Published:Updated:

இது யாத்திரை குடும்பம்!

பிரேமா நாராயணன் - படங்கள்: ப.சரவணகுமார்

பிரீமியம் ஸ்டோரி

‘‘இதுவரை 1,428 கோயில்கள் தரிசித்திருக்கிறோம்’’ - மிகப் பெருமையுடன்... இல்லை இல்லை... மிகப் பரவசத்துடன் சொல்கிறார் சென்னை, மாம்பலத்தைச் சேர்ந்த ஜெயஜோதி ஜெயகுமார்.

சனி, ஞாயிறு மற்றும் பள்ளி விடுமுறை விட்டாலே, பாட்டி ஊருக்கும் சுற்றுலாத் தலங்களுக்கும் மூட்டையைக் கட்டும் மக்களுக்கு நடுவே, மிக வித்தியாசமாக, விடுமுறை என்றாலே மகனையும் அழைத்துக்கொண்டு கோயில் கோயிலாக திருத்தல உலா செல்ல ஆரம்பித்துவிடுகின்றனர் ஜோதி தம்பதி. தேவாரத் திருத்தலங்கள், திவ்ய தேசங்கள், சக்தி பீடங்கள், நவ திருப்பதி, கயிலாயம்... என நீள்கிறது இவர்களது தல யாத்திரைப் பட்டியல்!

இது யாத்திரை குடும்பம்!

தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய ஜெயஜோதி, இதற்காகவே வேலையை ராஜினாமா செய்துவிட்டு, கணவருக்கு உதவியாகச் சொந்தத் தொழிலையே பார்த்துக்கொள்கிறார். ஒரே மகன் ஹரீஷ்வர், 9-ம் வகுப்பு மாணவர்.

‘‘இந்த ஆன்மிக ஆர்வம் இன்னிக்கு நேத்து ஏற்பட்டது இல்லைங்க. சின்ன வயசிலேயே சுவாமி படங்கள் எல்லாம் சேர்க்க ஆரம்பிச்சேன். பள்ளி நாள்களிலேயே, ஏதோ ஒரு பாக்கெட்டில் திருக்கயிலாயத்தின் படம் பிரின்ட் ஆகி வந்திருந்தது. அதை எடுத்து, பத்திரப்படுத்திக் கொண்டேன். ஆமாம்... அப்போதே கயிலாயம் என் மனசுக்குள் ஆழப் பதிந்துபோனது எனலாம்.

அப்புறம், கல்லூரிப் படிப்பு முடிஞ்சு, நான் வேலையில் சேர்ந்தது பாரிமுனையில். வீடு குரோம்பேட்டையில். தினமும் குரோம்பேட்டையி லிருந்து பிராட்வேக்கு எலெக்ட்ரிக் ட்ரெயினில் போகும்போது, குறிப்பிட்ட ஒரு பெட்டியில் பெண்கள் எல்லோரும் சேர்ந்து சுலோகம் சொல்லிக்கொண்டே வர்றதைப் பார்த்தேன். தினமும் அடிச்சுப் பிடிச்சு, அந்தப் பெட்டியில் ஏறிடுவேன். உட்கார இடம் கிடைக்காட்டா, நின்னுட்டே அவங்க பாடறதைக் கேட்டுட்டே பயணம் செய்வேன். அப்படியே அந்தப் பாடல்கள், சுலோகங்கள் எல்லாம் நானும் கூட சேர்ந்து பாட ஆரம்பிக்கும் அளவுக்கு மனப்பாடம் ஆயிடுச்சு. 

இது யாத்திரை குடும்பம்!

எனக்கு அப்பா இல்லை. தங்கைகள் மூணு பேர். அவங்க எல்லாருக்கும் கல்யாணம் பண்ணி வெச்சுட்டு, என்னைப் போலவே ஆன்மிகத்தில் ஈடுபாடும் உதவும் மனப்பான்மையும் கொண்ட, என் கூட வேலை செய்த, இவரை (ஜெயகுமார்) திருமணம் செய்துக்கிட்டேன். 2005-ல் கோயில் செயல் அலுவலர் தேர்வுக்காகப் படிக்க ஆரம்பிச்சபோதான், சைவம், வைணவம் பத்தியெல்லாம் ரொம்ப ஆழமாத் தெரிஞ்சுக்க வாய்ப்பு கிடைச்சது. சைவத்திலும் வைணவத்திலும் சிறப்பான கோயில்கள் என்னென்ன, எங்கெங்கே இருக்குன்னு எல்லாம் விரிவாகத் தெரிஞ்சுக்கிட்டேன். அந்தத் தேர்வில் பாஸ் பண்ணலைன் னாலும், அளவற்ற தகவல்கள் கிடைச்சதால், ஆன்மிக அறிவு விசாலமாச்சு!’’ என்று சிரிக்கிறார் ஜெயஜோதி. 

தாங்கள் படித்த கோயில்களை நேரில் தரிசிக்கும் ஆர்வம் ஏற்படவே, அந்த நிமிஷத்தில் தொடங்கியிருக்கிறது இவர்களின் திருக்கோயில் உலா. 2007-ல் தொடங்கி, இந்த 10 வருடங்களாக இவர்கள் தரிசித்திருக்கும் கோயில்கள் ஏராளம். 

இது யாத்திரை குடும்பம்!

‘‘முதலில் நவகிரகக் கோயில்களில் இருந்துதான் தொடங்கினோம். 9 கோயில் களையும் போய்ப் பார்த்து, தரிசனம் முடிச்சுட்டு வந்ததும், ரொம்பவே புத்துணர்வு கிடைச்சது. அடுத்து வந்த விடுமுறையில் சென்னை மாவட்டக் கோயில்கள், செங்கல்பட்டு மாவட்டக் கோயில்கள்... இப்படியே திருவள்ளூர், காஞ்சிபுரம்னு ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கிற கோயில்களைப் பட்டியல் போட்டு, முறையா ப்ளான் பண்ணி, போய் தரிசனம் பண்ணிட்டு வந்தோம். இந்து சமய அறநிலையத்துறையில் தமிழ்நாட்டில் இருக்கும் கோயில்கள் பத்தி ஒரு புத்தகம் போட்டிருக் காங்க. அதை வெச்சுத்தான் நாங்க கோயில்களைத் தேர்ந்தெடுத்தோம்.

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்களில், இலங்கையில் இருக்கும் ரெண்டு கோயில்கள் தவிர மீதி 274 கோயில்களையும் தரிசனம் பண்ணியாச்சு. திவ்யதேசங்கள் 108-ல், திருப்பாற்கடல், வைகுண்டம் தவிர மீதி 106 தேசங்களுக்கும் போய்ட்டு வந்துட்டோம். அப்புறம், நால்வர் நயந்த வைப்புத்தலங்கள் 1006, அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் திருத்தலங்கள், அறுபடை வீடு, நவ திருப்பதி... இப்படி ஒவ்வொரு தொகுப்புகளாகப் பிரிச்சுக்கிட்டு, பட்டியல் போட்டு, தரிசனம் செய்தோம். இதில் சக்தி பீடங்கள் மட்டும் பூர்த்தியாகலை. இதுவரை 18 சக்தி பீடங்களையே தரிசிச்சிருக்கோம். நம்ம அண்டை நாடுகளில் எல்லாம் சக்தி பீடங்கள் இருக்கு. எல்லாத்துக்கும் போற வாய்ப்பை அந்த அம்பாள்தான் அருளணும்!’’ என்று கைகூப்பி வணங்கிய ஜோதியிடம், நம் சந்தேகத்தைக் கேட்டேவிட்டோம்.

‘‘பையனையும் அழைச்சுட்டுப் போறீங்கன்னா, அவருக்கு ஸ்கூல் லீவு எல்லாம் எப்படி?’’

‘‘கோயில் பயணங்களுக்குன்னு நாங்க அவனுக்கு லீவு போடறதே இல்லை. ஏதாவது பண்டிகை, விசேஷம் சமயங்கள்லயும், வெள்ளி சனி, ஞாயிறுன்னு சேர்ந்தாற்போல் மூணு நாலு நாள்கள் லீவு வந்தால் அந்த தருணங்கள்லயும் கிளம்பிடுவோம். அதேபோல், ஆண்டுத் தேர்வு விடுமுறை நாள்கள்லயும் ஆன்மிகச் சுற்றுலாதான்’’ என்று கூறிச் சிரிக்கும் ஜோதி, தொடர்ந்தார்...

‘‘எல்லா கோயில்களுக்கும் காரிலேயே போயிடறதால, பயணம் பிரச்னையா தோணறதில்ல. முதலில் நாங்க போகவேண்டிய ஊர்களுக்கான ரூட்டை மேப்பில் பார்த்துப் போட்டுக்குவோம். அப்புறம், அதுக்குப் பக்கத்தில் என்னென்ன கோயில்கள் இருக்கு, தங்கறதுக்கு ஹோட்டல் இருக்கா என்கிற விஷயங்களெல்லாம் தெரிஞ்சுக்குவோம். அடுத்து, கோயில்களின் தல புராணத்தையும் அந்தக் கோயிலுக்கான பதிகத்தையும் தெரிஞ்சுக்குவோம். கோயிலில் உட்கார்ந்து அந்தப் பதிகத்தை முழுமையாகப் பாடிட்டுத்தான் வருவோம். கடவுள் கொடுத்திருக்கும் பெரிய வரம் இது’’ என்றவரிடம், அவர்களது திருக்கயிலாய யாத்திரை குறித்துக் கேட்டோம்.

இது யாத்திரை குடும்பம்!

‘‘மிகப்பெரிய கொடுப்பினை அது. மலையைச் சுத்தி 48 கிலோமீட்டர் தூரத்தை, மூணு நாள் நடக்கணும். முதல் நாள் 18 கி.மீ, அடுத்த நாள்    12 கி.மீ, மூணாவது நாள் 6 கி.மீ... இப்படி நடந்து மலை உச்சியில் 8 கி.மீ ஏறி இறங்கினால், அஷ்டபத் தரிசனம் கிடைக்கும். என் வாழ்க்கையில் கடவுளை நேரில் தரிசித்த நிமிஷம் அது!’’ என்ற ஜெயஜோதி, அங்கு நேர்ந்த அனுபவத்தையும் சிலிர்ப்புடன் விவரித்தார்.

‘‘ஒவ்வோர் இடத்திலும், இறைவன் எங்களைச் சோதிச்சுச் சோதிச்சுத்தான் தரிசனம் கொடுத்தார். கயிலாயத்திலும் அப்படித்தான். முதல் நாள் கிடைக்க வேண்டிய தரிசனம் கிடைக்கல. ரெண்டாம் நாளும் கிடைக்கல. மூணாவது நாளும் கிடைக்கலன்னதும் நாங்க, மனம் வாடிப் போனோம். 8 கி.மீ மேலே ஏறியும் அஷ்டபத் தரிசனம் கிடைக்கல. பனிமேகம் மூடியிருந்தது.

எங்களோடு வந்த 22 பேரில், நாங்க 6 பேர் மட்டும் அங்கேயே உக்காந்து, மனமுருகிப் பாடி, கண்ணீர் விட்டு அழுதுட்டோம். ‘உன் தரிசனம் கிடைத்தால்தான் கீழிறங்குவோம்’னு ஒரு சங்கல்பத்தோட உக்காந்துட்டோம். மறுநாள் காலை, சூரிய உதயத்தின் போதே, தகதகன்னு தரிசனம்! மூணே நிமிஷம்தான்! கண் குளிர, மனம் நிறையக் கண்டோம்! ‘அழுதால் பெறலாமே’ என்ற மொழிக்கேற்ப, அழுதழுதே அவனிடம் பிடுங்கினோம். அவன் மேல நம்பிக்கை வெச்சா நமக்கு எல்லாமே கிடைக்குங்கிறதுக்கு இந்த நிகழ்ச்சி நல்ல உதாரணம்.

இது யாத்திரை குடும்பம்!

அதேபோல், 2012-ல் முக்திநாத் போனோம். நேபாள் போய், அங்குள்ள போக்ரா ஏர்போர்ட்டில் இருந்து விமானப் பயணம். ‘ஜோம்சம்’ என்கிற இடத்துக்குப் போனதும் ஃப்ளைட் ரிப்பேர் ஆயிடுச்சு. ஜோம்சம்மிலிருந்து ஜீப், பைக், நடை மூலமாகத்தான் முக்திநாத் போகணும். 18 கிலோ மீட்டர் போய் தரிசனம் முடிச்சுட்டு வந்த பிறகும், விமானத்தில் கோளாறு சரியாகல. க்ளைமேட் வேற ரொம்ப மோசமா இருந்துச்சு. கையில் திரும்பிப் போறதுக்கான  டிக்கெட் இருந்தும், பயணம் செய்ய முடியாத நிலைமை. ‘இறைவனே கதி’ன்னு நாங்க பிரார்த்தனை செய்துக்கிட்டே இருந்தோம். ஒருவழியாக, ராத்திரி 11 மணிக்கு, ஃப்ளைட்டை எடுத்தாங்க. அடுத்த முறை வந்தப்போ, போகணும்னு நினைச்சிருந்த சிலருக்குப் போகவே முடியல. நாங்க எவ்வளவு பாக்கியசாலிகள்னு புரிஞ்சுது’’ - குரல் நெகிழச் சொல்கிறார்.

‘‘அடுத்து என்ன ப்ளான்?’’ என்றதும் சிரித்துக்கொண்டே, ‘‘திருவண்ணாமலையில் உள்கிரிவலம் போகணும். சதுரகிரி மலை, பர்வதமலை ஏறணும். சக்தி பீடங்களில் ஆப்கானிஸ்தானில் இருக்கும் கோயில்களைப் பார்க்கணும். இப்படி திட்டங்கள் நிறைய இருக்கு. அவன் திருவருள் புரியணுமே!’’ என்று சுவாமி படத்தை நோக்குகிறார்.

இவ்வளவு கொடுத்துட்டாரே ஜோதி... இதைக் கொடுக்க மாட்டாரா?!

நூற்றுக்கு ஐந்து ரூபாய் சுவாமிக்கு!

தேவார முற்றோதுதல் குழுவில், இவருடைய குடும்ப உறுப்பினர் அனைவருமே உறுப்பினர்கள். நான்கு வயது குழந்தை முதல், பள்ளி, கல்லூரியில் படிக்கும் குழந்தைகள் வரை இந்தக் குழுவில் அடங்குவர். பாடல்பெற்ற அல்லது புகழ்பெற்ற சிவாலயங்களில், முற்றோதுதல் இசைப்பதுடன், நால்வர் குறித்த கதைகளைக் கூறி, பின்னர் அதிலிருந்து வினாடி வினா நடத்தி, தன் சொந்தச் செலவில் பரிசுகள் வழங்குகிறார் ஜோதி. புறநகர் பகுதிகளில் கவனிப்பாரில்லாமல் இருக்கும் சிவன் கோயில்களில் பிரதோஷ தினத்தில், அபிஷேகப் பொருள்கள் அனைத்தையும் வாங்கிக் கொடுத்து, அபிஷேகம் முடிந்ததும் தேவாரம் பாடிவிட்டு வருவது இத்தம்பதியின் வழக்கம். வல்லக்கோட்டையில் வாரம் தோறும் நடக்கும் அபிஷேகத்துக்கு, தேன் வழங்குவதும் இத்தம்பதிதான். ‘‘எங்கள் வருமானத்தில் 100-க்கு ஐந்து ரூபாய் சுவாமிக்கு!’’ - மகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஜெயஜோதி!

வாழ்க வளமுடன்!

அஷ்டபத் தரிசனம்!

கயிலைமலை முகட்டினை மிக அருகில் தரிசிக்க வேண்டும் என்றால் ‘அஷ்டபத்’ என்ற இடத்துக்குச் செல்ல வேண்டும். இங்கிருந்து தரிசிப்பதைத் தென்முகக் கயிலாய தரிசனம் என்பார்கள்.  ஜைன மதத்தின் முதல் தீர்த்தங்கரரான ரிஷப தேவர், மகா சிவராத்திரி அன்று இந்த அஷ்டபத்தில் முக்தி பெற்றதாகக் கருதுவதால், ஜைனர்களுக்கும் இது புனிதமான இடமாகத் திகழ்கிறது. இரண்டு வழியாக அஷ்டபத் தரிசனத்துக்குச் செல்லலாம். ஒன்று குன்று வழி, மற்றொன்று நதியின் வழி. இவற்றில் நதி வழியாக விரைவில் சென்றுவிடலாம் என்றாலும் ஆபத்துகள் அதிகம். அதேபோல், கயிலாயத்தின் வலப்புறம் நந்தி பர்வதமும் இடப்புறம் மகாகாள மலையும் உள்ளன. மகாகாள மலையைச் சிவபெருமானின் கோட்டை என்கிறார்கள். நந்தி பர்வதத்தின் வலப்பக்கம் பல குகைகள் உள்ளன. அவற்றுள் கற்பக விருட்சம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு