மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 4

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 4
பிரீமியம் ஸ்டோரி
News
கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 4

ஹம்பிமகுடேசுவரன்

தொடக்கக்கால விஜயநகர அரசர்கள் துங்கபத்திரைக்கு வடக்கே இருந்த ஆனைகுந்திக் குன்றுகளைத்தாம் தம் தலைநகராகவும் கோட்டைப்பகுதியாகவும் ஆக்கி அமர்ந்தனர். விஜயநகர அரசர்களுக்கும் முந்தைய காலகட்டத்தில் கம்பிளி அரசர்களின் தலை நகராகவும் ஆனைகுந்திதான் இருந்தது. குறும்பை ஆடுகளை மேய்க்கும் ஆயர்களின் வழித்தோன்றல்கள்தாம் கம்பிளி அரசர்கள். இன்றைக்கும் ஹம்பிக்குக் கிழக்கே கம்பிளி என்றொரு சிற்றூரைக் காணலாம். கம்பிளி அரச மரபினருள் ஒரு பகுதியினர்தான் இன்றும் குறும்பை ஆடுகளை மேய்க்கும் நாடோடிகளாய் வாழ்கின்றனர்.     

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 4

ஹம்பிக்கும் கம்பிளிக்கும் இடையே கரடிகள் வாழ்கின்ற காப்பிடப்பட்ட சரணாலயமும் இருக்கிறது. `கரடிகள் குறுக்கிடும் பகுதி, கவனமாகச் செல்லவும்' என்று சாலையோரத்தில் அறிவிப்புப் பலகை வைத்திருக்கிறார்கள். சரணாலயத் தில் வாழ்கின்ற கரடிகள் மக்கள் நடமாட்டத்துக்குப் பழகிப்போய்விட்டன என்றுதான் கூற வேண்டும். சாலையில் கரடிகள் எதிர்ப்பட்டாலும் அஞ்ச வேண்டியதில்லை. 

கம்பிளி அரசர்கள் ஆனைகுந்திப் பகுதியில் ஆண்டு வந்தபோது தொடர்ச்சியான படையெடுப்புகளுக்கும் தாக்குதல்களுக்கும் ஆளாயினர். ஒருகட்டத்தில் அவர்களால் தம் அரசாங்கத்தைக் காப்பாற்ற முடிய வில்லை. மேலும் கம்பிளியினரின் வாழ்க்கை முறையானது, மேய்ச்சல் விலங்குகளைப் பேணுதற் காகத் தொடர்ச்சியான இடப்பெயர்ச்சியைக் கோருகின்ற ஒன்றாக இருந்தமையும் கவனிக்கத்தக்கது. திடீரென்று அவர்கள்மீது நிகழ்த்தப்படும் படையெடுப்புகளில் அவர்கள் நிலைகுலைவது தவிர்க்க முடியாதது. அதனால் ஆனைகுந்தியின் தொன்மையான அரசர்களான கம்பிளியர்கள் வலிமை குன்றிப்போய்த் தம் தலைநகரை இழக்க வேண்டியவர்கள் ஆயினர்.

ஹரிஹரரும் புக்கரும் தம் புத்தரசை நிறுவுவதற்கு அரண்வலிமையுள்ள இடந்தேடி அலைகையில் அவர்களுக்குத் தோதாகப் பட்டவை ஆனைகுந்தி மலைகள்தாம். ஆனைகுந்தி மலைகளின் புவியியல் அமைப்பை என்னால் எவ்வளவுக்கு விளக்க முடியும் என்று தெரியவில்லை.

மலைகள் என்றால் மேற்குத் தொடர்ச்சி மலைகளைப்போன்று செம்மாந்து இருப்பவையல்ல அவை. நம் பகுதிகளில் உள்ள குமரக்குன்றங்கள் எவ்வாறு உள்ளனவோ அவ்வாறு இருக்கும். அத்தகைய சிறு குன்றங்களை மலைகள் என்றும் சொல்ல முடியாதுதானே?

ஆனால், சிறிதும் பெரிதுமான குன்றுகள் நூற்றுக்கணக்கில் தொடர் வரிசையாய், மலைத் தொடர்போல் மடிப்பு மடிப்பாக இருக்கின்றன. பெருங்குன்றங்களின் தொடரமைப்பு என்பதால்தான் மலைத்தொடர்கள் என்றும் சொல்கிறோம். மடிப்பு மடிப்பான பாறைக் குவியல்களின் பெருந்தொடர்.

ஒவ்வொரு குன்றும் தனித்த பாறைக்  குவியலாய் இருக்கும். அதில் படியமைத்தோ, வழி ஏற்படுத்தியோ ஏறிவிட முடியாது.  ஒரு குன்றின் மீது ஏறுவதற்கு அதன்மீது குவிந்து கிடக்கும் நூற்றுக்கணக்கான பாறைக்குவியல் களைப்பற்றி ஏற வேண்டும். அப்படி ஏறும்போது இரண்டு பாறைகளுக்கு இடையே குகைப் போன்ற அமைப்புகள் இருக்கும்.

ஆக, ஒரு பாறைக்குன்றைக் கடப்பதற்குள் இடையேயுள்ள குகை என்னும் ஆபத்தை ஒருமுறை எதிர்கொள்ள வேண்டும். அந்தக் குகைகள் சிறிதும் பெரிதுமாய்ப் பல்வேறு அளவுகளில் காணப்படுகின்றன. அக்குகை களுக்குள் எதிரிகளைத் தாக்குவதற்கு வேண்டிய கொல்கருவிகளைப் பதுக்கி வைக்கலாம். மறைந்து தாக்கலாம். எதிரிகளை உள்ளே வரவிட்டுச் சுற்றி வளைக்கலாம். நம்முடைய இருப்பிடத்தை எதிரி கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே அவனை அழித்தொழிக்கலாம். சிறு குழுவாகத்தான் உள்ளே வரமுடியுமே தவிர, பெரும்படையாக ஆனைகுந்திக் குன்றுகளை நெருங்கவே இயலாது.   

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 4

வடக்கிலும் மேற்கிலும் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை இத்தகைய மலைத்தொடர்களே மிகுந்துள்ளன. கிழக்கிலும் தெற்கிலும் இவ்வகை யான பாறைக்குன்றங்களோடு மேலும் ஒரு வலிமையான இயற்கை அரண் சேர்ந்துவிட்டது. அதுதான் துங்கபத்திரை ஆறு. ஆறு என்றால் பெரிய பாதுகாப்பா? எளிதில் கடந்துவிட முடியாதா என்ன? அங்கேதான் ஒரு மறை பொருள் இருக்கிறது. எல்லா ஆறுகளும் மணற்படுகைகளில் அல்லது ஓரளவு மட்டமான தரைப்பகுதியில் பாய்ந்து செல்லும். ஆனால், ஹம்பிப் பகுதியிலுள்ள துங்கபத்திரை ஆறு பாறைப்படுகையில் பாய்கிறது. எப்படி பாறைக்குவியல்கள் நிலத்தில் மலைகளைப் போல் எழுந்துள்ளனவோ, அவ்வாறே ஆற்றுப் படுகைக்குள்ளும் மறைந்துள்ளன.

நான் அந்த ஆற்றில் இறங்கிக் குளித்திருக்கிறேன். தண்ணீருக்கு மேலேயுள்ள பாறை விளிம்பைப் பிடித்துக்கொண்டு தண்ணீருக்குள் இருக்கும் பாறைப்பிளவு களுக்குள் காலை விட்டுப் பார்த்தேன். தரை தட்டுப்படவில்லை. அந்த ஆழம் தண்ணீருக்குள் செல்லும் குகைப்பகுதியாகவும் இருக்கலாம். மற்ற ஆறுகளைப்போல் அந்த ஆற்றுக்குள் நடக்க முடியாது. காலை அழுத்தமாய் ஊன்றினால் பாசியால் ஊறிய பல கற்கள் குழைகுழைப்பாய்ச் சரிகின்றன.

எண்ணிப் பாருங்கள், குதிரையை ஆற்றுக்குள் செலுத்தினால் அதற்குக் கால்முறிவுதான் ஏற்படும். யானைகள் இறங்கினால் பாறைகள் சரிந்து பதம் பார்க்கும். நான் பார்த்தது ஆற்றில் நீரோட்டம் குறைந்திருந்த ஒரு கோடைக் காலத்தில்தான். வெள்ளப்போக்கு இருக்கும் போது அந்த வெள்ளமே நம்மைப் பெயர்த்து நகர்த்திக் கொண்டுபோய் ஒரு பாறையிடுக்கில் திணித்து விட்டுச் சென்றுவிடும். இப்போது ஆனைகுந்திப் பகுதியின் இயற்கை அரணைப் பற்றி ஓரளவேனும் உணர்ந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

விஜயநகர அரசர்களின் படைப்பெருக்கம் மிகுந்தபோது ஆனைகுந்தி மலைத்தொடரின் வடபகுதியில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. ஆயிரம் யானைகளுக்கு எங்கே கொட்டில் அமைப்பது? லட்சம் குதிரைகளை எங்கே கட்டுவது?

அதனால் சமவெளியாகவும் வயல்வரப்பு களுமாகவும் இருந்த துங்கபத்திரையின் தென் கரைக்குத் தங்கள் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டனர் விஜயநகர அரசர்கள். அங்கு எழுப்பிக்கொண்ட புதிய நகரம்தான் விஜய நகரம்.

புதிதாய் எழுப்பப்பட்ட விஜயநகரத்தைச் சுற்றிலும் பல்லடுக்குக் கோட்டைகள் கட்டப் பட்டன. அக்கோட்டைகளின் மீதங்களையும் நுழைவாயில்களையும் ஹம்பியை விட்டு ஐந்தாறு கிலோமீட்டர்கள் வெளியே வந்தாலும் காணலாம்.

விஜயநகரத்தில் ஏன் இத்தனைக் கட்டுமானங்கள் எழுப்பப்பட்டன என்பது சுவையான கேள்வி.

- தரிசிப்போம்...