திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

கயிலை காலடி காஞ்சி... - 26

கயிலை காலடி காஞ்சி... - 26
பிரீமியம் ஸ்டோரி
News
கயிலை காலடி காஞ்சி... - 26

நேக்கு ரவா தோசை சாப்பிடணும் போல இருக்கு...நிவேதிதா - ஓவியங்கள்: ம.செ

னிதப் பிறவியின் நோக்கமே மற்ற உயிர்களிடத்தில் அன்பு செலுத்துவதுதான். பிறரை நேசிப்பதைவிடவும் வேறு பெரிய இன்பம் எதுவும் இல்லை. மற்றவர்களை நேசிக்கும்போது நமக்கு உண்டாகும் மகிழ்ச்சி, நமக்குள் ஏற்படுத்தும் இன்பத்தைப் போல் வேறு எதுவுமில்லை. உண்மையான அன்புக்குக் காரணமோ, நோக்கமோ தேவையில்லை. அப்படி ஒரு காரணமும் இல்லாமல் அனைத்து ஜீவன்களையும் நேசிக்கும் ஒருவர் இருக்கிறார் என்றால், அவர் சாட்சாத் சர்வேஸ்வரன்தான்.

- காஞ்சி பெரியவர் 

கயிலை காலடி காஞ்சி... - 26

ஒருநாள் இரவு பத்து மணி இருக்கும். மஹா பெரியவா தம்மை தரிசிக்க வந்த பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கிவிட்டு, யாருக்கோ காத்திருப்பதுபோல் அங்கேயே அமர்ந்திருந்தார். மடத்து சிப்பந்திகள் மட்டுமே உடனிருந்தனர். சுமார் அரை மணி நேரம் சென்றிருக்கும். வயதான ஒரு பெண்மணி மகானை தரிசிக்க வந்தார்.

அந்தப் பெண்மணிக்குப் பிரசாதம் கொடுத்த பெரியவா, இரவு அங்கேயே தங்கிவிட்டு விடிந்ததும் செல்லும்படி உத்தரவிட்டார். பிறகு அருகில் இருந்த மடத்து சிப்பந்தியிடம், ‘‘நேக்கு ரவா தோசை  சாப்பிடணும் போல இருக்கு. செய்து தர்றியா?’’ என்று கேட்டார்.

எதற்குமே ஆசைப்படாத ஞானி அல்லவா பெரியவா? `அவர் ரவா தோசை வேண்டும் என்று கேட்கிறாரே... அதுவும் சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது என்று சொல்கிறாரே' என்று எல்லோரும் ஆச்சர்யப்பட்டனர். அதுவும் ஒரு நாளைக்கு ஒரு பிடி நெல் பொரியைத் தவிர வேறு எதுவும் சாப்பிடாமல் தவிர்த்துவிடும் பெரியவா, ரவா தோசை கேட்டால் வியப்பு ஏற்படத்தானே செய்யும்?

அந்த வியப்பு விலகாமல், சமையல் உள்ளுக்குள் சென்ற சிப்பந்தி, ரவா தோசை தயார் செய்வதற்குத் தேவையான அத்தனைப் பொருள்களையும் எடுத்துக்கொண்டார். ஆனால், ரவா தோசை செய்வதற்கு முக்கியத் தேவையான ரவை மட்டும் இல்லை. மணி பத்தரைக்கு மேல் ஆகிவிட்டது. கடைகளும் மூடியிருக்கும். சிப்பந்தி என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார்.

நடப்பதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அந்தப் பெண்மணி அவசர அவசரமாக எங்கோ அலைந்து திரிந்து ரவையை வாங்கி வந்து கொடுத்தாள். மகிழ்ச்சியுடன் ரவையை வாங்கிக் கொண்ட சிப்பந்தி, ஒரு டஜன் ரவா தோசைகளை வார்த்து எடுத்துக்கொண்டு, பெரியவாளிடம் கொண்டுபோய் கொடுத்தார்.

பெரியவா, ஒவ்வொரு தோசையில் இருந்தும் ஒரு விள்ளல் எடுத்து வாயில் போட்டுக்கொண்டு,  ‘‘ரவா தோசை ரொம்ப நன்னா இருக்கு. நேக்கு பூரண திருப்தி ஆயிடுத்து. இதெல்லாம் கொண்டு போய் உள்ளே வெச்சுட்டு, எல்லோரும் தூங்கப் போங்கோ’’ என்று சிப்பந்திகளுக்கு உத்தரவு கொடுத்துவிட்டார்.

சிறிது நேரம் சென்றிருக்கும். வேத மந்திரங்கள் சொல்லி புரோகிதம் செய்யும் ஐந்து வைதீக பிராமணர்கள் ஆந்திராவில் இருந்து வந்திருந்தனர். வழியில் போக்குவரத்து சிக்கலில் மாட்டிக் கொண்டதால் வருவதற்குத் தாமதமாகிவிட்டது. அவர்கள் வந்த விஷயத்தைப் பெரியவாளிடம் சொல்லப்போன சிப்பந்தியிடம், அவர் எதுவும் சொல்லாமலே, ‘‘என்ன, என்னைப் பார்க்க வைதீகாள்லாம் வந்திருக்காளா? இருக்கட்டும். அவாள்லாம் ரொம்ப பசியோட இருப்பா. ரவா தோசைகளை எடுத்து வைக்கச் சொன்னேனோல்லியோ, அந்த தோசைகளை எல்லாம் எடுத்து அவாளுக்குச் சாப்பிடக் கொடு’’ என்று கூறினார்.

கயிலை காலடி காஞ்சி... - 26சில சாஸ்திரிகள் வரப்போவதையும், அவர்கள் பசியோடு இருப்பார்கள் என்பதையும் தெரிந்து கொண்டுதான் பெரியவா ரவா தோசை கேட்டார் என்பதை அந்தச் சிப்பந்தி புரிந்துகொண்டார். பெரியவாளுக்கு அருகிலேயே இருக்கும் அந்தச் சிப்பந்திக்கு, பெரியவாளின் ஞானதிருஷ்டி குறித்து தெரியும்தான். ஆனால், இந்த நேரத்தில் இன்னார் வருவார்கள்... ‘அவர்களுக்குத் தேவைப்படும் என்பதால் ரவா தோசை பண்ணிப் போடு’ என்று சொல்லியிருக்கலாமே?! அப்படிச் சொல்லாமல், ‘தனக்கு ரவா தோசை சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது’ என்று மகா பெரியவா சொன்னதன் காரணம்தான் அவருக்கு விளங்கவில்லை.

‘‘என்ன அப்படியே தெகைச்சு நின்னுட்டே? யாருக்கோ தர்றதுக்காக இருக்கறச்சே, நான் ஏன் `நேக்கு ரவா தோசை வேணும்'னு கேட்டேன்னு யோசிக்கிறியோ? பெருசா ஒரு காரணமும் இல்லே. இந்த ராத்திரி வேளையிலே தூங்கப் போயிண்டிருந்த உங்களைக் கூப்பிட்டு, யாரோ வரப்போறா, தோசை வார்த்து வைங்கோன்னு சொன்னா, உங்களுக்கெல்லாம் அது சங்கடமா தோணலாமோ இல்லியோ? ஆனா, நேக்கு வேணும்னு கேட்டா, சிரமம் பார்க்காம, அலுத்துக்காம சிரத்தையா செய்வேளோல்லியோ? அதான் அப்படிச் சொன்னேன். போய் தோசையை எடுத்து அவாளுக்கெல்லாம் கொடுங்கோ. வேதம் சொல்றவா வெறும் வயத்தோட தூங்கக் கூடாது. எல்லோரும் திருப்தியா சாப்டுட்டு தூங்கட்டும். பாவம், அவாள்லாம் ரொம்ப தூரத்துலேர்ந்து வந்திருக்கா’’  என்று சொல்லி அனுப்பினார் பெரியவா.

சிப்பந்தியின் மூலம் நடந்ததைக் கேட்ட சாஸ்திரிகள் எல்லோரும் நெகிழ்ந்துவிட்டார்கள். தங்களுக்கெல்லாம் ரவா தோசை மிகவும் பிடிக்கும் என்பதைத் தெரிந்துகொண்டு, மகா பெரியவா நிகழ்த்திய அருளாடலைக் கண்டு கண்ணீர் மல்க, அந்த ரவா தோசைகளை மகேஸ்வரனின் அருள் பிரசாதமாகவே நினைத்துக் கொண்டு, பரவசத்துடன் சாப்பிட்டார்கள். மறுநாள் காலையில் பெரியவாளை உள்ளம் குளிரக் குளிர தரிசித்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு சென்றார்கள்.

மகா பெரியவா மதங்களைக் கடந்த மகா ஞானி. தம்மை தரிசிக்க வருபவர்கள் யார்... அவர் எந்த மதம்... என்பது பற்றியெல்லாம் அவர் பேதம் பார்ப்பதே இல்லை. 

கயிலை காலடி காஞ்சி... - 26

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதியரசர் மு.மு.இஸ்மாயில், கம்பனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர். சென்னையில் கம்பன் கழகத்தை உருவாக்கியவர். கம்பராமாயணம் தொடர்பாகப் பல நூல்களை எழுதியிருக்கிறார். 70-களில் ஆனந்த விகடன் இதழில் கம்பராமாயணம் தொடர்பாக அவர் எழுதிய தொடர் வாசகர் களின் மகத்தான வரவேற்பைப் பெற்றது. அவர் ஒருமுறை மகா பெரியவாளை தரிசிக்க வந்தார். இலக்கியம், கம்பராமாயணம் என்று பல விஷயங்களைப் பற்றி மகா பெரியவாளுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.

மகா பெரியவாளை தரிசித்து உரையாடிய நீதியரசர் மு.மு.இஸ்மாயில் விடைபெறும் நேரம் வந்தது.

எப்போதுமே தம்மை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பெரியவா விபூதி, குங்குமப் பிரசாதம் வழங்குவார். ஆனால், இஸ்லாமியரான நீதியரசருக்கு பெரியவா என்ன பிரசாதம் தரப் போகிறார் என்று மடத்தில் இருந்தவர்கள் குழப்பமும் ஆவலுமாக, பெரியவாளையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

பெரியவா தமக்கு அருகில் இருந்த ஒரு வெள்ளிப் பேழையில் இருந்த சந்தனத்தை எடுத்து நீதியரசரிடம் கொடுத்தபடி, ‘‘இந்த சந்தனம் நம் இரு மதத்தினருக்கும் பொதுவான அம்சம். உங்கள் தர்காவிலும் சந்தனக்கூடு இருக்கிறது; எங்கள் கோயில்களிலும் சந்தனம் இருக்கிறது. இந்த சந்தனத்தை அணிந்துகொண்டு சந்தோஷமாக இருங்கள்’’ என்று கூறினார்.

சந்தனத்தைப் பெற்றுக்கொண்ட நீதியரசர் மகிழ்ச்சியும் மன நிறைவுமாக விடைபெற்றுச் சென்றார்.

- திருவருள் தொடரும்

கல்வியில் சிறக்க...

கயிலை காலடி காஞ்சி... - 26

லைமகள் அருளாலேயே தமக்கு ஞானம் கிடைத்தது என்பதை மிக அற்புதமாகப் பாடியிருக்கிறார், கம்பர். அந்தப் பாடல் இதுதான்.

உரைப்பார் உரைக்கும் கலைகள் எல்லாம்
    எண்ணில் உன்னையன்றி
தரைப்பால் ஒருவர் தரவல்லரோ
    தன் தரள முலை
வரைப்பால் அமுதுதந்து இங்கு
    என்னை வாழ்வித்த மயிலே
விரைப்பார் சடைமல் வெண்தாமரைப்
    பதிமெல்லியலே


கருத்து:
பெரியோர்களால் சொல்லப்பட்டுள்ள எண்ணற்ற கலைகளை இந்தப் பூமியில் ஒருவருக்குத் தரவல்லவர், உன்னைப் போல்  எவரேனும் ஒருவர் உள்ளார்களா? வெண்முத்து மாலைகளை அணிந்த நின் திருமுலைப் பாலை எனக்குத் தந்து, என்னை வாழ்வித்த சகலகலா மயிலே. வெண் தாமரையில் வசிப்பவளே! இந்தப் பாடலை தினமும் பாடிவரும் குழந்தைகளுக்குச் சிறந்த கல்வியறிவு உண்டாகும்.

- காயத்ரி பிரசன்னா, திருவல்லிகேணி