பிரீமியம் ஸ்டோரி

கடவுளின் மொழி

ப்போதெல்லாம் தமிழ்த் திரைப்பட உலகினர் பக்திப் படங்களைத் தயாரிக்கிற மாதிரி தெரிய வில்லை. முன்பெல்லாம் ஆடி மாதம் என்றால் அம்மன் பக்திப் படங்கள், ஐயப்ப சீசன் என்றால் ஐயப்பன் மகிமையைச் சொல்லும் படங்கள், நடுவில் ராகவேந்திரர் மாதிரி ஞானிகளின் வரலாறு குறித்த திரைப்படங்கள் எல்லாம் வரும். நிறைய பேர் வீட்டில் பக்திப் படம் என்றால்தான் தங்கள் பிள்ளைகளை சினிமாவுக்கே அனுப்பு வார்கள். 

புதிய புராணம்!

அவ்வளவு ஏன், இந்தப் பக்திப் படங்கள் பார்த்துதான் நிறையப் பேருக்கு பக்தி உணர்வும், ஆன்மிக அறிவு பற்றிய புரிதலும் ஏற்பட்டிருக்கும்.

சமீபத்தில் ஆன்மிக உணர்வைச் சித்திரிக்கும் ஒரு திரைப்படத்தைத் தொலைக்காட்சியில் பார்த்தேன். ஏற்கெனவே, அந்தப் படம் வெளியான புதிதில் தியேட்டரிலும் பார்த்திருக்கிறேன். என்றாலும், எப்போது டி.வி-யில் போட்டாலும் அதைப் பார்க்கத் தவறுவதில்லை. நீங்களும் அந்தப் படத்தைப் பலமுறை பார்த்திருக்கலாம்.

படத்தின் பெயர் அவதார். 2009-ல் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம். ஜேம்ஸ் கேமரூன் இயக்கியது. இந்து மதக் கருத்துகளை வலியுறுத்திய அருமையான திரைப்படம்!

அதிர்ச்சி அடைய வேண்டாம்.

‘அவதார்’ என்பது இந்து மதத் தொடர்புடைய வார்த்தை என்பதாலோ, அதன் கிராஃபிக்ஸ் கதாபாத்திரங்கள் இந்து மதக் கடவுளர் தோற்றங்களை நினைவுபடுத்துகிற மாதிரி இருப்பதாலோ... நான் அதை இந்து மதம் சார்ந்த பக்திப் படம் எனக் கூறவில்லை.

நாம், அன்றாடம் எத்தனையோ முடிவுகளை எடுக்க நிர்ப்பந்திக்கப்படுகிறோம். நொடிக்கு நொடி முடிவுகளை எடுத்த வண்ணம் இருக்கிறோம்.

ஒரு பேருந்தில் ஏறுவதும் அல்லது அதில் ஏறாமல் அடுத்த பேருந்துக்காகக் காத்திருப்பதும்கூட நாம் மேற்கொள்ளும் ஒரு முடிவுதான். ஒரு தினத்தை எப்படி எதிர்கொள்வது என்று யோசித்தால், அதுவும் ஒரு முடிவுதான்.

இப்படி நீங்கள் எடுக்கும் முடிவுகளில்,  உங்களில் எத்தனைப் பேருக்கு உறுதியும் அசைக்க முடியாத நம்பிக்கையும் இருக்கின்றன?

பலரும் ஒரு முடிவை எடுத்துவிட்டு, அதைப் பற்றிய திருப்தி இல்லாமல் குழப்பத்துடன்தான் அன்றைய நாளைக் கழிப்பார்கள்.  ஏன்... நிறைய பேர் ஒட்டுமொத்த ஆயுளையும் இப்படியே கழிப்பார்கள்.

நாம் எடுக்கும் முடிவுகள் மீது நமக்கே நம்பிக்கை இல்லாமல் போவது ஏன்? வாழ்வின் வெற்றிக்கும், சந்தோஷத்துக்கும் உதவுவது நாம் எடுக்கும் முடிவுகளே எனும்போது, அவற்றைப் பற்றிய உறுதியான நம்பிக்கை அவசியம் அல்லவா? பெரும்பாலும் அப்படியான நம்பிக்கை நமக்கு ஏற்படாமல் போவது ஏன்?

நிர்பந்தத்தாலும் வேறு வழியில்லாத நிலையிலும் எடுக்கப்படும் முடிவுகள் பூரண சந்தோஷத்தையோ வெற்றியையோ தரும் என்று எதிர்பார்க்க முடியாதுதான். எனில் என்ன செய்வது?

இந்த இடத்தில்தான் இந்தக் கட்டுரை உங்களுக்குச் சிறிது உதவப் போகிறது. ஆம்! எவ்விதமான முடிவுகள் எடுப்பதாயினும் இறையுணர்வுடன் அந்த முடிவை மேற் கொள்ளுங்கள். இறையை நினைத்து, செயலில் இறங்குங்கள். அப்படி எடுக்கப்படும் முடிவுகள், செயல்படுத்தப்படும் காரியங்கள் இன்பத்தையும் வெற்றியையுமே தரும்.

தெய்வத்தின் முடிவோடு தங்களின் முடிவும் அனுசரித்துப்போகும் தருணங்களின் அருமையை உணர்ந்தவர்கள், தங்களைச் சுமப்பது கடவுள் என்பதை உணர்வார்கள். உதாரணமாக, நாம் ஒருவரை நினைத்துக் கொண்டிருப்போம். எதிர்பாராமல் அந்த நபர் நம் எதிரில் வந்து நிற்பார். நமக்கு ஆச்சர்யம் தாங்க இயலாது. ‘ஆயுசு நூறு உங்களுக்கு’ என்று அவரை வரவேற்று, ஆச்சர்யத்தைப் பகிர்ந்துகொள்வோம். அதேபோல், தொலைபேசியில் ஒருவரை அழைக்க நினைக்கும் நேரத்தில், அவரிடமிருந்தே அழைப்பு வரும்.

இப்படியான அனுபவங்கள் நம் எல்லோருக்குமே நடந்திருக்கும்.  அதற்காக, ஏதோ அதிசயச் சக்தி பெற்றுவிட்டோம் என்று அர்த்தம் இல்லை. எவரைப் பார்க்க நினைக்கிறோமோ, எவரிடம் பேச விரும்புகிறோமோ அவரது எண்ண அலைவரிசையும், நம்முடைய எண்ண அலைவரிசையும் ஒன்றாகிறது. அவ்வளவு தான். இப்படியே கடவுளுக்கும் நமக்குமான எண்ண அலைவரிசை அனுசரித்துப்போவதாக நினைத்துப்பாருங்கள்!
      
புராணங்களில் முனிவர்களும், ரிஷிகளும் வருடக்கணக்கில் தவமியற்றியதையும், அவர்கள் நினைத்தமாத்திரத்தில் அவர்கள் முன் கடவுள் தோன்றிய கதைகளையும் படித்திருக்கிறோம்.இதற்கெல்லாம் என்ன பொருள்?

இரண்டு அலைவரிசைகளும் ஒரே புள்ளியில் சந்திக்கின்றன என்பதைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்?

கடவுளை உணர்தல் என்பது இதுவே. இந்த அனுபவம் நம் அனைவருக்கும் அவ்வப்போது நேர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், யாரும் அதை நுணுக்கமாக எடுத்துக்கொள்வ தில்லை. அவ்வளவே!

இன்னும் புரிகிற மாதிரி சொல்ல வேண்டும் என்றால், கோயிலுக்குச் செல்வோம். எதையும் வேண்டவோ, பிரார்த்திக்கவோ  தோன்றியிருக்காது. ஆனாலும், மனம் நிறைந்திருக்கும். அற்புதத்தைத் தரிசிக்கச் சென்று அற்புதமாகவே வெளியே வருவோம். இன்னும் சிலருக்கு, சில நேரங்களில், கோயிலுக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் கூடத் தோன்றாத அளவுக்கு மனம் கடவுள் சிந்தையால் நிறைந்திருக்கும்.

இப்படியான சில துளி கணங்கள் வாய்த்த தென்றால், நீங்களும் கடவுளின் அலைவரிசையைப் பிடித்து விட்டீர்கள் என்று பொருள்.  அப்படியான ஓர் அற்புதக் கணத்தில் நீங்கள் எடுக்கும் முடிவு, கடவுளின் முடிவு என்று பொருள். அதன்பிறகு அந்த முடிவின் நல்லது - கெட்டது எதுவுமே உங்களைப் பாதிக்காது. எது நடந்தாலும் இயல்பாக ஏற்றுக்கொள்வீர்கள். இப்போது  ‘அவதார்’ திரைப் படத்துக்கு வருவோம். அதில் சித்திரிக்கப்படும் ‘பெண்டோரா’ என்ற கிரகத்தில் எல்லா உயிர்களும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டவை. தனது வளர்ப்புப் பிராணியின் முதுகில் அமர்ந்து பயணம் செய்ய வேண்டும் என்று நாயகன் நினைத்த மாத்திரத்திலேயே அந்தப் பிராணி எங்கிருந்தோ பறந்து அவனருகில் வந்து நிற்கும்.

நாயகி ஒரு காட்சியில் நாயகனைக் கொல்வதற்காக, அவனைக் குறி பார்த்து அம்பு தொடுக்க ஆயத்தமாவாள். அப்போது அந்தக் கிரகத்தினரால் வணங்கப்படும் தெய்விக மரத்திலிருந்து சிறு மலர் ஒன்று காற்றில் மெள்ள பயணித்து நாயகன் மீது படரும். உடனே, ‘அவனைக் கொல்லக்கூடாது’ என்று தெய்வம் சொன்னதாகக் கருதி நாயகி வில்-அம்பைக் கீழே இறக்குவாள்.

காணும் காட்சியில் எல்லாம் கடவுள்; எங்கும் கடவுளின் மொழி கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது என்பதை உணர்த்தும் அற்புதக் காட்சி இது. இந்த மனநிலை வாய்த்தால், இந்தப் பூமியில் எல்லாம் பின்னிப் பிணைந்திருப்பதை உணர்வோம். எல்லாம் கடவுளின் படைப்பாய் உணர்கிறபோது, அவற்றிடமிருந்து வரும் தகவல்களும் கடவுளின் தகவல்களாகத்தானே இருக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு