Published:Updated:

ஆனந்த நர்த்தன ஆஞ்சநேயர்!

ஆனந்த நர்த்தன ஆஞ்சநேயர்!

பிரீமியம் ஸ்டோரி

வேலூர்  மாவட்டத்தில், ஆற்காடு நகரில் இருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் (வேலூரில் இருந்து 30 கி.மீ) உள்ள கிராமம் புதுப்பாடி. இங்கு பாலாற்றின் கரையில், கிழக்கு நோக்கிக் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீவீர ஆஞ்சநேயர். மிகவும் பழைமை வாய்ந்த கோயில் இது.

ஆனந்த நர்த்தன ஆஞ்சநேயர்!

ராமரின் அன்புக்குப் பாத்திரமானவர், `சொல்லின் செல்வன்' என்ற திருநாமம் பெற்றவர், சஞ்சீவி மலையைச் சுமந்து வந்து இளையவரைக் காப்பாற்றிய சிரஞ்ஜீவி நாயகர்,  சீதையின் அன்புக்குப் பாத்திரமானவர், காரியம்  நிறைவேற்றுவதில்  தன்னிகரில்லாதவர், எப்போதும் ராமநாமத்தைக் கேட்டு மகிழ்வதற்காகப் பூவுலகில் தங்கிவிட்டவர், கடல் தாண்டுவதில் வல்லவர்... இப்படி, ஆஞ்சநேயரின் புகழை  எழுதிக்கொண்டே இருக்கலாம்.  ஓரிடத்தில் ஆஞ்சநேயர் வாசம் செய்தால், அந்த இடத்தில் நிச்சயம் ராமர் கடாட்சம் நிறைந்திருக்கும் என்பது திண்ணம். அறிவு மற்றும்  உழைப்பு ஆகிய இரண்டையும் ஒருசேர இணைத்துக் காரியம்  நிறைவேற்றுவதில் ஆஞ்சநேயருக்கு  நிகர் ஆஞ்சநேயரே எனக் கூறுவது சாலச் சிறந்ததாகும்.
இத்தகு மகிமைகள் நிறைந்த ஆஞ்சநேயருக்கு ஒன்பது திருநாமங்கள் உள்ளன. இந்தத் திருப்பெயர்களுடன் திகழும் அனுமனைத் துதித்து வழிபட்டால், விசேஷ வரங்களைப் பெறலாம்.

•  ஜய வரத  ஆஞ்சநேயர்: இவரை வழிபட்டால் எல்லாச் செயல்களிலும் வெற்றி, சௌபாக்கியம் மற்றும் எல்லா நன்மைகளும் நமக்குக் கிட்டும்.

பக்த ஆஞ்சநேயர்: இவரை வழிபட்டால் சனியினால் ஏற்படும் தோஷங்களிலிருந்து  நிவர்த்தியடையலாம்.

பால ஆஞ்சநேயர்: இவரை வழிபட்டால் மக்கட்செல்வம் கிட்டும்.

பவ்ய ஆஞ்சநேயர்: இவரை வழிபட்டால் தொழிலில் லாபம் ஏற்படும்.

யோக ஆஞ்சநேயர்: இவரை வழிபட்டால் யோகப்பிராப்தி கிடைக்கும்.

தியான ஆஞ்சநேயர்: இவரை வழிபட்டால்  மன அமைதி,  தீர்க்கமான முடிவெடுக்கும் திறன் உண்டாகும்.

பஜனை ஆஞ்சநேயர்: இவரை வழிபட்டால் காரியங்களில் வெற்றி ஏற்படும்.

தீர ஆஞ்சநேயர்: இவரை வழிபட்டால் மனோபலம் கூடும்.

வீர ஆஞ்சநேயர்: இவரை வழிபட்டால் வீரம் திளைக்கும்.

இதில் வீர ஆஞ்சநேயராக அனுமன் அருளும் தலமே, புதுப்பாடி கிராமம். கருவறையில் ஒரே கல்லினாலான மூர்த்தமாக வடக்கு நோக்கித் திருமுகம் காட்டித் திகழ, வலது கரம் சிரசுக்கு மேல் அபய முத்திரையுடனும், தாமரைத் தண்டு திகழும் இடது கரத்தை இடுப்பில் வைத்த வண்ணமும், வலது பாதம் தூக்கிய நிலையிலும், இடது பாதம் முன் நோக்கியபடி தரையில் பதிந்த வண்ணமும் அருள்பாலிக்கிறார் இந்த அனுமன். அத்துடன், இவர் ஆனந்த நர்த்தனமாடும் கோலத்தில் அருள்வது விசேஷம். இந்த ஆஞ்சநேயரை வணங்குபவர்கள்  மிகுந்த மன அமைதி ஏற்படுவதாக தெள்ளத்தெளிவாகக் கூறுகின்றனர். இந்தக் கோயிலில் அமாவாசை, பௌர்ணமி நாள்களில் திருவிளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெறுகிறது. மூல நட்சத்திரத்தன்று 18 நெய் விளக்குகள் ஏற்றிவைத்து, 18 முறை வலம் வந்து வழிபடும் பிரார்த்தனை இங்கே பிரசித்தம். இதனால், வேண்டும் வரங்கள் யாவும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

திருமணத்தடை விலகவும், சுகமான மகப்பேறு அடையவும், தீராத வியாதிகளிலிருந்து நிவர்த்தியடையவும், பயம் நீங்கிடவும், நல்ல புத்தி கிடைக்கவும், நல்வாழ்க்கை அமையவும் பக்தர்கள் இந்த  ஆஞ்சநேயரை  மனமுருக வேண்டி, கை மேல் பலனடைவதாகக் கூறுகின்றனர். ராம நவமி, ஹனுமத் ஜெயந்தி  மற்றும் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் விசேஷ திருமஞ்சனம் ஆகியவை இங்கே மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.

தற்போது ஆலய மறு சீரமைப்பு மற்றும் புதுப்பிக்கும் பணி  நடைபெறுகிறது. வருகிற 5.6.17-ல் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால், பக்தர்கள் தங்களைத் திருப்பணியில் ஈடுபடுத்திக் கொண்டும், பொருளுதவி செய்தும், ஆஞ்சநேயரின் திருவருளைப் பெறலாம்.

- மு.வெ.சம்பத்

படம்: சேஷாத்ரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு