Published:Updated:

சனங்களின் சாமிகள் - 3

சனங்களின் சாமிகள் - 3
பிரீமியம் ஸ்டோரி
சனங்களின் சாமிகள் - 3

அ.கா.பெருமாள் - ஓவியங்கள்: ரமணன்

சனங்களின் சாமிகள் - 3

அ.கா.பெருமாள் - ஓவியங்கள்: ரமணன்

Published:Updated:
சனங்களின் சாமிகள் - 3
பிரீமியம் ஸ்டோரி
சனங்களின் சாமிகள் - 3

வீணாதி வீனன் தொடர்ச்சி...

`இனி பிச்சையெடுக்கக் கூடாது' என்று முடிவெடுத்தவன், தூரத்தில் சுண்டைக் காய்ச் செடியில் காய்கள் காய்த்துத் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டான். எழுந்து போய் கொத்துக் கொத்தாகப் பறித்தான். துண்டில் போட்டான். இன்னும் கொஞ்ச தூரத்தில் முருங்கை மரம் அவனை `வா... வா...’ என அழைத்தது. அதன் ஒரு கொப்பை எட்டிப் பிடித்து வளைத்து, முருங்கைக்காய்களைப் பறித்தான். கீரைகளையும் சேகரித்துக் கொண்டான். இப்போது அவன் துண்டு சுண்டை, முருங்கைக்காய்கள், கீரைகளால் ஒரு சுமையாக மாறியிருந்தது. 

சனங்களின் சாமிகள் - 3

துண்டு முடிப்பை தோளில் தூக்கி வைத்துக் கொண்டு நகரை நோக்கி நடந்தான்.  குலசேகர பாண்டியன் அந்த நேரத்தில் வள்ளியூரில் இல்லை. தலைவன் இல்லாத ஊர் தறுதலையாக மாறியிருந்தது. ஆள்பவன் இல்லை; அதிகாரிகள், அரசாங்கத்தையே கையில் எடுத்திருந்தார்கள். அரசு பதவியில் இருந்தவர்களும் அதிகாரிகளும் வைத்ததே சட்டம் என்று மாறியிருந்தது. எதற்கெடுத்தாலும் வரி, லஞ்சம்... யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதுபோல் அதிகாரிகள் ஆட்டம் போட்ட நேரம் அது.

அவன் ஊருக்குள் நுழைந்தபோது, கோட்டைக் காவலன் கண்ணில் பட்டது அவன் சுமைதான். ``ஏய்... இங்கே வா! என்ன இது?’’

``கொஞ்சம் முருங்கை, கீரை, சுண்டைக்காய் எஜமான்... விக்கிறதுக்காக ஊருக்குள்ள போறேன்...’’ கோட்டைக்காவலன் மூட்டைக்குள் கைவிட்டு நல்லதாகப் பார்த்து இரண்டு முருங்கைக்காய் களை எடுத்துக்கொண்டான். அதிகாரம் அவனை கைநீட்டி வரவேற்றது. கிராம அதிகாரி அவனை வழிமறித்தான். சுண்டைக்காயில் பாதியைப் பறித்துக்கொண்டான். மிச்சம் இருந்ததை அவன் விற்க முயன்றபோது, ஒரு பெண் வழிமறித்தாள். ``மூட்டையில என்ன?’’ என்று அவன் பதிலை எதிர்பார்க்காமல், அதைப் பறித்தாள். துண்டில் இருந்த மொத்தத்தையும் எடுத்துக்கொண்டு அவள் பாட்டுக்குத் திரும்பி நடந்தாள்.

``தாயே... எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு பேசாமல் போகிறீர்களே... ஏதாவது பணம் தாருங்கள்!’’

``ஏய்... என்கிட்டயே பணம் கேட்குறியா? கோட்டைத்தலைவன் வீட்டு பவளக்கொடி கிட்டயே பணம் கேக்குறியா? இந்த ஊருக்குள்ளயே நீ இருக்கமாட்டே பார்த்துக்கோ...’’ அவள் போய்க்கொண்டே இருந்தாள். ஒரு வயதானவர், அவள் கோட்டைக்காவலன் வீட்டு வேலைக்காரி என்பதையும் பணம் கேட்டால் பிரச்னை ஆகிவிடும் என்பதையும் அவனிடம் சொன்னார்.

அவனுக்கு மறுபடியும் பிச்சை எடுக்க விருப்ப மில்லை. திரும்பவும் காட்டுக்குள் போனான். காடு, கனிவோடு அவனை வரவேற்றது. கொஞ்சம் தேடிப் பார்த்ததில் நல்ல கனிகள் கிடைத்தன. முயல்களின் தடங்களைக்கொண்டு கிழங்குகள் இருப்பதை அறிந்து, மண்ணைத் தோண்டி அவற்றை எடுத்துச் சாப்பிட்டான். பசியடங்கி னாலும், மனம் கொந்தளித்துக் கிடந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சனங்களின் சாமிகள் - 3விறகு வெட்டிப் பிழைக்கலாம் என்ற யோசனை வந்தது. கண்ணில்பட்ட விறகுகளையும், சுள்ளி களையும் சேகரித்து, தலையில் வைத்துக்கொண்டு ஊருக்குள் வந்தான். திரும்ப அதிகாரம் அவனை வரவேற்றது. கொண்டு வந்ததில் கொஞ்சத்தைத்தான் விற்றிருப்பான். வள்ளியூர் கோட்டையின் வருவாய்த்துறை அதிகாரி அவன் எதிரே வந்தார். ``விறகை விற்றதில் பாதியைத் தந்துவிடு’’ என்றார்; பாதிப் பணம் பறிபோனது. மேலும் ஊருக்குள் நடந்தபோது, மற்றோர் அதிகாரியின் மனைவி, அவனைக் கேட்காமலேயே விறகை எடுத்துக் கொண்டாள். அதோடு விடவில்லை. ``நாளைக்கும் வெறகு கொண்டு வா!’’ என்றாள்.

அவன் மனம் நொந்துபோனான். சோர்ந்து போனவன் ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்தான். தனிமை... விரட்டும் மனிதர்கள்... அடுத்து என்ன செய்வது என்று தெரியாத குழப்பம்... அவன் கலங்கியிருந்தான்; கண்களில் தன்னையறியாமல் கண்ணீர் சுரந்தது. 

அது ஒரு கிழவிக்குச் சொந்தமான வீடு. அவளுக்கும் உறவென்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை. உள்ளேயிருந்து வந்தவள் அவனைப் பார்த்தாள். விசாரித்தாள். வள்ளியூருக்கு வந்தது முதல் அவன்பட்ட அனுபவங்களை அனைத்தையும் சொன்னான்.

கிழவி கண்களை மூடி யோசித்தாள். ``இங்கேயே இரு...’’ என்றவள், உள்ளே போய் சமையலைத் தொடங்கினாள். அன்றைக்கு கிழவியின் கையால் அவனுக்கு அமுது கிடைத்தது. மணக்க மணக்க குழம்பு; சூடான சம்பா அரிசிச்சோறு. அப்படி ஓர் உணவைச் சாப்பிட்டு நெடுநாள்கள் ஆகியிருந்தன. அவன் கூச்சப்படாமல், வயிறுமுட்டச் சாப்பிட்டான். திண்ணையிலேயே படுத்து உறங்கினான்.

அடுத்தநாள் காட்டுக்குப் போனான். கொஞ்சம் விறகும் காய்களும் சேகரித்தான். கிழவியிடம் கொண்டுவந்து கொடுத்தான். ``எனக்கு இரண்டு வேளை கஞ்சி ஊற்றினால் போதும்; தினமும் விறகும் காய்களும் கீரையும் கொண்டு வருகிறேன். அதை விற்று பணத்தை எடுத்துக்கொள்’’ என்று ஓர் ஒப்பந்தம் போட்டுக் கொண்டான். அவனுக்குப் பசியில்லாத, பிரச்னைகள் இல்லாத நாட்கள் அவை. நல்ல சாப்பாடு; கொஞ்சம் மனநிம்மதி. உடலிலும் மனத்திலும் தெம்பு கூடியது. ஒருநாள் காட்டில் கோணல் இல்லாத கம்பு ஒன்றை வெட்டி எடுத்தான். தச்சனிடம் கொடுத்து, கம்பைச் சீவி அதற்கு இரும்புப் பூண் கட்டிக் கொண்டான். காட்டில் செல்ல அது அவசியம் என்பது அவன் எண்ணம். இப்போது அவன் திடகாத்திரன். கூடவே, கையில் ஓர் ஆயுதம்... அது அவனுக்கு உற்றதுணை. மிருகங்களை விரட்ட உதவியது. மனிதர்கள் அவனைப் பார்த்தால், விலகி நடந்தார்கள்.

சனங்களின் சாமிகள் - 3

ஒருநாள் கிழவி அவனிடம் ``நீ யாரப்பா... உன் ஊர் எது?’’ என்று விசாரித்தாள். அவன் தன் வரலாற்றைச் சுருக்கமாகச் சொன்னான். அவன் பரம்பரைப் பணக்காரன்; அப்பா அம்மா இறந்த பிறகு உறவினர்கள் அவன் சொத்தைப் பறித்துக்கொண்டார் கள்; துரத்திவிட்டார்கள். அவனது கதையைக் கேட்ட கிழவி ஒரு முடிவுக்கு வந்தாள். அவனிடம் கொஞ்சம் பணம் கொடுத்தாள். ``போய் முடியைத் திருத்தி, சவரம் செய்துகொள்; குளித்துவிட்டு வீட்டுக்கு வா’’ என்றாள்.
அவன் திரும்பி வந்தபோது கிழவி அவனை வீட்டுக்குள் வரச் சொன்னாள். தஞ்சாவூர் பட்டாடைகளைக் கொடுத்து உடுத்தச் சொன்னாள்.  தங்க ஆரத்தையும் ஆபரணங்களையும் கொடுத்து அணிந்துகொள்ளச் சொன்னாள். இப்போது அவன் யாருமற்ற அனாதை அல்ல; முக்கியமாக பண்டாரம் அல்ல. தோற்றத்தில் இளவரசன். அல்ல... இளவரசனேதான். அவன் தன் பிரியத்துக்குரிய தடிக்கம்புடன் வள்ளியூரை வலம்வந்தான். உடலில் வலு, கையில் ஆயுதம், கம்பீரமான தோற்றம்... போதாதா? மனம் குதியாட்டம் போட்டது. யாரையாவது மிரட்டிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை பிறந்தது. 

முதலில் கண்ணில்பட்டவன் மணியக்காரன். ``ஏய்... நான் குலசேகரப் பாண்டியனின் உறவினன்; வரி வாங்கும் அதிகாரம் உடையவன். உன் மரமண்டைக்கு ஏதாவது புரிகிறதா?’’ என்றான். மணியக்காரன் அவனின் அதிர்ந்த குரலைக்கேட்டு நடுங்கினான். வணங்கினான். அவன், தன் மிரட்டல் பலித்ததில் புளகாங்கிதம் அடைந்தான். இன்னும் சிலரை அதட்டிப் பார்த்தான். அவன் மிரட்டலில் பயந்தவர்கள் பணம் கொடுத்தார்கள். இவர்கள் குனிந்தால் குட்டுவார்கள்; நிமிர்ந்தால் குனிவார்கள் என்பது அவனுக்குப் புரிந்தது. அதட்டி, மிரட்டிப் பணம் பறிப்பதைத் தொழிலாக்கிக்கொண்டான். லஞ்சம் வாங்கிய அதிகாரிகளே அவனிடம் வலியச் சென்று பணம் கொடுக்க ஆரம்பித்தார்கள். நிறையப் பணம் சேர்ந்தது. அவன் தனக்கென்று அடியாட்களைச் சேர்த்துக்கொண்டான். ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டான்.

அவனை ஆதரித்த கிழவிக்கும் ஒரு வீடு கட்டிக்கொடுத்தான். கிணற்றில் நீர் கோர வேண்டுமா... ஆயம்; இறந்தவனை எரிக்க வேண்டுமா... ஆயம்; திருமணமா... ஆயம்... இப்படி எடுத்ததற்கெல்லாம் ஆயம். அவனிடம் பணம் குவிந்துகொண்டே இருந்தது. `தெருவில் கைவீசி நடந்தால்கூட ஆயம் கொடுக்க வேண்டும்’ என்பது அவன் வகுத்த விதி.

வல்லான் விதிக்கு எல்லோரும் கட்டுப்பட்டார்கள். அந்த ஆயத்துக்கு `கைவீசிப்பணம்’ எனப் பெயரும் வைத்தான் அவன். இயற்பெயர் என்று ஒன்றிருக்க, அவனுக்கு `வீணாதி வீணன்’ என்கிற பட்டப்பெயர் உருவனது. எப்போதும் காலம் ஒரே மாதிரி சுழல்வது இல்லை... அல்லவா! அது வீணாதி வீணன் விஷயத்திலும் நடந்தது.

மதுரையில் இருந்த மன்னன் குலசேகர பாண்டியன் திடீரென்று ஒருநாள் வள்ளியூருக்கு வந்தான். தானில்லாத ஊரில் தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆன விவரம் அறிந்தான். அதிலும் வீணாதி வீணனிடம் அதிகாரிகளே அச்சப்படுவதை அறிந்தான். வீரர்களை அனுப்பி அவனைத் தூக்கிவரச் சொன்னான். சில நாழிகைகளிலேயே அவனைக் கைது செய்து, அரசன் முன்னே நிறுத்தினார்கள். அரச விசாரணை ஆரம்பமானது. அவனைப் பார்த்ததுமே அரசனுக்கு இரக்கம் சுரந்தது. அவன் இப்படியெல்லாம் முரட்டுத்தனமாக நடந்துகொள்ள ஏதாவது காரணம் இருக்கும் என்று அரசனுக்குத் தோன்றியது. மென்மையாக விசாரணையைத் தொடங்கினான் குலசேகரன். அரசனின் குரல் அவனை வசியப்படுத்துவதாக இருந்தது. வீணன் தன் முழுக்கதையையும் விவரித்தான்.

``அரசே காய்கறி விற்றேன்; விறகு விற்றேன். உங்கள் ஆட்கள் என் உழைப்பைச் சுரண்டினார்கள். உழைத்துப் பிழைக்க வழியில்லை. அதனால்தான் அடாவடித்தனத்தில் இறங்கினேன். நான் சேர்த்த பொருள் எனக்குத் தேவையில்லை. உங்களிடமே தந்துவிடுகிறேன்’’ என்றான்.

அரசன் அவனின் உண்மைநிலையைப் புரிந்துகொண்டான். ``நீயே எல்லாவற்றையும் வைத்துக்கொள்’’ என்றவன் வீணாதி வீணனுக்கு ஓர் அதிகாரி பதவி கொடுத்தான். (மந்திரி பதவி எனவும் ஒரு குறிப்பு சொல்கிறது). வீணாதி வீணன் மாறினான். வள்ளியூர் மாற்றம்கொண்டது. பாண்டியன் கோட்டை எளிய மக்களுக்கு உண்மையிலேயே பாதுகாப்பானதாக மாற ஆரம்பித்தது. வீணாதி வீணன் மறைந்தாலும், மக்கள் அவனை மறப்பதாக இல்லை. சிவனிடம் வரம்பெற்று அவன் தெய்வமானான் என்றே நம்புகிறார்கள்.

`வள்ளியூரில் உள்ள சொக்கநாதர் கோயிலைக் கட்டியவன் வீணாதி வீணன்’ என்பது மரபுவழிச் செய்தி. அங்கே வெளிப் பிராகாரத்தில் வீணாதி வீணனின் சிற்பம் இப்போதும் உள்ளது. கம்பீரமான ஒரு வீரனின் வடிவம் அது. ஒருகாலத்தில் இதற்கு வழிபாடு நடந்ததாகச் சொலப்படுகிறது. குலசேகர பாண்டியனும் வடிவீச்சு அம்மனும் வழிபாடு பெறும் கோயில்களில் எல்லாம் வீணாதி வீணன் துணைத் தெய்வமாகவே இருக்கிறான்.

நாகர்கோவில், கலைநகர் தம்புரான் கோயில் வெளிப் பிராகாரத்தில் வீணாதி வீணன் கல்வடிவமாகக் காட்சிதருகிறான். விழாக் காலங்களில் இங்கே பூஜையும் சாமியாட்டமும் நடைபெறுவது உண்டு. 50-களில் கொடுக்கல், வாங்கல், நிலவரி கட்டுதல் தொடர்பான பிரச்னைகளைத் தீர்த்து வைக்க வீணாதி வீணனிடம் மக்கள் நேர்ந்துகொண்டார்கள் என்கிற குறிப்பு இருக்கிறது. அவர்களுக்கெல்லாம் வீணாதி வீணன் குறை தீர்க்கும் தெய்வம்!

- கதை நகரும்...

தொகுப்பு: பாலு சத்யா