Published:Updated:

சிவமகுடம் - 36

சிவமகுடம் - 36
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம் - 36

ஆலவாய் ஆதிரையான் - ஓவியங்கள்: ஸ்யாம்

சிவமகுடம் - 36

ஆலவாய் ஆதிரையான் - ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:
சிவமகுடம் - 36
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம் - 36

காலாக்னி சேனை!

ந்தக் காட்சியைக் கண்டு ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்துபோனார் கூன்பாண்டியர். உறையூர்க் கோட்டையின்  அகழிப் பாலம் இலக்கணத்துக்கு மாறாகப் பெரும் வேகத்துடனும் காதைப்பிளக்கும் பேரொலியுடனும் நிலத்தில் விழ, அதே வேகத்தோடும் ஓசையோடும் கோட்டைக்கதவுகளும் திறந்துகொள்ள, புழுதி பரக்கப் புயலெனப் பாய்ந்து வந்த சோழர்களின் புரவிப்படை, வந்த வேகத்தில் பாண்டியர் சேனையின் மீது பாய்ந்துவிட்டது.    

சிவமகுடம் - 36

ஆயிரம் புரவிகளைக்கொண்ட அந்தச் சிறிய படையணி பாண்டிய சைன்னியத்தோடு  அப்படி மோதிய அந்தக் காட்சி, தொலைவில் மணற்முகட்டின்மீது நின்று களத்தைக் கவனித்துக் கொண்டிருந்த கூன்பாண்டியருக்கு, நுங்கும்நுரையுமாக ஆர்ப்பரித்துப் பாய்ந்து வரும் பொருநை நதியாள் சங்குமுகத் துறையில் சமுத்திரத்தோடு சங்கமிக்கும் காட்சியையே நினைவுபடுத்தியது.

சாதாரணதொரு  தருணமாக இருந்திருந் தாலோ அல்லது இந்தப் போருக்கும் தமக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாததொரு நிலை வாய்த்திருந்தாலோ, நிச்சயமாக இரண்டு காட்சிகளையும் ஒப்பிட்டு, பெரும் சித்திரம் எழுதக் கட்டளையிட்டிருப்பார் கூன் பாண் டியர். அல்லது தாமே சித்திரம் தீட்டியிருப்பார். நிலைமை அப்படி வாய்க்காமல் போனது குறித்து அவருடைய கலை மனம் சலித்துக் கொள்ளவே செய்தது. அத்துடன், அந்த அணியில் அடுத்தடுத்துப் பாய்ந்துவந்த புரவி ஒவ்வொன்றும் மூவரைச் சுமந்து வந்த விநோதமும், அவர்களது விசித்திரத் தாக்குதலும் நிலைமையின் தீவிரத்தை உணர்த்தியதோடு, கலை எண்ணத்தை அறவே புறக்கணிக்கச்செய்து, பெரும் கவலையை அவரது மனதுக்குள் புகுத்தி, பாண்டியரைக் கல்லாய் சமையச் செய்துவிட்டன.

ஆனாலும், அந்த நிலை சில கணங்களே நீடித்தது. வெகுதுரிதமாக விழித்துக்கொண்டவர், சடுதியில் அடுத்து என்ன செய்வது என்ற முடிவெடுத்ததோடு அதைச் செயல்படுத்தவும் செய்தார். அவரது செயல்திட்டத்தை அறிந்து கொள்வதற்கு முன்னதாக, உறையூர் போரைச் சந்திக்க சோழர்கள் - பாண்டியர்கள் ஆகிய இரு தரப்பினரும் ஏற்கெனவே போட்டுவைத்த வியூகக் கணக்கை மீண்டும் ஒருமுறை நாம் பார்த்துவிடுவது அவசியம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிவமகுடம் - 36சோழ இளவரசியார் பூ வியூகம் வகுத்திருந்தது நமக்குத் தெரியும். அதன்படி உறையூர்க் கோட்டையும் உள்ளிருக்கும் சோழப் படை களும் பூவின் அண்டகோசமாகத் திகழ, உறையூர்க் கோட்டையைச் சுற்றி நிறுத்தப் பட்டிருக்கும் சோழ சைன்னியம் பூவின் அக இதழ்களாகத் திகழும். நீராட்டக்குளத்தின் சுரங்கப் பாதையைப் பூவின் தண்டாகக் கணக்கிட்டிருந்தாள் மானி.

தேனீக்களாக வரும் பாண்டியப்படைகள், அக இதழ்களோடு சேர்த்து அண்டகோசத்தை அதாவது உறையூர்க்கோட்டையையும்   அதைச் சூழ்ந்து நிற்கும் வெளிக்காவல் சைன்னியத்தையும் சூழ்ந்து கொள்ளும்போது, உள்ளிருப்புப் படைகள் எவருக்கும் தெரியாமல் பூவின் தண்டு வழியே - சுரங்கப்பாதையின் வழியே வெளியேறி, பாண்டிய சைன்னியத்துக்குப் பின்னால் வந்து அவர்களைத் தாக்கும். அப்போது இடுக்கிப் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் பாண்டியர் படை. இதுதான் மானியின் கணக்கு.
பாண்டியர் தரப்பில், இரு அஸ்திரங்களாகக் கிளம்பிய அணிகளில் ஒன்று மெள்ள சோழ தேசத்தை நெருங்கிக்கொண்டிருக்க, மற்றொன்று புலியூருக்குச் செல்வதாகப் போக்குக்காட்டிவிட்டு, கண்ணுக்குத் தெரியாமல் வனப்புறத்தில் மறைந்தது. அதே வேளையில் கடற்சேனை ஒன்றும் நகரத் தொடங்கியது.   

சிவமகுடம் - 36

சோழர்களின் படைபலத்தைக் குறைக்கவே இத்தகைய ஏற்பாடுகள் என்பதை தாமதமாகவே அறிந்தாள் இளவரசி மானி. ஆம். புலியூரைக் காக்க ஒரு படையணியை ஏற்கெனவே அங்கு அனுப்பிவிட்டிருந்தார் மணிமுடிச் சோழர். அத்துடன் புலியூருக்கும் உறையூருக்கும் இடையே இரண்டு இடங்களிலும் சிறு சிறு படையணிகள் தங்கவைக்கப்பட்டன. உதவிக்கு வந்த தென்னாட்டுப் பரதவர் படையையும் கடற்புரத்துக்கு அனுப்பியாகிவிட்டது.

இதன்பிறகே ‘புலியூர் தாக்குதல்’ என்று பாண்டிய தரப்பில் கசியவிடப்பட்ட தகவல் ஏமாற்று வேலை என்பதை அறிந்தாள் இளவரசி மானி. அவர்கள் தாக்க நினைத்திருப்பது நமது புலியூர் அல்ல; சேர தேசத்தின் புலியூர் என்பதையும் தெரிந்துகொண்டாள். 

இப்படி ஏதேனும் விபரீதம் நடந்தால் தாக்குப்பிடிப்பதற்கு வசதியாக அவள் செய்திருந்த மாற்று ஏற்பாடே பூவியூகத் திட்டம். ஆனால், அதையும் தமது மதியூகத்தால் தவிடுபொடியாக்கி விட்டார் கூன்பாண்டியர். தங்களை ஒற்றறிய வந்த பொங்கிதேவியின் மூலமே அதைச் சாதித்துக் கொண்டார். ஆம். சிறு படையணி ஒன்றை அவளைப் பின்தொடரச் செய்து சுரங்கத்தின் ரகசியத்தையும் அறிந்தார். இந்த விஷயத்தை அறிந்தபிறகு மானி என்ன முடிவெடுப்பாள் என்பதையும் அவர் கணித்திருந்தார். அதன்படியே நடந்தது. நீராட்டக் குளத்தின் நீரை வெளியேறச் செய்து சுரங்கத்தின் உட்புற வாயிலை மூடிவிட்டாள் மானி. இப்போது, பாண்டியர்கள் மட்டுமல்ல; சோழர் தரப்பும் அந்தச் சுரங்கத்தைப் பயன்படுத்த முடியாது.

இப்படியான பாண்டியர் தரப்பின் கணக்குகளைச் சோழர்கள் முன்ன தாகத் தெரிந்துகொள்ளக் கூடாது என்பதற்காகவே, உறையூர்க் கோட்டைக்குள் சிறு போரையும், எல்லையில் எரிபரந்தூட்டலையும், சிறைச் சாளரம் வழியிலான அத்துமீறலையும் நிகழ்த்தி, அவர்களது கவனத்தைச் சிதறடிக்கவேண்டியதாகி விட்டது கூன்பாண்டியருக்கு.

மேலும், வனப்புறத்தில் ஆங்காங்கே பதுங்கியிருந்த இரண்டாம் அஸ்திரமும் அணியணியாக வந்து உறையூரில் திரண்டு நிற்கின்றன.  இந்நிலையில் சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை சோழர்களுக்கு என்றே நம்பியிருந்தார் கூன்பாண்டியர்.

ஆனால், அவரது அந்த நம்பிக்கையைத் தவிடுபொடியாக்கும் வகையில் இதோ திறந்துக் கொண்டு விட்டது உறையூரின் கோட்டைக் கதவுகள். சீறிப் பாய்ந்து வெளியேறிக் கொண்டிருக்கிறது மானியின் விசித்திரப் புரவி படை. இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை கூன்பாண்டியர்.

சோழர்களின் நிலையில் அவர் இருந்திருந்தால், நிச்சயமாகக் கோட்டைக்கதவுகளைத் திறந்திருக்க மாட்டார். அது தற்கொலைக்குச் சமம் என்பதே போரில் வல்லவர்களின் அறிவுரையாக இருக்கும்.  ஆனால், சோழ இளவரசி இந்த இலக்கணங்களுக் கெல்லாம் தான் மாறுபட்டவள் என்பதை நிரூபித்தாள்.

தட்சனின் யாகத்தை அழிக்கப்புறப்பட்ட காலாக்னி சேனையாய் பாய்ந்து வந்தது புரவிப்படை. ஒருவன் புரவியைச் செலுத்தியபடி  வாள் சுழற்றிக்கொண்டிருக்க, அவன் முதுகோடு முதுகு சேர்த்து பின்னோக்கி அமர்ந்திருந்தவனோ நாலாபுறமும் கணை தொடுத்து பாண்டியர் படையைச் சிதறடித்துக் கொண்டிருந்தான்.

அந்த ராட்சஸப் புரவிகளின் வயிற்றுப் புறத்தில் தரைநோக்கியபடி படுக்கைவசமாகப் பிணைக்கப்பட்டிருந்த வீரனோ, இருகூர்முனைப் பொருந்திய வேலாயுதத்தை அசுரவேகத்துடன் இடமும் வலமுமாக அசைத்துக் கொண்டிருந் தான். எத்தகையதொரு பெரும் சேனையாக இருந்தாலும், இந்தப் புரவிப்படையை நெருங்கிப் பொருதுவது இயலாத காரியம் என்பதைக் கூன்பாண்டியர் உணர்ந்தார்.

பாண்டியர் தரப்பிலும் வேல் வீரர்களையும் வில்லாளிகளையும் பயன்படுத்தலாம்தான். ஆனால், எதிர்பார்த்திராத நிலையிலும் அவர்களின் இலக்குக்கு மாட்டாத வகையில் அசுர வேகத்திலும் அல்லவா பாய்ந்து வருகிறது இந்த விநோதப்படை!

சுரங்கப்பாதைக்குப் பதிலாக இந்த விசித்திரப் படையைச் சோழர் தரப்பில் பயன்படுத்து கிறார்கள் என்று யூகித்தார் அவர். ஆம். விசித்திரப்படையை எவரும் எளிதில் நெருங்க முடியாது என்பதால் பாண்டியப் படைகள் விலகி வழிவிடும். அப்போது எளிதில் அவர்களை ஊடுருவி பின்பக்கமாக வந்துவிடும் விசித்திரப்படை, பின்னால் இருந்து பாண்டியர்களைத் தாக்கும். பாண்டிய சேனை, சோழர்களின் கிடுக்கிப்பிடிக்குள் சிக்கிக் கொள்ளும். அப்படி நிகழ்ந்தால் இந்தப் போர் அவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வராது.

மட்டுமின்றி, களத்துக்கு இடப்புறத் திக்கில் இருந்து பொங்கிதேவியோடு  கோச்செங்கணும் வலப்புறத்தில் இருந்து நம்பிதேவனும் சிறு படையணிகளோடு வந்துகொண்டிருக் கிறார்கள். அவர்களின் திட்டம் என்ன என்பதையும் அறியமுடியவில்லை. 

ஆக, அவர்களது திட்டத்தையும், விசித்திரப் படையின் முன்னேற்றத்தையும் தடுத்து நிறுத்தியாக வேண்டும். எனில், தனது சேனைத் தலைவர்களுக்கு மாற்றுக்கட்டளைகள் தேவை என்பதை உணர்ந்த கூன்பாண்டியர், அதுகுறித்த தீர்க்கமானதொரு முடிவோடு களத்தில் புகுந்தார்.

மிக வேகமாக தனது புரவியைச் செலுத்திய படியே, தமது பெரும் வாளை உருவி உயர்த்தி ஏதோ அவர் சைகை செய்ய, அதைப் புரிந்து கொண்டது போல்... ஏற்கெனவே விசித்திரப் படையை அணுகமுடியாமல் இருபுறமும் சிறிது தூரம் விலகிவிட்டிருந்த பாண்டியப் படைப் பிரிவுகள் இன்னும் அதிகமாக விலகின. மீண்டும் ஒருமுறை அவர் வாட்கரத்தை அசைக்க, அவரது படைகள் முற்பகுதி, பிற்பகுதியாகப் பிரிந்தன. முற்பகுதிப் பிரிவு கோட்டையை நோக்கி ஆவேசத்துடன் நகர, பிற்பகுதி அவசர அவசரமாக வனப்பகுதியை நோக்கிப் பின்னடையத் தொடங்கியது.

அப்படி பின்னடையத் தொடங்கிய படைகளில் இருந்து பிரிந்த சிறு பிரிவு ஒன்று மன்னருக்குப் பாதுகாப்பாக அவருடன் சேர்ந்து கொண்டது. கூன்பாண்டியர் மெள்ளப் புன்னகைத்தார்.

இப்போது, என்ன முயன்றாலும் சோழர்களது விசித்திரப்படையால் பாண்டியப் படைகளின் பின்புற எல்லையை அணுகவே முடியாது. அந்த அளவுக்கு வேகமாக நகர்ந்து வனப் பகுதியை எட்டிவிட்டது பிற்பகுதியாய் பிரிந்து சென்ற பாண்டிய படையணி. அதேபோல் கோச்செங்கண் மற்றும் நம்பிதேவனின் படையணிகளும்கூட, பாண்டியப்படைகள் பிரிந்ததால் உண்டான இடைவெளிக்குத்தான் வந்துசேர வேண்டும். ஆக, இப்போது பாண்டியரின் கிடுக்கிப்பிடிக்குள் சோழத்தின் மூன்று அணிகளும் சிக்கப் போகின்றன. சோழர்களின் கோட்டைக்காவல் சேனையைப் பாண்டியரின் முற்பகுதி அணி கவனித்துக் கொள்ளும்.

இப்படி, கணப்பொழுதில் தான் மாற்றியமைத்த வியூகம், போரின் போக்கை மீண்டும் தனக்குச் சாதகமாக்கிவிட்டதை நினைத்தே சிறிது புன்னகைக்கவும் செய்தார் கூன்பாண்டியார்.

அதேநேரம், விசித்திரப்படையும் தனது பாய்ச்சலை மட்டுப்படுத்துவதாகப்பட்டது கூன்பாண்டியருக்கு. அவர்களின் தலை வனான கரும்புரவி வீரனுக்கும் நிலைமையின் விபரீதம் புரிந்துவிட்டதுபோலும் எனக் கருதிய கூன்பாண்டியர், அவனின் அந்தத் தயக்கத்தைப் பயன்படுத்திக்கொள்ளத் தீர்மானித்து, வெகு வேகமாக தனது சிறு படையணியுடன் கரும்புரவி வீரனை நோக்கிப்பாய்ந்து சென்றார். அதுதான் அவர் செய்த மாபெரும் தவறு என்பதை அடுத்த சில நொடிகளில் அவருக்குப் புரியவைத்தது சோழர்களின் விசித்திரப் படை.

ஆம்! தீர்க்கதமஸ் என்று வடபுலத்து அறிஞர்களாலும், அசமசமன் சிரிமாற வர்மன் என்று பிற்காலத்துச் செப்பேடுகளாலும் சிறப்பிக்கப்பட்ட அந்த மாமன்னனைச் சிறைப் படுத்தவும் ஆயத்த மானான் விசித்திரப்படையின் தலைவனான கரும்புரவி வீரன்!

எங்ஙனம் நிகழ்ந்தது இந்த விபரீதம்?

- மகுடம் சூடுவோம்....