Published:Updated:

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 2

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 2
பிரீமியம் ஸ்டோரி
கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 2

ஹம்பிமகுடேசுவரன் - படங்கள்: கா.பாலமுருகன்

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 2

ஹம்பிமகுடேசுவரன் - படங்கள்: கா.பாலமுருகன்

Published:Updated:
கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 2
பிரீமியம் ஸ்டோரி
கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 2

ம்பி என்னும் பெயர் பம்பா என்னும் கன்னடப் பெயரிலிருந்து மருவியது. துங்கபத்திரை ஆற்றங்கரையி லிருந்த அந்த இடத்துக்குப் பம்பக்ஷேத்ரம் என்பது முற்காலப்பெயர். பம்பை என்பவள் பிரம்மனின் மகள், பிற்பாடு சிவனை மணந்துகொண்டவள் என்கிறது புராணம். துங்கபத்திரைக்கும் ‘பம்பா நதி’ என்பது பெயர். அதிலிருந்தே ஹம்பி என்னும் பெயரை ஆங்கிலேயர்கள் பயன்படுத்தினார்கள். வற்றாத நீர்ப் பாய்வால் அந்நிலத்தை வளமாக்கிய துங்கபத்திரை ஆறுதான் ஹம்பி அங்கு உருவான வரலாற்றுக்கு முதற்காரணம்.

மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவாகும் துங்கை, பத்திரை ஆகிய இரண்டு ஆறுகளும் சேர்ந்ததுதான் துங்கபத்திரை ஆறு. கர்நாடத்தின் சிமோகா, சிக்மகளூர் மாவட்டங்களை வளப்படுத்திப் பாயும் இந்த ஆறு, சுமார் 147 கி.மீ  நீளமுடையது. துங்கபத்திரை ஆறு தெற்கிலிருந்து வடக்காகப் பாய்ந்து, வடகிழக்காக ஊர்ந்து, பிறகு கிழக்கு நோக்கித் திரும்பி ஆந்திரத்தின் கர்நூலுக்கு அருகே கிருட்டிணை ஆற்றோடு கலக்கிறது. கிருட்டிணைக்கு இது துணை ஆறு என்பது ஆறு கலக்கும் தன்மையால்தான், உள்ளபடியே இந்த ஆறு ஒரு பேராற்றுக்கு எவ்விதத்திலும் குறைந்த தில்லை. ஜீவநதி என்பார்கள். துங்கபத்திரையின்மீது ஹோஸ்பேட்டையில் கட்டப்பட்டுள்ள துங்கபத்திரை அணையை முழுக்கொள்ளளவோடு கண்டால் அதனை ‘நிலம் சூழ்கடலோ’ என்று வியக்கவேண்டியிருக்கும். அந்தப் பெருவளம்தான் அங்கே மாபெரும் பேரரசுகளைத் தோற்றுவித்தது. முன்னதாக, துங்கை நதிக்கரையில்தான் சிருங்கேரி மடம் அமைந்திருக்கிறது.

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 2

கி.பி. 1323-ல் தெலங்கானத்திலிருந்த வாரங்கல் பகுதியை முகமதுபின் துக்ளக்கின் படைகள் கைப்பற்றின. கி.பி 1327-ல் தென்கன்னடப் பேரரசான ஹொய்சாள அரசாங்கத்தின் செல்வத் தலைநகரமாம் துவாரசமுத்திரம் கொள்ளையடிக் கப்பட்டுச் சூறையாடப்பட்டது. இந்த துவாரசமுத்திரம்தான் தற்போது ஹளேபீடு என்னும் எச்சமாக மீதமிருப்பது. அதைக்குறித்துப் பிறகு விரிவாகக் காணப்போகிறோம். இந்தக் களேபரமான நிலைமைகளால் தென்னிந்திய அரசுகளுக்கு நிலையாமையும் பேரச்சமும் நிலவின. குடிமக்கள் உயிருக்கும் உடைமைக்கும் அஞ்சி நாடோடி வாழ்க்கையை வாழத் தலைப் பட்டு, தெற்குப் பகுதிக்கு இடம்பெயர்ந்தார்கள். அரசர்களும் அவர்களின் சிறு படைகளும் செய்வறியாது திகைத்து நிற்கவேண்டிய நிலைமை.

ஹொய்சாள அரசர்களின் படையிலிருந்தவர் கள் ஹரிஹரர், புக்கர் என்னும் சகோதரர்கள். அவர்கள் ஐவர் என்று வரலாறு கூறினும் ஹரிஹரரும் புக்கரும் மூத்தவர்கள். அவர்கள்தாம் டெல்லியின் கொடுங்கோன்மைக்கு எதிராக வலிமையான அரசாங்கம் ஒன்றை நிறுவத் தலைப்பட்டனர். அதற்கென்று அவர்கள் தேர்ந்தெடுத்த நிலப்பரப்புதான் பாறைக்குன்றுகள் சூழ்ந்த  துங்கபத்திரை நதிப்பள்ளத்தாக்கு. தற்போதைய ஹம்பி.

ஹரிஹரர், புக்கரின் ஆசிரியரும் சிருங்கேரி மடத்தின் தலைவருமான வித்யாரண்யரின் ஊக்குவிப்பும் அவர்களைச் செலுத்தியது எனலாம். அக்காலத்தில் அரசுகளை நிறுவி வளர்த்தெடுக்க வேண்டுமென்றால் அதற்கு அரண் செறிந்த நிலப்பரப்பில் கோட்டைக் கட்டி அமர வேண்டும். அவ்விடத்திலிருந்து தம் ஆட்சிப் பரப்பைப் பெருக்க வேண்டும். “மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண்” என்கிறார் வள்ளுவர். முதலில் தூய மணியைப்போன்ற தண்ணீர் வேண்டும், வளம் கொழிக்கின்ற மண் வேண்டும், சுற்றிலும் மதிலாய் நின்று காக்கின்ற மலை வேண்டும், அடுக்கடுக்கான மரங்கள் வளர்ந்த அவற்றின் நிழல் படர்ந்த காடு வேண்டும். இவையனைத்தும் ஒருங்கே அமையப் பெற்ற இடத்தில், ‘அரண் சூழ்ந்த இடத்தில்’ தோன்றும் அரசு, உலகத்தின் மிகச்சிறந்த அரசாய் விளங்கும். துங்கபத்திரை நதிக்கரையில் அது நடந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 2

ஹரிஹரரும் புக்கரும் அந்நிலப் பகுதியைத் தேர்ந்தெடுத்து, கோட்டைக் கட்டுமானங்களை எழுப்பலாயினர். ஆனைகுந்தி மலைப்பகுதியில் அவர்களுடைய கோட்டை எழுப்பப்பட்டது. ஆனைகுந்தி என்பது துங்கபத்திரை ஆற்றுக்கு வடக்கே அமைந்துள்ள பெரிய குன்றுக் கூட்டம். அங்குள்ள குன்றங்களில் ஒன்றான அஞ்சனாத்ரி மலைதான் அனுமனின் பிறப்பிடம். தொலைவிலிருந்து பார்க்கையில் ஆனையின் தோற்றத்தில் அம்மலைகள் இருப்பதால் ஆனைகுந்தி என்ற பெயர் வந்தது. காவிரியாறு ஸ்ரீரங்கத்தைத் தீவாக்கிச் சுற்றிச் செல்வதுபோல, துங்கபத்திரை ஆறு ஆனைகுந்தி மலையைத் தீவாக்கியபடி சுற்றி வளைத்துச் செல்கிறது.

கி.பி 1336-ல் எழுப்பப்பட்ட கோட்டை கொத்தளப் பணிகள் 1343-ல் முடிந்தன. அவர்கள் தோற்றுவித்த அரச வம்சம் சங்கம வம்சம். மொத்தம் நான்கு அரச வம்சங்கள் அங்கே உருவாகின்றன. சங்கம வம்சம், சாளுவ சம்சம், துளு வம்சம், அரவீடு வம்சம்.

இதற்கிடையில் முகமது பின் துக்ளக்குக்கு எதிராகத் தக்காணப் பீடபூமிப் பகுதிக்கு ஆளுநர்களாக நியமிக்கப்பட்டவர்கள் ஒன்றாய்த் திரண்டு டெல்லிக்குக் கட்டுப்பட மறுத்தனர். அவர்களே பாமினி சுல்தான்களாக அறியப்படுபவர் கள். சங்கம வம்சத்து அரசர்களுக்கு இந்தப் பாமினி சுல்தான்களோடு இடையறாத சண்டை சச்சரவுகள் தொடர்ந்து நிலவிவந்தன. ஒருவருக்கொருவர் மாறி மாறி வெற்றி கொள்வதும் பழி தீர்ப்பதுமாகத் தொடர்ந்தது வரலாறு.

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 2

இன்றைய ஹம்பிதான் அன்றைய விஜயநகரம். முதலில் இது வித்யாநகரம் என்று பெயர் பெற்றது. விருபாக்சபுரம் எனப்பட்டதும் இதுதான். இந்நகரம் அக்காலத்தில் திகழ்ந்த திருக்கோலத்தை அங்கு வந்த பல்வேறு வெளிநாட்டுப் பயணிகளும் எழுதி வைத்திருக்கின்றனர். நிக்கோலா காண்டி என்ற இத்தாலியர், அப்துர் ரசாக் என்னும் தைமூர் அரசரின் தூதர், டொமினோ பயஸ் என்னும் போர்த்துக்கீசியர் ஆகிய பற்பல பயணிகளின் குறிப்பை வைத்துத்தான் விஜயநகரத்தை அறிய முடிகிறது.

1336-ல் ஹரிஹரர், புக்கரின் சங்கம வம்ச ஆட்சியிலிருந்து விஜயநகரம் கொஞ்சம் கொஞ்ச மாகக் கட்டியெழுப்பப்படுகிறது. அக்காலத்தில் இருந்த உலகின் வேறெந்த நகரத்தை விடவும் இந்நகரே மிகப்பெரியதாயும் செல்வவளம் மிக்கதாயும் இருந்திருக்கிறது. விஜயநகரம் பெரு நகரமாய்ப் புகழ்பெற்று விளங்கியபோது இன்றுள்ள பல ஐரோப்பிய நகரங்கள் அப்போது வெறும்  சிற்றூர்களாக இருந்தன. வேறு பல ஐரோப்பிய நகரங்கள் தோன்றியிருக்கவே இல்லை. அமெரிக்கக் கண்டம் கண்டறியப்படாத தரிசுக்கண்டமாய் இருந்திருக்கிறது. அன்றைய லண்டன், அன்றைய விஜயநகரத்தோடு ஒப்பிடக்கூடத் தகுதியற்றதாய் இருந்திருக்கிறது. விஜயநகரத்தை அன்றைய ஒரேயொரு ஐரோப்பிய நகரத்தோடு மட்டுமே ஒப்பிடலாம் என்றால், அது ரோம் நகரம் மட்டுமே.

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 2

விஜயநகரத்தில் சுமார் ஒரு லட்சம் வீடுகள் இருந்திருக்கின்றன. ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்திருக்கின்றனர். துங்கபத்திரை ஆற்றிலிருந்து கால்வாய் வெட்டி நகரத்துக்கு நீர்வசதி செய்திருக்கிறார்கள். அரண்மனைகளும் ஆட்சி அலுவலகங்களும் படைக்கொட்டில் களும் குடியிருப்புகளும் கடைவீதிகளும் கோயில் வளாகங்களும் ஆடல்பாடல்களுமாய் மண்ணுலகின் இந்திரபுரியாய் விளங்கியிருக்கிறது. 

இன்றுள்ள ஹம்பி, துங்கபத்திரை அணையின் நீர்வெளியேற்றுப் பகுதியில்தான் அமைந்திருக் கிறது. அந்த அணையை போர்த்துக்கீசியப் பொறியாளர்களைக்கொண்டு கிருஷ்ண தேவராயர் சிறப்பாகக் கட்டிமுடித்தார். 1498-ம் ஆண்டு மே மாதம் வாஸ்கோடகாமா என்னும் போர்த்துக்கீசியர் இந்தியாவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் கடல்வழி கண்டுபிடித்தார். அதன்பிறகு கோவா, விஜயநகர அரசர்களின் அயல்நாட்டுத் துறைமுகமாகச் சிறப்பிடம் பெற்றது. கோவா துறைமுகத்தின் வழியாக துருக்கியப் போர்வீரர்கள் இறக்குமதி செய்யப்பட்டு விஜயநகரப் படையில் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். கோவாவுக்கு வந்துசேரும் கலங்களில் எத்தனை குதிரைகளை ஏற்றிவந்து இறக்கினாலும் அவை நேரடியாக விஜயநகரப் படைக்குக் கொள்முதல் செய்யப்படும் என்று கிருஷ்ண தேவராயர் போர்த்துக்கீசிய வணிகர்களோடு ஒப்பந்தம் போட்டிருந்தார். விஜயநகரக் கடை வீதிகளில் மணிகளும் மாணிக்கங்களும் முத்துகளும் மூங்கில் கூடைகளில் வைத்து பூக்குவியல்களைப்போல் விற்கப்பட்டனவாம். விஜயநகர மக்களில் ஏழையாகட்டும் பணக்காரனா கட்டும்… அவர்கள் ஒவ்வொருவரும் காது, மூக்கு, கழுத்து, கை, கால் என்று எல்லா உறுப்புகளிலும் பொன்னாலான, வெள்ளியாலான, நவமணிகள் கோத்த ஆபரணங்களை அணிந்திருந்தார்களாம்.

இன்று பாழடைந்த கற்கோயில்களாய், கைவிடப்பட்ட கடைத்தெருக்களாய், தரைமட்ட மாக்கப்பட்ட அரண்மனைகளாய், சுடர்விளக்கற்ற கருவறைகளாய், உடைந்த கோபுரங்களாய், விஜயநகரம் என்ற பெயரை இழந்து ஹம்பியாய் விளங்குகிறது அந்த வரலாற்று மீதம்.

- தரிசிப்போம்...