நவக்கிரக தரிசனம்!

##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கோயில்களில் நவக்கிரக சந்நிதியில்... நம் சக்திக்கு ஏற்றாற்போல் இரும்புச் சட்டி ஒன்று புதிதாக வாங்கி, அதில் நல்லெண்ணெய், பசுநெய், இலுப்பை எண்ணெய் மூன்றையும் சம எடையில் கலந்து ஊற்ற வேண்டும். பிறகு வெள்ளை, சிவப்பு, கருப்பு ஆகிய மூன்று நிறத் திரிகளை இட்டு, மேற்கு பார்த்து இருப்பதுபோல் தீபம் ஏற்றி வழிபடுவது விசேஷம்.
கங்கைகொண்ட சோழபுரத்தில் ஒரே கல்லில் ஆன நவக்கிரக சக்கரத்தைத் தரிசிக்கலாம். சூரிய பகவானை மையமாகக் கொண்டு மற்ற கிரகங்கள் உள்ளதால், இதனை சூரிய சக்கரம் என்றும் சொல்வர். இந்த சக்கரத்தைத் தரிசித்து வழிபடும் அன்பர்களுக்கு சந்தோஷமும், ஆயுள்விருத்தியும், செல்வச் செழிப்பும் ஏற்படும்.
சகல தோஷங்களும் நிவர்த்தி ஆகும் என்பது ஐதீகம்.
திருக்கோவிலூர் செல்லும் சாலையில் 15 கி.மீ. தொலைவில் கல்பட்டு கிராமம் உள்ளது. இங்கு நின்ற கோலத்தில் சனி பகவான் காட்சி தருகிறார். இவரின் உயரம் சுமார் 20 அடி. இந்தியாவிலேயே மிகப்பெரிய சனீஸ்வரர் சிலை இதுதான் என்கிறார்கள். இவருக்கு ஸ்ரீயோக சனீஸ்வரர் என்று பெயர். இங்கு உண்டியல் கிடையாது. தனியார் பெயருக்கு அர்ச்சனையும் கிடையாது.
நவக்கிரகங்கள், பெரும்பாலான ஆலயங்களில் தனியாகவே காட்சி தருவர். ஆனால், கோவை ஸ்ரீகோணியம்மன் கோயிலில் மனைவியருடன் அருளும் நவக்கிரக மூர்த்தியரை தரிசிக்கலாம்!
- எஸ்.விஜயா சீனிவாசன், திருச்சி-13.
புண்ணியம் தரும் பீஷ்மாஷ்டமி!

பாரதப் போரில் அர்ஜுனனின் அஸ்திரங் களால் தாக்கப்பட்டு, அம்புப் படுக்கையில் வீழ்ந்திருந்தார் பீஷ்மர். உத்தராயன காலத் தில் உயிர்விடுவது புண்ணியம் என்பதால், அதற்காகக் காத்திருந்தார். அவரைக் காண வந்த பாண்டவர்களும் கௌரவர்களும் சூழ்ந்திருக்க, ஸ்ரீகண்ணன், மகாவிஷ்ணுவாக பீஷ்மருக்குக் காட்சி தந்தார். அவரைப் போற்றித் துதித்தார் பீஷ்மர். அதுவே, ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம்!
பிறகு, ரத சப்தமி வரை காத்திருந்து, அதற்கும் மறுநாள் (தை மாத- வளர்பிறை) அஷ்டமியன்று உயிர்நீத்தார். அதுவே பீஷ்மாஷ்டமியாக சிறப்பிக்கப்படுகிறது. இந்த நாளில் ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்து பெருமாளை வழிபடுவது, பெரும் புண்ணியம் தரும்.
- ஆர்.ராஜலட்சுமி, ஹூப்ளி
'வாழைப்பழ’ திருவிழா!

மதுரை- உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள செல்லம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊர் கோவிலாங்குளம். இங்கு அமைந்திருக்கும் ஸ்ரீபட்டசாமி தொண்டியாபிள்ளைசாமி கோயிலில், தைப் பொங்கலை முன்னிட்டு வாழைப்பழத் திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது.
மாட்டுப்பொங்கல் அன்று சுவாமிக்கு வாழைப்பழம் சமர்ப்பிப்பது வழக்கம். சுவாமிக்குப் படைப்பதற்காக, சுமார் 36 கி.மீ. தொலைவில் உள்ள சோழவந்தான் எனும் ஊரில் வாழைப்பழம் வாங்கி, அதை தலைச்சுமையாக எடுத்து வந்து கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். வீட்டுக்கு ஒருவர், கோயிலுக்கு வாழைப்பழம் எடுத்து வரவேண்டும் என்பது நியதி. இவ்வாறு, பக்தர்கள் கொண்டு வரும் பழங்களை சந்நிதியில்
பரப்பிவைக்கிறார்கள். பூஜைகள் முடிந்ததும் அந்த வாழைப் பழங்கள், பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தரப்படுகின்றன!
- கோவி. இராஜேந்திரன், மதுரை-4
வாழ்க்கையின் லட்சியம் இறைவனே!

கடவுளுக்குக் காதுகள் இல்லை; ஆனால் கேட்பார். அவருக்கு வாய் இல்லை; ஆனால், பேசுவார். அவருக்கு நாக்கு இல்லை; ஆனால், ருசிப்பார். அவருக்குக் கண்கள் இல்லை; ஆனால் பார்ப்பார். அவருக்குக் கரங்கள் இல்லை; ஆனால், செயல்படுவார்.
கடவுள் மீது நம்பிக்கை வைப்பது மிக முக்கிய மானதும் அவசியமானதும் ஆகும். அப்படி குரு மீதோ, கடவுள் மீதோ நம்பிக்கையே இல்லாதவனிடம் எத்தகைய செல்வம் இருந்தும் பிரயோஜனமில்லை. குரு பக்தியும் குருவருளும் இருந்துவிட்டால் போதும், எல்லா செல்வத்தையும் மிஞ்சியது அதுவே!
சந்தனம் மிகக் குளுமையானது. ஆனால், இரண்டு சந்தனக் கட்டைகளை எடுத்துத் தொடர்ந்து தேய்த்தால், அதிலிருந்து நெருப்பு கிளம்பும். அப்படித்தான் அன்பான கடவுளும்!
நீ உடம்பின் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடந்தால் பலவீனமாவாய். ஆத்மாவின் கட்டளைப்படி நடந்தால் பலம் வாய்ந்தவனாவாய்!
மரத்தை நட்டுத் தண்ணீர் ஊற்றியதுமே கனியை எதிர்பார்க்கக் கூடாது. சில காலம் காத்திருக்கவே வேண்டும். அதுபோல், உடனே பலனை எதிர்பாராமல், தொடர்ந்து நாமஜபம் செய்துவந்தால் பலன் நிச்சயம்.
வாழ்க்கையின் லட்சியமாகக் கடவுளை வையுங்கள். பணம் வசதிகளைத் தரலாம்; ஆனால், அது மட்டுமே லட்சியமாக இருக்கமுடியாது. கடவுளை நோக்கிப் பயணப் படத் தீர்மானித்தால், நிச்சயமாக வழி பிறக்கும்.
தொகுப்பு : சக்திவேல், சென்னை