Published:Updated:

தினமும் திருப்பதிக்கு துளசி!

வழுதலம்பேடு டூ திருமலை...

தினமும் திருப்பதிக்கு துளசி!

வழுதலம்பேடு டூ திருமலை...

Published:Updated:
தினமும் திருப்பதிக்கு துளசி!
##~##
'மூ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லிகைகளின் ராணி’ எனப் போற்றுகிறது ஆயுர்வேதம். 'மருத்துவ மகிமைகள் கொண்டது’ எனக் கொண்டாடுகிறது சித்த மருத்துவம். 'திருத்துழாய்’ என தெய்வீகத் தன்மை மிக்கதாக உணர்ந்து பூரிக்கின்றனர் வைணவப் பெரியோர். சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளாம் ஸ்ரீஆண்டாள் அவதரித்ததும் துளசிச்செடியின் கீழ்தான்!

இத்தனைப் பெருமைகள் கொண்ட துளசிச்செடியைப் பயிரிட்டு வளர்ப்பதையே வாழ்க்கையாகக் கொண்டிருக்கிறார் சீனிவாசன். வாசம் வீசும் துளசியை வளர்த்து, கடந்த 18 வருடங்களாக, திருப்பதி ஸ்ரீவேங்கடாசலபதிக்கு நாள் தவறாமல் அதை அனுப்பி வருகிறார். வியப்பு மேலிட, அவரைச் சந்தித்தோம்.

''கும்மிடிப்பூண்டி பக்கத்துல வழுதலம்பேடு கிராமம்தான் என் ஊர். அலங்காரப் பிரியன் திருமாலுக்கு, எத்தனையோ நகைகளும் ஆபரணங்களும் இருக்கு. அழகழகா, கலர்கலரா பூக்கள் இருக்கு. ஆனாலும், ஒற்றை துளசி மாலையைப் பெருமாளின் தோள்ல சார்த்தினாப் போதும்; அழகே கூடிடும்; நம்ம மனசே நிறைஞ்சிடும்'' எனத் தெரிவிக்கும் சீனிவாசன், மூன்று ஏக்கரில் துளசியைப் பயிரிட்டு வளர்த்து வருகிறார்.

தினமும் திருப்பதிக்கு துளசி!

''இப்படித் துளசியைப் பயிரிட்டதுக்கும் திருமலைவாசனே காரணம். அப்பாவுக்குத் தையல் வேலை; அதிகம் வருமானம் இல்லை. அதனால, ஸ்கூலுக்குப் போயிட்டு வந்ததும், ஏரியில் இருக்கிற காட்டாமணக்கு இலையைப் பறிச்சு, மாலையாக்கி, பூ மார்க்கெட்ல கொண்டு போய்க் கொடுப்பேன். அம்பது ரூபா கிடைக்கும். அப்புறம் இதுவே வழக்கமாயிடுச்சு. திடீர்னு மார்க்கெட்ல, 'துளசி பயிர் பண்ணிக் கொடுக்கறியா?’னு கேட்டாங்க. சரின்னு செய்ய ஆரம்பிச்சேன். அப்புறம் ஒருத்தர் வந்து, ''கோயிலுக்கு துளசி தர்றியா?''னு குறைஞ்ச விலைக்குக் கேட்டாங்க. மார்க்கெட்ல வித்தா நிறைய காசு கிடைக்கும்; படிக்க முடியும். அதனால மாட்டேன்னுட்டேன். ஆனா, பத்தாவது படிச்சு முடிக்கும்போது சாமி, பக்தி, சேவைங்கறதுக்கெல்லாம் எனக்கு அர்த்தம் புரிய ஆரம்பிச்சுது.  

மார்க்கெட்ல துளசி போடும்போது, 'பெருமாளுக்கு துளசி தர்றது பெரிய புண்ணியம். நீ நல்லா இருப்பே!’னு எல்லாரும் சொல்லச் சொல்ல... 'அடடா! இத்தனை நாளும் தவற விட்டுட்டோமே’னு தவிச்சுப்போயிட்டேன். கோயிலுக்குத் தர்றியானு கேட்டவங்களைத் தேடி ஓடினேன்.

'தினமும் துளசி தரணும்; திருப்பதி ஏழுமலையா னுக்கு நாள் தவறாம, பத்திரமா அனுப்பி வைக்கணும். மழையோ புயலோ... ஒருநாள்கூட இது தடைப்படக்கூடாது’ன்னு சொன்னாங்க.

அன்னிலேருந்து இன்னிவரைக்கும், சோறு தண்ணியைக்கூட மறந்தாலும் மறப்பேனே தவிர, திருப்பதி சாமிக்கு துளசி அனுப்புறதை மறந்ததே இல்லை; தவறினதும் இல்லை!'' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் சீனிவாசன்.

''சாயந்திரம் துளசியை பறிச்சு, வீட்டுக்குக் கொண்டு வந்து, தண்ணி தெளிச்சு, அழகா பார்சல் பண்ணுவேன். கிட்டத்தட்ட எப்படியும் அம்பது கிலோ துளசி பார்சல் அது! அப்புறம், நைட் ஒருமணிக்கு, கும்மிடிப்பூண்டிலேருந்து காய்கறி எடுக்கப்போற லோடு வண்டியில ஏறிக்கிட்டு, கோயம்பேடு வந்துடுவேன்.

அதிகாலைல நாலரை மணிக்கு, திருப்பதிக்குப் போற பஸ்ல, துளசி பார்சலை அனுப்பிட்டுத்தான் திரும்புவேன். பஸ் வந்ததும், தோள்ல மூட்டையை சுமந்துக்கிட்டு, பஸ்ல இறக்கி வைக்கும்போது, 'அப்பனே, ஏழுமலையானே..! உனக்கு துளசி சார்த்தற அந்தப் புண்ணியவான் சீரும் சிறப்புமா நல்லாருக்கணும்; இதேபோல உடம்புல உசுர் இருக்கறவரைக்கும் உனக்குத் தொடர்ந்து துளசியை அனுப்பிக்கிட்டே இருக்கணும்; தெம்பைக் கொடுப்பா!’னு வேண்டிக்கிட்டுத்தான் பஸ்ஸை விட்டு இறங்குவேன்'' என்று சொல்லும்போது, கரகரவெனக் கண்களில் இருந்து வழிகிறது நீர். சீனிவாசனின் பணியை ஊக்குவிக்கும் வகையில், துளசி பயிரிடுவதற்கு 6,000 ரூபாய் மானியமாக வழங்கியுள்ளதாம், தோட்டக்கலைத்துறை.

தினமும் திருப்பதிக்கு துளசி!

''நாள் தவறாம பெருமாளுக்குத் துளசி அனுப்பற பாக்கியம் நமக்கு; அதனால வருஷத்துக்கு ஒருமுறைதான் திருப்பதிக்குப் போகமுடியுது. பெருமாளைக் கும்பிட்ட கையோடு, அங்கே இருக்கிற பூக்கட்டற தோட்டத்துக்குப் போய்ப் பாப்பேன். அங்கே நிறையப் பேர் உட்கார்ந்து, துளசியை மாலையா கட்டிக்கிட்டிருப்பாங்க.

பெரிய பெரிய பணக்காரங்கள்லாம் ஆயிரம் ஆயிரமா, லட்சம் லட்சமா, தங்கமும் வைரமுமா கொட்டுறாங்க. நம்மால முடிஞ்சது... இதோ திருப்பதி மலைல, மலை மாதிரி குவிஞ்சிருக்கிற துளசிகள்ல நாம அனுப்பிச்ச துளசியும் இருக்கு; அது, பெருமாள் கழுத்தை அலங்கரிக்குதுங்கறதை நினைச்சு, நிறைஞ்ச மனசோடு வீடு வந்து சேருவேன்.  

மழை, வெள்ளம், காத்து, புயல், மேலு காலுக்கு முடியலைன்னு எந்தக் காரணத்தைக் கொண்டும் திருப்பதிக்கு துளசி அனுப்பறதை நிறுத்தினதே கிடையாது.

வெளியூர்ல காது குத்து, கல்யாணம்னு உறவுக்காரங்க வீட்டு விசேஷங்களுக்கு மனைவியை மட்டும் அனுப்பி வைப்பேன். மெள்ள மெள்ள உறவுக்காரங்களும் புரிஞ்சுக்கிட்டாங்க. என்ன விழாவா இருந்தாலும், காலைல போயிட்டு மத்தியானம் வந்துடணும்; அப்பத்தான் சாயந்திரம் துளசியை அனுப்புற வேலைல இறங்க முடியும்.

ராத்திரி ஒரு மணி, ரெண்டு மணின்னு எந்தக் கணக்கும் பார்க்காம, 18 வருஷமா இந்தச் சேவையை ஒரு தவம் மாதிரி பண்ணிக்கிட்டிருக் கேன். ஏழுமலையானும் கணக்கில்லாம எனக்கு நிறையவே கொடுத்துட்டாரு. எந்த வசதியும் வருமானமும் இல்லாம கிடந்த என்னை, மூணு ஏக்கர் நிலம், பம்ப் செட், சொந்த வீடு, மூணு பசங்களையும் நல்ல ஸ்கூல்ல படிக்க வைக்கிறதுக்கு ஓரளவு காசுன்னு சந்தோஷமா வாழ வெச்சிருக்கான் ஏழுமலைவாசன்!'' - நெஞ்சில் கைவைத்து, உணர்ச்சி பொங்கச் சொல்கிறார் சீனிவாசன்.

திருமலை ஸ்ரீவேங்கடாசலபதியை தரிசிக்கச் செல்லும்போது, அங்கே அவருடைய திருத் தோள்களில் அணிவிக்கப்பட்ட துளசி, பிரசாதமாக உங்கள் கைக்கு வரும்போது கவனியுங்கள்; அதில் சீனிவாசன் எனும் விவசாயியின் பக்தி மணம் கமழ்வது தெரியும்!

- க.நாகப்பன்
படங்கள்: பு.நவீன்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism