
பிரபுநந்த கிரிதர்
தூசு தும்பின்றி, மாசு மறுவுமின்றி புதுவையின் கடற்கரையை ஒட்டியுள்ள அந்த சிமென்ட் சாலைக்குள் நுழையும்போதே அமைதியின் ஆளுமைக்குள் நாம் ஈர்க்கப்படுகிறோம். பிரெஞ்சுக் கட்டடப் பாணியில் எழில் கொஞ்ச நம்மை வரவேற்கிறது ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமம். அதன் நுழைவாயிலில் தொடங்கி வரிசையாக நிற்கும் ஆசிரமத்துவாசிகள், நட்பான பார்வை வீசி நம்மைத் தலையசைத்து வரவேற்கிறார்கள்.

உள்ளே, அடர்ந்த மரத்தில் பறவைகள் சிறகடிக்கும் ஓசை மட்டுமே கேட்கும் அளவுக்கு அமைதி. மஞ்சள், சிவப்பு, ஊதா, வெள்ளை என விதவிதமான நிறங்களில் பூக்கும் மலர்ச்செடிகள். அவற்றினூடே சில அடிகள் நடந்து திரும்பினால், ஆசிரமத்தின் திறந்த வளாகத்தில் நடுநாயகமாக எத்தனையோ லட்சம் பக்தர்களின் இதயத்தைச் சாந்தப்படுத்தி வரும் சமாதி. அப்போது தான் பூத்த மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அந்தச் சமாதியைச் சுற்றிலும் கண்மூடிய நிலையில் பக்தர்கள்.
வெண்ணிறப் பளிங்குக் கற்களால் அமைந்த அந்தச் சமாதியின் உள்ளே தனித்தனிப் பிரிவுகளில் ஸ்ரீஅரவிந்தரும், ஸ்ரீஅன்னையும் சமாதி நிலை எய்தியுள்ளார்கள்.
நிமிடக்கணக்கில்... ஏன்... மணிக்கணக்கில்கூட அந்தச் சமாதியின் முன் மோனத்தவம் இருந்து அருள் வேண்டும் பக்தர்கள், மெள்ளக் கண் திறந்து, எழுந்து வந்து அந்தச் சமாதியை நெருங்கி முழந்தாளிட்டு அமருகிறார்கள். அதன் பளிங்கு மேற்பரப்பின் மீது தங்கள் நெற்றி படிய குனிந்து பிரார்த்தனையை வைக்கிறார்கள். அன்னையின் அருள் அலைகள் அங்கே நிரந்தரமாகப் பரவியுள்ளது என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த அதிர்வலையில் தங்கள் கவலைகளைக் கரைத்துக்கொண்டு நிமிர்ந்து புறப்படும்போது... உலகையே வென்று விட்ட ஒரு திருப்தியை அந்தப் பக்தர்களின் முகங்களில் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

ஸ்ரீஅன்னை அவதரித்தது, பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில். வங்கி அதிபர் எமோரீஸ் அல்பாஸாவின் இரண்டாவது குழந்தை அவர். 1878-ம் ஆண்டு, பிப்ரவரி இருபத்தோராம் தேதி பிறந்த அவருக்கு, மீரா அல்பாஸா என்று பெயர் சூட்டினர் பெற்றோர்.
தந்தை துருக்கி நாட்டவர். தாய் எகிப்தைச் சேர்ந்தவர். மீரா அல்பாஸா பிறப்பதற்கு ஒரு வருடம் முன்பாகத்தான் அவர்கள் பிரான்ஸுக்குக் குடிபெயர்ந்து வந்திருந்தார்கள். ‘மீரா’ என்ற பெயருக்கு இந்தியச் சாயல் உண்டு என்பது அப்போது அந்தத் தம்பதிக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால், இணையில்லாத கிருஷ்ண பக்தையின் பெயரைக் குறிக்கும் அந்தப் பெயரை அவர்கள் சூட்டியது ஆச்சர்யம் தரும் விஷயம்!
மீரா அசாதாரணமான குழந்தை என்பது நான்கு வயதிலேயே தெரிந்துவிட்டது. சிந்திக்கத் தோன்றாத அந்த வயதில், குழந்தைகளுக்குக் கேளிக்கைகளில்தான் அதிக நாட்டம் இருக்கும். ஆனால், மீரா ஒரு சின்னஞ்சிறு நாற்காலியில் அமைதியாக உட்கார்ந்துகொண்டு தியானத்தில் ஆழ்ந்துவிடுவாள். மனம் களிக்க விளையாடு வதைவிட, மௌனம்தான் அந்தக் குழந்தையைப் பெரிதும் கவர்ந்தது.
மீராவின் அம்மாவுக்கு இது ஆச்சர்யம் தந்தது. ‘‘என்னடி பெண்ணே! உன் முகத்தைப் பார்த்தால், இந்த உலகத்தையே தோளில் தாங்குகிற தேவதை மாதிரி அல்லவா இருக்கிறது?’’ என்று அம்மா கேட்பாள். அப்போதெல்லாம் ‘‘ஆமாம் அம்மா. நான்தான் தாங்குகிறேன்’’ என்பாளாம் அந்தச் சிறுமி.
பள்ளிக்கூடத்திலும் தன் கம்பீரத்தாலும், புத்திக் கூர்மையாலும் எல்லோரையும் ஈர்த்தாள் மீரா. சக மாணவிகள் அவளை ‘அரசகுமாரி’ என்றே கூப்பிட்டனர். ஏழாம் வயதில், அந்த அரச குமாரி அசாதாரணமானவள் என்பதைப் பள்ளியில் எல்லோரும் உணர்ந்தனர்.

பதின்மூன்று வயதுப் பையன் ஒருவன், எல்லா மாணவிகளிடமும் வம்பு செய்து வந்தான். மீராவிடமும் ஒருநாள் அவன் வம்புக்கு வந்தான். மீரா சாந்தமாகவும் அதே நேரம் அழுத்தமாகவும் அவனை எச்சரித் தாள். அவன் கேட்பதாக இல்லை. கேலியும் கிண்டலும் தொடர்ந்தது.
ஒருநாள் அந்த ஆச்சர்யம் நிகழ்ந்தது. உருவத்தில் சிறிய, வயதில் இளைய, மிக மென்மையான அந்தச் சிறுமி... அந்தப் பெரிய பையனை அப்படியே அலாக்காகத் தூக்கி, அந்தரத்தில் ஒரு சுழற்று சுழற்றி அநாயாசமாகத் தொலைவில் வீசி எறிந்தாள்.
விழுந்து எழுந்தவன் கண்களில் ஏகத்துக்கும் மிரட்சி. நடுக்கமும் அவமானமும் விரட்ட ஓடியவன்தான்... அதற்குப் பிறகு அவன் எந்தப் பெண்ணிடமும் வாலாட்டவில்லை.
மீராவின் குழந்தைப் பருவத்துக் கனவுகளில் இனிப்புகளுக்கோ, பொம்மைகளுக்கோ இடமில்லை. தனக்கு அடிக்கடி வரும் ஒரு கனவு பற்றி ஸ்ரீஅன்னையே பிற்காலத்தில் இப்படி விவரிக்கிறார்...
‘‘எனக்குச் சுமார் பதின்மூன்று வயதாக இருந்தபோது ஏறக்குறைய ஓர் ஆண்டு காலத்துக்கு ஒவ்வொரு நாளும் இரவில் நடந்த நிகழ்ச்சி இது. படுக்கையில் படுத்துக் கண் மூடிய பிறகு, நான் உடலைவிட்டு வெளியே வருவேன். நகரத்தின் மையத்திலிருந்து நான் மேலே மேலே புறப்பட்டுப் போவது போலிருக்கும். தங்க மயமான உடை உடுத்தி இருப்பேன். நான் மேலே போகப்போக அந்த உடையும் பெரிதாகிக் கொண்டே போய், கடைசியில் நகரத்தின் மீது முழுமையாக ஒரு தங்கக் குடையாக அது கவிந்து கொள்ளும்.

அதன்பிறகு நாலா பக்கங்களில் இருந்தும் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், வயோதிகர்களும், நோயாளிகளும், துயருறுவோ ரும் தங்கள் உடல்களை விட்டு என் முன்னே வந்து நிற்பார்கள். தங்கள் துக்கங்களையும், துயரங்களையும் என்னிடம் கூறி உதவி கோரு வார்கள். எனது தங்க அங்கியைத் தொட்டதும் ஆறுதல் பெறுவார்கள். அதிக மகிழ்ச்சியுடனும், அதிக வலுவுடனும் தங்கள் உடல்களுக்கு மறுபடியும் திரும்புவார்கள். இந்த அற்புத அனுபவத்துக்காகவே நான் இரவுகளுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தேன். பகல் வேளைகள் எனக்குச் சுவையற்றதாகத் தோன்றின!’’
அன்னையின் வரலாற்று நூல்கள் கூறும் இன்னுமோர் ஆச்சர்யம்...
- தரிசிப்போம்...
(14.9.03 ஆனந்த விகடன் இதழில் இருந்து)