Published:Updated:

ஏகாம்பரநாதர் கோயில் இரட்டைத் திருமாளிகை திருப்பணியில் முறைகேடு?! நீதிமன்ற அதிரடி

ஏகாம்பரநாதர் கோயில் இரட்டைத் திருமாளிகை திருப்பணியில் முறைகேடு?! நீதிமன்ற அதிரடி
ஏகாம்பரநாதர் கோயில் இரட்டைத் திருமாளிகை திருப்பணியில் முறைகேடு?! நீதிமன்ற அதிரடி

காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள இரட்டைத் திருமாளிகை சீரமைக்கும் பணியில் முறைகேடு நடந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் பகுதியில் உள்ள புகழ்பெற்ற கோயில்களில் ஏகாம்பரநாதர் கோயிலும் முக்கியமான ஒன்று. ஆன்மிக சுற்றுலாவுக்காகக் காஞ்சிபுரம் வரும் வெளிமாநில பக்தர்கள் ஏகாம்பரநாதரைத் தரிசிக்காமல் செல்லமாட்டார்கள். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள `சோமாஸ் கந்தர்’ என்றழைக்கப்படும் உற்சவர் சிலை பழுதடைந்த காரணத்தால், புதிய உற்சவர் சிலையைச் செய்ய கடந்த 2015 இல் கோயில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர்.

அதன்படி இந்து அறநிலையத்துறை உத்தரவின் பேரில் 50 கிலோ எடையில், 2.12 கோடி ரூபாய் செலவில் புதிய உற்சவர் சிலை செய்யப்பட்டு, 2016 டிசம்பரில் கும்பாபிஷேகமும் செய்யப்பட்டது. இந்தச் சிலையில், `அறநிலையத்துறை குறிப்பிட்டுள்ளதுபோல், 5 விழுக்காடு தங்கம் கலக்கப்படவில்லை என்றும் உபயதாரர்களிடமிருந்து பெறப்பட்ட தங்கத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும்' காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை என்பவரும், அவரது மகன்களான தினேஷ், டில்லிபாபு ஆகியோரும் கோயில் நிர்வாகத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல், காஞ்சிபுரத்திலுள்ள சிவகாஞ்சி காவல்நிலையத்துக்கு நேரடியாக வந்து இதுகுறித்து விசாரணை நடத்தினார். அதன் அடிப்படையில், தமிழக அரசின் தலைமை ஸ்தபதி முத்தையா, செயல் அலுவலர் முருகேசன், கோயில் அர்ச்சகர்கள் என 9 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. அந்தச் சிலைகளில் எள்ளளவும் தங்கம் இல்லை என உற்சவர் சிலையை ஆய்வு செய்த அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வழக்கின் சர்ச்சை ஓய்வதற்குள் அடுத்த சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் டில்லிபாபு.

கோயிலின் வடமேற்குப் பகுதியில் இரட்டைத் திருமாளிகை உள்ளது. இப்பகுதி சிதிலமடைந்துள்ள காரணத்தால் இங்கே பக்தர்கள் பெரும்பாலும் செல்வதில்லை. கல்வெட்டுகள், கலைநயம் மிக்க சிற்பங்கள் அடங்கிய தூண்கள் இரட்டைத் திருமாளிகையில் காணப்படுகின்றன. இரட்டைத் திருமாளிகை சிதிலமடையத் தொடங்கியதையடுத்து, இந்த மாளிகையைச் சீரமைக்க கடந்த 2014 ம் ஆண்டு தமிழக அரசு 79.90 லட்சம் ரூபாயை ஒதுக்கியது. மேலும் மாளிகையின் கீழ்ப்பகுதியைச் சீரமைக்க 65 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டது. பாதி வேலைகள்கூட நிறைவடையாத நிலையில், அதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக நீதிமன்றத்தை நாடி இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார் டில்லிபாபு.

டில்லிபாபுவின் புகார் மனுவை விசாரணை செய்த காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம், இந்து அறநிலையத்துறை திருப்பணி கூடுதல் ஆணையர் கவிதா, முன்னாள் இணை ஆணையர் சிவாஜி, உதவி ஆணையர் ரமணி, செயல் அலுவலர் முருகேசன், கண்காணிப்புப் பொறியாளர் பாலசுப்பிரமணி, ஸ்தபதி நந்தகுமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யவேண்டும் என சிவகாஞ்சி காவல்நிலையத்துக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த டில்லிபாபுவிடம் பேசினோம். ``கோயிலின் உட்பகுதியில் இருக்கும் இரட்டைத் திருமாளிகை சிதிலம்

அடைந்ததாகக் காரணம் காட்டி அதை புரனமைப்பதற்காகத் தமிழக அரசுத் தரப்பில், சுமார் 1.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு வேலைகள் நடந்துவருகின்றன. கோயில் திருப்பணி குறித்துச் சரியான திட்ட அறிக்கை இல்லை. இதனால் பெரிய அளவில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருக்கிறது. திருப்பணிக்குத் தேவையான நிதியை தமிழகஅரசு ஒதுக்கிய பிறகும் கோயில் தரப்பில் தனியாக மக்களிடமிருந்து நன்கொடை பெற்றிருக்கிறார்கள். `வெளிநாட்டில் வசிக்கும் பக்தர்கள் ஆலயத் திருப்பணிக்கு நிதி வழங்கி உதவவேண்டும். பணம் கொடுக்க விரும்புபவர்கள் ஆன்லைன், டிடி, செக் போன்ற வழிகளில் பணம் கொடுக்கலாம்’ என ஆன்லைனில் விளம்பரம் செய்தார்கள். அதைத் தொடர்ந்து அவர்கள் குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் இதுவரை எவ்வளவு பணம் பெற்றிருக்கிறார்கள் என்ற விவரங்களைச் செயல் அலுவலர் முருகேசனிடம் கேட்டோம். `திருப்பணி செலவுக்காக விளம்பரப்படுத்தவோ, நன்கொடை பெறவோ உத்தரவு வழங்கப்படவில்லை. அரசுப் பணத்தில்தான் திருப்பணி செய்கிறோம்’ எனச் செயல் அலுவலர் முருகேசன் பதில் கொடுத்தார்.

இதுவரை கிட்டத்தட்ட 150 புதிய கற்தூண்களை வைத்தார்கள். ஆனால், அகற்றப்பட்ட சிற்ப வேலைப்பாடுகள் அடங்கிய கலைநயம் மிக்க பழைய தூண்கள் எங்கே இருக்கின்றன எனத் தெரியவில்லை. அவை கோயிலில் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஒரு சில தூண்களே கோயிலில் இருக்கின்றன. அதுபோல் மதில் சுவரில் கல்வெட்டுகள் அடங்கிய கற்களையும் காணவில்லை. ஆலய திருப்பணிகளில் தேவையில்லாமல் ஜேசிபி இயந்திரம் பயன்படுத்தக் கூடாது. ஆனால், ஜேசிபி இயந்திரம் வைத்து திருப்பணி செய்திருக்கிறார்கள். இந்தத் திருப்பணிக்குத் தலைமை ஸ்தபதியின் அறிக்கையைக்கூட கோயில் நிர்வாகத்தினர் பெறவில்லை. திருப்பணி ஆணையரின் அனுமதியும் பெறப்படவில்லை. 

தகவல் ஆணையரிடம் சென்றுதான் நாங்களே திட்ட அறிக்கையைப் பெற்றோம். அதில் பல இடங்களில் திருத்தம் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து காவல்துறை மற்றும் இந்து அறநிலையத்துறையிடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால்தான் நீதிமன்றம் சென்றோம்.” என்கிறார்.

இந்து அறநிலையத்துறை திருப்பணி கூடுதல் ஆணையர் கவிதாவிடம் பேசினோம். ``திட்ட அறிக்கை பெறவேண்டும் என்பதெல்லாம் 2017 இல்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. நிர்வாக ரீதியாக வேலை மட்டும்தான் எங்களுடையது. மற்றபடி அந்தந்தக் கோயிலுக்கென்று உள்ள செயல் அலுவலர்களிடம்தாம் கோயில் பொறுப்பு உள்ளது. தேவையில்லாமல் எங்கள் பெயரை இணைத்து வழக்கு போட்டு மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.” என்கிறார் விரக்தியாக.

ஏகாம்பரநாதர் கோயில் செயல் அலுவலர் முருகேசன், ``கோயில் தரப்பில் எல்லாக் கணக்கு வழக்குகளும் சரியாக இருக்கின்றன. கோயில் பெயரைச் சொல்லி யாராவது வசூல் செய்திருப்பதாக ஆதாரத்துடன் சொன்னால், நாங்களே வழக்குப் பதிய தயாராக இருக்கிறோம். திருப்பணிக்கு அரசுப் பணத்தைத் தவிர வேறு பணத்தைச் செலவு செய்யவில்லை. நீதிமன்றமோ, அதிகாரிகளோ எப்போது கணக்குக் கேட்டாலும் அதைக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். இங்கு எடுக்கப்பட்ட எல்லாப் பழைய தூண்களும் இங்கேயே இருக்கின்றன. உடைந்த தூண்களையும் தனியாக எடுத்து வைத்துள்ளோம். எப்போது வேண்டுமானாலும் தூண்களை எண்ணிப்பார்த்துக் கொள்ளலாம். ஜேசிபி பயன்படுத்தாமல் பெரிய கற்களைத் தூக்க முடியாது. அந்தக் காலத்தில் தொழில்நுட்பம் இல்லாமல் வேலை செய்தது போல் இப்போதும் வேலை செய்ய முடியாது. நீதிமன்றத்தில் எங்கள் துறையிடம் கருத்துக் கேட்காமல் இப்படி ஓர் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்கள். மனசாட்சி விரோதமில்லாமல் பணியைச் செய்கிறேன். நடப்பதை ஏகாம்பரநாதர் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்.” என்கிறார் ஆதங்கமாக.

யார் சொல்வது உண்மை என்பது, ஆண்டவனுக்கே வெளிச்சம்!

அடுத்த கட்டுரைக்கு