Published:Updated:

சனங்களின் சாமிகள் - 4

 சனங்களின் சாமிகள் - 4
பிரீமியம் ஸ்டோரி
சனங்களின் சாமிகள் - 4

அ.கா.பெருமாள் - ஓவியங்கள்: ரமணன்

சனங்களின் சாமிகள் - 4

அ.கா.பெருமாள் - ஓவியங்கள்: ரமணன்

Published:Updated:
 சனங்களின் சாமிகள் - 4
பிரீமியம் ஸ்டோரி
சனங்களின் சாமிகள் - 4

வலிகொலி அம்மன்

`ஒரு காலத்தில் காஞ்சிபுரத்தை ஆட்சி செய்தவன் காடராசன்’ என்கிறது ஒரு வில்லிசைக்கதை! கதை கொஞ்சம் சுவாரஸ்யமானதும்கூட. அடையாளமாக கன்னியாகுமரி மாவட்டம், பறக்கை என்னும் ஊரில் இன்றைக்கும் இருக்கிறது வலிகொலி அம்மன் கோயில். வலிகொலி அம்மன் இல்லாமல் இந்தக் கதை இல்லை! 

 சனங்களின் சாமிகள் - 4

அது மழைக்காலம். கொஞ்சம் பலமான காற்றும் சேர்ந்து கொண்டதால், அரண்மனையே குளிர்ந்து போய்க் கிடந்தது. சாளரங்கள் இறுகச் சாத்தியிருந் தாலும், எப்படியோ ஓரிரு மழைத் துளிகள் உள்ளுக்குள் வந்து தெறித்து விழத்தான் செய்தன. காடராசன் உத்தரத்தில் தொங்கும் அலங்கார விளக்கின் மேல் கட்டப்பட்டிருந்த சிறிய குருவிக்கூட்டையே பார்த்துக் கொண்டிருந்தான். கூட்டிலிருந்து குருவி வெளிவருவதும், மறுபடி உள்ளே அடைவதுமாக இவனுக்கு வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தது. அதுவும் அடை மழைக்கு நடுங்குகிறதோ என்று தோன்றியது காடராசனுக்கு.

மந்திரி, அரசனின் பார்வை போகிற திக்கைப் பார்த்து, அவன் குருவி குறித்து எதையோ யோசிக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டார். அவனுடைய தயாள குணத்தை அவர் அறிவார். ஆட்சி, அதிகாரம்,  ஏவல் செய்ய ஏராளமானவர்கள்... ஆனால், இம்மியளவுகூட காடராசனிடம் அகந்தைகூடி அவர் பார்த்ததில்லை. துடிப்பான இளம் அரசன், நீதி தவறாத பரிபாலனம் ஒன்றே அவன் லட்சியம்.  

மந்திரி, அரசனுக்கு எதிரே அமர்ந்திருந்தார். பக்கவாட்டில் இருந்த ஆசனங்களில் மூன்று ஜோதிடர்கள் ஓலைச்சுவடிகளைப் புரட்டுவதும், எதையோ கணக்கிடுவதுமாக இருந்தார்கள். ஒரு கட்டத்தில் மூவரும் ஒருவரையொருவர் பார்த்து, கண் பார்வையிலேயே ஒரு முடிவுக்கு வந்ததைத் தலையசைப்பில் ஒப்புக்கொண்டார்கள். அவர்களில் வயதில் மூத்தவராகத் தோன்றியவர் தான் உரையாடலைத் தொடங்கினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 சனங்களின் சாமிகள் - 4``அரசே..! இந்த வருடம் உங்கள் பிறந்தநாள் சனிக்கிழமையில் வந்துவிட்டது. அது, தங்கள் ஜாதகத்துக்கு அத்தனை உத்தமமாகப் படவில்லை...’’

``சுற்றி வளைத்துப் பேச வேண்டாம். ஜாதகப் பலன் எதுவாக இருந்தாலும், நேரடியாகச் சொல்லலாம். அச்சம் வேண்டாம்...’’

``ஜாதகப் பிரகாரம் உங்களுக்குக் கண்டம் இருக்கிறது. அந்தக் கண்டம்...’’

காடராசன் முதிய ஜோதிடரை விழித்துப் பார்த்தான். மற்றொரு ஜோதிடர் தொடர்ந்தார்... ``மன்னா... அந்தக் கண்டம் சாதாரணமானதல்ல. அதனால் அரசர்பிரானின் உயிருக்கே ஆபத்து நேர வாய்ப்பிருக்கிறது...’’

இதைக் கேட்டு காடராசன் அவன் அமர்ந்திருந்த பிரமாண்டமான அறையே அதிரும்படி சிரித்தான். ``அவ்வளவுதானே... ஜோதிடத்தில் இப்படி ஓர் ஆபத்து இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தால், அதற்குப் பரிகாரமும் சொல்லப்பட்டிருக்குமே!’’

``உண்டு மன்னா! தங்கள் ஜாதகப்படி கண்டத்தைத் தீர்க்க வல்லவர் எம்பெருமான் நாராயணனே! தாங்கள் இன்னும் ஒரு வருடக் காலத்துக்குப் பல விஷ்ணு தலங்களுக்கு தீர்த்த யாத்திரை சென்று வருவதே ஷேமம்...’’ 
 
காடராசன் பதில் பேசவில்லை. மந்திரிக்கு ஜாடை காட்ட, அவர் ஜோதிடர்களுக்கு உரிய சன்மானத்தைக் கொடுத்து அனுப்பிவைத்தார். ஓரிரு நாள்களில்,  பொறுப்பைத் தன் நம்பிக்கைக்குரிய உறவினன் ஒருவனிடம் ஒப்படைத்துவிட்டு, க்ஷேத்திராடனத்துக்குக் கிளம்பிவிட்டான்.

***
பயணம் மனிதனுக்குப் பல வாசல்களைத் திறந்துவைத்துவிடும் அற்புதமான அனுபவம். `உலகம் மிகப்பெரிது; நீ துரும்பிலும் சிறியவன்’ என நம்மை நாமே உணர்ந்துகொள்ள இறைவன் வகுத்து வைத்திருக்கும் ஏற்பாடு; சக மனிதர்களைப் புரிந்துகொள்ளவும் நேசிக்கவும் கற்றுத்தரும் பாடசாலை; உலகளந்த பெருமாளை சதா மனதில் மனனம் செய்துகொண்டே இருக்கப் பழக்கும் பிரம்ம வித்தை!   

 சனங்களின் சாமிகள் - 4

காடராசனுக்கு அந்தப் பயணம் சலிப்பைத் தரவில்லை. கோயில்களோ, அவற்றில் திரும்பத் திரும்பப் பார்த்த எம்பெருமான் நாராயணனின் திருவுருவோ திகட்டிப் போய்விடவில்லை. இன்னும் இன்னும் என அவன் மனம் ஏக்கம் கொண்டது. பெருமாளின் அடுத்த கோயிலில் அவன் உரு எப்படி இருக்குமோ... நின்ற திருக் கோலமா, சயனத் திருக்கோலமா... மனம் கோயிலைக் காண்பதற்குள்ளாகவே அரற்ற ஆரம்பித்திருக்கும். அந்தப் பரந்தாமனுக்கு, பக்தனுக்குத் தன் மேலுள்ள ஈர்ப்பு இனிப்பாகத்தான் இருந்தது. ஆயினும், காடராசனுக்கு லௌகீக வாழ்க்கையை உணர்த்தும் வேலையும், அதோடு புரிவதற்கு ஒரு லீலையும் இறைவனுக்குக் காத்திருந்தது.  

இறுதிப் பயணமாக அவன் சென்று சேர்ந்த ஊர் பறக்கை. அங்கே மதுசூதனப்பெருமாள் கோயில் கொண்டிருந்தார். தித்திக்கத் தித்திக்கப் பெருமாள் சேவையைக் கண்டபின், தான் தங்கியிருந்த இடத்துக்கு வந்தான் காடராசன். அங்கே அவனின் ஆஸ்தான ஜோதிடர்கள் காத்திருந்தார்கள். அடுத்த நாள் அவன் பிறந்த தினம் என்பதை நினைவூட்டினார்கள். 

தன்னுடைய பிறந்த நாளில் மதுசூதனப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடுகளைச் செய்தான். நெஞ்சுருக பெருமாளை வேண்டி நின்றான். பிறகு பறக்கை ஊரை வலம் வந்தான். சிறிய ஊர். சுத்தமான தெருக்கள். வெள்ளந்தியான மனிதர்கள். அவன் வடக்கு தெருவுக்கு வந்தபோது அவனுக்காக ஓர் அதிசயம் காத்திருந்தது... இளம் பெண் வடிவில்! இரு பக்கமும் திண்ணைகளைக் கொண்ட அழகான வீடு. வாசலில் பெரிய மாக்கோலம்; அதன் மேல் பசுஞ்சாணத்தில் அந்தப் பேரழகி பூசணிப் பூவைச் செருகிக்கொண்டி ருந்தாள். மயில்போல வளைந்த நேர்த்தியான உடல். மின்னும் கண்கள். காடராசன் தன் நிலைகொள்ளாமல் அப்படியே நின்றுவிட்டான். அவளைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போலத் தோன்றியது.

அந்தப் பெண்ணோ, தெருவில் யாரையும் நிமிர்ந்துகூடப் பார்க்கவில்லை. தான் வடித்த கோலத்தைப் பார்த்தாள். அதன் மத்தியில் பூசணிப்பூ நேர்த்தியாக வைக்கப்பட்டிருக்கிறது என்பதில் தனக்குத் தானே திருப்தி கொண்ட வளாகத் தலையை அசைத்துக்கொண்டாள். திரும்பி வீட்டுக்குள் போனாள்.

`இவள் யார்... இவளுடைய பூர்வீகம், தாய்-தகப்பன் யார்... இவள் பெயர் என்ன?’ - யாரிடமாவது கேட்க வேண்டும் என மனம் துடித்தது. ஆனால், தயக்கம் தடுத்தது. காடராசன் தன்னுடன் வந்த பரிவாரத்தைப் பார்த்தான். தலைவனாக இருந்தவனிடம் ஜாடை காட்டினான். பரிவாரம், அரசனைத் தாண்டி முன்னே சென்றது. அரசன் தன் இடுப்பில் இருந்த பட்டுக் கைக்குட்டையை எடுத்தான். யாராவது பார்க்கிறார்களா என அவதானித்தான். வீட்டின் மேற்புறத்தில் இருந்த எரவாணத்தில் துணியைச் செருகினான். அந்தப் பெண்ணை நினைத்துப் பெருமூச்சு விட்டபடி, தன் பரிவாரத்தைத் தொடர்ந்தான். தான் முகாம் இட்டிருந்த இடத்துக்கு வந்ததும் முதல் வேலையாக மந்திரியை அழைத்தான். பறக்கை ஊரின் வடக்கு வீதியில் தான் பார்த்த  அழகியைப் பற்றிச் சொன்னான். ``மந்திரியாரே! அந்தப் பெண் இல்லாமல் என்னால் வாழ முடியும் என்று தோன்றவில்லை. அவள் யார் என விசாரிப்பீரா? எனக்காக அவளின் தந்தையிடம் பேசுவீர்களா?’’

உடன் இருந்த இத்தனை ஆண்டுகளில் இப்படி இறைஞ்சும் குரலில் காடராசன் எப்போதும் பேசியதில்லை. அந்தப் பெண் அரசனின் மனதை வெகுவாகப் பாதித்துவிட்டாள் என்பது மந்திரிக் குப் புரிந்தது. தலையசைத்த மந்திரி உடனே கிளம்பினார். வடக்கு வீதிக்கு வந்தார். அரசன் அடையாளம் சொன்ன வீட்டை எளிதாக அவரால் கண்டுபிடிக்க முடிந்தது. அரசனின் பட்டுக் கைக்குட்டை வீட்டைச் சுட்டிக்காட்டியது. வாசலில் நின்று குரல் கொடுத்தார். வெளியே வந்து வரவேற்றவர் பெண்ணின் தந்தை.

மந்திரி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். அந்த வீட்டின் உரிமையாளர், மந்திரியை உபசரித்தார். சிறிது ஆசுவாசத்துக்குப் பிறகு மந்திரி காடராசன் பற்றியும் அவனின் ஆசையையும் சொன்னார். பெண்ணின் தந்தையால் மறுத்துப் பேச முடியவில்லை. அதே நேரத்தில் உடன்படவும் முடியவில்லை. அரசன் வேறு குலம், தான் வேறு குலம் என்பது பெரும் உறுத்தலாக இருந்தது. தன் இனத்தவர்கள் நிச்சயம் இந்தத் திருமணத்துக்கு சம்மதிக்க மாட்டார்கள் என்பதும் புரிந்தது. வந்திருப்பவர் ஒரு நாட்டின் மந்திரி. அதுவும் தன் அரசனுக்காகப் பெண் கேட்டு வந்திருக்கிறார். அவர் ஒரு முடிவுக்கு வந்தார். 

``சரி... இறைவனின் சித்தம் அதுவானால் நாம் என்ன செய்ய முடியும்? என் பெண்ணைத் தர சம்மதிக்கிறேன்’’ என்றார். மந்திரிக்கு மனதில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது. அரசனிடம் போனார். பெண்ணின் தந்தை சம்மதம் தெரிவித் ததைச் சொன்னார். அதன் பிறகு மளமளவென வேலைகள் நடந்தன. அரசனின் ஜோதிடர்கள் திருமணத்துக்கு நாள் குறித்தார்கள். விஷயம் மெள்ள மெள்ள ஊர் முழுக்கப் பரவியது.

அடுத்த நாளே பெண்ணின் உறவினர்கள், அவள் வீட்டின் முன்னால் திரண்டு வந்து நின்றார்கள். அத்தனை பேரும் படபடப்புடன் இருந்தார்கள்; அனைவருக்குள்ளும் கோபம் சிறு கொழுந்தாக உள்ளுக்குள் கனன்றுகொண்டிருந்தது. கோபமும் பதற்றமும் இருக்கும் இடத்தில், அமைதி இருக்காது; பேச்சு தடிக்கும்; தான் சொல்வதை எதிராளி ஏற்க வேண்டும் என்கிற முரட்டுத்தனம் எட்டிப் பார்க்கும். அன்றைக்கு அந்தப் பெண்ணின் வீட்டில் அதுதான் நடந்தது.
  
``இங்கே பார்! வேறு ஜாதிக்காரனுடன் உன் பெண்ணுக்குத் திருமணம் நடந்தால், உன்னை ஜாதிபிரஷ்டம் செய்துவிடுவோம்’’ - ஒருவர் விடாமல் பயமுறுத்தினார்கள். அப்படி ஒன்று நடந்தால் சொந்த மண்ணில் வாழ முடியாது. பிறகு பிறந்த மண்ணைவிட்டு வேறு எங்கேதான் போவது? வந்தவர்களே ஓர் ஆலோசனையையும் சொன்னார்கள்... ``அரசனையும் பகைத்துக்கொள்ள முடியாது. பேசாமல் உன் மகளை அழைத்துக் கொண்டு எங்காவது ஓடிவிடு. உன் உறவினர்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.’’

பெண்ணின் தந்தைக்கு அதுதான் சரி எனப் பட்டது. ஆனால், இத்தனை நாள் சம்பாதித்து, சேர்த்து வைத்த பொருள்களை என்ன செய்வது? அவற்றை மற்றவர்களை நம்பி ஒப்படைக்கவும் முடியாது. வீட்டுக்குள்ளேயே புதைக்க முடிவு செய்தார் பெண்ணின் தந்தை. வீட்டுக் கொல்லைப் புறத்தில் ஒரு பெரிய குழியைத் தோண்டினார். பாத்திரங்கள், நகைகள், பொற்காசுகள் மற்ற விலை மதிப்புள்ள பொருள்கள் அத்தனையையும் குழிக்குள் போட்டார். அப்போது மனைவி ஒன்றை ஞாபகப்படுத்தினாள்...

``வெகு தூரம் போகப் போகிறீர்கள்... வழிப் பயணத்தில் தண்ணீர் முகர கெண்டி (மூக்கு போன்ற பகுதிகொண்ட பாத்திரம்) வேண்டாமா?’’ அப்போதுதான் அதையும் குழிக்குள் போட்டது அவருக்கு நினைவுக்கு வந்தது. மகளைப் பார்த்தார். ``இங்கே வாம்மா! குழிக்குள் இறங்கி, அந்த கெண்டியை எடுத்துக் கொடு!’’ என்றார்  

 சனங்களின் சாமிகள் - 4

அந்தப் பேதைப்பெண் குழிக்குள் இறங்கினாள். மனம் விசித்திரமானது. எந்த நேரத்தில் என்ன முடிவெடுக்கும் என்பது அதற்கேகூட சமயத்தில் தெரிவதில்லை. தந்தையின் மனம் திடீரென்று மாறியது. தன் பெண்ணைப் பார்க்கப் பார்க்க, ஊரை விட்டு ஓடிப்போகும் அளவுக்கான துன்பம் இவளால்தானே வந்தது என்கிற ஆத்திரம் எழுந்தது.

ஒரு நொடிதான்... மகளின் மேலுள்ள பாசம் காணாமல் போனது. சட்டென்று அருகில் கிடந்த மண்வெட்டியை எடுத்தார். அந்த நிலவறையில் மண்ணை அள்ளி அள்ளிப் போட்டார். அந்தப் பெண் கதறினாள். அவர் மனம் இரங்கவில்லை. அவள் வாய்விட்டு அலறினாள். வயிறெரிய சாபமிட்டாள்...

``பாவி... இந்தக் காடராசனால் அல்லவா இந்தத் துன்பம் எனக்கு வந்தது? அவன் அழிந்து போகட்டும். திருமணமான மூன்றாம் நாளே மனைவியுடன் சேர்ந்து சாகட்டும். என் தந்தையின் குடும்பத்தில் ஏழு தலைமுறைக்குப் பெண் வாரிசு அற்றுப் போகட்டும்...’’ கெண்டியை எடுக்க நிலவறைக்குள் புகுந்த அந்தக் கன்னிப்பெண் சிவனிடம் வரம் பெற்று தெய்வமானாள். தன்னையே வதைத்துக்கொண்டதால் அந்தப் பெண் `வலிய கொல்லி’ என அழைக்கப்பட்டாள்.

கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டம், பறக்கை ஊரின் எல்லையில் உள்ள நீண்ட ஏரியின் கரையில் இருக்கிறது, வலிகொலி அம்மன் கோயில். இதை, `வள்ளீரம்மன் கோயில்’ என்றும் ஊர் மக்கள் அழைக்கிறார்கள். இந்தப் பெண் தெய்வத்தைக் காளியின் அம்சமாகவே கருதுகிறார்கள். இந்தத் தெய்வத்துக்காக எடுக்கப்படும் விழாவை `காளிவூட்டு’ என்கிறார்கள்.

வடக்கு நோக்கி அமைந்திருக்கும் இந்தக் கோயில் 400 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. வெளிப் பிராகாரத்தில் பைரவர் நின்றகோலமாக அருள்கிறார். அற்புதமான சிற்ப வேலைப்பாடு. அவரருகே பத்து கரங்களுடன் காளி நிமிர்ந்து நிற்கிறாள். காளியின் வேதாள வாகனம் கல் உருவாக பிராகாரத்தில் இருக்கிறது.

இந்தக் கோயி லுக்கு தினசரி பூஜை உண்டு. பங்குனி அல்லது சித்திரை மாதம் `காளிவூட்டு’ (விழா) நடக்கிறது. இந்த விழாவில் காளிக்கு சைவ, அசைவ உணவுகளைப் படையலாகப் படைக் கிறார்கள். காளி, கலைமான் வாகனத்தில் வலம் வரும்போது மது பொங்கும் நிகழ்ச்சி நடக்கும். `குறுவை’ என்ற நெல்லிலிருந்து தயாரிக்கப்பட்ட இந்த இயற்கை மது உருவாக்கும் தொழில்நுட்பம்கூட இப்போது செய்தியாகத்தான் இருக்கிறது.

வலிகொலி அம்மன் காளியின் அவதாரமாகவே கருதப்படுகிறாள். வெப்புநோயை நீக்குபவளாகவும், பேய் பிசாசு போன்ற தீய சக்திகளிடமிருந்து காக்கும் தெய்வமாகவும் கருதப்படுகிறாள். பெண்ணின் மகப்பேறு தொடர்பான நோய், சிக்கல், பயம் போன்றவை நீங்க இந்தப் பெண் தெய்வத்துக்கு நேர்ந்துகொண்டால் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை காலம் காலமாகத் தொடர்கிறது. இன்னும் தொடரும்!

- கதை நகரும்...

தொகுப்பு: பாலு சத்யா