Published:Updated:

குருவே சரணம் - அன்னமாச்சார்யா

குருவே சரணம் - அன்னமாச்சார்யா
பிரீமியம் ஸ்டோரி
குருவே சரணம் - அன்னமாச்சார்யா

பிரபுநந்த கிரிதர், ஓவியங்கள்: ஜெ.பி

குருவே சரணம் - அன்னமாச்சார்யா

பிரபுநந்த கிரிதர், ஓவியங்கள்: ஜெ.பி

Published:Updated:
குருவே சரணம் - அன்னமாச்சார்யா
பிரீமியம் ஸ்டோரி
குருவே சரணம் - அன்னமாச்சார்யா

ன்னமய்யா திருமலையை அடைந்து வேங்கடாசலபதியின் திருவடிவைப் பார்த்து மெய்ம்மறந்து பாடி இன்பமுற்றதற்கு அடுத்த நாளே, ஓர் இனிமையான ஆச்சர்யமூட்டும் அனுபவம் காத்திருந்தது. வராக தீர்த்தத்தில் நீராடி வேங்கடவனின் சந்நிதிக்குள் நுழைய முயலும்போது, ஏகாதசியான அன்று, அந்த வேளையில் கதவுகள் சாத்தப்பட்டிருந்தன. அப்போது, தான் இயற்றிய ஒரு பாடலை அன்னமய்யா பாட, கதவுகள் தாமாகத் திறந்து வழிவிட்டன. அர்ச்சகர் இதைக் கண்டு வியப்பில் மூழ்கினார்.

குருவே சரணம் - அன்னமாச்சார்யா

இனி தனது வாழ்க்கையே திருமலையில்தான் எனத் தீர்மானம் செய்து கொண்டார் அன்னமய்யா.

அப்போது திருமலையில் `கண விஷ்ணு' என்ற பெயர்கொண்ட யோகி ஒருவர் இருந்தார். அவரின் கனவில் தோன்றிய இறைவன், ‘‘என் பரம பக்தனான அன்னமய்யா இப்போது திருமலையில் இருக்கிறான். அவனுக்கு முத்ரதாரணத்தை நீ செய்துவைக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குருவே சரணம் - அன்னமாச்சார்யா

அதன்படியே அன்னமய்யாவைத் தேடிக் கண்டுபிடித்த யோகி,  அவருக்குப் பஞ்ச சம்ஸ்காரம் செய்துவைத்தார். அதாவது, அன்னமய்யாவின் இரு தோள்களிலும் சங்கு மற்றும் சக்கர உருவங்களைப் பொறித்தார். பிறகு, திருமாலின் பன்னிரண்டு திருநாமங்களையும் அன்னமய்யாவின் உடலிலுள்ள பல்வேறு பகுதிகளில் எழுதினார்.  இதை முத்ரதாரணம் என்பார்கள். அப்போதிலிருந்து அன்னமய்யா ‘அன்னமாச்சார்யா’ என்று அழைக்கப் பெற்றார்.

சுமார் எட்டு வயதில் திருமலையை அடைந்த அன்னமாச்சார்யா, பதினாறு வயதுவரை அங்கேதான் இருந்தார்.  திருமாலைக் குறித்த பல பாடல்களை இயற்றி ஆனந்தப்பட்டார். மேலும் சில வருடங்கள் இந்தத் தெய்விகப் பரவசத்தில் கழிந்தன. இதற்குள் அவரைத் தேடி அலைந்த அவரின் பெற்றோர், திருமலை வந்து சேர்ந்தனர். அன்னமய்யா உடனே தாள்ளபாக்கத்துக்கு வர வேண்டுமென்றும் தாங்கள் பார்த்து வைத்திருக்கும் இரண்டு பெண்களையும் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றும் வற்புறுத்தினார்கள்.  மறுத்தார் அன்னமாச்சார்யா. ஆனால், இறைவனே கனவில் தோன்றி, ‘‘நீ திருமணம் செய்துகொள்.  உன் வாரிசுகளும் பெரும் பெயர் பெற்று என் புகழைப் பாடுவார்கள்’’ என்று கூற, அன்னமாச்சார்யா ஒப்புக்கொண்டார்.

திருமண வாழ்வில் ஈடுபட்டாலும் பாதி நாள்களைத் திருமலையில்தான் கழித்தார் அன்னமாச்சார்யா.  தினமும் வேங்கடாசலபதி மீது ஒரு பாடலாவது இயற்றாமல் விட்டதில்லை அவர்.
பிறகு, அகோபிலத்துக்குச் சென்று அந்த மடத்தை ஸ்தாபித்த சடகோப எதியை அணுகி அவரோடு பல வருடங்கள் கழித்தார். அப்போது வால்மீகி ராமாயணம், நாலாயிர திவ்யபிரபந்தம் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார்.

குருவே சரணம் - அன்னமாச்சார்யா

தாள்ளபாக்கத்துக்கு அருகில் இருந்த `டங்குடூரு' என்ற ஊரின் தலைவராக விளங்கிய நரசிம்மராயர், அன்னமாச்சார்யாவின் வாழ்க்கையைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரை அணுகி தனது சிறப்பு விருந்தினராகத் தங்கும்படி வேண்டினார்.  நரசிம்மராயரின் பணிவைக் கண்ட அன்னமாச்சார்யா, அவருடன் அவ்வப்போது தங்கினார். அதன்பின், நரசிம்மராயருக்கு நாளடை வில் பல உயர்வுகள். விஜயநகர சாம்ராஜ்யத்தில் உள்ள `பெனுகொண்டா' கோட்டையை ஆள்பவராக உயர்வு பெற்றார். இந்த உயர்வுக்கெல் லாம் காரணம், அன்னமாச்சார்யாவின் ஆசிதான் என நம்பினார் நரசிம்மராயர்.

வேங்கடாசலபதி மீது அன்னமாச்சார்யா இயற்றும் பாடல்களில் பெரிதும் நெகிழ்ந்துபோன நரசிம்மராயருக்கு, ஒருநாள் விபரீத ஆசை ஒன்று எழுந்தது.  ‘‘ஆச்சார்யரே, நீங்கள் என் மீதும் ஒரு பாடல் இயற்ற வேண்டும்’’ என்று வேண்டிக் கொண்டார்.  ஒருவேளை இலக்கியத்தில் தான் சாகாவரம் பெற வேண்டும் என்ற ஆசையே அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.  ஆனால், இறைவனைப் பாடும்  வாயால் ஒரு மானிடனைப் பாட மாட்டேன் என்பதை அன்னமாச்சார்யா சற்று உக்கிரமாகவே தெரிவித்துவிட்டார்.  ராஜ சபையில் அனைவரின் எதிரே தன் வேண்டுகோள் மறுக்கப்பட்டதில் நரசிம்மராயருக்குக் கடும் கோபம்.  அன்னமாச்சார்யாவை இரும்புச் சங்கிலிகளால் பிணைத்துச் சிறையில் அடைத்தார்.  வேங்கடவனை வேண்டி மனம் உருகி அன்னமாச்சார்யா ஒரு பாடலைப் பாட,  சங்கிலிகள் அறுந்து விழுந்தன.

குருவே சரணம் - அன்னமாச்சார்யா

இந்த அதிசயத்தைக் கண்ட காவலர்கள், விரைந்து சென்று நரசிம்மராயரிடம் விவரம் கூறினார்கள்.

‘என்ன..! ஒரு பாடலைப் பாடியதும் அன்னமாச் சார்யாவைப் பிணைத்திருந்த சங்கிலிகள் தாமாக அறுந்து விழுந்தனவா!’ - அன்னமாச்சார்யாவின் அருமையை அறிந்தவராயினும் நரசிம்மராயரால் இதை நம்பவே முடியவில்லை. மீண்டும் ஒரு தவறு செய்தார். அதுவும் ஒருவிதத்தில் நல்லதாகவே முடிந்தது. புடம் போடப்படும்போது தங்கம் மேலும் மேலும் சிறப்பு பெறுகிறது அல்லவா?

‘காவலர்களுக்குக் கையூட்டு கொடுத்து சங்கிலிகளை அறுக்கச் செய்திருப்பாரோ?’ என்று எண்ணிய நரசிம்மராயர், மீண்டும் சிறைக்குச் சென்று அந்த தெய்விகக் கலைஞரின் கைகளையும் கால்களையும் மறுபடி சங்கிலிகளால் பிணைக்கச் செய்தார்.  ‘இப்போது பாடி என் கண்ணெதிரே உங்களை விடுவித்துக்கொள்ளுங்கள், பார்ப்போம்!’ என்றார் ஏளனமாக.

தான் முன்பு பாடிய பாடலையே அன்னமாச்சார்யா மீண்டும் பாட, சங்கிலிகள் அறுபட்டன.  கூடவே நரசிம்ம ராயரின் அகங்காரமும் அறுந்தது. அன்னமாச்சார்யாவின் கால்களில் விழுந்து பணிந்தார் அவர்.
அன்னமாச்சார்யாவின் புகழை நிலைநிறுத்தும் மற்றோர் இடம் ஸ்ரீநிவாசமங்காபுரம்.  திருப்பதிக்கு அருகே உள்ளது இந்த மகத்துவமிக்க தலம்.  திருமணமானதும் வேங்கடேசப் பெருமாளும் பத்மாவதி தாயாரும்  இங்குதான் ஆறு மாதங்கள் தங்கினார்களாம். காரணம், திருமணமாகி ஆறு மாத காலம்வரை தம்பதியர் மலையேறக் கூடாது என்பது மரபு. தங்குவதற்கு இந்த இடத்தை இறைவன் தேர்ந்தெடுத்ததற்கு வேறொரு காரணமும் உண்டு.  வேங்கடவன் இளம் வயதில் ஒரு  புற்றுக்குள் அமர்ந்து தவம் செய்தபோது,  அவர் பசியால் வாடக்கூடாதே என்று அன்பு மிகுதியால்  பசு மாடு ஒன்று அந்தப் புற்றுக்கு நேரே வந்து நின்று தானாகப் பால் சொரிந்த நெகிழ்ச்சியூட்டும் சம்பவம் நடந்தது இந்தத் தலத்தில்தான்.

இங்கு ஸ்ரீகல்யாண வேங்கடேஸ்வரர், எட்டடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார்.

குருவே சரணம் - அன்னமாச்சார்யா

‘திருமலையில் உள்ள ஆண்டவனின் உயரம் ஆறடிதான்.  ஆனால், ஸ்ரீநிவாசமங்காபுரத்திலோ அவரது உயரம் எட்டடி’ என்று பெருமிதம் பொங்கச் சொல்கிறார்கள், உள்ளூர் பக்தர்கள். அந்த எட்டடி விக்ரகத்துக்குக் கீழே, ஓரடி உயரமே உள்ள வெண்கலத் திருமேனி ஒன்று கண்ணில்படுகிறது.   அன்னமாச்சார்யாவும் அவரது பரம்பரை யினரும் பூஜித்த விக்ரகம் இது.  இதை இந்த ஆலயத்துக்கே அளித்துவிட்டார் அன்னமாச்சார்யாவின் பேரன். அன்னமாச்சார்யா பெரிதும் போற்றிப் பாதுகாத்த இந்த விக்ரகமும் மற்றும் திருமகள், நிலமகள் விக்ரகங்களும் ஒருமுறை காணாமல் போய்விட்டன. 

இதனால் பெரும் துயரம் அடைந்து,  ஓவென்று கதறினார் அன்னமாச்சார்யா. தனது துக்கத்தைப் பாடல்கள் மூலம் வெளிப்படுத்தினார்.  சற்று நேரத்தில் மீண்டும் அந்த  விக்ரகங்கள் அவர் வசம் வந்தன. மேலும் சில பாடல்களை அவரிடமிருந்து வெளிப்படுத்த இறைவன் திருவுளம் கொண்டிருக்க வேண்டும்!

அன்னமாச்சார்யா பயன்படுத்திய `சிட்டிகிலோ' (பஜனையில் இசைக்கும் சப்ளாக் கட்டைகள்) மற்றும் அவர் இறைவனுக்காகப் பயன்படுத்திய வெள்ளிக் குடை போன்றவை முன்பு இந்தக் கோயிலின் வசம் இருந்தன.  சில வருடங்களுக்கு முன்புதான் அவை அன்னமாச்சார்யா ஆராய்ச்சி மையத்திடம் ஒப்படைக்கப் பட்டு, தற்போது அவை திருப்பதியில் உள்ள அருங்காட்சி யகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

ஏகாந்த சேவையின்போது ஸ்ரீநிவாசமங்காபுரத்தில் அன்னமாச்சார்யா பூஜித்த விக்கிரகத்தைத்தான் ஊஞ்சல் படுக்கையில் துயில்கொள்ள வைக்கிறார்கள். நானூறு வருடங்களுக்கு முன் அன்னமாச்சார்யாவின் பேரன் இந்தக் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் செய்திருக்கிறார்.

அன்னமாச்சார்யாவின் முதல் மனைவி திம்மக்கா என்றழைக்கப்படும் திருமலம்மா, ‘சுபத்ரா கல்யாணம்’ என்னும் நூலை எழுதியிருக்கிறார்.  ‘தெலுங்கு இலக்கியத்தின் முதல் பெண் கவிஞர்’ என இவரைக்  குறிப்பிடுகிறார்கள்.

அன்னமாச்சார்யாவின் மற்றொரு மனைவியான அக்கலம்மாவின் மகன், பெரிய திருமலாச்சார்யா.  இவரும் திருமலை தெய்வத்தின் மீது பல பாடல்களை இயற்றியிருக்கிறார். தன்னைப் போலவே தினம் ஒரு பாடலை வேங்கடேஸ்வரரின் மீது இயற்றிப் பாட வேண்டும் என்று இவரிடம் வாக்குறுதி பெற்றுக்கொண்டாராம் அன்னமாச்சார்யா. அதன்படியே செய்த பெரிய திருமலாச்சார்யா, ‘சங்கீர்த்தன லட்சண வ்யாக்யா’ என்னும் இசை இலக்கண நூலையும் எழுதிப் புகழ் பெற்றார்.  அன்னமாச்சார்யாவின்  பேரன்களில் ஒருவரான சின்ன திருமலய்யாவும் பல பாடல்களை எழுதியிருக்கிறார்.

 பத்மாவதி தாயாரையே தனது மகளாகக் கருதி அன்பு செலுத்தியவர் அன்னமாச்சார்யா. அதன் காரணமாக, இறைவனின் திருமண உற்சவத்தில், நலங்கு விளையாட்டின் போது தேங்காய் உருட்டி விளையாடும் உரிமை அன்னமாச்சார்யாவின் வாரிசுகளுக்குண்டு. இந்தத் தகவல் அன்னமாச்சார்யாவின் பேரன்களில் ஒருவரான வெங்கடாச்சார்யா எழுதிய கவிதை நூல்களிலிருந்து கிடைக்கிறது.

தன் இறுதி நாள்களை தாள்ளபாக்கத்திலும் திருப்பதியிலுமாக மாறிமாறிக் கழித்தார் அன்னமாச்சார்யா. அவருக்குச் செல்வம் தேவைப்படவில்லை.  ஆனால், அவரைத் தங்கள் குருவாக எண்ணி வழிபட்டவர்கள், அவருக்குத் தங்கள் அன்புக் காணிக்கையாக ஏராளமான நிலங்களையும் பரிசுப் பொருள்களையும் குறைவில்லாது அளித்தார்கள்.  இப்படிக் கிடைத்த செல்வத்தையெல்லாம்  இறைவனுக்குப் பலவித விழாக்கள் எடுப்பதற்குச் செலவழித்தார் அன்னமாச்சார்யா.

குருவே சரணம் - அன்னமாச்சார்யா

தனது முதுமைக் காலத்தில், கர்நாடகத்தைச் சேர்ந்த பிரபல கவிஞர் புரந்தரதாசரைச் சந்தித்தார்.  மிகவும் உணர்ச்சிகரமான சந்திப்பாக அது அமைந்தது.  இருவருக்குமே இதில் பேரானந்தம்.  ‘நீங்கள்தான் ஸ்ரீநிவாசப் பெருமாள்’ என்று புரந்தரதாசர் மெய்சிலிர்க்க, ‘உங்களில் நான் வேங்கடவிட்டலனைப் பார்க்கிறேன்’ என்று ஆனந்தக் கண்ணீர் உகுத்தார் அன்னமாச்சார்யா.

திருமலையிலிருந்து பாபநாசம் செல்லும் வழியில் ‘பார்வேட்டு (பரிவேட்டை) மண்டபம்’ ஒன்றை எழுப்பினார் அன்னமாச்சார்யா. வேங்கடேஸ்வரர் வேட்டையாடுவதற்காகக் கிளம்பிச் செல்லும்போது, இடையே ஓய்வெடுப் பதற்காகக் கட்டப்பட்ட மண்டபம் அது.  அங்கே தான் அன்னமாச்சார்யா முக்தி அடைந்தார். 

துந்துபி வருடம் (1503) பகுள துவாதசி திதியில், மார்ச் ஏழாம் தேதியன்று அவரது ஆன்மா, ஜோதியாக மாறி திருமாலுடன் கலந்தது. திருமாலின் வாளான நந்தகத்தின் அம்சம்தான் அன்னமாச்சார்யா என்பதால், மீண்டும் திருமாலின் கரத்தில் சென்று சேர்ந்தது என்றும் கொள்ளலாம்.

திருமலை தெய்வத்தின் புகழ் உள்ளவரை - கால வரையறையின்றி - அவரைத் தொழுது பாடிய அன்னமாச்சார்யாவின் பாமாலைகளும் வாடாமல் இருக்கும்.

- தரிசிப்போம்...

(29.2.2004 மற்றும் 7.3.2004 ஆனந்தவிகடன் இதழ்களில் இருந்து..)

அன்னமாச்சார்யா தரிசனம்!

திருப்பதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகக் கேந்திரத்தின் அருகே, நிவாசா திரையரங்கின் எதிர்ப்புறம் இருக்கிறது அன்னமாச்சார்யா ஆராய்ச்சி நிறுவனம்.  இதன் கீழ்த்தளத்தில் உள்ள பெரிய மண்டபத்தில் அன்னமாச்சார்யாவின் பக்தர்கள் வந்து வழிபடலாம்.  இங்கு நடுநாயகமாக அன்னமாச்சார்யாவின் சிலை இருக்கிறது. 

அன்னமாச்சார்யா நினைவு நாளன்று, திருப்பதியில் உள்ள அன்னமாச்சார்யா ஆராய்ச்சி மையத்திலிருந்து அவரது விக்ரகம், திருமலைக் கோயிலுக்கு அருகில் உள்ள நாராயணகிரி தோட்டத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அன்று  அகோபிலத்திலிருந்து ஜீயர் சுவாமிகள் எழுந்தருளி,  பெருமாள் அணிந்த சேஷவஸ்திரம் போன்ற பிரசாதங்களை அன்னமாச்சார்யாவின் வாரிசுக்கு அளிப்பார்.

எல்லாம் ஒன்றே!

‘தத்துவம் ஒன்றுதான். எங்கெங்கும் நிறைந்திருக்கும் மெய்ப் பொருளும் ஒன்றுதான். அதுவே சத்தியம், ஞானம் மற்றும் ஆனந்தமாகும். குறைவு, நிறைவு என நாம் நினைத்துக்கொண்டிருக்கும் வேற்றுமையெல்லாம் உண்மையில் நம்மிடம் கிடையாது.

ஒரு சக்ரவர்த்தியின் உறக்கமும், அவனிடம் பணிபுரியும் சேவகனின் உறக்கமும் ஒன்றே.  அதேபோல பணக்காரராக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும் நேரம் ஒன்றே.

தரமான உணவையும் அப்படி இல்லாத உணவையும் சுவைக்கும் நாக்கு ஒன்றே.  நறுமணத்தையும் துர்நாற்றத்தையும் தன்னுள் சுமந்து பரப்பிக்கொண்டிருக்கும் காற்றும் ஒன்றே.

பெரும் யானை மீதும் சிறிய யானை மீதும் சுடும் வெயிலின் தீட்சண்யமும் ஒன்றே.  பெரும் புண்ணியம் செய்தவர்களையும், பாவத்தையே புரிந்தவர்களையும் தக்க சமயத்தில் காத்தருள்வது திருவேங்கடத்தானின் திருநாமம் ஒன்றே.’

(துள்ளலான நாட்டுப்புறப் பாடலின் மெட்டில் பிரபலமடைந்த ‘தந்தனான ஆஹி.......  பிரம்மம் ஒகடே, பரப்பிரம்மம் ஒகடே’ என்று தொடங்கும் அன்னமாச்சார்யாவின் பாடலின் கருத்து).