Published:Updated:

புதிய புராணம்!

புதிய புராணம்!
பிரீமியம் ஸ்டோரி
News
புதிய புராணம்!

அசுரத் தவம்ஷங்கர்பாபு - ஓவியம்: ஸ்யாம்

ன்றைக்கு எங்கே பார்த்தாலும் அநியாயம் செய்பவர்களும், அடிதடியில் இறங்குபவர்களும் தான் நன்றாக இருக்கிறார்கள். இப்படியானவர் களின் சமூகரீதியான உயரமும், இருப்பும் அமைதிப் பிரியர்களின் இருப்பை ஒன்றும் இல்லாமல் செய்துவிடுகின்றன.   

புதிய புராணம்!

ஆம். அவர்களுக்கு முன்பாக மென்மையாளர் களும், அதிர்ந்து பேசாதவர்களும், சாத்விகமானவர் களும் செய்வது அறியாமல் திகைத்துப்போய் நிற்பதையும் நாம் காணவே செய்கிறோம்.

ஏன் இந்த முரண்பாடு?

அக்கிரமக்காரர்கள் வாழ்வில் வெற்றி பெறு வதையும், ஏனையோர் அவர்களைக் கண்டு அஞ்சி நடுங்கும்படியாகவும், அவர்களின் தயவில் வாழும்படியாகவும் நிலை உருவாவது ஏன்? இறைவனும் அவர்களுக்கு உதவி செய்கிறான் என்றுதானே தோன்றுகிறது?

இப்படியான கேள்விகளுக்கு விடை தேடி, கண்டடைய முடியாத அப்பாவிகளில் நானும் ஒருவன். சில தருணங்களில் நாம் தேடாத விஷயங்களே நமக்குக் கிடைக்கும்போது பெரும் முயற்சியுடன் தேடும் விஷயங்கள் கிடைக்காமல் போகுமா என்ன? எனக்கும் பதில் கிடைக்கவே செய்தது. அதுவும் இறை சந்நிதானத்திலேயே.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ளது திருப்பட்டூர். `சக்தி விகடன்' வாசகர்களுக்கு மிகவும் பரிச்சயமானதுதான். அங்குள்ள பிரம்மபுரீஸ்வரர் கோயிலில்தான் எனக்குப் பதில் கிடைத்தது. அதுபற்றி அறியுமுன் சில புராணச் சம்பவங்களை நினைவுகூர்வோம்.

பஸ்மாசுரன், இரண்யகசிபு, கம்சன் என்று எண்ணிலடங்காத அசுரர்கள் கடுமையாகத் தவம் செய்து வரம் பெறுகிறார்கள். வல்லமை பெறுகிறார்கள். பின்னர் உலகத்தைக் கொடுமைப் படுத்துகிறார்கள்.  பின்னர் தேவர்களும், ரிஷிகளும், பூலோகர்களும் இறைவனிடம் சரணடைய, இறைவன் அசுரர்கள் பெற்ற ஒப்பந்தத்தை ஆராய்ந்து, அதில் பலவீனமான பகுதியைக் கண்டுணர்ந்து அசுரர்களை வதைத்து மற்றவர் களை ரட்சிக்கிறார்.

புராணங்களில் அசுரர்களின் கை ஓங்கி இருப்பதையும், இன்றைய உலகில் அக்கிரமக்காரர் கள் வெற்றி பெறுவதையும் இணைத்துப் பார்க்கும் போது நமக்குள் எழுகின்ற கேள்வி ஒன்றுதான்...

ஏன் அயோக்கியர்களின் நிலை உயர்கிறது?

ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிய பிறகு அவர்களை அழிப்பதற்குப் பதில், வரம் கொடுக்காமலே இருந்திருக்கலாமே. இவர்களுக்கு வரம் கொடுத்தால் இப்படித்தான் நடக்கும் என்பது கடவுளுக்குத் தெரியாதா என்ன?

திரும்பவும் திருப்பட்டூர் வருவோம். இங்கு தனிச்சந்நிதி கொண்டிருக்கும் பிரம்மதேவன், சிவனாரின் ஆணைக்கிணங்க இத்தலத்துக்கு வரும் பக்தர்களின் தலையெழுத்தை நல்லபடியாக மாற்றியருள்வதாக ஐதீகம். வியாழக்கிழமைகளில் நல்ல கூட்டம் வரும். நான் சென்றதும் ஒரு வியாழக்கிழமைதான்.

தரிசன வேளையில் என் மனதுக்குள் வெகுநாள் தொக்கியிருந்த... ‘கெட்டவங்களுக்கும் கடவுள் வரம்வாரி வழங்குவது ஏன்?’ எனும் கேள்வியைப் பக்தர் ஒருவர் கேட்க, சிவாச்சார்யர் பதில் சொன்னார்.

‘‘கேட்பதைச் சரியான முறையில் கேட்டால், கேட்பது யாராக இருந்தாலும் அவங்க கொடுத்துதானே ஆகணும்? அவங்களுக்கு வேற வழியில்லையே. கொடுக்கறதுக்குத்தானே அவங்க இருக்காங்க..?’’

உண்மைதான். கேட்க வேண்டியதைக் கேட்கும் விதத்தில் கேட்டால், கடவுள் கொடுத்துதான் தீர வேண்டும். கடவுளால் அதை மறுக்க முடியாது.

மற்ற மொழிகளைப் போலவே கடவுளைத் தொடர்புகொள்ள, நம் மனதின் மொழி என்று ஒன்று இருக்கிறது. சிலர் இந்த விஷயம் தெரிந்து கடவுளுடன் இணைகிறார்கள். வேறு சிலரோ, அவர்களை அறியாமலே இறை சக்தியுடன் தொடர்புகொண்டு அவ்வப்போது இறை தரிசன உணர்வை அடைகிறார்கள்.

கடவுளுக்கு நல்லது கெட்டது என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. அப்படியிருந்தால் அது இறை சக்தியாக இருக்க முடியாது. இந்த அடிப்படையில்தான் அசுரர்களும் கடும் தவம் செய்து, வரம் கேட்டார்கள். கடவுளும் அவர்கள் கேட்டதைக் கொடுத்தார். ஆனாலும் பொக்கிஷமாகத் தாங்கள் பெற்ற வரத்தைப் பயன்படுத்தத் தெரியாமல் பயன்படுத்தி அசுரர்கள் அழிந்துபோனது தனிக்கதை.

இந்த இடத்தில் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். இறையருளை அடைவதற்கான அசுரர்களது உழைப்பையும், அவர்கள்  காட்டிய உறுதியையும், தியாகத்தையும் குறித்துப் புராணங்கள் வெகுவாகச் சிலாகிக்கின்றன. மென்மையாளர் களை விடவும், உலக நன்மைக்காக உழைப்பவர்களை விடவும், அநியாயக்காரர்களான அசுரக் கூட்டமே அநியாயத்துக்கு உழைத்து தாங்கள் விரும்பியதைப் பெற்றிருக் கிறது; பெற்றும் வருகிறது.

‘எனில், உழைத்தால் போதும், இலக்கை அடைவதில் உறுதியைக் காட்டினால் போதும், உன்னதமான நோக்கம் எதுவும் தேவையில்லை எனச் சொல்ல வருகிறீர்களா?’ எனும் கேள்வி உங்களுக்குள் எழலாம்.

அப்படியில்லை. அநியாயக் காரர்களைவிடவும் நல்லவர்களுக்கு வேகம் தேவை, உறுதி தேவை என்பதே தீர்வு.

கெடுதியான நோக்கத்துடன், சுயநலம் மிகுந்த ஓர் இலக்கை அடைவதற்கு அவர்கள் அவ்வளவு வேகம் காட்டும்போது, உன்னதம் மிகுந்த - பொதுநலம் விரும்பும் நல்லவர்கள் ஏன் வேகம் காட்டக் கூடாது? அசுர உழைப்பு நமக்கும் தேவை.

தர்மம் வெல்ல வேண்டும் என்றால், நல்லவர்கள் ஓடிவிடக் கூடாது. இன்றைய அக்கிரமக்காரர் களான அசுரர்களை விடவும் உழைக்க வேண்டும். அதற்கு வேறு யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருக்கத் தேவையில்லை. அது நல்லவர்களுக்கான இலக்கணமும் அல்ல.

அசுரத் தவம் செய்ய அசுரர்கள் அல்லாதவர்கள் தயாரா?

- புராணம் தொடரும்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz