Published:Updated:

“சிலிர்க்கவைத்தவை ஏராளம்!”

பிரேமா நாராயணன்

பிரீமியம் ஸ்டோரி

‘ஸ்ரீரங்க ரங்க நாதரின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி!’
 
- காலங்கள் கடந்தும் காதுகளில் இனிமையாக ஒலிக்கும் அருமையான பாடல்!


`மகாநதி’ படத்தில் கோயில் தூண்களைச் சுற்றிவந்து, பிராகாரத்தில் ஓடியாடிப் பாடும் அந்த உற்சாகச் சிறுமியையும் அந்தத் தேமதுரக் குரலையும் அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா என்ன?!

“சிலிர்க்கவைத்தவை ஏராளம்!”

ஆண்டுகள் உருண்டபோதிலும் அதே இனிமையும் உற்சாகமும் தவழ்கிறது, ஷோபனா விக்னேஷின் குரலில். ஐந்து வயது மகன் ஆர்னவ்வுக்குக் கோடை விடுமுறை விட்டுவிட்டதால்... வீடு, குழந்தை, கச்சேரி என்று மிகவும் பிஸியாக இருந்தவரிடம் ‘சக்தி விகட’னுக்காக ஒரு மினி பேட்டி... 

ருசித்த பிரசாதம்

‘‘சபரிமலையின் அரவண பாயசம்! அப்பா சபரிமலை போய்வரும்போதெல்லாம் எனக்காக எக்ஸ்ட்ராவா வாங்கிட்டு வருவாங்க. அந்தத் தித்திப்பும் விபூதி கலந்த வாசமும் பிரமாதமா இருக்கும்! அதேமாதிரி, யு.எஸ்ஸில் இருக்கிற பிட்ஸ்பர்க் பெருமாள் கோயிலில் புளியோதரை அமோகமா இருக்கும். அந்தக் கோயிலுக்குப் போனா புளியோதரை வாங்கிச் சாப்பிடாம வர்றது இல்லை. இந்தப் பட்டியலில் ஆஞ்சநேயர் வடைமாலை வடையையும் சேர்த்துக்கலாம். அதில் கடிபடும் மிளகின் ருசியே தனி!’’  

பிடித்த கோயில் 

``எனக்கு ரொம்பப் பிடிச்ச கோயில்கள்னு சொன்னா, தஞ்சை பெரிய கோயிலும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும்தான். தஞ்சைப் பெரிய கோயில், கட்டடக் கலையின் ஓர் அற்புதம். அங்கிருக்கும் பிரமாண்டமான நந்தியும் கோபுரமும் தூண்களும் சிற்பங்களும் காண்பது... ஆஹா, மஹானுபவம். ‘மகாநதி’ படத்தில் நான் பாடிய பாடல் காட்சியில் சில பகுதிகளைப் பெரிய கோயில்லதான் ஷூட் பண்ணினாங்க. அதேபோல, மதுரை கோயிலும் மனசுக்குப் பிடிச்ச தலம். அன்பும் அருளும் கலந்து நம்மை ஆட்கொள்ளும் மீனாட்சியின் அழகு ஒருபுறம்... பரந்து விரிந்த பிராகாரங்களும், சிற்பங்களும், நடுவே பொற்றாமரைக் குளமும், அழகிய சிற்ப வேலைப்பாடு களுடன் ராஜகோபுரங்களும் என எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத கோயில். அங்கே இருக்கும் முக்குறுணி விநாயகர் ரொம்பவே பிடிக்கும்.     

“சிலிர்க்கவைத்தவை ஏராளம்!”

அயல்நாட்டுல இருக்கும் கோயில்கள்ல, மலேஷியாவில் உள்ள பத்துமலை முருகன் கோயில் ரொம்பப் பிடிக்கும். சுண்ணாம்பு மலையைக் குடைஞ்சு, ஒவ்வொரு குகையிலும் கோயில் கட்டியிருக்கும் அற்புதத்தை என்னன்னு  சொல்றது?! நாங்க அமெரிக்காவில் வாஷிங்டன் டி.சி நகரில் இருந்தப்போ அங்கே இருக்கும் சிவா - விஷ்ணு கோயிலுக்கு அடிக்கடி போறதுண்டு. அந்தக் கோயிலும் பிட்ஸ்பர்க் பெருமாள் கோயிலும் எனக்குப் பிடிச்ச வெளிநாட்டுக் கோயில்கள்னு  சொல்லலாம்!’’   

பிடித்த தெய்வம்  

‘‘எனக்கு இஷ்ட தெய்வங்கள்னு  ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு. ஆனா, ரொம்பப் பிடிச்ச கடவுள்  சொன்னா, அது கணேசர்தான். எந்த ஒரு காரியம்னாலும், அது நல்லபடியாக முடியறதுக்கு பிள்ளையாரைத்தான் வேண்டிக்குவேன். சின்ன வயசில், அம்மா வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற பிள்ளையார் கோயிலுக்குத் தினமும் போயிடுவேன். எதுன்னாலும் அவர்கிட்ட ‘பிள்ளையாரப்பா... உன்னைச் சுத்தி வர்றேன்’னு  பிரார்த்தனை பண்ணிப்பேன். இப்போதும்கூட, எந்த ஒரு புராஜெக்ட் ஆரம்பிச்சாலும் அவர்கிட்டதான் முதல் வேண்டுதல்.

பிள்ளையாருக்கு அடுத்ததா, ஆஞ்சநேயர். அசோக் நகர் ஆஞ்சநேயரை அடிக்கடி தரிசனம் செய்றதுண்டு. அப்புறம், கணவர் வீட்டில் பெருமாள்தான் குலதெய்வம் என்பதால் பெருமாள்... முருகன் மேல ஒரு ஸ்பெஷல் அட்டாச்மென்ட்... பாலாதிரிபுரசுந்தரியை ரொம்பப் பிடிக்கும். நெமிலி பாலா கோயிலுக்கு முடிஞ்சபோதெல்லாம் நவராத்திரி சமயத்தில் போய் தரிசனம் பண்ணிட்டு, ரெண்டு பாட்டு பாடிட்டு வருவேன்.

அப்பா சிறந்த ஐயப்ப பக்தர். சுமார் 40 வருஷமா சபரிமலைக்குப் போனவர். என்னையும் ரெண்டு தடவை அழைச்சுட்டுப் போயிருக்கார். அவர் குருசாமி என்பதால், வீட்ல அடிக்கடி ஐயப்ப பூஜை நடக்கும். அதனால, ஐயப்பனையும் இந்த லிஸ்ட்ல சேர்த்துக்கலாம்!

ஆனா, பிள்ளையார் ரொம்ப க்யூட்! மனசுக்கு ரொம்ப நெருக்கமானவர்... நம்ம வீட்டுப் பிள்ளை மாதிரி. அதனால அவர்தான் ஆல்டைம் ஃபேவரைட்!’’  

ரசித்த காவியம்

‘‘பிரகலாத சரித்திரம். அது ஏன் எனக்குப் பிடிக்கும்கிறதுக்குப் பின்னால் ஒரு பெரிய கதையே இருக்கு. எங்க தாத்தாவின் ஊர், கும்பகோணத்துக்குப் பக்கத்தில் உள்ள தேப்பெருமாநல்லூர். பாகவத மேளாவுக்குப் பிரசித்தமான ஊர். நான் வளர்ந்ததெல்லாம் சென்னை என்றாலும், தாத்தா ஊர்மேல அப்படி ஓர் ஈடுபாடு. அங்கே அழகிய கோயில் இருக்கு; எங்க பூர்வீக வீடு இருக்கு. ‘பாகவத மேளா’ என்கிற சிறப்பான நாட்டிய நாடகம், இப்ப எங்க ஊர் மற்றும் மெலட்டூர், சாலிய மங்கலம் மாதிரி சில ஊர்களில் மட்டும்தான் நடக்குது. அதில் ‘பிரகலாத சரித்திரத்தை’ நாடகமா நடிப்பாங்க. பார்க்கிறப்பவே சிலிர்க்கும். வருஷா வருஷம் நரசிம்ம ஜயந்திக்கு, பாகவத மேளா நடக்கும். அதில் எங்க குடும்பத்துக்குப் பெரிய பங்கு உண்டு. எங்க தாய்மாமாக்கள், அவங்க பிள்ளைகள் எல்லாரும் படிச்சு முடிச்சு, ஐ.டி போல பல துறைகளில், வெவ்வேறு ஊர்களில் பிஸியாக இருந்தாலும், எல்லோரும் பாகவத மேளா நடக்கிறப்போ தவறாம வந்து கலந்துக்குவாங்க. அவங்களே பாடுவாங்க; அவங்களே நடிப்பாங்க. ராத்திரி முழுதும் நடக்கும். தூங்காம கண் முழிச்சு நடத்துவாங்க. ஊரில் இருக்கும் நாள்களில் நானும் கலந்துக்கிறதுண்டு. பல வருஷங் களாக, பரம்பரை பரம்பரையாக இது தொடர்ந்து நடத்துகிட்டு வருது. அடுத்த தலைமுறை பிள்ளைகளும் ஆர்வமாக வந்து கலந்துக்கிறது சந்தோஷமாக இருக்கு. நரசிம்மரின் புகழைச் சொல்லும் அந்தப் பிரகலாத சரித்திரத்தைப் பாகவத மேளாவாக நடத்தும் குடும்பத்தில் பிறந்தவள்னு  நினைக்கிறப்போ ரொம்பப் பெருமையாக இருக்கு!’’ 

சிலிர்க்கவைத்த அனுபவம்

‘‘ஏராளம்... ஏராளம். பாடறது என்பதே பக்தியில் ஓர் அங்கம்தான்! நவ (ஒன்பது வகை) பக்தியில் ஒன்றான கீர்த்தனம் என்பதன்மூலம் ஒவ்வொரு பாடலிலும் நான் கடவுளைத் தரிசிக்கிறேன் என்பது நிஜம். இசையின் மையமே பக்திதானே! அதிலும் குறிப்பாகக் கோயில்களில் பாடறப்போ, கிடைக்கும் தெய்விக அனுபவத்தை வார்த்தைகளில் விளக்க முடியாது. சில பாடல்களின் இடையே, அடுத்த வரியைப் பாடவே முடியாத அளவு கண்கள் தளும்பி, தொண்டை அடைச்சுடும். முக்கியமாக, சிவன் பாடல்கள் பாடறப்போ, நான் அடிக்கடி இதுபோல உணர்வது சத்தியம். சமீபத்தில் சிவராத்திரியின்போது மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில் அருகே பாடியது சிலிர்ப்பான அனுபவம்.

அதேபோல், ஒவ்வொரு முறை திருப்பதி போகும்போதும், மூணு மணி நேரம் காத்திருந்து அவர் முன்னே போய் நின்னாலும், அங்கே நிக்கிற அந்த நொடியில் எல்லாமே மறந்து போய், என்ன வேண்டுறதுன்னுகூட ஞாபகம் வராமல் போய், அப்படியே மனசு ‘பிளாங்க்’ ஆயிடும். எதுவுமே தோணாது... சுவாமியைப் பார்த்ததும் மெய்சிலிர்க்கும். அந்தச் சிலிர்ப்பு, விவரிக்க முடியாத ஓர் அனுபவம்!’’    

“சிலிர்க்கவைத்தவை ஏராளம்!”

பிடித்த பாடல் 

‘‘என்னங்க இது... நீங்க கேட்கிற எல்லா விஷயங்களுக்குமே `எனக்கு இதுதான்’னு  பளிச்னு சொல்ல முடியாம, ஒரு பட்டியலே பதிலாக இருக்கு!’’ என்று சிரித்தவர், சில நொடிகள் யோசித்த பின் பதில் கூறுகிறார்...

‘‘அருணகிரிநாதரின் திருப்புகழ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதிலும், ‘முத்தைத் தரு பத்தித் திருநகை’ என்கிற பாடலைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். தமிழில் மிகவும் கடினமான உச்சரிப்புகொண்ட பாடல் அது. மெனக்கெட்டு கத்துக்கிட்டால்தான் பாடமுடியும். முருகன்மேல கொண்ட பக்தியாலும், அந்தத் தமிழ் வார்த்தைகளின்மேல் கொண்ட காதலாலும், நான் அதைக் கத்துக்கிட்டுப் பாடினேன். டி.வி-யிலும் யூடியூபி-லும் லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்த்துட்டு, பாராட்டினதோடு நிக்காம, மேடைகளிலும் பாடச் சொல்லிக் கேட்கிறாங்க. அதுவே எனக்குப் பிடிச்ச பாடலாயிடுச்சு!’’   

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு