தொடர்கள்
Published:Updated:

விசாக தரிசனம்: மன நிம்மதி அருள்வான் மருதமலையான்!

விசாக தரிசனம்: மன நிம்மதி அருள்வான் மருதமலையான்!
பிரீமியம் ஸ்டோரி
News
விசாக தரிசனம்: மன நிம்மதி அருள்வான் மருதமலையான்!

எம்.புண்ணியமூர்த்தி - படங்கள்: தி.விஜய்

அரவணை துயிலும் அரிதிரு மருக
அணிசெயு மருத மலையோனே!
அடியவர்வினையும் அமரர்கள் துயரும்
அற அருள் உதவு பெருமாளே!


ருத மரங்கள் அணிசெய்யும் மருதமலையில், சுத்தமான காற்று, அடர்ந்த மரங்கள் என்று இயற்கை எழில் கொஞ்சும் அழகிய சூழலில், அருணகிரிநாதரால் மனமுருகிப் பாடப்பட்ட முருகப்பெருமான் கோயில் கொண்டு அருள்கிறார். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியைச் சேர்ந்த மருதமலையில் தரைப்பகுதியில் இருந்து 599 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். முருகப் பெருமானின் ஏழாம் படைவீடாகப் போற்றப்படும் இந்தக் கோயில், சுமார் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. அக்காலத்தில் கொங்கு வேட்டுவ மன்னர்கள்தான் மருதமலையைப் பராமரித்து வந்திருக்கிறார்கள்.  

விசாக தரிசனம்: மன நிம்மதி அருள்வான் மருதமலையான்!

மூலிகைகள் நிறைந்த இந்த மலையில் மருத மரங்கள் அதிகம் இருந்த காரணத்தினால்தான் மலை, மருதமலை என்றும் முருகப்பெருமான், மருதாசல மூர்த்தி என்றும் அழைக்கப்படுவதாகச் சொல்கிறார்கள். கோயிலின் தலவிருட்சம் மருதமரம்; தீர்த்தம் மருது சுனை ஆகும்.

முற்காலத்தில் பாம்புகளைப் பிடித்து விஷம் முறிப்பது, பாம்புக்கடிக்கு மருந்து கண்டுபிடிப்பது என்றிருந்த ஒருவரை, அங்கிருந்த மக்கள் பாம்பு வைத்தியர் என்றே அழைத்திருக்கிறார்கள். நாகரத்தினப் பாம்பைத் தேடி மருதமலைக்கு வந்த பாம்பு வைத்தியருக்குக் காட்சி தந்த சட்டை முனிவர், ‘`உடலுக்குள் இருக்கும் பாம்பைக் கண்டறிவதும் (குண்டலினி சக்தி), அதை யோகத்தின் மூலம் மேலெழுப்பி சஹஸ்ராரத்தில் சேர்ப்பதும்தான் பிறப்பின் பலன். அதை விட்டு விட்டு, காட்டில் உள்ள பாம்புகளைத் தேடி அலைவது வீண்வேலை’’ என்று உபதேசம் செய்தார். அன்றிலிருந்து உயிர்களைத் துன்புறுத்தாமல்  முருகனை வணங்கித் தியானம் இருந்தவருக்கு வள்ளி - தெய்வானையுடன் காட்சி தந்த முருகப்பெருமான், அவருக்கு ஞானோப தேசமும் செய்தார். அன்று முதல் அந்தப் பாம்பு வைத்தியர் பாம்பாட்டிச் சித்தராகப் புகழ் பெற்றார். அவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்ததன் விளைவாகத் தோன்றியதுதான் மருதமலை முருகன் கோயில் என்று தலவரலாறு சொல்கிறது.

விசாக தரிசனம்: மன நிம்மதி அருள்வான் மருதமலையான்!மலையின் அடிவாரத்திலிருந்து நடை பயணமாகச் செல்லும்போது, பாதையின் தொடக்கத்திலேயே காட்சி தருகிறது  தான்தோன்றி விநாயகர் சந்நிதி. இந்த விநாயகர்  சுயம்புவாகத் தோன்றினார் என்று சொல்லப்படுகிறது.   யானை முகம்கொண்ட தலையை  உடைய இவருக்கு உடல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  அதுமட்டுமல்லாமல்,  மலைமேல் அமர்ந்தருளும் முருகனை நோக்கித் தும்பிக்கையைத் தூக்கியபடி காட்சி தருவது தனிச் சிறப்பு.  முருகனுக்கு உகந்த நாளான கிருத்திகை, சஷ்டி போன்ற விசேஷ நாள்களில்  தான்தோன்றி விநாயகருக்கும் சிறப்புப்  பூஜைகள் நடத்தப்படுவதால்,  இவர்  ‘தம்பிக்கு உகந்த விநாயகர்’ என்ற தனிச்சிறப்பை பெற்றிருப் பதாகச் சொல்லிப் பரவசமடைகிறார்கள் பக்தர்கள். 

விசாக தரிசனம்: மன நிம்மதி அருள்வான் மருதமலையான்!

விநாயகரைத் தரிசித்துவிட்டு, தொடர்ந்து சென்றால் வருவது இடும்பன் சந்நிதி. இன்னும் கொஞ்சம் மேலே போனால், ஆதிமூலஸ்தான முன்மண்டபத்துக்கும் தண்டாயுதபாணி சந்நிதி மண்டபத்துக்கும்  இடையே  காட்சி தருகிறார்  பஞ்ச விருட்ச விநாயகர். பொதுவாக அரசமரத்தடியில் காணப்படும் விநாயகர் மருதமலையில் அரசு, அத்தி, வேம்பு, வன்னி, கொரக்கட்டை என ஐந்து மரங்களுக்கடியில் அமைந்துள்ளார். அவருக்கு அருகிலேயே கையில் வேலுடன் மயில் மீது அமர்ந்தபடி காட்சித் தருகிறார் முருகன்.  நடைப் பயணமாக மலையேறிச் செல்லும் பக்தர்கள்  பஞ்ச விருட்ச விநாயகரைத் தாண்டிதான்  மருதாச்சலமூர்த்தி சந்நிதிக்குச் செல்ல வேண்டும். 

அடுத்ததாக இருக்கிறது ஆதிமூலஸ்தானம்.  கோயிலுக்குச் செல்லும் இறுதிப் படிக்கட்டுகளின்  நேரெதிரில்  ஆதிமூலஸ்தானம் இருக்கிறது.   ஆதி மூலஸ்தானத்தில்  முருகன் சுயம்புவாகத் தோற்றம் அளிக்கிறார். முருகப்பெருமான் மட்டுமல்லாது வள்ளியும், தெய்வானையும்கூட சுயம்புவாகத் தோன்றியவர்கள்தான் என்பது விசேஷம் என்கிறார்கள். அதுமட்டுமல்லாது,  இந்த முருகன்தான் இந்தத்தலத்தின் ‘ஆதிமூர்த்தி’ என்றும்  சொல்லப்படுகிறது. அதனால், ஆதி மூலஸ்தானத்தில் இருக்கும் சுயம்பு முருகனுக்கு  பூஜைகள் செய்த பிறகே கருவறையில் இருக்கும் பிரதான முருகனுக்குப் பூஜைகள் நடக்கின்றன. சிவனுக்கும் அம்பாளுக்கும்  நடுவில் முருகன் இருந்தால் அதை சோமாஸ்கந்த தலம் என்பார்கள். இங்கும் வெளிமண்டபத்தில் வலதுபுறத்தில் பட்டீஸ்வரர் சந்நிதியும்,  இடதுபுறத்தில் மரகதாம்பிகை சந்நிதியும் அமைந்திருக்க, நடுவில் உள்ள  கருவறையில்  வலது கையில் தண்டத்தை வைத்துக்கொண்டு  இடுப்பில்  இடது கையை வைத்தபடி காட்சி தருகிறார் தண்டாயுதபாணி. பழநி முருகனைப் போலவே காட்சியளிக்கும்  இந்த முருகனை, முருகனின் அருள்பெற்ற பாம்பாட்டிச் சித்தர்தான் வடித்தார் என்று சொல்லப்படுகிறது. அர்த்தஜாம பூஜையில் மட்டுமே மூலவரை சுய வடிவ தண்டாயுதபாணி யாகத் தரிசிக்க முடியும்.  

விசாக தரிசனம்: மன நிம்மதி அருள்வான் மருதமலையான்!

கருவறைக்கு வெளியில் உள்ள மண்டபத்தில் நவகிரகங்கள் சந்நிதி அமைந்துள்ளது.  தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர், துர்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோரும் தனித்தனிச் சந்நிதிகளில் அருள்கிறார்கள்.

மலையில் உள்ள ஒரு குகைக்குள் சந்நிதி கொண்டிருக்கும் பாம்பாட்டிச் சித்தர். வலது கையில் மகுடியோடும் இடது கையில் தடியோடும் காட்சி தருகிறார். அவருக்கு அருகிலேயே சிவலிங்கம் இருக்கிறது.  இந்தச் சந்நிதியில் உள்ள ஒரு பாறையில் நாகத்தின் வடிவம் தெரிகிறது. பாறையில் தெரியும் அந்த வடிவத்திலேயே பாம்பாட்டிச் சித்தருக்கு முருகன் காட்சி தந்தார் என்று நம்பப்படுகிறது. அதனால், இந்த நாகத்தை முருகனாகவே பாவித்து வழிபடுகிறார்கள். முருகனுக்குப் பூஜைகள் முடிந்ததும் பாம்பாட்டிச் சித்தருக்கும் பூஜைகள் செய்யப்படுகின்றன. இங்கு பாம்பாட்டிச் சித்தர் இன்றும் முருகனுக்குப் பூஜை செய்து கொண்டிருக்கிறார் என்பது ஐதீகம்.  சித்தர்  சந்நிதியில்  இரவு நேரத்தில் பாத்திரத்தில் பாலை ஊற்றி வைத்துவிட்டால், மறுநாள் காலையில் பால் குறைந்திருக்குமாம். பாம்பாட்டிச் சித்தர் இந்தப் பாலைக் கொண்டு  முருகனுக்கு அபிஷேகம் நடத்துவதாக நம்பப்படுகிறது.   

விசாக தரிசனம்: மன நிம்மதி அருள்வான் மருதமலையான்!

செல்வங்களுக்கெல்லாம் மேலான செல்வமான மன நிம்மதியைத் தரும் மகத்தான தலம் மருதமலை. எந்தவிதமான மனச் சிக்கலாக இருந்தாலும் மருதமலை முருகப்பெருமானைத் தரிசித்தால், அது உடனே பறந்துபோகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருமண தோஷம் உள்ளவர்கள், இங்குள்ள மரத்தில் மஞ்சள் கயிறும், புத்திர தோஷம் உள்ளவர்கள் தொட்டிலும் கட்டி வேண்டிக்கொண்டால், தோஷங்கள் விலகி நல்லது நடக்குமாம். நாக தோஷம் உள்ளவர்களும், விஷக்கடிக்கு ஆளானவர்களும் இங்கு வந்து பாம்பாட்டிச் சித்தரின் அலங்காரத்துக்குப் பயன்படுத்திய விபூதியை நீரில் கலக்கிப் பருகினால், பிரச்னைகள் சரியாகிவிடுகிறது என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. வேண்டுதல் நிறைவேறிவிட்டால், பாம்பாட்டிச் சித்தரின் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி, வெண்ணிற மலர் சூட்டி, இனிப்பான உணவு வகைகளை நைவேத்தியம் செய்து வழிபடுகிறார்கள்.

மருதமலை முருகப்பெருமானுக்கு வைகாசி விசாகத்தன்று 108 குடம் பால் அபிஷேகமும், தைப் பூசத்தையொட்டி பத்து  நாள்கள் பிரம்மோற்சவமும் நடைபெறுகிறது. பூசத்தன்று காலையில் திருக்கல்யாணமும், மாலையில் தேர்த் திருவிழாவும் நடைபெறும்.

எங்கிருக்கிறது... எப்படிச் செல்வது?

கோயம்புத்தூரில் இருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மருதமலை. கோயம்புத்தூரில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

உங்கள் கவனத்துக்கு...

தலத்தின் பெயர்:
மருதமலை

சுவாமி: ஸ்ரீதண்டாயுதபாணி

தலவிருட்சம்: மருத மரம்

தீர்த்தம்: மருது சுனை

பிரார்த்தனைச் சிறப்பு: மன வருத்தங்கள் நீங்கும்; திருமணத்தடை விலகும்; புத்திர பாக்கியம் கிடைக்கும்.