மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி பதில் - வீட்டின் முகப்பில் விநாயகர் சந்நிதி அமைக்கலாமா?

கேள்வி பதில் - வீட்டின் முகப்பில் விநாயகர் சந்நிதி அமைக்கலாமா?
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதில் - வீட்டின் முகப்பில் விநாயகர் சந்நிதி அமைக்கலாமா?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

? கோயில்களின் அருகில் திருக்குளங்கள் எதற்காக?

- சு.பரமசிவன், வேலூர்

 கோயிலுக்கென்றே ஒரு தீர்த்தம் வேண்டும். தீர்த்தம் என்பது சுத்தமான நீர். பழைய கோயில்கள் எல்லாவற்றுக்குமே ஒரு மரம், ஒரு தீர்த்தம் இருக்கும். மயிலாப்பூரில் கபாலீஸ்வரருக்கு ஸ்தல விருட்சம் என்றால் புன்னைமரம். அந்தத் தீர்த்தத்துக்கு ஒரு பெயர். 

கேள்வி பதில் - வீட்டின் முகப்பில் விநாயகர் சந்நிதி அமைக்கலாமா?

எங்கேயும் நாம் ஆராதனம் செய்யும்போது குளத்தில் நீராடி, பகவானை வணங்க வேண்டும். கெட்ட எண்ணங்களை அகற்றிவிட்டாலே, மனம் சுத்தம் ஆகிவிடும். ஆனால், உடல் அப்படி அல்லவே... ஒருமுறை தூங்கி எழுந்தாலே உடல் அசுத்தமாகி விடுமே... ஓர் இரவு உடல் படுத்துவிட்டால், மறுநாள் காலையில் அது அசுத்தம்தான். குளித்தால்தான் சுத்தமாகும். இல்லாவிட்டால் வழிபடும் தகுதி வராது. அப்படிக் குளிப்பதற்குத்தான் குளம். நதிக்கரையில் மட்டுமே கோயில் கட்ட முடியாது. குளித்து தரிசனம் செய்ய பக்தர்களுக்கு உதவுவதற்குக் குளம்.

அந்த க்ஷேத்திரத்துக்கே ஸ்தல விருட்சம் போல ஒரு புஷ்கரணி வேண்டும். கோயிலில் பல வரிசையில் உற்சவங்கள் நடக்கும். தைப்பூசம், திருவாதிரை, பங்குனி உத்திரம் இப்படி ஒவ்வொரு குறிப்பிட்ட விசேஷத்துக்காக ஓர் உற்சவம் என்று பல உற்சவங்கள் வரும். பிரம்மோற்சவம் என்று தனியாக ஒன்றுண்டு. ‘ஆறாட்டு’ என்று ஒன்று இருக்கிறது. ஆற்றில் ஆடுவது. அப்போது ஸ்வாமியே நீரில் மூழ்குவார். அதற்கு அவருக்கென்றே, அவர் அருகிலேயே ஒரு நீர்நிலை வேண்டும். இன்றும் கேரளாவில், ஆறாட்டு இல்லாமல் எந்த உற்சவமும் நிறைவடைவது இல்லை. உற்சவம் நடத்தும் தகுதியுள்ள கோயில்களுக்குக் குளம் கட்டாயம் தேவை.

இதைத் தவிர, தெப்போற்சவம் என்றே ஒன்று உண்டு. தெப்பத்தை நீரில் மிதக்க விடுவார்கள். குளத்தின் நடுவில் ஒரு மண்டபம் இருக்கும். ஆக குளம் என்பது கோயிலின் ஓர் அங்கம். ஒரு பகுதி. ‘அது இருந்தாக வேண்டுமே, ஏன் இங்கே இல்லை?’ என்றுதான் கேள்வி கேட்க வேண்டும். ஏன் இருக்கிறது என்கிற கேள்விக்கே இடமில்லை.

கேள்வி பதில் - வீட்டின் முகப்பில் விநாயகர் சந்நிதி அமைக்கலாமா?ஓர் ஊரில் உள்ள மக்கள் எண்ணிக்கை அடிப் படையில் குளம் இல்லாத சின்னக் கோயில்கள் கூட இருக்கலாம். ஸ்தல விருட்சமும் இருக்காது. இது இரண்டும் இல்லை என்றால் கோயில் இல்லை என்று நினைக்கக் கூடாது. அடித்தளத்தில் இருப்பவர்கூட வந்து வழிபட வேண்டுமானால், சின்னதாக நாலு சுவர் எழுப்பி ஒரு கூரையைப் போட்டால்கூட அதற்குக் கோயிலாகும் தகுதி உண்டு. வளர்ந்து சௌகர்யங்கள் வரும்போது ஆகம விதிப்படி அவற்றை உண்டாக்கிக் கொள்ளலாம்.
கோயில்களில் சாப்பாடு போடுவார்கள். அன்னதானம். அதற்கென்றே பெரிய கட்டடம் உண்டு. அன்னதானத்துக்கு முன்பு குளிப்பதற்கும் சாப்பிட்டுவிட்டு, சுத்தம் செய்துகொள்ளவும் குளம் பயன்படும். கேரளாவில் பிரசித்தமான ஒரு வழக்கம் உண்டு. வந்தவர்கள் குளத்தில் குளித்துவிட்டு வேறு எங்கும் போகாமல் நேராக சுவாமி சந்நிதிக்குச் சென்று வணங்குவதற்கென்றே ஒரு வழி இருக்கும். அங்கே `ஊட்டுபுரை' என்கிற அன்னதானம் புகழ்பெற்றது. அதனால், குளம் இல்லாத கோயிலே கிடையாது. சில இடங்களில் குளத்தில் மீன்கள் வளரும். ஆமை இருக்கும். அவற்றுக்கும் சுவாமிக்கும் ஒரு சம்பந்தத்தையும் கதையாகச் சொல்லி வைத்திருப்பர். அவற்றுக்குப் பக்தர்கள் உணவிடுவார்கள். இப்படி ஜீவகாருண்யத்தை வளர்க்கவும் குளம் பயன்படும். எனவே, குளத்தின் முக்கியத்துவத்தைப் பல கோணங்களில் சொல்லலாம்.

? புஷ்பக விமானங்கள் குறித்த தகவல்கள் உண்மையா?

- எஸ்.சுந்தர், சென்னை-44


 விஷ்ணுவின் உருவம் பார்த்திருக்கிறோம். சிவன் உருவம் பார்த்திருக்கிறோம். அவற்றுக்கு அடிப்படை என்ன? புராணங்களிலும் வேதங்களிலும் அந்தந்த தெய்வங்களைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் சில குறிப்புகளை வைத்து தனது சிந்தனையையும் சேர்த்து ஓர் உருவத்தை வரைந்தார்கள் ஓவியர்கள். இன்னும் சொல்லப் போனால் லட்சுமி, ராமன், பரமேஸ்வரன், சரஸ்வதி போன்ற தெய்வங்களின் படங்கள் எல்லாம் இன்றும் ரவிவர்மா வரைந்த படங்கள்தான். சரஸ்வதி என்றால் வீணையை இப்படி வைத்து அமர்ந்திருப்பாள் என்பது அவருடைய சிந்தனை. அவற்றை எல்லாம் முதலில் இருந்தே பார்த்துப் பழகியதால் அதைக் கேள்வி கேட்கவில்லை.

`ஏழு குதிரைகள் பூட்டி, சூரியன் ஆகாயத்தில் போகிறான்' என்பது வேதம் சொல்வது. அப்படி வரையப்பட்ட படத்தைப் பார்க்கும்போது சூரியனின் பெருமையிலேயே உங்கள் கவனம் இருந்தது. அதனால், `ஆகாயத்தில் எப்படி குதிரை போகும்?' என்பது போல உங்களுக்குத் தோன்றவில்லை. விமானம் என்றதும் இப்போது உங்களுக்கு என்ன தெரிகிறதோ, அதை புஷ்பக விமானம் என்பதோடு பொருத்திப் பார்க்கிறீர்கள். நூறு வருஷம் கழித்தால் இப்போது இருக்கும் விமானத்தின் வடிவமே மாறியிருக்கும். இப்போது உள்ளதை அப்போது கற்பனையில் பார்க்க முடியாது. அதைப் போல புஷ்பக விமானம் வேறு ஒரு வடிவத்தில் இருந்திருக்கலாம்.

ஆகாயத்தில் பறந்து போகக் கூடியவை எல்லாமே விமானம்தான். விமானத்தை உருவாக்குவது எப்படி, அதை இயக்குவது எப்படி, எந்தெந்த உலோகங்கள் தேவை என்றெல்லாம் தனி ஒரு சாஸ்திரமாகவே எழுதி வைத்திருக்கிறார் பரத்வாஜ மகரிஷி.

? ஒரு சிலர், வீட்டின் முகப்பில் விநாயகர் சந்நிதி களை அமைத்துக்கொள்கிறார்களே, இது சரியா?

- க.கணபதிராமன், வி.கே.புரம்


 ‘எனக்கு பக்தி வந்துவிட்டது... தினப்படி நான் ஆராதனம் செய்யப் போகிறேன்!’ என்ற எண்ணம் வந்துவிட்டால், எந்த இடத்திலும் கோயிலைக் கட்டலாம். நாம் தினப்படி எழுந்ததும், ‘சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே’ என்று சொல்கிறோமே... எதை எழுதினாலும் முதலில் ஒரு பிள்ளையார் சுழி போட்டுவிட்டு ஆரம்பிக்கிறோமே... மனதில் விநாயகர் இருக்கிறார். சொல்லில் விநாயகர் இருக்கிறார். படத்தில் விநாயகர் இருக்கிறார். ஆற்றங்கரை அருகில் இருக்கிறார். குளக்கரையில் குந்தியிருக்கிறார். வீட்டுக்கு அருகில் இருக்கக் கூடாதா என்ன? தாராளமாக வைத்துக் கொள்ளலாம்.

விநாயகர் சுலபமான தெய்வம். அவர் இல்லாத இடமே இல்லை. வீட்டு வாசலில் மாத்திரம் இல்லாமல், எங்கே வேண்டுமானாலும் வைக்கலாம். இது, நமது பக்தியையும் தேவையையும் பொறுத்தது; நமது பண்பாடும்கூட.

? மூவகை கடன்களில்... இறை வழிபாடு செய்து தேவ கடனைப் பூர்த்தி செய்யலாம். பித்ரு கடன் முன்னோர் ஆராதனையால் பூர்த்தியாகும். ‘ரிஷி கடன்’ என்கிறார்களே, அதென்ன?

- எம்.நித்யா, செங்கோட்டை


 தேவர்கள், ரிஷிகள், பித்ருக்கள் எல்லோரும் நமக்கு நல்லது செய்திருக்கிறார்கள். அதனால், நாம் அவர்களுக்குக் கடன்பட்டிருக்கிறோம். தேவர்கள்தான் இந்தப் பூமியைச் செழிப்பாக்குகிறவர்கள். ஆதித்யன் ஒரு தேவன். வருணன் ஒரு தேவன்.

நம் பெற்றோர்தான் நம்மை இந்த உலகத்துக்குக் கொடுத்தவர்கள். அதாவது பித்ருக்கள். அவர்களை வணங்குவதும் நமது கடமை.

அதேபோல், நம் கலாசாரத்தை நமக்குக் கொடுத்தது ரிஷிகள். நமக்குப் போதித்தவர்களுக்கு நாம் நன்றிக்கடன்பட்டிருக்கிறோம்.

? சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் ஆகிய வைபவங்களை திருக்கோயில்களில் நடத்தலாமா?

- கே.ராஜாராமன், சாத்தூர்


பொதுவாக ஒரு விஷயம். வீட்டில் நிகழ்த்த வேண்டிய தனி மனிதக் கொண்டாட்டங்களைக் கோயில்களுக்குக் கொண்டு போவது புதிய நடைமுறை.

பொருளாதாரச் சூழல், சோம்பல், வீட்டில் வைத்துக் கொண்டாடுவதை சுமையாகக் கருதும் மனப்பான்மை, ‘பரிசுத்தமான இடம் கோயில்’ என்ற எண்ணம்... எல்லாவற்றுக்கும் மேலாக கும்பலைத் தவிர்க்கும் நோக்கம் என்று பல காரணங்களால் கோயிலில் வைத்துக் கொண்டாடுகின்றனர். ஆனாலும்... எத்தனையோ பேர், இதுபோன்ற வைபவங்களைத் தங்களது வீட்டிலேயே வைத்துக் கொள்கின்றனர்.

- பதில்கள் தொடரும்...