Published:Updated:

ஆலயம் தேடுவோம்: அகத்தீஸ்வரர் அருள் பாலிப்பார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆலயம் தேடுவோம்: அகத்தீஸ்வரர் அருள் பாலிப்பார்!
ஆலயம் தேடுவோம்: அகத்தீஸ்வரர் அருள் பாலிப்பார்!

எஸ்.கண்ணன் கோபாலன் - படங்கள்: க.சதீஷ்குமார்

பிரீமியம் ஸ்டோரி

ன்னை உமையவள், ஒருமுறை ஈசனுடன் ஊடல் கொண்டாள். உலக நன்மைக்காக இறைவி பலமுறை இறைவனுடன் ஊடல் கொண்டாலும், இந்த முறை இறைவி ஊடல் கொண்டதின் பின்னணியில் ஒரு பெண் இருந்துவிட்டாள்!

ஊடலுக்குக் காரணமாக இருந்த பெண் சாட்சாத் கங்கா தேவிதான். 

ஆலயம் தேடுவோம்: அகத்தீஸ்வரர் அருள் பாலிப்பார்!

சூரிய குலத்தில் தோன்றிய பகீரதன், தன் முன்னோர்கள் ஆத்ம சாந்தி பெறும் பொருட்டு, விண்ணில் இருக்கும் கங்கையைப் பூமிக்கு வரவழைப்பதற்காகக் கடும் தவம் மேற்கொண்டார். அவரது தவத்துக்கு இரங்கிய கங்கை, பூமிக்கு வரத் திருவுள்ளம் கொண்டாள். ஆனால், விண்ணில் இருந்து தான் வேகமாக இறங்கும்போது, அந்த வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் உலகம் அழிந்துவிடுமே என்று தயங்கினாள். இதைப் பகீரதனிடம் தெரிவித்தாள்.

அதற்குப் பகீரதன், ‘`தேவி, அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். நீங்கள் வேகமாகக் கீழே இறங்கும்போது, உங்களுடைய வேகத்தைத் தாங்கிக்கொள்ளும்படி சிவபெருமானை வேண்டிக் கொள்கிறேன்’’ என்றார். அதன்படி, சிவபெருமானின் அருள்வேண்டி கடும் தவம் இயற்றினார் பகீரதன். தவத்துக்கு இரங்கிய சிவனார், பகீரதன் முன்பு தோன்றி, ‘`பகீரதா! உன்னுடைய தவம் கண்டு மகிழ்ந்தோம். நீ வேண்டும் வரம் என்ன?’’ என்று ஏதும் அறியாதவர் போல கேட்டார்.

ஆலயம் தேடுவோம்: அகத்தீஸ்வரர் அருள் பாலிப்பார்!

‘`ஐயனே! தாங்கள் அறியாதது ஒன்றுமில்லை. என் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்பதற்காக, விண்ணில் இருக்கும் கங்கையைப் பூமிக்கு வரப் பிரார்த்தித்துக் கொண்டேன். கங்கா தேவிக்கும் சம்மதம்தான். ஆனால், கங்கை விண்ணில் இருந்து சீறிப் பாய்ந்து கீழிறங்கும்போது, தேவியின் வேகத்தை இந்தப் பூமி தாங்காது. எனவே, தாங்கள்தான் அருள்கூர்ந்து கங்கையைத் தங்கள் திருமுடியில் தாங்கி, கங்கையின் வேகத்தைக் குறைக்க வேண்டும்’’ என்று பிரார்த்தித்துக் கொண்டார். ``அவ்வாறே ஆகட்டும்'' என்று திருவருள் புரிந்த சிவனார், விண்ணில் இருந்து வேகமாக இறங்கிய கங்கையைத் தம் திருமுடியில் தாங்கிக்கொண்டார். இதையறிந்த அம்பிகை, ஈசனிடம் ஊடல் கொண்டாள்.

ஆலயம் தேடுவோம்: அகத்தீஸ்வரர் அருள் பாலிப்பார்!

அம்பிகையின் ஊடலைத் தணிக்கவும், இந்த உலகம் செழிக்கவும் திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், தம்முடைய திருமுடியில் இருந்த கங்கையை, தம்முடைய இரு விரல்களால் எடுத்து பூமியில் விடுத்தார்.

ஐயனின் இந்த அருளாடலை உணர்த்தும் வண்ணம் அமைந்த திருக்கோயில்தான் பெரிய குடையூர் என்னும் பெரிய குருவாடியில் அமைந்திருக்கும் அருள் மிகு உமா பரமேஸ்வரி சமேத அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்.

சோழப் பேரரசன் வீர ராஜேந்திர சோழனின் உடன் கூட்ட அதிகாரியான அரங்கன் திருச்சிற்றம்பல முடையான் என்பவர், தான் பிறந்த ஊரான பெரிய குருவாடியில் சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பு கற்றளியாக எழுப்பிய கோயில் இன்று முற்றிலும் சிதிலமடைந்து இருப்பதைக் கண்டு மனம் பதறிவிட்டது.

சிதிலமடைந்திருந்த ஆலயத்தின் கருவறையில் சதுர வடிவ ஆவுடையார் மீது லிங்கத் திருமேனியராகத் திருக்காட்சி தருகிறார் ஐயன் அகத்தீஸ்வரர். சிவலிங்க மூர்த்தத்துக்குப் பின்னால், கங்கையைத் தன் கைவிரல்களால் பூமியில் விடும் திருக்கோலத்தில் ஐயனும், ஊடல் தணிந்த நிலையில் அம்பிகையும் திருக்காட்சி தருகின்றனர்.

ஆலயம் தேடுவோம்: அகத்தீஸ்வரர் அருள் பாலிப்பார்!

பல காலமாக சிதிலம் அடைந்திருந்த கோயிலைப் புதுப்பிக்க விரும்பிய ஊர்மக்கள், அதற்கென்றே ஒரு திருப்பணி கமிட்டியை அமைத்து, திருப் பணிகளைத் தொடங்கி உள்ளனர். திருப்பணி கமிட்டியைச் சேர்ந்த அன்பர் வெங்கட்ராமனிடம் பேசினோம்.

‘`இந்த ஊரைச் சேர்ந்தவரும், வீர ராஜேந்திர சோழரின் உடன் கூட்ட அதிகாரியுமான அரங்கன் திருச்சிற்றம்பலமுடையான் முழுக்க கற்களைக் கொண்டே கட்டிய கோயில் இது. அவர் வேளாளர் மரபில் பிறந்தவர் என்பதால், உலகம் செழிக்கத் தம் திருமுடியில் இருந்து கங்கையைப் பூமியில் விடுவித்த சிவபெருமானின் ‘கங்கா விசர்ஜன’ திருவுருவத்தைக் கருவறையில் சிவலிங்க மூர்த்தத்துக்குப் பின்புறம் பிரதிஷ்டை செய்திருக்கிறார்.

மேலும், காவிரியைத் தம் கமண்டலத்தில் இருந்து விடுவித்த அகத்தியரைப் போற்றும் வகையில் கோயிலுக்கு `அகத்தீஸ்வரம்' என்னும் பெயரையும் சூட்டினார். பரம்பரை பரம்பரையாக வேளாளர்களால் நிர்வாகம் செய்யப்பட்டு வந்த இந்தக் கோயில், காலப்போக்கில் சிதிலம் அடைந்து விட்டது.

சிதிலம் அடைந்த ஆலயத்தைப் புதுப்பிக்க விரும்பி, ஊர்மக்கள் ஒத்துழைப்புடன் ஒரு திருப்பணி கமிட்டி ஏற்படுத்தி, திருப்பணிகளைத் தொடங்கி இருக்கிறோம். எங்களால் பிரமாண்ட மாகக் கட்ட முடியாது என்றாலும், முடிந்தவரை பழைமை மாறாமல் புதுப்பிக்க விரும்பி, சுவாமி அருளால் முக்கால்வாசி திருப்பணிகளை முடித்துவிட்டோம். இன்னும் சில திருப்பணிகளை முடிக்க வேண்டியுள்ளது.

எப்படியும் ஜூன் மாதம் 28-ம் தேதி கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று தேதி குறித்து விட்டோம். சுவாமி எப்படியும் எங்கள் வேண்டுதலை நிறைவேற்றி, குறித்த தேதியில் கும்பாபிஷேகம் நடைபெற அருள்பாலிப்பார் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம்’’ என்றவர் தொடர்ந்து,

ஆலயம் தேடுவோம்: அகத்தீஸ்வரர் அருள் பாலிப்பார்!

‘`தன்  முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய விரும்பிய பகீரதனுக்கு அருளிய ‘கங்கா விசர்ஜன மூர்த்தி’ இங்கே உள்ளதால், இங்கு வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து வேண்டிக்கொண்டால், பித்ரு தோஷங்கள் நீங்கிவிடுவதாக ஐதீகம். மேலும், திருப்பாற்கடலில் தோன்றிய ஜேஷ்டா தேவி இந்தக் கோயிலில் மகன் விருஷபன், மகள் நமனையுடன் அமர்ந்த கோலத்தில் இருக்கிறாள். நோய்களால் அவதிப்படுபவர்கள் இங்கு வந்து ஜேஷ்டா தேவியை வழிபட்டால், நோய்கள் நீங்கி ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெறலாம் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது’’ என்றார்.

பித்ரு தோஷத்தைப் போக்கும் ஐயன் அகத்தீஸ்வரரின் திருக்கோயிலின் திருப்பணிகள் விரைவில் நிறைவு பெற்று, குறித்த தேதியில் கும்பாபிஷேகம் நடைபெற நாமும் நம்மால் இயன்ற பொருளுதவி செய்வோம்.

அதன் பயனாக, ‘வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி’ எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஐயன் அகத்தீஸ்வரரின் அருளால், நம்முடைய தோஷங்கள் எல்லாம் விலகி, நமக்கும் நம் சந்ததியினருக்கும் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது உறுதி.

தலத்தின் பெயர்: பெரிய குருவாடி

சுவாமி: அகத்தீஸ்வரர்

அம்பாள்:
உமா பரமேஸ்வரி

தலச் சிறப்பு: பித்ரு தோஷம் நீங்கும்; தீராத நோய்கள் தீர்ந்து ஆரோக்கியம் உண்டாகும்.

எப்படிச் செல்வது..?

திருவாரூர் - மன்னார்குடி சாலையில் திருவாரூரில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ள லெட்சுமாங்குடி என்ற ஊரில் இறங்கி, அங்கிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள பெரிய குருவாடிக்கு மினி பஸ் மூலம் செல்லலாம்.

திருப்பணிக்கு நன்கொடை அனுப்பவேண்டிய விவரம்:

A/C Name:
ARULMIGU AKASTHEESWARAR STTC

A/C.NO:
11498884977

IFSC:  SBIN0001897

தொடர்புக்கு: வெங்கட்ராமன், செல்: 9786386104

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு