மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 5

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! ( மகுடேசுவரன் )

ஹமபிமகுடேசுவரன்

விஜயநகர அரசர்களால் இந்நகரைச் சுற்றிலும் பல்லடுக்குக் கோட்டைகள் கட்டப்பட்டன. தளவாடப்பொருள்களின் அளப்பரிய கிடைப்புதான் அவர் களைக் கட்டியெழுப்பத் தூண்டியிருக்கிறது. கற்கட்டடங்கள் நம் நாகரிகத்தின் அழியாச்சுவடுகள். நீர்ப்பெருக்கும் நிலவளமும் வேளாண்மையைப் பெருக்கியதுபோல இந்தக் கல்நிலம் கலைக்க முடியாத கட்டட ஒப்பனையைத் தன்மேல் எழுதிக்கொண்டது. வரலாறு முழுக்கவே தணியாத ஆக்கச் சிந்தனை களோடுதாம் குடிகளும் அரசர்களும் வாழ்ந்தார்கள் என்பதை அந்த வரலாற்று மீதங்கள் அறிவிக்கின்றன.   

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 5

மூன்று நூற்றாண்டுகள் ஆட்சியில் வீற்றிருந்த விஜயநகர அரச மரபுகளின் வழித் தோன்றல்களைப் பட்டியலிட்டால் எண்ணற்ற அரசர்களைக் காண முடிகிறது. அரச மரபுகளே நான்காக இருக்கும்போது அத்தகைய அரசர்கள் தோன்றி ஆள்வது விளங்கிக்கொள்ளக்கூடியதே. அவர்களில் தலையாய அரசர்கள் எனத்தக்க ஒன்பது அரசர்களை நாம் அடையாளம் காணலாம். முதலாம் ஹரிஹரர் தொடங்கி, கடைசிக் காலத்துக்கு முந்திய அச்சுதராயர் வரை அவர்களைக் கூறலாம். இடையில் முதலாம் தேவராயர், இரண்டாம் தேவராயர் என்ற பெயரில் இரண்டு பேரரசர்கள் ஆட்சியைத் திடப்படுத்திச் சிறப்பித்திருக்கிறார்கள்.

கி.பி 1421 – கி.பி 1448 வரையிலான ஆட்சிக் காலம் இரண்டாம் தேவராயருடையது. இரண்டாம் தேவராயர் காலத்தில் வெற்றியும் செல்வமும் தவிர வேறொன்றுமில்லை என்னுமாறு அந்நகரமும் நாடும் பொலிந்திருக் கின்றன. இரண்டாம் தேவராயருக்குப் பன்னிரண்டாயிரம் மனைவியர் இருந்தனர் என்னும் வரலாற்றுக் குறிப்பு வெறும் புகழ்ச்சியாய் இருக்க வாய்ப்பில்லை.

விஜயநகர அரசர்களில் தலையாயவர் என்று ஒருவரைத் தேர்வோமானால் அவர் கிருஷ்ண தேவராயர்தான். கி.பி 1509 முதல் கி.பி 1529 வரையிலான ஆட்சிக்காலம் இவருடையது. சங்கம வம்ச அரசர்கள் கி.பி 1485-க்குப் பிறகு வலுவிழந்துபோயினர். அவ்வாட்சியில் சந்திரகிரிக்கோட்டையில் ஆளுநர் பொறுப்பிலிருந்த நரசிம்ம சாளுவருக்கு மக்களிடத்தில் நற்பெயர் இருந்தது. அதைப் பயன்படுத்தி அவர் விஜயநகர ஆட்சியைக் கைப்பற்றிக்கொண் டார். அம்மரபினரே சாளுவ வம்சத்தினர். சாளுவ வம்சம் விஜயநகரப் பேரரசைச் சிறிது காலமே ஆண்டது. பிறகு அரச பதவிக்கு நடந்த சச்சரவில் மற்றொரு தளபதி விஜயநகர அரசைக் கைப்பற்றுகிறார். அவ்வழி வந்தவரே கிருஷ்ண தேவராயர். துளு வம்சத்தைச் சார்ந்தவர். கிருஷ்ண தேவராயர் முடிசூட்டிக் கொள்ளும் அதே காலகட்டத்தில் இங்கிலாந்தின் அரசராக எட்டாம் ஹென்றி முடிசூட்டிக் கொள்கிறார்.

வரலாற்றாசிரியர்கள் இருவரையும் ஒப்பிட்டு எழுதுகிறார்கள். ஆனால், கிருஷ்ண தேவராயரின் போர் வெற்றிகளும் ஆட்சிவன்மையும் தன்னேரும் நிகருமில்லாதவை. `முக்கடலுக்கும் அதன் இடைப்படு பெருநிலப்பரப்புக்கும் தனிப்பேரரசராக' அவர் முடிசூட்டிக்கொள்கிறார். தமிழகம் உள்ளிட்ட ஒன்றுபட்ட தென்னிந்தியாவின் மிகச்சிறந்த கடைசிப் பேரரசர் கிருஷ்ண தேவராயர்தான். முடிசூட்டிக்கொண்ட முதல் ஒன்றரை ஆண்டுகள் விஜயநகரத்தில் தங்கியிருந்த கிருஷ்ணதேவராயர் தம்முடைய ஆட்சிக்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து முழுமையான திட்டம் வகுத்துக்கொண்டார். அதன்படியே அவருடைய பணிகள் தொடங்கின. விஜயநகரத்துக்கு வருகை தந்த டொமிங்கோ பயஸ் (கி.பி 1520) என்னும் போர்த்துக்கீசியப் பயணி கிருஷ்ண தேவராயரைப் பற்றிய முழுமையான சித்திரத்தைத் தந்திருக்கிறார்.   

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 5

வரலாற்றெங்கிலும் வீற்றிருக்கும் உலகத்தின் பேரரசர்கள் எவரிடமும் ஏதேனும் ஓர் ஒவ்வாக்குணம் குடியிருக்கும். ஆனால், கிருஷ்ண தேவராயரைப் பற்றி நாமறியக் கிடைக்கும் செய்திகள் இந்நிலத்து மாமன்னரின் இலக்கணமாகக் கொள்ளத்தக்கவை. கிருஷ்ண தேவராயர் அளவான உயரமுடை யவர். பொலிவான தோல்நிறம் அவருக்கு. சாந்தமான கண்களில் தீர்க்கமான பார்வை. முகத்தில் அம்மைத்தழும்புகள் இருந்திருக் கின்றன. தன்னைச் சுற்றிலும் நடப்பவற்றை உடனே உள்வாங்கிக் கொள்பவர். அல்லாசானி பெத்தண்ணா தலைமையில் மிகச் சிறந்த மதியூகிகளால் ஆன அமைச்சரவையைக் கொண்டிருந் தவர். ஆனால், ஒருபோதும் அமைச்சர்களின் கைப்பாவையாய்ச் செயல்பட்டவரல்லர். வெளிநாட்டுப் பயணிகளை இன்முகத்தோடு வரவேற்று அவர்கள் கூறுவன வற்றைப் பொறுமையாகக் கேட்பவர். அன்றாடம் வைகறைத் துயிலெழுபவர். துயிலெழுந்தவுடன் குதிரையின்மீதேறித் தனியொருவராகவே தலைநகரெங்கும் சுற்றி வருபவர். குதிரைச் சுற்றுலா முடிந்தவுடன் வாட்போர்ப் பயிற்சியில் தவறாது ஈடுபடுவார். இரண்டு வீரர்களைத் தம் தோள்மீது ஏற்றிச் சுமந்தபடி கோட்டை மதில்மீது குடுகுடுவென்று ஓடுவாராம். கிருஷ்ண தேவராயர் ஓடிய கோட்டை மதில்கள்தாம் இன்று ஹம்பியில் கல்சரிந்து கிடக்கின்றன.

கிருஷ்ண தேவராயர் தம் ஆட்சிக்குரிய பகுதியைப் பல்வேறு மாகாணங் களாகப் பிரித்து உரிய ஆளுநர்களை நியமித்திருந்தார். ஆளுநர்கள் தம் பகுதியில் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியைப் பேரரசருக்குத் தந்துவிட வேண்டும். அதனால், தலைநகரத்தில் அளவற்ற செல்வம் குவிந்தது. அதுபோக, அவர்கள் பெரும் எண்ணிக்கையிலான வீரர்களைக்கொண்ட படையையும் வைத்திருக்க வேண்டும். அரசரிடமிருந்து கட்டளை வருகையில் அப்படையை மாமன்னரின் சேவைக்கு அனுப்பிவைக்க வேண்டும். கிருஷ்ண தேவராயர் சீரங்கப்பட்டணம், உதயகிரிக் கோட்டை போன்றவற்றைக் கைப்பற்றினார். வடகிழக்கே ஒரிசாவின்மீது படையெடுத்து அம்மன்னனின் மகளை மணமுடித்துத் திரும்பினார். கிருஷ்ண தேவராயரின் வெற்றிகளில் ரெய்ச்சூர்க் கோட்டை வெற்றிதான் மிகச் சிறந்தது. அந்த முற்றுகையில் ராயரின் படையில் 7,36,000 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். 550 யானைகளும் இருந்தன. கிருஷ்ண தேவராயர் தாமாகவே படைக்குத் தலைமை தாங்கி, போர்முகத்தே நின்றவர். போரில் புண்பட்ட வீரர்களின் காயங்களுக்கும் அவரே மருந்திடுவாராம்.

கிருஷ்ண தேவராயரின் ஆட்சிக்காலத்தில்தான் தலைநகராம் விஜயநகரம் அதன் செழிப்பின் கொடுமுடியில் இருந்தது எனலாம். இப்போதுள்ள எண்ணற்ற கட்டுமானங்கள் அவர் காலத்தில் கட்டப்பட்டவை. கலிங்கப்படையெடுப்பு வெற்றியில் முடிந்ததைக் கொண்டாடும் முகத்தான் கிருஷ்ணர் கோவில் கட்டப்பட்டது. ஹம்பியின் சின்னமாக இன்றிருக்கும் விருபாக்சர் ஆலயக் கோபுரத் திருப்பணியும் அவரால்தான் மேற்கொள்ளப்பட்டது. தொடக்கக்கால விஜயநகர அரசர்கள் சைவர்களாக இருந்தவர்கள். ஆனால், கிருஷ்ண தேவராயர் வைணவத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அளவற்ற சமயப்பொறை உடையவராக விளங்கினார். ஹம்பியின் ஹேமகூட மலைகளில் எல்லாக் கோவில்களுக்கும் நடுவில் சமணக் கோவில்களும் இருப்பதைக் காணலாம். கிருஷ்ண தேவராயர் காலத்தில் தென்னகமெங்கும் கோவில் திருப்பணிகள் முழு வீச்சில் நடந்திருக் கின்றன. திருப்பதி மலைக்கோவிலில் கிருஷ்ண தேவராயர் தம் தேவியருடன் காணப்படும் சிலையும் உண்டு.

விஜயநகரக் கோவில்களில் சீரும் சிறப்புமான ஒன்றைக் கூறுக என்றால் துங்கபத்திரையின் கிழக்குப் பகுதியில் இருக்கும் விட்டலர் ஆலயத்தைத்தான் கூற வேண்டும். அக்கோவில் வளாகத்தில் இசைத்தூண்களாலான மண்டபமும் கல்யாண மண்டபமும் இருக்கின்றன. கோவிலின் கல் மீதங்களை இன்று காண்கிறோம். கல் கட்டுமானத்தின்மீது வானளாவிய உயரத்துக்கு பேரெழில் வேலைப்பாடுகளாலான மரத் தூண்களை நிறுத்தி, தீப ஒளியில் திளைக்கச் செய்திருக்கின்றனர். பகைவர் படையெடுப்பில் மரவிதானங்கள் தீக்கிரையானதுபோக மீதமுள்ள இடிந்த கற்சுவர்களைத்தாம் இப்போது காண்கிறோம்.

- தரிசிப்போம்...