Published:Updated:

சித்திர ராமாயணம்

சித்திர ராமாயணம்
பிரீமியம் ஸ்டோரி
News
சித்திர ராமாயணம்

பி.ஸ்ரீ.

சித்திர ராமாயணம்

இரண்டு கிரீடங்களின் அரசு

சுமந்திரனோடு ராமனை நோக்கி வந்த தாய்மார்களில் கைகேயியும் ஒருத்தியென்பது கவனிக்கத்தக்கது. ராமன் அவர்கள் அடிகளில் விழுந்து, ‘என் தந்தை எங்கே இருக்கிறார்? சொல்லுங்கள்’ என்று ரத்தக்கண்ணீர் வடித்தான். அவர்களும் ராமனைத் தழுவிக்கொண்டு புலம்பினார்கள். பிறகு அவர்கள் சீதையைக் கட்டி அணைத்தவர்களாய்த் துன்பத்தில் அழுந்திப்போனார்கள். இப்போது கைகேயியின் மனமும் மாறிவிட்டதென்று ஊகிக்கலாமல்லவா?

சித்திர ராமாயணம்

தாய்மார் அகன்றதும், சேனை வீரர்கள், ஜனப் பிரதிநிதிகள், சிற்றரசர்கள் எல்லோருமாக ராமனை நோக்கி வந்தார்கள். இரவு கழிந்ததும் மறுநாள் காரியப் பேச்சு நடக்கிறது.

முனிவர்களும் அரசர்களும் தன்னைச் சூழ்ந்திருக்க, ராமன் பரதனை நோக்கி, ‘`நீ முடிசூடாமல் தவ வேடம் பூண்டது யாது காரணத்தாலோ? தந்தையோ காலம் சென்றார். அவருடைய ஆணையால் அரசு உன் பொறுப்பில் இருக்கிறதே’' என்று அன்போடு கேட்டு விட்டான்.

‘`வேண்டாத நோன்பும் வேடமும் எதற்காக?’' என்று பரிவுடன் கேட்ட அண்ணனை நோக்கிப் பரதன் பதைத்தெழுந்தான். கை கூப்பி நின்று ஒன்றும் பேசாமலே அண்ணனைக் கெடும்பொழுது நோக்கினான். பிறகு, `‘தருமத்தில் உறுதியாய் நிற்பவர் உன்னையன்றி யார் இருக்கிறார்? அதை விட்டு நீ இப்போது விலகி நிற்கலாமா?’' என்று மெள்ளக் கேட்டான்.

ராமனோ பரதன் கொள்கையைத் தவறென்று காட்டி, ‘`தந்தை சொல்லால் அரசு உன்னுடையதே; நீ ஆளத்தான் வேண்டும்'' என்று வற்புறுத்திப் பார்த்தான்.

அதற்குத் தம்பி, ‘`அண்ணா! அரசு என்னுடையதானால் அதை நான் இப்போதே உனக்குத் தந்தேன்’' என்று பதில் சொன்னான். ‘`ஆனால், தந்தையானவர் தாய்க்கு வரம் கொடுத்தபடி நான் பதினாலு வருஷம் வனவாசம் செய்து தீர வேண்டுமல்லவா?'’ என்று ராமன் ஞாபகப்படுத்தினான். இப்படி வாதத்துக்கு மேல் வாதம், யுக்திக்கு மேல் யுக்தியாக ராம - பரத ஸம்வாதம் நடைபெற்றது.

வசிஷ்டருரும் பரதன் கட்சியை ஆதரித்து, `‘என் ஆணையால் நீ ராஜ்யத்தை அங்கீகரிக்க வேண்டும்’' என்று சொல்லிப் பார்த்தார்.

ராமனுடைய வாதம், சாஸ்திர நிபுணரான வசிஷ்டரது நுண்ணறிவையும் மௌனமாக்கி விட்டது. ‘`அப்படியானால் நானும் உன்னுடன் காட்டுக்கு வருவேன்'’ என்று பரதன் பிடிவாதம் செய்தான். அதற்கு ராமன், `‘நான் வனவாசம் செய்யும்போது ராஜ்யம் பாழாய்விடாமல் நீ அரசு புரிய வேண்டியதுதான்'’ என்று வற்புறுத்தி விடுகிறான்.

பாதரட்சையா, கிரீடமா?

முடிவில், தாய் தந்தையர் வாக்கை ராமன் பரிபாலிப்பதுபோல் பரதனும் தமையன் வாக்கைப் பரிபாலிக்க இசைகிறான், வேறு வழி காணாதவனாய். ஆனால், அவன் இப்போது செய்யும் பயங்கரமான பிரதிக்ஞையைக் கேளுங்கள்:

ஆமெனில் ஏழிரண்(டு) ஆண்டில், ஐய! நீ,
நாமநீர் நெடுநகர் நண்ணி, நானிலம்

கோமுறை புரிகிலை என்னில், - கூர்எரிச்
சாம்அது சரதம்: நின் ஆணை சாற்றினேன்.


குறித்த காலம் கழித்துச் சிறிது தாமதித்தாலும் நெருப்பிலே குதித்துச் சாவது சத்தியம் என்று தன் மேல் ஆணையிட்டுக் கூறும் பரதனை ராமன் பார்த்தான். அந்தத் துணிவு ராமன் உள்ளத்தை உருக்கிவிட்டது. அந்தப் பிரதிக்ஞைக்குப் பின் பரதனுடைய துன்பம் நீங்கிவிட்டதாம். பிறகு பிரியவேண்டிய நேரம் வந்துவிடுகிறது. துன்பம் மீண்டும் பொங்குகிறது. ‘பதினாலு வருஷம் கழித்து வருவதாகச் சொல்லுகிறான் அண்ணன் - அப்படியா? பதினாலு வருஷமா?’ என்று ஏங்கியதும் தாங்க முடியாத துயரம் வந்துவிட்டது.

பரதன் விம்மி ஏங்கிக்கொண்டே, ராமனது பாதுகைகளை இரந்து வேண்டுகிறான். அவை கிடைத்ததும், ‘பாதுகைகள் கிடைத்துவிட்டன’ என்றா நினைக்கிறான்? `இப்போது எனக்கு இரண்டு கிரீடங்கள் கிடைத்துவிட்டன!’ என்று பரதன் ராமனைத் தொழுது மீளும் காட்சியைப் பாருங்கள்.

அடித்தலம் இரண்டையும், அழுத கண்ணினான்:
முடித்தலம் இவைஎன முறையில் சூடினான்,
படித்தலத்(து) இறைஞ்சினன், பரதன் போயினான்,
பொடித்தலம் இலங்குறு பொலங்கொள் மேனியான்.


பரதன், பாதுகைகளைத் தலையில் ஏந்திக் கொண்டு போகும் அந்தக் காட்சியைக் கவிஞன் எவ்வளவு பிரத்தியட்சமாய்ப் பார்க்கிறான்!  ‘அதோ போகிறானே அந்தப் பரதன் மேனியும், அம்மேனியில் படிந்துள்ள தூசியும் கூட எவ்வளவு அழகாய் விளங்குகின்றன!’ என்று நமக்கும் காட்டுகிறான். அந்த உள்ளொளி தூண்டிய இதயப் பிரகாசத்திலே அந்த நீதி போகும் அழகை நாமும் அப்படியே பார்க்கிறோம்.

‘இனி நாம் இங்கேயிருந்தால், அயோத்தியிலுள்ள வர்கள் அடிக்கடி வந்து தொந்தரவு செய்யக்கூடும்’ என்று ராமன் தம்பியுடனும் சீதையுடனும் தென்திசை நோக்கிப் புறப்படுகிறான். பரதனோ ராஜதானியில் பிரவேசியாதவனாய், அருகிலுள்ள நந்திக் கிராமத்தில், ‘ராமன் பாதுகை செங்கோல் செலுத்துகிறது!’ என்று சொல்லும்படி, அந்தப் பாதுகைகளின் பிரதிநிதியாக இருந்து சுகபோகங்களைத் துறந்து ராஜ்யபாரம் தாங்குகிறான்.

(28.12.47 ஆனந்தவிகடன் இதழிலிருந்து...)