருந்தோம். கோயில் நடை சாத்தியிருந்தது. குருக்களையும் காணோம். நாங்களோ, திருவாரூர் கோயிலைத் தரிசிச்சுட்டு, அடுத்தடுத்த ஊர்களுக்குப் போகலாம்னு திட்டம் வைத்திருந்தோம்.   ரொம்ப நேரம் காத்திருக்க முடியாத சூழல். ‘சரி, வந்தது வந்தாச்சு... உட்கார்ந்து அம்பாள் மேல ரெண்டு பாட்டாவது பாடிட்டுக் கிளம்லபாம்!’னு முடிவு செய்து மண்டபத்துலேயே உட்கார்ந்து பாட ஆரம்பிச்சேன்.

என்னோட பாட்டைக் கேட்டதும் எங்கிருந்தோ வேகமாக வந்த குருக்கள், கதவைத் திறந்து, விளக்கேத்தி வெச்சுட்டு, அவரும் அங்கேயே உக்காந்து பாட்டை முழுமையாகக் கேட்டார். பாட்டை முடிச்சு, கமலாம்பாளைப் பார்த்தேன்... அவள் ஏதோ அர்த்த புஷ்டியோடு புன்னகை செய்றா மாதிரி தோணுச்சு எனக்கு. அப்படியே சிலிர்த்துப் போயிட்டுச்சு உடம்பு!’’ என்று சிலிர்ப்பும் சிலாகிப்புமாக கூறும் சாந்தாவுக்கு, 2015-ம் ஆண்டில், காஞ்சி மடத்தின் ‘சிறந்த குரு சேவா’ விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

‘‘தெய்வப் பாடல்களைப் பாடுவ தற்குக் கத்துக்க விருப்பம் உள்ளவங் களுக்கு, எனக்கு நேரம் கிடைக்கிறதைப் பொறுத்து வகுப்புகள் எடுக்க தயாரா இருக்கிறேன். கடவுள் பணியைக் காலம் கடந்தும் நிலைக்கச் செய்வது பெரும் பாக்கியம் இல்லையா’’ என்று மென்புன்னகையோடு கூறிய சாந்தா, இனிய குரலில் அன்றைய வகுப்புக் கான பாடலைப் பாடத் தொடங்கி னார்.

‘மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்பெறுவது நீறு...’


திருநீற்றுப் பதிகத்தை அவர் பாடப் பாட, 30 முதல் 70 வயது வரையிலான அவருடைய மாணவியரும் உடன் சேர்ந்து பாட, அவர் சொன்னதுபோல் அந்த வீடே கோயிலாகத் தோன்றியது நமக்கு. அடுத்தடுத்தப் பதிகங்களால் அவர்கள் இறைவனைப் பாடிக் கொண்டிருக்க, அவர்களின் முகங் களில் வெளிப்பட்ட ஆனந்தத்திலும் பரவசத்திலும் பரமனையே தரிசித்த சிலிர்ப்போடு விடைபெற்றோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism