Published:Updated:

கோயில் வளாகத்தில் விளக்கேற்றத் தடை..! ரியாக்‌ஷன் என்ன?

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில் வளாகங்களில் பக்தர்கள் விளக்கேற்ற அறநிலையத்துறை தடை விதித்துள்ளது. அதன் சாதக பாதகங்கள் பற்றிய கட்டுரை இது.

கோயில் வளாகத்தில் விளக்கேற்றத் தடை..!  ரியாக்‌ஷன் என்ன?
கோயில் வளாகத்தில் விளக்கேற்றத் தடை..! ரியாக்‌ஷன் என்ன?

மிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில் வளாகங்களில் பக்தர்கள் விளக்கேற்ற அறநிலையத்துறை தடை விதித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு பக்தர்களையும் பொதுமக்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அறநிலையத்துறையைக் கண்டித்து ஆங்காங்கே கண்டனக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன. பூஜைகளும் வழிபாடுகளும் கோயில் குருக்களால் நடத்தப்படும் சூழலில், பக்தர்கள் தாங்களே செய்யும் ஒரே வழிபாடு விளக்கேற்றுவதுதான். அதைப் பறிப்பது நியாயமில்லை என்கிறார்கள் பக்தர்கள். பக்தர்கள் விளக்கேற்றுவதால் கோயில் அசுத்தமாகிறது; தீ விபத்துகள் ஏற்படுகின்றன; போலியான எண்ணெய், நெய் விற்பனையும் அதிகரித்துவிட்டது... அதனால்தான் விளக்கேற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்கிறது அறநிலையத்துறை தரப்பு.

இதுகுறித்து ஆன்மிகப் பெரியவர்கள் சிலரிடம் பேசினோம். 

``கோயிலில் விளக்கேற்றக் கூடாது என்பது பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் செயல்" என்று கொதிக்கிறார் , ஜோதிமலை இறைப்பணித் திருக்கூட்டம் அமைப்பின் தலைவர் திருவடிக்குடில் ஸ்வாமிகள். 'ஆலயங்களில் மீண்டும் தீபமேற்ற வழிவகை செய்ய வேண்டும்' என்று  தீவிரமாகப் போராடி வரும் இவரைத் தொடர்புகொண்டு கருத்து கேட்டோம். 

``ஜோதி வடிவமாகவே இறைவனை வழிபடுவது நம்வழக்கம். 2000 ஆண்டுகளாக வழக்கத்தில் இருக்கும் இந்த விளக்கிடுதலை நிறுத்தினால், நமது ஆகம சாஸ்திரங்களையே மீறுவதாகிவிடும். ஆன்மிகப் பெரியோர்கள் 'விளக்கேற்ற ஆலயம் வாருங்கள்' என்று கூறி பக்தர்களைக் கோயிலுக்கு அழைத்தனர். அதன் மூலம் ஆலயங்களைப் பிரபலப்படுத்தினார்கள். 'சரியை' என்று சொல்லப்படும் உடல்மூலம் செய்யப்படும் திருத்தொண்டால் இறைவனை கொண்டாடிய மக்கள், கோயில்களைப் பாதுகாத்தார்கள். கோயிலில் விளக்கேற்ற தன் குருதியைத் தந்த கலிய நாயனார் பிறந்த மண்ணில் விளக்கேற்றத் தடை விதிப்பது சிறிதும் நியாயமில்லை. நமிநந்தியடிகள் நீரெடுத்து விளக்கேற்றிய ஆரூர் கோயிலில் தீபமேற்றத் தடை விதிப்பது தர்மமில்லை. கணம்புல்ல நாயனார் உள்ளிட்ட நாயன்மார்களும் ஆழ்வார்களும் வலியுறுத்துவது விளக்கேற்றுவதைத்தான். அக இருளை நீக்கும் ஆன்ம விளக்குதான் தீபம். விளக்கேற்றுவதன் மகத்துவம் அறிந்துதான் மன்னர்கள் நந்தா விளக்கு ஏற்ற நிவந்தங்கள் அளித்தார்கள். 1,000 ஆண்டுகளைக் கடந்த கோயில்களில் கல்லிலேயே செதுக்கப்பட்ட அகல் விளக்குகளைக் காண முடியும். காலம்காலமாக ஏற்றப்பட்டு வந்த தீபங்களை, 'ஏற்றக் கூடாது' என்று தடை விதிப்பது தெய்வக் குற்றம் மட்டுமல்ல, பக்தர்களின் மனதைப் புண்படுத்தும் செயலும்கூட.

'அணையா விளக்கு' என எல்லாக் கோயில்களிலும் ஒரு விளக்கை வைத்து அதில் எண்ணெய் விட்டுச் செல்லுங்கள் என்று அறநிலையத்துறை கூறுகிறது. ஏற்கெனவே எரியும் விளக்கில் எண்ணெய் மட்டும் ஊற்றினால் மனம் நிறையுமா, அதுபோக அது அணையா விளக்கு அல்ல, கூண்டு விளக்கு. ஆகமப்படி அது தவறு. தீபமேற்றி வழிபட தங்கள் இன்னுயிரை ஈந்து போராடிய வரலாற்று நிகழ்வுகளை அறியாதவர்கள், அதிகார மட்டத்தில் இருப்பதால் வந்த விளைவு இது. 'சாமானிய மக்கள் விளக்கேற்றி கோயிலை அழுக்காகவும் ஆபத்தாகவும் மாற்றுகிறார்கள்' என்று அறநிலையத்துறை கூறுகிறது. மக்கள் அதிகம் புழங்கும் இடங்கள் அசுத்தமாகும்தான். அதைச் சரி செய்வது ஆலய நிர்வாகத்தின் கடமை. யாருமே வந்து போகாமல் சுத்தமாக இருக்கும் ஆலயங்கள் எதற்கு? அறநிலையத்துறையால் முடியாவிட்டால் திருக்கோயில்களைச் சுத்தப்படுத்த பல ஆயிரம் உழவாரப்பணி தொண்டர்கள் காத்துக் கிடக்கிறார்கள். ஆலய விஷயத்தில் அடிப்படை தெரியாமல் கட்டுப்பாடு விதிக்க வேண்டாம். இப்படியே போனால் ஒரு கட்டத்தில் பாதுகாப்பு என்ற பெயரில் பொங்கல் வைப்பது, குளத்தில் நீராடுவது எல்லாமே நிறுத்தப்படும். எரியும் விளக்கை அணைப்பது தவறென்றால், ஆலயங்களை ஆகமத்துக்கு எதிராக வழிநடத்துவது அநியாய குற்றம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும். உணரும்வரை எங்கள் போராட்டமும் சாத்விக வழியில் தொடரும்" என்றார். 

``திருக்கோயில்களில் கண்ட கண்ட இடங்களில் விளக்கேற்றுவதால் அசுத்தம் ஆகிறது, இதனால் கோயில் பணியாளர்களுக்கு கூடுதல் பணிச்சுமை என்பதெல்லாம் சரி. இதையெல்லாம் ஒழுங்குபடுத்ததானே அறநிலையத்துறை இருக்கிறது! ஒழுங்குபடுத்துவதை விடுத்து, ஒழிப்பது எப்படி நியாயம்'' என்கிறார் குமார சிவாச்சாரியார்.

``தூபம், தீபம், கற்பூர ஆரத்தி என்பன இறைவனை வழிபடும் முறைகளாகும். அசுத்தமாகிறது என்று சொல்லி தூபம், கற்பூரம் தடை செய்யப்பட்டுவிட்டது. இப்போது நெய் தீபமும் தடை என்பது நியாயமில்லை. கருவறை அருகே ஏற்றப்பட்டு வந்த தீபம் மெள்ள மெள்ள அர்த்த மண்டபம், மகாமண்டபம், சுற்றுப் பிராகாரம் என மாறி இப்போது ஏற்றவே கூடாது என்ற நிலைக்கு வந்துவிட்டது. நெய்யில் கலப்படம் என்றால் அதற்குத் தண்டனை கொடுக்கலாம். கோயில்களில் ஆகம விதிகள் மீறாமல் இருக்கத்தான் அறநிலையத்துறை உருவானது. பூஜைகள், வழிபாடுகளில் குறுக்கிடாமல் நன்மைகளைச் செய்யவே அது உருவாக்கப்பட்டது. தனியார் கோயில்களில்கூட, உண்டியல் வைத்துவிட்டால், அது பொதுவான இடமாகிவிடும். அந்தக் கோயிலுக்கு யாரையும் வரக் கூடாது என்று சொல்லும் உரிமை யாருக்கும் இல்லை. பல காலமாகப் பெரும்பான்மை மக்களால் மேற்கொள்ளப்படும் வழிபாட்டு முறையை மாற்ற யாருக்கும் உரிமையில்லை. விளக்கேற்றுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை, சட்டப்படி எதிர்கொண்டால் அறநிலையத்துறை பின்னடவைச் சந்திக்க வேண்டிவரும். அதற்கு முன்பாகத் தனது நிலையை மாற்றிக்கொண்டு பக்தர்கள் விளக்கேற்றி வழிபட ஏற்பாடு செய்ய வேண்டும்" என்றார். 

இது தொடர்பாக விளக்கம் கேட்க இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தைத் தொடர்புகொண்டோம். 'ஆணையர் ஜெயா திருப்பதி சென்றிருக்கிறார்' என்றும், 'கூடுதல் ஆணையர் கவிதா கேம்ப் சென்றிருக்கிறார்' என்றும் , 'தற்போது இதுகுறித்துப் பேச முடியாது' என்றும் தெரிவிக்கப்பட்டது. 

ஆன்மிக அன்பர்களின் குரலுக்கு அறநிலையத்துறை செவிசாய்க்குமா?