Published:Updated:

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க தந்திரிகள் ஏன் எதிர்க்கிறார்கள்? #Sabarimala

சபரிமலையில் ஏன் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை... இந்த வழக்கின் பின்னணி என்ன? விரிவாகப் பார்ப்போம்... 

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க தந்திரிகள் ஏன் எதிர்க்கிறார்கள்? #Sabarimala
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க தந்திரிகள் ஏன் எதிர்க்கிறார்கள்? #Sabarimala

`இறைவனுக்கு முன்னே ஆணும் பெண்ணும் சமம் என்கிறபோது சபரிமலையில் மட்டும் பெண்கள் வழிபட அனுமதி மறுப்பது ஏன்?ஆலயத்தில் வழிபாடு செய்வது என்பது எல்லோருக்கும் உள்ள சட்ட உரிமை. பெண்கள் மட்டும் கோயிலுக்கு வரக்கூடாது என்று கூறுவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. சபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது' என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கருத்து தெரிவித்திருக்கிறது. 

சபரிமலையில் ஏன் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை...  இந்த வழக்கின் பின்னணி என்ன? 

விரிவாகப் பார்ப்போம்... 

முதலில் சபரிமலை ஐயப்பன் தல புராணத்தில் இருக்கும் செய்திகளைப் பார்த்துவிடலாம். 

ஹரிஹர சுதனான ஐயப்பன் கண்கண்ட கடவுளாக விளங்கிவருகிறான். சொல்லொணாத கொடுமைகளைச் செய்து தேவர்களையும் மனிதர்களையும் வாட்டி வதைத்த மகிஷியை சம்ஹரிக்கத்தான் ஸ்ரீஐயப்பனின் அவதாரம் நடந்தது. பந்தள ராஜகுமாரனாக வளர்ந்து பிரம்மச்சர்யம் பூண்ட ஐயப்பனின் திருக்கரங்களால் மகிஷியின் சம்ஹாரம் நடைபெற்றது. அதன் பிறகு தொடர்ந்து தீய சக்திகளிடமிருந்து பூவுலகைக் காக்க, யோகநிலையில் சின் முத்திரை காட்டி, சபரிமலையில் வீற்றிருந்து அருள்பாலித்துவருகிறார். சம்ஹரிக்கப்பட்ட மகிஷி, சாப விமோசனம் பெற்று ஸ்ரீஐயப்பனை மணம் முடிக்க வேண்டினார். 

`சபரிமலையில் நான் பிரம்மசாரியாகவே இருப்பேன். கலியுகம் முடியும் வேளையில் என் யோக நிஷ்டை கலையும். அப்போது உன்னை ஏற்றுக்கொள்வேன்' என்று மகிஷிக்கு வாக்களித்தார் ஐயப்பன். அதன்படி அவருக்கு அருகிலேயே மாளிகைபுரத்து அம்மனாக தேவி இன்றும் வீற்றிருக்கிறாள். இங்கு ஐயப்பன் யோகநிலையில் இருப்பதாலேயே 10 வயதுக்கு மேற்பட்ட 50 வயதுக்குள்ளான பெண்கள் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை என்ற வழக்கம் உருவானது. மற்றபடி பெண்கள் வரக் கூடாது என்ற நியதி புராணரீதியாக எங்குமே சொல்லப்படவில்லை. சபரி பீடமும், மாளிகைபுரத்தம்மன் ஆலயமும் அங்கிருப்பதே சாட்சி. மேலும், சபரிமலையைத் தவிர தென்னிந்தியாவில் பல ஆலயங்களில் ஐயப்பன் - பூரணை, புஷ்கலை சமேதராக அருளுவதைக் கண்டிருக்கலாம். 

கடுமையான விரதங்கள் இருப்பதும், மலை மீது பயணிப்பதும் பெண்களுக்குச் சிரமமாக இருக்கும், மாதவிடாய் காலத்தில் விலங்குகளால் பெண்களுக்கு அதிக ஆபத்துகள் உண்டாகும் என்பது போன்ற காரணங்களால் ஒரு காலத்தில் பெண்கள் தவிர்க்கப்பட்டார்கள். பின்னர், அது கட்டாயமான நியதியாகவே மாறிவிட்டது என்பதே பலருடைய கருத்தாக இருக்கிறது. பெண் குழந்தைகளும், வயதான பெண்மணிகளும் அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதிலிருந்து பால்ரீதியாக பெண்கள் ஒதுக்கப்படுவதில்லை என்றும், பாதுகாப்புக்காகத்தான் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. நெடுங்காலமாகவே, இளம் வயதுப் பெண்கள் சபரிமலை சந்நிதானத்துக்கு வருவதில்லை. 1949-ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானம், இந்திய அரசாங்கத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், சபரிமலை கோயிலின் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்ட பிறகு, பெண்கள் சபரிமலைக்கு வரக்கூடாது என்ற விதி அதிகாரபூர்வமாக்கப்பட்டது. 

2006-ம் ஆண்டு வரை சபரிமலை வழிபாடு குறித்து எந்தச் சர்ச்சையும் இல்லாமல் இருந்தது. அந்த ஆண்டு ஜூன் மாதம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜோதிடர் உன்னிகிருஷ்ண பணிக்கர் தேவபிரச்னம் பார்த்தபோது,  'சபரிமலை சந்நிதானத்தில் பல தவறுகள் நடைபெற்றுள்ளன' என்றும், 'இளம்பெண் ஒருவர் ஐயப்பனின் திருச்சிலையைத் தொட்டுவிட்டார்' என்றும் தெரிவித்திருந்தார். 'அந்தப் பெண் உண்டாக்கிய தோஷத்தால் ஐயப்பன் கோபமாக இருப்பதாகவும், கோபத்தைப் போக்க, பரிகார பூஜைகள் நடத்தப்பட வேண்டும்' என்றும் பரபரப்பை உண்டாக்கினார்.  ஆனால், அதை சபரிமலை தந்திரிகள் மறுத்தார்கள். அப்போது கன்னட நடிகை ஜெயமாலா கோயிலுக்கு ஒரு கடிதம் அனுப்பி பரபரப்பை உண்டாக்கினார். அதில் 1987-ம் ஆண்டு தனது 27-வது வயதில் சபரிமலை சந்நிதானத்தில் உண்டான கூட்ட நெரிசலால் தள்ளப்பட்டு ஐயப்பனின் விக்கிரகத்தைத் தொட்டதாகத் தெரிவித்திருந்தார். இந்த விஷயம் அப்போது பெரும் விவாதமானது. 'ஒரு பெண் எப்படி சபரிமலைக்குள் செல்ல முடியும்' என்ற கேள்வி எழுந்தபோதே, 'ஏன் ஒரு பெண் சபரிமலைக்குப் போகக் கூடாது' என்றும் ஒரு கேள்வி எழுந்தது. ஜெயமாலா ஐயப்பனை தொட்டதாகச் சொன்ன விஷயம் நாடகம் என்று நிரூபிக்கப்பட்டது. அதேவேளையில் சபரிமலைக்கு இளம் பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்தன. 

சபரிமலையில் இளம் பெண்களுக்கு அனுமதி வேண்டும் என்ற 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. உச்ச நீதிமன்றம், திருவிதாங்கூர் தேவஸ்தானத்துக்கும், கேரள மாநில அரசுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அப்போதிலிருந்து கேரளாவில் மாறி மாறி உண்டான ஆட்சிகளால், இந்த விஷயத்தில் மாறுபட்ட நிலைப்பாடுகள் உருவாகின. வழக்கில் தேக்கமும் குழப்பமும் உண்டாகின. 'கேரள மாநில இந்து பொது வழிபாட்டுத் தலங்கள் (நுழைவு அனுமதி) விதிகள் 1965-ன் கீழ் 3(b)-வது விதியின்படி சபரிமலையில் பெண்களுக்குத் தடை உள்ளது' என முந்தைய மாநில அரசு  தெரிவித்திருந்தது. 'இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. கோயிலுக்குள் நுழைய பாலினப் பாகுபாடு காட்டி அனுமதி மறுக்கும் செயல், அரசியல் சாசனத்தின் ஷரத்து 14 (சட்டத்தின் முன் அனைவரும் சமம் - Equality before Law), ஷரத்து 25, 26 (மதச் சுதந்திரம் - Freedom of Religion) ஆகியவற்றை மீறும் செயல் என்று வழக்குத் தொடர்ந்தவர்கள் வாதிட்டார்கள். இந்த வாதத்தின் அடிப்படையில்தான் உச்ச நீதிமன்றம் தற்போது தனது கருத்தை தெரிவித்திருக்கிறது. 

உச்ச நீதிமன்றத்தின் கருத்தை ஏற்று, 'சபரிமலைக்கு வந்து பெண்கள் வழிபடலாம்' என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. மாநில அரசின் முடிவை கோயில் தந்திரிகள் கடுமையாக எதிர்க்கிறார்கள். 'எந்தச் சூழலிலும் பெண்களைக் கோயிலுக்குள் அனுமதிக்க மாட்டோம்'  என்று தெரிவித்துள்ளார்கள். இந்த வழக்கு 20-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.